புத்தாண்டு 2011-ன் நல்வாழ்த்துக்கள்!

இவ்விதழ் உங்களை வந்தடையும் வேளையில் தமிழர் திருவிழா களைகட்டி நிற்கும் சூழல்.
பொங்கல் திருவிழா நல்வாழ்த்துக் களையும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும் புதிய நம்பிக்கையிலும், புதிய செயல் பாடுகளை உள்ளடக்கிய நல்திட்டங் களிலும் நிறைந்துள்ளது. ஆண்டின் இறுதி நாட்களின் நினைவுகள், அந்த ஆண்டில் பெற்ற நன்மைகள், வெற்றிகள், மனநிறைவான உறவுகள், வளர்ச்சிகள் இவற்றோடு கூடவே தோல்விகள், ஏமாற்றங்கள், நிறை வடையாத திட்டங்கள், முறிந்த நிலை உறவுகள் என்ற கலவைகளாக இருப்பினும் ஓர் ஆண்டின் தொடக்கம் மட்டும் புத்துணர்வு தரும் நம்பிக்கையிலும், நேர்மறைத் திட்டங் களிலும் மட்டும்தான் புலர்கிறது. இதுதான் நாம் தொடர்ந்து வாழ தெம்பும் தருகிறது. புதிய மன எழுச்சியுடன் குடும்பங்களுக்கும் துறவறத்தாருக்கும் வாழ்த்துக்களை மீண்டும் படைக்கிறேன்.
2011-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நம் பணிக்குழுவின் செயல்பாடு ஒன்றை நிலைப்படுத்த விழைகிறேன். 2010-ஆம் ஆண்டின் கூட்டங்களிலிருந்து பிறக்கும் சிந்தனை இது.
‘இணைந்து செயல்படும்’ நோக்கம் கொண்ட திட்டமே இன்று முறையாய் வலியுறுத்தப்படுகிறது  இறையழைத்தல் பணி இன்றைய காலக்கட்டத்தில் சவாலான பணியே. ஏதோ அழைப்பை ஏற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்பது மட்டுமல்ல, மேலாக, துறவறத்தின் மேன்மைப் பாட்டைப் பல கேள்விகளுக்கு உட்படுத்துகிற மனநிலைகள் பலரிடமும் உள்ளன. இத்தகைய சூழலில் பிள்ளைகள், பெற்றோர், ஏன் துறவற நிலையில் உள்ளோர்கூட இறையழைத்தல் பற்றி எதிர்மறைச் சிந்தனையே கொண்டுள்ளனர். இத்தகைய சிந்தனைகளும் சூழல் களும்தான் இறையழைத்தல் பணி செய்வோருக்கான பெரும் சவால். “நிறைய பிள்ளைகள்தான் அழைத் தலுக்கு வருவதில்லையே... பின் ஏன் இறையழைத்தல் பணியாளர்கள் தேவை?” என ஓர் அருட்சகோதரி கேட்டார். தவறான புரிதலோடு உள்ள இக்கேள்விக்கு என்ன பதில் தருவது? குறைகிறதால்தான் நிறைய உழைக்க வேண்டியுள்ளது என்ற நினைப்பு இல்லையே! யாரோ ஒருவர் அல்லது இருவருக்குச் சபை / மறைமாவட்டம் இப்பணியைத் தந்துள்ளது. எனவே இந்தப் பணி அவர்களின் தலையயழுத்து என்று ஒதுங்கிக்கொள்வது தவறான சிந்தனைதானே!
இணைந்து செயல்படும் போக்கே இன்று தேவைப்படுகின்றது. இச்செயல் பாட்டை இரு நிலைகளில் பார்க்கிறேன்.

  • துறவு நிலையில் உள்ள எல்லோருமே இணைந்து செயல்படுதல் முதல் நிலை. குருக்கள், துறவிகள் தாம் வாழுகிற, பணி செய்கிற இடங்களில் தகுதியான பலர் உள்ளங்களைத் தேர்ந்து தெளிவது கடமையே. ஒருசிலர் மட்டும் இப்பணிப் பொறுப்பைப் பெற்றிருந்தாலும், அனைவருமே இணைந்து செயல்படாவிடில் இப்பணி முழுமை பெறாது.
  • துறவு நிலையில் உள்ளோரும் பொதுநிலையினரும் இணைந்து செயல்படுதல் இரண்டாவது நிலை.

தொடக்கத் திருச்சபையில் ‘துறவறம்’,  ‘பொதுநிலை’ என்ற  பாகுபாடு இல்லாத நிலையில் எல்லோருமே இறையரசுப் பணிக்காக இணைந்து உழைத்ததால் சபை வளர்ச்சி கண்டது. இன்று இப்பணிக்கான செயல்பாட்டில் அனைவரும் இணைந்து செயல்படாமல் ஒதுங்குவதும், ஒதுக்கி வைப்பதும் வளர்ச்சியைத் தடை செய்யும் இடர்ப்பாடே.
இறையழைத்தல் பணியில் உள்ளோர் பொதுநிலையினரை, பெற்றோரை, இளையோரை இப்பணியில் தம்மோடு இணைத்துக் கொள்ள வேண்டும். அவர்களும் பயிற்சி பெற்று நம்மோடு இணைந்து செயல்பட்டால் இன்னும் அதிக வளர்ச்சிக்கான பாதை தெரியும். ஒவ்வொரு மறைமாவட்டமும், துறவற சபையும் தம் இறையழைத்தல் பணிக்குழுவில் சில பொதுநிலை யினரை இணைத்து, திட்டமிட்டுச் செயல்பட்டால் அதிக வளர்ச்சிக்கு வழி பிறக்கும்; நல்ல அர்ப்பண உள்ளங் களை இனம்காண முடியும்.
இப்புதிய ஆண்டில் ‘இணைந்த செயல்பாட்டிற்கான’ திட்டமிடுவோம். பணியில் ஏற்படும் தளர்ச்சியை விடுத்து, வளர்ச்சி நோக்கிய பயணத்தில் பலரை இணைப்போம். கடவுளின் ஆவியால் வழிநடத்தப்படுவோம்.
மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சே. சகாய ஜாண்

குப்பை கொட்டுவது எப்படி?

இந்தப் பகிர்வு அரசாங்கத்தின் குப்பை மேலாண்மைக் கோட்பாட்டில் (அறிவிப்பில்) வரும் மக்கும் குப்பை, மக்கா குப்பையை எங்கு, எப்படி கொட்டுவது என்பது பற்றியது அல்ல.
ஓர் அனுபவமுள்ள இறைப்பணியாளரிடம் ஒரு குறிப்பிட்ட ஊரைப் பற்றிப் பேசும்போது அவர், “நானும் அங்கே ஐந்து ஆண்டுகள் குப்பை கொட்டியிருக்கிறேன்; அந்த ஊரைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும்” என்கிறார்.
குப்பை கொட்ட வந்த கோமகன்
அப்படியயன்றால், “ஆண்டவரின் ஆவி என் மேல் உளது; ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்...” என்ற எசாயாவின் இறைவாக்கைத் தன் விருதுவாக்காய் முழங்கி, முப்பத்து மூன்று ஆண்டுகள், அதில் மூன்று ஆண்டுகள் சுற்றும் சூரியனாய், வற்றாத நதியாய், பார்த்தோர் மீது பரிவு கொண்டு பணியாற்றினாரே, அவரென்ன குப்பை கொட்ட வந்த கோமகனா?
அழைக்கப் பெற்றோர் குப்பை கொட்ட வந்த குப்பைத் தொட்டிகளும் அல்ல; குப்பை எண்ணங்களை உள்வாங்கி துர்நாற்றம் வீசும் குப்பைத் தொட்டிகளும் அல்லர். (“தூயதோர் உள்ளத்தை இறைவா என்னகத்தே உருவாக்கும்”) பல்வகை குப்பைகளை அகற்றி, பரிசுத்தமாக்க வந்த குப்பைப் பொறுக்கிகள். 
கேட்ட கதை
குட்டித் தீவு ஒன்றில் பெரியவர் ஒருவர் தனியாளாய் நீண்ட நாட்களாக வாழ்ந்து வருகிறார். கடல்சார் விபத்துகள், ஆபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. மனித நேயத்தோடு மக்களைக் காப்பாற்றி கரைசேர்த்து வருகிறார். காலம் கடக்கிறது. அவரும் காலமாகிப் போகிறார். கப்பல் ஒன்று விபத்தில் சிக்குகிறது. ஆனால் காப்பாற்ற யாரும் வரவில்லை. தப்பிப் பிழைத்தோரில் சிலர் கரை சேர்ந்தனர். அம்மனிதரை நினைத்து அவர் பெயரால் தாங்களே அவர் பணியை ஆர்வத்தோடு தொடர்ந்தனர். இஃது ஓர் உயிர் காக்கும் பணியாக, பிணி போக்கும் பணியாக இருந்ததால் பலரும் சேர்ந்துகொள் கின்றனர். காலப்போக்கில் பணிச்சுமை இல்லாததால், பொழுதுபோக்கு அம்சங் களையும், வருவாய் வழிமுறைகளையும் தேடிக்கொள் கின்றனர். அதிக ஆட்களையும் அமர்த்திக் கொள்கிறார்கள். பிற்காலத்தில் பல குழுக்களாக இணைந்தும் பிரிந்தும் செயல்பட்டுத் தங்கள் சுயநல நோக்கத்தை நிறைவேற்ற ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கவும், தொல்லை கொடுக்கவும் தொடங்குகிறார்கள். ஆக மொத்தம் வந்த வேலையை விட்டு சொந்த வேலையைப் பார்க்கத் தொடங்குகிறார்கள்.
இந்தக் கதையின் நாயகன் ஒரு வயதான பெரியவர். இறையாட்சிப் பணியில் ஈடுபட அழைக்கப்பெற்றோர் என்று சொல்லிக்கொண்டு, கடவுள் பெயரால் காலத்தைக் கடத்தும் என் போன்றோரின் வாழ்க்கைக் கதையின் நாயகன், இயேசு என்னும் அந்த எரியும் நெருப்புப் பந்தம், தீமையயனும் குப்பைகளைப் பொசுக்கி, பாவ இருள் சூழ்ந்தோர் மனத்தில் ஒளிக்கீற்றாய் உதித்த உயிரோட்டமுள்ள இளைஞன்.
இந்தக் கதை யாருக்குப் புரிகிறதோ இல்லையோ, இறையழைத்தல் பெற்ற எல்லோருக்கும் புரியும் என நம்புகிறேன்.
அன்றும் இன்றும்
நான் பத்து ஆண்டுகளுக்கு முன் சொல்வேன், “உயிரைக் கொடுத்த என் இறைவனுக்கு என் உயிரைக் கொடுத்து ஊழியம் செய்வேன்” என்று. இன்று அந்தத் தாகமும் வேகமும் என்னிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
அன்று கடவுளே கதி என்று ஆழ்ந்த ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும், அதற்காக ஒறுத்தலும் தியாகமும் செய்ய வேண்டும் என்று எப்போதும் எண்ணியதுண்டு. இப்போது எப்போதாவது இவ்வெண்ணம் வந்துபோகிறது. ஒறுத்தல் முயற்சியும், உயிரோட்டமுள்ள விசுவாசமும் என் வாழ்வில் உணவு போல் இல்லாமல், ஊறுகாய் போல் உள்ளன.
அருட்பணிக்காக அயல்நாட்டில் படிக்கச் சென்ற ஒருவர், ஒரே ஆண்டில் நம் தாய்நாட்டில் வந்து படிக்கத் தொடங்கினார். பல காரணங்களில் ஒரு காரணம் : ஒட்டுத் துணிகூட இல்லாமல் வறுமையே உருவாக தொங்குகிறவரைப் பின்பற்ற செய்யப்படும் பகட்டு ஆர்ப்பாட்டங்கள் தன் அழைத்தல் வாழ்வுக்குப் பொருந்தாத அருவருப்பான காரியமாகக் கருதியதுதான்.
எளிமையும் இறையாட்சிப் பணியும் பிரிக்க முடியாக் கலவை என்பதை அறிந்து மட்டும் வைத்திருக் கிறேன் அழுத்தமாக பின்பற்றாமல்.
இறைவன் பெயரால் அழைக்கப் பட்டோர் அனைவருக்கும் மணியடித்தால் சாப்பாடு..., அவர்களில் யாரும் வயிறு வாடி செத்ததாக சரித்திரம் இல்லை என்பது நம்மைப் பற்றி அடிக்கடி பேசப்படுகிற ஒன்று. இருப்பினும் கூலிக்கு மாரடிப்போர் கூட்டம் போல்தான் ஊக்கமில்லாமல் உள்ளது என் பணி சில சமயங்களில்.
பயிற்சிக் காலம் முடிந்துவிட்டால் பணி நிறை வந்துவிட்டது போல் ஒரு மெதப்பு.   அழைக்கப்பெற்றோருக்கு இறுதி வரை பயிற்சிதான், வளர்ச்சி தான். என் பேராசிரியர் சொல்வார் : 
We are called to live with unfulfilled desires
-நாம் நிறைவேறாத ஆசைகளோடு வாழ்வதற்காக அழைக்கப் பெற்றிருக்கிறோம்.
நமது தலைவர் இயேசு சொல்வது போல்,  “உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராக / உங்கள் விண்ணகத் தந்தை தூயவராக இருப்பதைப் போல நீங்களும் நிறைவுள்ளவர்களாக, தூயவராக இருங்கள்.” அப்படியானால் நாம் முழுமையான நிறைவை நோக்கி, தூய்மையை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருக்கிறோம்.
இந்தப் பயிற்சியிலே, பயணத்திலே நாம் காட்டும் ஈடுபாடு பலரை இறைவன்பால் ஈர்க்கக்கூடியதாக அமைந்து, இறைவனைத் தேடும் நெஞ்சங்கள் அதிகரிக்கட்டும். 
நம் தலைவரைப் பின்பற்றிய பல புனிதர்களும், அழைத்தல் வாழ்வை முழுமையாய் வாழும் நல்மனிதர்களின் வாழ்வும் நம் வாழ்வுக்குத் துணை நிற்கட்டும்! இறைவன் அவர் பாதையில் நம்மை வழிநடத்தட்டும். அழைத்தல் வாழ்வை ஆரோக்கியமாக வாழ வாழ்த்தி இறைவனை வேண்டி முடிக்காமல் முடிக்கிறேன் எனது பகிர்வை.

இறையாட்சிப் பணியில்,
பணியாள் மைக்கேல் 
முதியனூர், ஈரோடு

பொது எதிரி

கடவுளைப் போல் ‘நான்’
அகம்பாவம் கொண்டவன்
தான் இழந்த சொர்க்கம்
தனக்குக் கீழ் மனிதன்
அடைய ஒவ்வானோ?
துன்மார்க்கன் முதல் பெண் ஏவாளை
வஞ்சித்து தீமையை இரத்தத்தில்
கலந்தான்
அன்று முதல் பொறாமை
கொலை கீழ்ப்படியாமை
இன்னபிற அரங்கேறின
மனித வரலாற்றில்
உலகம் சாத்தானின் பிடியில்
முழுவதும் உள்ளது
மானுடர் மீது கொண்ட
தணியா தாகத்தால் தம்
ஒரே பேறான அன்பு மகனைப்
பரிகாரப் பலியாக்கினார்
அன்பு தந்தை
ஒவ்வோர் ஆன்மாவும் மீட்கப்படுவது
இறைச்சித்தம்.
‘நிலையற்ற அற்ப இன்பத்தைத் தேடி
ஆன்மாவை இழப்பது பெரும்பாவம்’
ஜெப ஆவியை எழுப்பிக்
கதறி  மன்றாடும்போது
கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார்
மனிதன் மனிதனுக்கு எதிரியல்ல
மனிதர் அனைவர்க்கும்
பொது எதிரி அலகையே!
‘நம் அழிவு’ அவன் உயிரில்
கலந்ததாலேயே!
‘அவனை’ மிதிப்போம் முறியடிப்போம்
ஒன்றுசேர்வோம் போராடுவோம்
சாத்தானை வெல்ல ஆவியின்
வரம் வேண்டி நாளும் வேண்டுவோம்
ஆயிரம் கால இறையாட்சியைச்
சொந்தமாக்குவோம்
இறுதி நாளில் அக்கினித் தீர்ப்பினின்று
தப்புவோம்
புதிய வானம் புதிய பூமி
காண்போம்
புனிதராய் மூவொரு கடவுளை
தினம் துதிப்போம்
நித்திய பேரின்பம் சுவைப்போம்
முகம் முகமாய் இறைவனைக்
காணும் பேறு பெறுவோம்!

ச. செல்வராஜ், விழுப்புரம்

பாலன் பிறந்தார் - புத்தாண்டு பிறந்தது

கள்ளமில்லா வெள்ளை நிலவாய், இம்மண்ணில் உதித்த தெய்வமனிதன் இயேசுவின் தனிப்பெரும் பிறப்பைச் சீர்மிகு உளத்துடன் சிறப்பித்தோம். அதன் விளைவாய் மண்ணில் பிறந்த தேவனைக் கண்ணில் காணும் மனிதரில் கண்டு மகிழ்கிறோம். சமூகத் தாக்கத்திற்குள் சிக்குண்டு வறுமையை உண்டு வாழும் எளியர் நடுவில் ஆன்மீகத் தாகம் கொண்டு இறை வார்த்தையை உண்டு வாழ சீரிய சொற்களாலும், நேரிய வாழ்க்கை யாலும் வழியமைக்க இசைந்தோம்.
மேலும், தனது பிறப்பின் பரிசாய் இன்னொரு ஆண்டைப் பார்க்க நமக்கு மாபெரும் வாய்ப்பு வழங்கிய இறைவேந்தன் புவி மீது புலம்பி அழுவோரின் வாழ்வில் எதிர்ப்படும் பூகம்பங்களையயல்லாம் பூவின் மென்மையால் வருட வாய்ப்புகள் வழங்கியுள்ளார். கனிவோடும் கருணையோடும், உரிமையோடும் உறவோடும் நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டு வாழ புத்தாண்டில் நம்மைப் பக்குவப்படுத்துகிறார்.
எனவே, உலகியலைக் கடந்த இறையியல் வாழ்வுக்குத் தளங்கள் அமைத்து, அதற்கான தடங்கள் பதிக்க, இயேசு உன்னையும் என்னையும் உரிமையுடன் அழைக்கிறார். இயேசு பாலகனின் பிறப்பும், புதிய ஆண்டின் பிறப்பும் நம்முன் படம்பிடித்துக் காட்டப்பட்டிருப்பினும், இவை சொல்லும் பாடங்களை உணர்ந்து பார்க்கவும், உரசிப் பார்க்கவும் நாம் கடமைப் பட்டுள்ளோம். முடிவில் கண்ட விடிவாய் நாம் சுவைத்து அசைபோட வேண்டியவை ஐந்து கோணங்களில் நம்மை வந்தடை கின்றன. அவை,   

  • ஆறாத காயங்களில் மனித நேயங்கள்
  • உணரப்படாத இயேசுக்களின் உண்மை உருவங்கள்
  • இறைப்பணிக்கு அர்ப்பணிப்பதில் அதிர வைக்கும் ஏமாற்றங்கள்
  • வியப்புகளை வித்தியாசமாய் இனம் காணும் இதயங்கள்

இந்த ஒட்டுமொத்த சந்தர்ப்பங் களைச் சந்தித்துச் சாதனை புரிய நீயும் நானும் தயங்காமல் முன்வர வேண்டும் என்பதே இன்றைய இரகசியத் தேவையும், பகிரங்க அறைகூவலுமாக உள்ளது. எனவே, எதிர்கால இறையரசுக் கனவுகளை நிகழ்கால இவ்வுலகக் கவலைகள் கலைத்து விடாமல் இருக்க முயற்சிப்போம், முடிவெடுப்போம். நகர மறுக்கும் நம் நாடி நரம்புகளில் எல்லாம் இறைநாதம் இசைக்கச் செய்வோம். இறைப்பணி செய்ய ஒருவர் பிறருக்கு வழிகாட்டுவோம். நம் ஆன்மீகப் பணியால் ஏங்கி நிற்கும் மனிதத்தை ஏந்தி நிற்கத் துணிவு பெறுவோம். பிறரன்புப் பணி எனும் சங்கிலிச் செயல்பாட்டிற்குள் நம் பணி எனும் முத்திரை பதிக்க முன்வருவோம்.

சகோ. வே. அன்னத்தாய், 
இயேசுவின் திரு இருதய சபை, தூத்துக்குடி

இவர் போல் யார்?

புனித வனத்து அந்தோணியார் - மடாதிபர் (கி.பி. 251 - 356)
எகிப்து நாட்டைச் சார்ந்த தவ முனிவர், கிறிஸ்தவத் துறவு வாழ்வுக்கு வித்திட்டவர். பெற்றோரை இழந்த நிலையில், 18 வயதில் தேவ அழைத்தலை உணர்ந்தார். இவருக்கு உரிமைச் சொத்தாக இருந்த ஒரு தோட்டத்தைத் துறந்துவிட்டு இயேசுவைப் பின்செல்ல உதவியாக இருந்தவை, இயேசுவின் அப்போஸ்தலர்கள் அனைத்தையும் துறந்தபின், அவரைப் பின்சென்றார்கள் என்ற வார்த்தைகள் (மத் 19:21). தன் சகோதரிக்கு மட்டும் ஒரு சிறு தொகையைக் கொடுத்துவிட்டு மீதியைத் தானம் பண்ணியபின் துறவற வாழ்வை மேற்கொண்டார். தனது ஊருக்கு அருகிலேயே கடின உழைப்பு, வேதாகம நூலை வாசித்தல், ஜெபம் இவற்றில் நாள்தோறும் நேரத்தைச் செலவிட்டார்.
நாளடைவில் ஊரை விட்டு வெகுதொலைவில் உள்ள இடத்தைச் தேடிச் சென்றார். அங்கு புனித அத்தனாசியாருக்கு இவரது தோழமை கிடைத்தது. நாளடைவில் பலரும் இவரை அணுகவே, ஆங்காங்கே குழுக்களாக துறவு வாழ்வு மேற் கொண்டார். புனித அத்தனாசியார் இவரது துறவு வாழ்வு பற்றி விரிவாக எழுதியுள்ளார். இந்தக் குறிப்புகளின் பலனாக பலரும் பாலை நிலத்திற்கும் காடுகளுக்கும் சென்று வாழ்நாளெல்லாம் தவ, ஜெபவாழ்வு வாழ்ந்து இறைவன் பதம் சென்றனர்.“இவ்வுலக வாழ்வு எத்துணை மின்னல் வேகத்தில் தோன்றி மறைகிறது; ஆனால் நித்தியம், நித்திய பேரின்பம் என்பது எத்துணை மேலானது” என்று தியானிப்பது எவ்வளவு பலன் தருகிறது என்று இவர் கொடுத்து வந்த மறையுரை புனித அகுஸ்தினாரை மிகவும் கவர்ந்திழுத்தது. இவர் தனது 105-ஆவது வயதில் செங்கடலுக் கருகில் 356-ஆம் ஆண்டு கோல்சீம் குன்றில் இறைவனடி சேர்ந்தார்.
சிந்தனைக்கு : “இவரது புண்ணிய மாதிரிகையாலும், மன்றாட்டினாலும் நாங்கள் எங்களையே ஒறுத்து, எல்லாவற்றிற்கும் மேலாக உம்மையே நேசிக்க வரமருளும்.”

- எட்வர்டு

துறவறம் - நேற்று இன்று நாளை

உள்ளதைக் கொடுத்து மனிதனாக வாழும் சராசரி நிலை கடந்து, உள்ளத்தைக் கொடுத்து புனிதனாக வாழவும், உள்ளதையயல்லாம் கொடுத்து இறைவனாக மாறவும் படிப்படியாக வாழ விழைவதே துறவற அழைப்பாகும்.
இன்று துறவறத்தில் அனுபவ ரீதியாக பல சவால்களைச் சந்திக்க முறையீடின்றி முன்வரும் நாம் ஆன்மீக ரீதியான சவால்களைச் சில முறைகள் கூட சந்திக்க கட்டாயத்தினால் மட்டுமே சம்மதிக்கிறோம். கடந்த காலத்தில் “ஒருவன் உலகம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டாலும் ஆன்மாவை இழந்தால் பயன் எதுவும் இல்லை” என்ற உன்னத நிலையில் இருந்த துறவறம், இன்று “ஆன்மாவைச் சேகரித்துக் கொண்டாலும் ஒரு துறவி உலகம் முழுவதையும் தனதாக்கி வாழ்ந்தால் மட்டுமே பயன் பெற முடியும்” என்ற உறுதிநிலையை அடைந்துள்ளது. ஆனால் நாளை அதாவது எதிர்காலத்தில் உலகத்தை மட்டுமே தனதாக்கி வாழும் இறுதி நிலைக்குத் துறவறம் தன்னை மாற்றி வருகிறது.
இந்த அபாயகரமான ஆனால் உண்மையான சகாராச் சூழலில் பயணித்துக் கொண்டிருக்கும் நீங்களும் நானும் நமது இறை அழைப்பின் குரலுக்குப் பதிலாக எதை இழந்துள்ளோம்? எந்த அளவு இழந்துள்ளோம்? என்று சிந்தித்து நம்மைச் சீர்திருத்த வேண்டிய கட்டாய நிலையில் கால் பதித்துள்ளோம். இன்றைய அதிகபட்ச தேவை 
  • சின்னத்திரை சீரியல்களைப் பார்த்து வாழ்வைச் சீர்திருத்தத் துடிப்பது அல்ல!
  • விவேகம் மறந்த வேகத்திலும், சிந்தனை இழந்த முயற்சியிலும், சுயநலம் விரவிய செயல்களிலும் விழுந்து மடிவது அல்ல!
  • வீதியில் வாழும் ஏழைகளை விதி என்று உதறி விட்டு மனிதம் மறந்த மண்ணாங்கட்டிகளாய் மாடியில் வாழ விரும்புவது அல்ல! 
மாறாக,
  • மரணம் வருமுன்னே தினமும் இறந்து வாழும், கோழைகளாய் உருமாறி நிற்கும் ஏழை மனிதத்தைத் தேடிச் செல்ல நீயும் நானும் தயார் நிலையில் இருக்க வேண்டும்...
  • வீடுகளைச் சந்திக்கச் செல்லும் போது நிமிர்ந்து செல்லும் மாடி வீட்டிற்கு என்று மட்டும் செல்லாமல், குனிந்து மட்டுமே செல்ல முடிந்த குடிசை வீட்டிற்குள் செல்வதில் விருப்பம் கொள்ள வேண்டும்...
  • சிலுவை மரணம் மட்டும் கீழ்ப்படிந்து தன்னைத் தாழ்த்திய அன்பர் இயேசுவின் முழு அர்ப்பணிப்பு மனநிலை நம் சின்னஞ்சிறிய செயல்களில் வெளிப்பட வேண்டும்...
  • நேரம் காட்டும் கடிகாரம், தேதி காட்டும் நாட்காட்டி இவற்றிற் கிடையே உண்மை, நேர்மையையும்; அன்பு, அமைதியையும் பிரதிபலித்துக் காட்ட முயற்சிக்க வேண்டும்...
இவ்வாறான சிந்தனைகளை உருவாக்க நம் செயல்களை விவிலிய மொழிகளால் செதுக்கிட சம்மதம் சொல்வோம். அப்போதுதான்
  • எதிர்காலத்தில் மலிந்து கிடக்கும் போலிகளை இனம் கண்டு, மறைந்து கிடக்கும் நிஜங்களை நிமிர்த்திவிட முடியும்!
  • குழந்தைகள், இளைஞர்கள், பெரியோர், முதியோரைச் சந்திக்கும் வேளையில் அவர்களின் ஏக்கத் தாக்கங்களைத் தணித்திட முடியும்!
  • இறையழைத்தல் என்னும் தரமற்ற விதைக்கு வீரியம் மிக்க உரமிட்டு மீண்டும் வளர்த்திட முடியும்!
  • பொருளாதாரத்தில், உறவுகளில் தோற்றுப்போன நெஞ்சங்களை நம் திடம் மிக்க தோள்களில் தூக்கி நிறுத்த முடியும்!
இதற்காக சாரமும் சக்தியும் பெற வேதம் என்னும் ஒளிக்குள் நம் பாதம் பதியச் செய்வோம். ஆன்மீகப் பயணத்தில் ஆன்மாக்களைச் சேகரிக்கும் இலக்கினை எட்டிப் பிடிப்போம்.

சகோ. பாப்பா,
இயேசுவின் திரு இருதய சபை, தூத்துக்குடி

நமது வாரம் - ஜனவரி 24 முதல் 30 வரை 2011

இதழின் அட்டைப்படத்தைப் பார்த்தவுடன் சிலருக்கு ஆச்சரியம் எழுந்திருக்கலாம். வழக்கமாக ஏப்ரல் அல்லது மே மாதம் கொண்டாடப்படும் இறையழைத்தல் வாரம் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வந்துள்ளதே என்று நினைக்கலாம்.  இறையழைத்தல் ஊக்குநர்களின் கூட்டத்தில் இந்த நாள் மாற்றத்திற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டன.  இக்காரணங் களைக் கருத்தில் ஏற்று தமிழக ஆயர் பேரவையும் இம்மாற்றத்திற்கான ஒப்புதல் அளித்தது.
இதுவரை இறையழைத்தல் ஞாயிறு கொண்டாடப்பட்ட பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு, பொதுவாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வருகிறது. அக்காலம் பள்ளிகளுக்கு விடுமுறை காலமாக உள்ளது. 
  •  பல சமயங்களில் இறையழைத்தல் ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முன்பாகவே இறையழைத்தல் முகாம்கள் (ஏப்ரல் மாதத்தில்) முடிவுற்று விடுகின்றன.  இதனால் கொண்டாட்டம் முக்கியத்துவமும் முழுப் பொருளும் இல்லாமல் மாறிவிடுகின்றது.
  • மே மாதம் என்பதால் நமது பிள்ளைகள் மற்றும் இளையோர் பங்கேற்பு குறைந்தே போகிறது.  இக்காரணங்களால் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் இக்கொண்டாட்டம் தகுந்த முறையில் கொண்டாடப்பட்டு பலன் கிடைக்கும் வகையில் அமைய விரும்புகிறோம். 
  • பங்குகளில், பள்ளிகளில் இந்த இறையழைத்தல் விழாவினைச் சில சிறப்பு நிகழ்வுகள் மூலமாக மக்களோடு, சிறார்களோடு, இளையோரோடு இணைந்து கொண்டாடத் திட்டமிடுவோம்.
  • இறையழைத்தல் முகாம்களுக்கு முன்பே இறையழைத்தல்  பற்றிய சிந்தனைகளை நமது பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பாக அமைப்போம்.
  • பள்ளி நாட்களாக (ஜனவரி மாதம்) இருப்பதால் நமது பள்ளிகளிலும் கூட கத்தோலிக்கப் பிள்ளைகளுக்கு இறையழைத்தல் பற்றிய விதையை ஊன்றும் வாய்ப்பாகப் பயன்படுத்துவோம்.
  • இக்கொண்டாட்டம் நம் ஆண்டவர் இயேசு ஆலயத்தில் காணிக்கையாக்கப்படும்நாளுக்கு (பிப்ரவரி 2) முன் உள்ள ஞாயிறன்றும் அதற்கு முந்தைய வாரமும் கொண்டாடப் படுவதனால், இயேசுவின் அர்ப்பணத்தோடு நமது அர்ப்பணமும் இணைந்து புதிய சமூகத்திற்காக உழைக்கும் சிந்தனையைப் பெறுவோம்.
  • இந்த ஆண்டு (2011) கொண்டாட்டம் ஜனவரி 30ஆம் தேதி வருகின்றது.  சிறப்பாகக் கொண்டாட வழிகாட்டும் திருவழிபாடு குறிப்புகள், சுவரொட்டிகள் பங்குகளுக்கும் இறையழைத்தல் ஊக்குநர்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

கவனிக்க : இந்த ஆண்டு (2011) இளையோர் ஆண்டு விழாவை முன்னிட்டு இதே நாளில் (ஜனவரி 30-ல்) மாபெரும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் அதற்கு முக்கியம் தருகிற சமயத்தில் உங்கள் பங்கு மற்றும் பள்ளியில் அதற்கு அடுத்த வாரத்தில்கூட இவ்விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யலாம்.
இறையழைத்தல் சிறப்பான தன்மையிலும் எண்ணிக்கையிலும் உயர்ந்திட அனைவரும் திட்டமிட்டு உழைக்க வேண்டிய காலம் இது.  இறையழைத்தலுக்கான எண்ணம் இல்லாமலோ அல்லது தவறான சிந்தனைகளோ உள்ள சூழலில், அழைத்தல் பற்றிய நேர்மறையான எண்ணங்களும் சிந்தனைகளும் பரவலாக்கப்படுவதற்கான முறைகளையும் உருவாக்குவோம். மறைமாவட்ட, துறவற இறை யழைத்தல் ஊக்குநர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளுமே பலன் தர எல்லோருமே இணைந்து செயல்படத் தேவையாகிறது.  இன்றைய சூழலில் இப்பணி சவால் நிறைந்த பணியே.
சில பரிந்துரைகள் :
பங்குகளில் :
  • சிறப்பு வழிபாட்டுக் கொண்டாட்டங்கள், மறையுரைச் சிந்தனைகள்.
  • ஞாயிறு மறைக்கல்வியில் இறையழைத்தல்பற்றிய சிந்தனைப் பகிர்வு
  • அன்றைய அன்பியக் கூட்டங் களிலும் அழைத்தல்பற்றிய சிறப்புப் பகிர்வுக்கு வழிவகுத்தல்
  • அழைத்தலை மையப்படுத்திய

-மாலை நேர கலை நிகழ்வுகள் ஏற்பாடு செய்தல்-பீடச் சிறார்களை ஊக்கப் படுத்தி சிறப்புக் கூட்டம் நடத்துதல்
பள்ளிகளில் :
  • மறைக்கல்வி வகுப்புகளில் அழைத்தல்பற்றிய பாடம் / விளக்கம் தரல்.
  • கத்தோலிக்க பிள்ளைகளை மட்டும் ஒன்று சேர்த்து சில நிகழ்வுகள், அழைப்புப் பற்றிய DVD, கருத்துரை, நாடகம், நடனம் அமைத்தல்.

இன்னும் உங்கள் வசதிக்கேற்ப புதிய வழிமுறைகள் வகுத்துச் செயல்பட வாழ்த்துகிறோம்.
பணி. சே. சகாய ஜாண்
செயலர். இறையழைத்தல் பணிக்குழு

இறையழைத்தல்

அறுவடையோ மிகுதி. வேலையாட்களோ குறைவு (மத் 9:37).
இவ்வுலகில் பல விதங்களில் அழைப்பு வருகின்றது. தொலைபேசியில் அழைப்பு, புதுமனை புகுவிழா அழைப்பு, திருமண விழா அழைப்பு, இறையழைத்தல் (குருக்களாக, துறவியர்களாக) போன்றவை ஆகும். இதில் முதல் அழைப்பு சில மணித்துளிகள் வரைதான் நீடிக்கும். அடுத்த இரண்டு அழைப்புகள் ஒன்று அல்லது இரண்டு நாட்கள்தான். ஆனால் இறை அழைத்தலோ வாழ்விற்கான அழைப்பாக, வாழ்க்கை முழுவதற்கான அழைப்பாக உள்ளது. இது கடவுளின் மாபெரும் கொடையாகும்.
திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்தவளும், கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும், மறு கிறிஸ்துவாக வாழ அழைக்கப்பட்டவர்கள்தான். பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம், மோசே, ஆரோன் போன்றவர்களை இறைப் பணிக்காகக் கடவுள் அழைத்தார். ஆரோன்தான் முதல் குருவாக அழைக்கப் பட்டார். அவரது புதல்வர்களும், அவரது வழிவந்தவர் களும் திருநிலைப்படுத்தப்பட்டனர்.
புதிய ஏற்பாட்டில் இயேசுவே முதன்மையான குருவாக இருந்தார். அன்னை மரியாளுக்குப் பிறப்பு அறிவிப்புச் செய்தியில் இயேசுவின் பிறப்பு, பணி வாழ்வு அனைத்தும் வானதூதரால் தெளிவாகக் கூறப்பட்டது. இதையறிந்த மரியாள், “நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே ஆகட்டும்” என்றார். எனவே மரியாள் கடவுளிடமே முழுமையாக சரண் அடைந்து, தன் வாழ்வைக் கடவுளுக்கு அர்ப்பணித்து வாழ்ந்து வந்தார்.
எனவே இயேசுவையும், அன்னை மரியாளையும் பின்பற்றி ஆண்களும் பெண்களும், தங்கள் வாழ்வை இறைவனுக்கும் மக்களுக்கும் அர்ப்பணம் செய்து வாழ்ந்தனர். பல பள்ளத்தாக்குகள் சரிசெய்ய, சில மலைகளைத் தகர்ப்பது சரியானதே. எனவே துன்பம் கண்டு துவளாமல், கவலை கண்டு கண்ணீர் வடிக்காமல், இயேசுவை இறுகப் பற்றிக்கொள்வதே துறவறமாகும். இன்று துறவறத்தை மேற்கொண்டு வாழும் அநேக துறவற சபைகள் உண்டு. சில பெண் துறவற சபைகள் திருத்தந்தையர்களாலும், சில மறைமாவட்ட ஆயர்களாலும் நிறுவப்பட்டவை.
ஆண்டவரின் ஆவி என் மேல் உள்ளது. ஏனெனில் அவர் எனக்கு  அருள் பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்; பார்வை இழந்தோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கபட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் அவர் என்னை அனுப்பியுள்ளார் (லூக் 4:16 முதல்)
ஆகவே தெளிந்த மன நிறைவு பெற்றவர்களாகவும், பரந்த சிந்தனை உடையவர் களாகவும், பல நன்மைத் தனம் உள்ளவர்களாகவும், சினம் கொள்ளத் தாமதிப்பவர்களாகவும், சிறந்த இரக்க குணம் உடையவர்களாகவும், நீதிக்கும் நேர்மைக்கும் சான்று பகரக் கூடியவர்களாகவும், நீரற்ற ஓடைகளில் அருவி ஓடச் செய்பவர்களாகவும், தன்னை இழக்கவும் கொடுக்கவும் அர்ப்பணித்துக்கொள்வதுதான் துறவறத்தின் முக்கிய நோக்கமாகும். இயேசுவின் இதயத்தில் நிரந்தரமாக இடம் பிடித்த இறைப்பணியாளர் துன்ப துயரங்களையும், சோதனை வேதனை களையும், சுமைகளையும் சோகங் களையும் எளிதில் வெல்பவர். மேலும் வாழ்வின் தடைக்கற்களையயல்லாம் படிக்கற்களாக மாற்றி வளர்ச்சியின் எழுச்சிக்கு மக்களை அழைத்துச் செல்வர்.
பண்பாடு, சமூக அமைப்பு போன்ற பலவித மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, இன்றைய நவீன உலகில் இறைப்பணி செய்து இயேசுவின் மதிப்பீடுகளின்படி வாழ முன்னுரிமை கொடுத்து வாழுவதே சிறப்பாகும். ஒரே ஆயனாகிய இயேசுவின் குரலைக் கேட்டு ஒரே பணியாகிய இயேசுவின் பணியைச் செய்ய அநேக இளம் உள்ளங்கள் முன்வர முயற்சிகள் எடுப்போம். மேலும் இறைப்பணிக்கு இளம் உள்ளங்கள் இதயத்தையும் விலையாகக் கொடுக்கவும், மனித நேயத்திற்கு அனைத்தையுமே இழக்கவும் முன்வருபவர்களை ஊக்குவிப்போம்.
இறை அழைத்தலை ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், நமது சொல், செயல், எண்ணம் முதலிய வற்றில் அவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து, இளம் உள்ளங்கள் இறை அழைத்தலில் ஆர்வம் கொள்ள நாம் வாழ்ந்து காட்டுவோம். பலர் இறையழைத்தலை ஏற்க நம் செபங்களை இயேசுவிடம் ஏறெடுப்போம்.

Sr. Theresita FSM

இறையழைத்தலில் இறைவேண்டல்

ஒரே கிராமத்தில் 323 இறை அழைத்தல்கள். அதில் 152 குருக்கள், 171 கன்னியர்கள் என்றால் நம்ப முடிகின்றதா? உண்மையில் நம்பித்தான் ஆக வேண்டும். வடக்கு இத்தாலியில், தூரின் நகருக்கு 90 கி.மீ. கிழக்கே அமைந்துள்ள குக்கிராமம்தான் லூ (ஸிU). சுமார் 1000 பேர் வசிக்கும் அக்கிராமத்தின் தாய்மார்கள் 1881-இல் ஒரு நாள் பங்குத் தந்தை அலெக்ஸாண்ட்ரோ கானோர அடிகளாரின் ஒருங்கிணைப்பில் ஒன்றுகூடினர். இந்தக் கூடுகையின் நோக்கம் தம் பிள்ளைகளுக்கு இறையழைத்தல் கிடைக்கச் செபிப்பதுவேயாகும். “அதற்காக ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையிலும் திவ்விய நற்கருணை ஆண்டவரை ஆராதித்து இறை யழைத்தலுக்காக ஜெபிப்பது, மாதத்தின் முதல் ஞாயிறன்று பூசையில் பக்தியுடன் பங்கெடுத்து ஒப்புக்கொடுப்பது, பூசைக்குப் பின்பு ஊரிலுள்ள எல்லாத் தாய் மார்களும் குருத்துவ, துறவற இறையழைத்தல் பெருக குறிப்பிட்ட ஜெபத்தைச் சொல்லி மன்றாடுவது.” அவர்களது நம்பிக்கையும், எதிர் நோக்குள்ள இறைவேண்டலும் இறை இரக்கத்தைத் தொட்டன. குடும்பங்களில் ஆழ்ந்த மகிழ்ச்சி, கிறிஸ்தவ புண்ணியங்கள் தழைத்தன. அதனால் குடும்பத்துப் பிள்ளைகள் இறை யழைத்தல்களை உணர்ந்து கொண்டார்கள். குருத்துவ, துறவற அழைத்தல்கள் பெருகின. 1946-ஆம் ஆண்டு அக்கிராமத்தில் இருந்த குருக்கள், துறவியரின் எண்ணிக்கை 323. இப்பங்கிலிருந்து உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் ஊழியம் புரிந்துவந்த குருக்கள், கன்னியர் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுவார்கள். அது சிறந்த நன்றியறிதல் கொண்டாட்டமாக இருக்கும்.
இறையழைத்தல்
இறையழைத்தல் - குருத்துவ அல்லது துறவற வாழ்விற்கான அழைப்பு - எல்லா மனிதர்களுக்கும் இவ்வுல கிலேயே நேரிய வாழ்வை அடைய விடுக்கப்படும் பொது அழைப்பிலிருந்து வேறுபட்ட அழைப்பு ஆகும். இறை யழைத்தலானது இறைவன் தான் தேர்ந்தெடுக்கிறவர்கள் மேல் பொழியும் ஓர் இலவசக் கொடை. ஏனெனில், “நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ள வில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்” (யோவான் 15:16) என்று இறைமகன் தாமே கூறி யிருக்கிறார். ஆகையால்தான் இறை மகன் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் அழைத்துக்கொண்டார் என்று நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த அழைப்புகள் பல சமயங்களில் நாம் சிறிதும் எதிர்பாராதவர்களுக்கும் விடுக்கப்படுகிறது.  பாவியான மரிய மதலேனாள் இறைமகனின் சீடத்தி யாகவும், அதிக வரிதண்டி தீர்வையைச் சம்பாதித்த மத்தேயு நற்செய்தியின் தூதுவராகவும், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய சவுல் புற இனத்தாரின் திருத்தூதராகவும் அருள்பொழிவு செய்யப் பட்டனர். தூய தாமஸ் அக்குவினாசு கூறுவதுபோல் முந்தைய பாவ வாழ்வு இறைமகனின் அழைத்தலுக்கு ஒரு போதும் இடையூறாக இருப்பது இல்லை.
இறையழைத்தலில் இறைவேண்டல்
இறையழைத்தலை ஊக்குவிக்க பள்ளிகள், கல்லூரிகள், பங்குகள் மற்றும் இளைஞர் சார் பணிகளுடைய மனிதரைச் சந்திக்கும்போது என் மனத்தில் ஒருவித தேக்கநிலை நிலவுகிறது. ஏறக்குறைய 2000 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் கூட, “... உமக்கு இன்னமும் ஒன்று குறைவாய் இருக்கிற . . . என்னைப் பின்செல்” என்ற அதே மெல்லிய அழைப்புக் குரல் இன்றும் இளைஞர் பலரின் காதுகளில் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருந்தாலும், சிலர் அந்த சப்தத்தைக் கேட்டு மகிழ்வோடும் உளப் பூரிப்போடும் ஆண்டவரின் அழைப்புக்குப் பதில் தருகின்றனர். மற்றவர்கள் அந்த அழைப்பிற்குச் செவிகொடுக்க மறுத்து அச்சத்தால் வேறுபுறம் திரும்பிக்கொள்கின்றனர். இன்னும் பலரோ அழைப்பைக் கேட்டு நிற்கிறார்கள், கவனிக்கிறார்கள், அதன் பொருள் என்னவென்று அறிய ஆசிக்கின்றனர். அத்தகைய ஒரு அழைப்பு தங்களுக்குத்தானா? என்று, அழைப்பு விடுத்த இறைமகன் அவர்களைக் கடந்து சென்று, மிகத் தொலைவு தூரம் சென்று விடும் வரையிலும், தங்களையே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருசில பங்குத் தளங்களில் பங்குப் பணியாளர்களைச் சந்திக்கும் போது, அவர்கள் தம் பணி வாழ்வினில் சந்தித்த ஏமாற்றங்கள், உளைச்சல்கள்,  ஆதரவற்ற நிலை போன்ற எதார்த்தங்களை இறையழைத்தல் ஊக்குநராகிய என்னிடம் பகிரும்போது அவை என்னை இன்னும் ஆழமாகக் கலவரப்படுத்துகின்றன. ஒருசில தலைமையாசிரியர்கள் (அருள்பணி யாளர்கள்) என்னிடம் “அட! என்ன சாமி, இந்தக் காலத்துல யார் சாமியாரா போக ஆசைப்படுறா? நீங்க இங்க வருவதே வேஸ்ட். அவனவன் ஒரு பிள்ளையையும் இரண்டு பிள்ளை யையும் பெத்து வெச்சிருக்கான்” எனக் கூறும்போது, இந்த இறையழைத்தல் பணி நமக்குத் தேவைதானா? அதற்கு நான் இசைந்தவனா? எனும் கேள்விகளும் என்னை ஆழம் பார்க்கின்றன. இந்தத் தோல்விகள், விரக்திகள், இயலாமைகள் போன்றவற்றைத் தனிமையான இறை உறவு நேரங்களில் ஆண்டவரிடம் கொண்டு வரும்போது, மனமானது இலேசாகிறது.
அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, ‘அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின்  உரிமையாளரிடம் மன்றாடுங்கள்’ என்றார் (மத் 9:37-38) 
போன்ற இறைவார்த்தைகள் சோர்வைப் போக்கி, இறைபணிக்கு ஆள்களைத் தருவது இறைமகனின் வேலை, நான் அதீத நம்பிக்கை கொண்டு அவரிடம் இறைஞ்சவே வேண்டும் என்ற நம்பிக்கை என்னை உந்தித் தள்ளுகிறது.
லூ கிராமத்தினர் ஒருமனப்பட்டு இறை இரக்கத்தில் நம்பிக்கை வைத்து வேண்டியபோது, எண்ணற்ற மக்களை இறைவன் தன் குருத்துவ மற்றும் துறவற பணிக்காகத் தேர்ந்துகொண்டது நம்மை நிச்சயமாக நம்பிக்கையில் பயணிக்க வைக்கும்.
நாம் இறை பராமரிப்பை, இரக்கத்தை முன்னிட்டே நமது பணியை முனைந்து தொடர முயற்சிக்கும்போது, இறைவன் தாமே நம் சார்பில் செயலாற்றுவதை நாம் காண முடியும்.
ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்து விடு. அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார் (திபா 37:4-5).
ஆழமாய் இறைவேண்டல் செய்வோம்!
இறையழைத்தல் பெருகுவதைக் காண்போம்!!
இறையரசு முழுமையாய் மலர்வதில் மகிழ்வோம்!!!

அருட்திரு. ஜெயபாலன் CMF,
கும்பகோணம்

அழகு

தத்திச் செல்லும் வண்ணப் பறவைகளின்
கொஞ்சும் சப்தம் கேட்டு கண் விழித்த மலைமங்கை
பச்சைத் தாவணியைப் பக்குவமாய் உடுத்தி - காலைச்
சூரியக் காதலன் கரம் பற்ற அங்கே காத்திருந்தாள்

அவளருகே
கொள்ளை கொள்ளும் அழகு குளிரோடை - குளிர்
தென்றல் வீசும் நீரோடை காதல் களிப்பால்
கைகோத்து நீந்தித் திரியும் மீன் ஓடை
செங்கமல தாமரைகள் துயில் கொள்ளும் நீரோடை

அப்போது
காலை வந்த சூரியக் காதலனின் சூடு தணிக்க
மாலையிலே மலைமங்கை வான்மேக ஆடை பூண்டு
குளிர் பால்நிலவில் குளித்தெழுந்து குளிரருவி கொலுசிட்டு
நட்சத்திர விண்மீன்களைக் கொண்டையில் சூடிக்கொண்டாள்

அவள் மீது
கோபத்தில் வெடித்திட்ட மின்னல்களை - கொவ்வை
இதழால் குளிரூட்ட கார் குழலில் ஒத்தடமிட்டாள்
ஒத்தடத்தால் சொக்கிப் போன வான மங்கை
ஒய்யாரமாய்ச் சிரித்திட்டாள் சிந்தியது மழைத்துளிகளே!
சிந்திய மழைத்துளிகளைச் சிதறாது தாங்கிக்கொள்ள
சின்னாளம் பட்டுச் சேலையாக வானவில்லை வீசிட்டாள்
வண்ணக் கதிரோனின் வனப்பான அழகில் சொக்கிப்போன
வானமங்கை களுக்கெனச் சிரித்திட்டாள் வந்தது இடிதானே!

மானிடரே
இயற்கையின் அழகில் ஒன்றுபடுவோம் - அதன்
இனிமையைச் சுவைத்தே ஆராதிப்போம் - நம்
சுயநலத்திற்காய் இயற்கையைச் சுருக்கிடாமல்
சுதந்திரமாய்க் காடுகளை வளர்த்திடுவோம் மனிதம் காப்போம்!


தங்க. ஆரோக்கியதாசன், ஆவடி 

போராட்டத்தில் முளைத்த பூக்கள் - புனிதர்களான இளைஞர்கள்

ஆக்னஸ் போஜாக்யு அன்னை தெரேசா ஆனதெப்படி?
கரோல் ஒய்ட்டியோலா திருத்தந்தை ஜான்பால் ஆனதெப்படி?
கோடிக்கணக்கான இளைய இதயங்களில் பாதிப்பை ஏற்படுத்தி நம்பிக்கை விதைகளை விதைத்துச்சென்ற அண்மைக்கால மாமனிதர்கள் அன்னை தெரேசா மற்றும் போப் ஜான்பால் என்றால் மிகையாகாது. நாமெல்லாம் அவர்களின் வயதான முகங்களைப் பார்த்துப் பார்த்து மனதில் பதிவுசெய்து வைத்திருக்கிறோம். புன்னகையும் நம்பிக்கையும் தெய்வீகமும் தவழும் அவர்களின் இளம்வயது புகைப்படங்களை பார்த்ததுண்டா? நம் இளைஞர்களைப் பார்த்து அந்த மலர்ந்த முகங்கள்,“பாருங்கள், நாங்களும் ஒருகாலத்தில் உங்களைப்போல் இளைமையாய் இருந்தோம். உங்களைப்போல் நல்லது செய்யவும், சாதிக்கவும் துடித்தோம். கடவுள் எங்கட்கு வழிகாட்டினார்” என்று கூறும் முகங்கள் அவை.
18வயதில் 1928ல் மேல்நிலைப் பள்ளி முடித்ததும் ஆக்னஸ் எடுத்துக்கொண்ட  புகைப்படத்தையும், 1940ல் தன் 19வது வயதில் கல்லூரி முதல் ஆண்டில் கரோல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும்தான் இங்கே நாம் பார்க்கிறோம்.
தங்கள் வாழ்வில் மிக முக்கியமான தைரியமான முடிவுகளை அவர்கள் எடுத்த நேரத்தின் புகைப்படங்கள் இவை. ஆக்னஸ் பள்ளிபடிப்பை முடித்து துறவறத்தை ஏற்க ஆசைப்பட்ட காலம் அது. இந்த புகைப்படம் எடுத்த சில நாட்களில் அவள் கன்னியர் மடம் கால் வைத்தாள். கரோல் இந்தப்படத்தை ஒரு நாடக குழுவின் விளம்பர சுவரொட்டிக்காக ஒரு புகழ்வாய்ந்த நடிகராக வேண்டும் என்ற ஆர்வத்தில் எடுத்துக் கொடுத்தார்.
இந்தப் படங்களில் சாந்தமாக தீர்க்கமாக தங்கள் எதிர்காலத்தை நோக்கி பார்க்கும் இந்த இளைய முகங்கள் பிற்காலத்தில் ‘அன்னை’ ‘திருத்தந்தை’ என்று உலகமே அன்பாய் அழைக்கும் பேறுபெறப்போகிறார்கள் என அப்போதிருந்தவர்கள் நினைத்துப்பார்த்திருப்பார்களா? “உங்களுக்குள்ளும் இளைஞர்களே ஒளிமயமான எதிர்காலம் ஒட்டிக்கொண்டிருப்பதை என்றும் மறவாதீர்கள்” என சொல்வதாய் படுகிறது. நம் மனதில் அவர்களை வழிநடத்திய இதயத்தின் இரகசியங்கள் எவை என்ற தேடல் தொடர்கிறது.
உடன் பயணித்த கடவுளின் குரல்கள்
வாழக்கைப் பயணத்தை கூர்ந்து கவனிக்கிற எவரும் கடவுளின் கரமும் குரலும் கூடவே பயணிக்கிறதை கண்டுகொள்வார்கள். கடவுள் நம்மை வாழவைக்க வழிநடக்கிற தெய்வம். அதை பெரியவர்கள் நமக்கு கற்றுத்தருகிறார்கள். ஆக்னஸ் கரோல் இருவருமே பக்தியான கத்தோலிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஒருவர் அல்பேனியா நாட்டிலும் மற்றவர் தெற்கு போலந்து நாட்டிலும் பிறந்து அப்போதிருந்த தேசத்தின் சுதந்திர காற்றை சுவாசித்தார்கள். அந்தோ! சிலகாலமே. இருவருமே இளவயதில் பாசத்திற்குறிய பெற்றோர்களில் ஒருவரை இழக்க வேண்டிய கையறுநிலைக்கு ஆளாகினர். ஆக்னசின் தந்தை அவரின் 9ம் வயதிலும் கரோலின் தாய் அவரின் 7ம் வயதிலும் இறைவனடி சேர்ந்தனர்.
கரோல் தன் பாசமான தந்தையோடு சேர்ந்து சாப்பிட்டான், செபித்தான் நீண்டதூரம் காலார நடந்தான். ஆக்னஸின் தாய் கரிசனையோடு விட்டருகில் வாழ்ந்த நோயாளிகளுக்கு உணவெடுத்துச் செல்ல கூடவே சிறுகை பிடித்து நடப்பாள் ஆக்னஸ். பிற்காலத்தில் தன் தாய் பற்றி நினைவு கூறும்போது அன்னை சொன்னார்கள், “ நன்மைகள் செய்யும் போது சலனமில்லாமல் கடலுக்குள் கல்லை போடுவது போல செய்ய வேண்டும் என என் அம்மா சொல்வதுண்டு” என்றார்கள்.
இந்த எதிர்கால உலகமகா தலைவர்களை தங்கள் வெற்றியை நோக்கி சில அன்பான இதயங்கள் வழிநடத்தின. ஆகனஸ் தன் பள்ளியில் தந்தை ஜாம்பரே எனும் ஏசு சபை குரு நடத்திய இளைஞர் குழுவில் உறுப்பினராயிருந்தார். இந்தியாவிலிருந்து மறைபோதக ஏசுசபை குருக்கள் எழுதும் கடிதங்களை அவர் தன்னுடைய இளைஞர்களுக்கு படித்துக் காட்டுவது வழக்கம். இப்படி ஏழ்மையிலும் அறியாமையிலும் வாடும் இந்தியர்களுக்கு பணிசெய்யும் ஆர்வம் ஆக்னஸ் இதயத்தில் பற்றிக்கொண்டது.
கரோல் சற்று வித்தியாசமாக கிரக்கோ நகரில் சமூக அக்கறையோடு கலையில் ஈடுபட்டிருக்கும் நாடக இளைஞர்கள் குழுவில் சுறுசுறுப்பான உறுப்பினராயிருந்தார். அந்நேரம் 1939ம் ஆண்டு ஜெர்மனியின் படைகள் போலந்தை அநியாயமாய் கைப்பற்றி பல்லாயிரக்கணக்கானவர்களை இரக்கமில்லாமல் கொன்றும் சிறையிலடைத்தும் சித்திரவதை செய்த காலம். அப்போழுது டைரனாஸ்கி எனும் டைலர் ஒருவர் கொண்டிருந்த பக்தியும் இளைஞர்களை ஒன்று சேர்த்து செய்த நற்பணிகளும் கரோலைக் கவர்ந்தது. பிற்காலத்தில் இதைப்பற்றி இவ்வாறு ஜான்பால் எழுதினார், “துன்ப நேரத்தில் கடவுளை தூற்றாமல் ஒருவர் மிகவும் கடவுளுக்கு நெருக்கமாகவும்கூட வாழ முடியும் என நிரூபித்தார். அவரிடமிருந்து உண்மைகளை கற்கத்தொடங்கினேன்”.
இந்த கடினமான வருடங்கள் பல இழப்புகளை கொண்டுவந்தன. ஜெர்மானியர் கல்லூரிகள் கல்வி நிலையங்களை மூட படிக்கும் வாய்ப்பை இழந்தார். ஒவ்வொரு நாளும் பசிக்கு உணவை பெறவே போராடிய துக்க நேரத்தில் தன் ஒரே சொத்தான தந்தையையும் இழந்த நாளில் முழுவதும் இடிந்தே போனார் கரோல். பின்னாளில் “ அன்றுபோல் என்றும் வெறுமையை உணர்ந்ததில்லை” என நினைவுகூர்ந்தார்.
போராட்டத்தில் முளைத்த பூக்கள்
இருளும் இழப்பும் சூழ்ந்த நிலையில் வானிலிருந்து ஒளியும் நம்பிக்கையும் பெற்ற நினைவுகளை அவர்கள் என்றும் மறந்ததில்லை. “என் 12ம் வயதில் முதலில் நான் துறவியாய் வாழ்ந்திட ஆசைப்பட்டு என் தோழியிடம் விளையாட்டாய் தெரிவித்தேன். ஆதைப்பற்றி தெளிவோ, தீர்க்கமோ என்னிடம் இல்லை. அது விவரிக்க முடியாத ஆழ்ந்த அனுபவமாய் இருந்தது” என்று பின்னாளில் சொன்னார். பின் வந்த சில காலங்கள் தன் அழைப்பின் அர்த்தம் புரியாமல் தவிப்பில் காலம் கடத்தினாள்.  ஒருநாள் தந்தை ஜாம்பரேவிடம் சென்று, “தந்தையே ஒருவரை கடவுள் அழைக்கிறார் என்பதை அவர் எப்படி உணர்ந்துகொள்ள முடியும்?” என்று கேட்டார். அதற்கு பக்திமிகுந்த ஜாம்பரே “ அதைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் மனதில் இனம்புரியாத சந்தோம் வளரும். அதுவே சிறந்த அடையாளம்” என்றார். இருந்தும் இந்த இன்பத்தை அவள் உடனே அடைந்திடவில்லை.
குடும்ப வாழ்விலிருந்து பிரிந்து போவது அவளைப்பொறுத்த வரையில் முடியாததாக தோன்றியதும் உண்டு. கனவன் பிள்ளைகள் என்ற குடும்ப வாழ்வும் அவள் போற்றியதாகவே இருந்தது. பிற்காலத்தில் ஒரு பத்திரிக்கையாளர் “நீங்கள் எத்தனையோ தாய்மார்களின் குழந்தைகளை பராமரிக்கின்றீர்கள். ஒருநாளாவது நானும் இப்படி குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லையா? என்று கேட்டதற்கு அன்னை “உண்மை, உண்மை  உண்மையாகவே நாங்கள் கடவுளுக்காக செய்யும் மாபெறும் தியாகமே இதுதான். இதுதான் கடவுளுக்கு நாங்கள் கொடுக்கும் விலைமதிக்கமுடியாத பரிசு” என்றார்.
கரோலைப் பொறுத்த மட்டில் மேல்நிலைப்பள்ளி வரை ஒருநாளும் தவறியும் ஒரு குருவாகிட அவன் நினைத்ததில்லை. எப்போதும் நாடகம் கலையரங்கம் என ஆர்வமாய் அலைந்தான். ஜெர்மானியர்களுக்கெதிராக கருத்துக்கள், நாட்டுப்பற்று, விடுதலை உணர்வுகள் கொண்ட போலந்து நாடகங்களை மறைமுகமாக தயாரித்து நடிக்கும் குழுவில் துடிப்புமிக்க உறுப்பினராய் இருந்தான். மிகவும் ஆபத்தான இந்த பிழைப்பு கண்டுபிடிக்கப்பட்டால் கொலைகளம்தான். அப்படி கொல்லப்படும் பலரைக் கண்டும் தைரியமாய் தொடர்ந்தான் கரோல்.
கடவுளின் திட்டங்கள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டதல்லவா! ஒருபோதும் நினைத்துப் பாராத கரோல் மனதில் மிக அடர்த்தியாய் குருவாகிட அழைக்கும் குரல் வலுத்தது. ஏனெனில் கண்ணீரிலும் குழப்பத்திலும் போரிலும் செத்துமடியும் தன் தேசபிள்ளைகளை மீட்டெடுக்க சிறந்த வழி இதுவே என கடவுள் காட்டுவதாய் உணர்ந்தார். பின்னாளில் கூறினார் “ போர்களின் கொடூர முகங்களில் குருத்துவத்தின் அர்த்தமும் அதனால் வரப்போகும் நல்விளைவும் எனக்குத் தெள்ளத்தெளிவானது.” இந்த முடிவு அவ்வளவு எளிதல்ல ஏனெனில் தன் உயிருக்கும் மேலாய் காதலித்த நாடக சாலையை அது தந்த நன்பர்களை துறப்பது இறப்பதற்கு சமமாய் இருந்தது. அது உண்மையிலேயே ஒரு புதிய வாழ்விற்குள் புக அவர்கொண்ட மரணமே.
எனக்கெல்லாம் ஏசுவே
மாபெறும் முடிவுகளை யாரும் சுலபமாய் புன்னகையோடு எடுப்பதில்லை. எத்தனையோ போராட்டத்துக்கு பின்தான் இன்னொருவர் திட்டத்தில் அர்த்தம் பிறக்கிறது. இந்த இருவருக்குள்ளும் நடந்த போராட்டமென்ன? யார் அமைதியை கொணர்ந்தது? என நாம் யோசிப்பது சரியே.
ஒருநபரை நேருக்கு நேராய் சந்திக்க வேண்டிய கட்டாயம் வேறு வழியே இல்லாமல் வந்து சேர்ந்தது. உணர்வுகளைக் கொட்டவும், கேள்விகளைக் கேட்கவும் முகமுகமாய் வெளிப்படுத்தவும் வேண்டிய சூழ்நிலை. இருவர் மட்டுமே தனியாய் இயேசுவும் ஆக்னசும் இயேசுவும் கரோலும் என்ற சந்திப்பு உறையாடல் மாற்றங்களை ஏற்படுத்தியது.
உள்ளுக்குள் வெளிச்சம்
நெருக்கமானவர்களுக்கு கூட அவர்களிடம் தோன்றும் வித்தியாசங்களின் வேர்புரியவில்லை. ஒருநாள் அவர்கள் வெளிப்படையாய் திட்டத்தை சொல்கையில் சிலருக்கு வியப்பாகவும் கசப்பாகவும் இருந்தது. கரோலின் நன்பர்கள் எப்படியாவது அவரைத் தடுத்திட முயற்சித்தனர். 20ம் நூற்றாண்டின் இதயங்களை திரும்பிபார்க்க வைத்த தலைவர்களின் இதயங்கள் உள்ளுக்குள் வெளிச்சமடைந்தது யாருமற்ற பாலைவன அமைதியில் அவர்கள் சந்தித்த கடவுடளிமிருந்ததுதான். பின் கரோல் எழுதினார் “ ஒருநாளும் இல்லாத ஒளியை என் உள்ளத்தில் கண்டேன். கடவுளின் அழைப்பையும் அது கொடுக்கும் பேரமைதியையும் உணர்ந்தேன்”. அன்னை தெரசா கூறினார் “ என் 18ம் வயதில் நான் முழுவதும் கடவுளுக்கே சொந்தமானவள் என அறிந்தேன். கடவுளே இதை நான் உணர்ந்திடச்செய்தார். அதன்பின் ஒருபோதும் என் முடிவில் நான் சந்தேகம் கொண்டதில்லை”.
இயேசு அழைக்கிறார்
ஆக்னஸ் மற்றும் கரோல் இருவரும் கடவுளோடு பயணித்த வாழ்வு நமக்கு இன்று விட்டுச்செல்லும் பாடங்கள் சில உறுதியானவை. நமக்குள் நடக்கும் சில விவரிக்க முடியாத நாடகங்களுக்கு இறைவனை நாடுதலும் உறையாடுதலும் பதிலாகலாம். பிறர் வாழ்வு நமக்கு பாடமாகும் வேளையில் நம் ஒவ்வொருவரின் வாழ்வுமே மற்றவர்க்கு பாடமாகிட விரும்பும் கடவுளை நீ அறிவாயோ மனமே? உன் குழப்பத்தில் தனிமையில் நீ கடவுளை நாடுகிறாயா?  கடவுளைத் தேடுவது ஏதோ சிறுவர்கள் படிக்காதவர்களின் அறியாமை, பழக்கம் என நினைக்கிறாயா? தவறு, உலகமே போற்றுவோர் சென்ற வழி அதுதான் என நீ அறிந்திடவேண்டும். உன் வாழ்வில் இருளையும் வெறுமையும் கண்டு பயப்படுகிறாயா? இயேசுவை சந்திப்பதால் அனுபவிப்பதால் வரும் முகத்தின் சாந்தத்தை இந்த இருவரின் முகங்களில் கண்டுகொள்ள. உன்னைத் தேடும் இறைவனை நீ தேட ஆரம்பித்தால் வாழ்வின் நிறைவடைவாய் இளைஞனே, இளம்பெண்ணே!

Fr. Adaikalam, SdC.
Chennai

அழகு


தத்திச் செல்லும் வண்ணப் பறவைகளின்
கொஞ்சும் சப்தம் கேட்டு கண் விழித்த மலைமங்கை
பச்சைத் தாவணியைப் பக்குவமாய் உடுத்தி - காலைச்
சூரியக் காதலன் கரம் பற்ற அங்கே காத்திருந்தாள்
அவளருகே
கொள்ளை கொள்ளும் அழகு குளிரோடை - குளிர்
தென்றல் வீசும் நீரோடை காதல் களிப்பால்
கைகோத்து நீந்தித் திரியும் மீன் ஓடை
செங்கமல தாமரைகள் துயில் கொள்ளும் நீரோடை
அப்போது
காலை வந்த சூரியக் காதலனின் சூடு தணிக்க
மாலையிலே மலைமங்கை வான்மேக ஆடை பூண்டு
குளிர் பால்நிலவில் குளித்தெழுந்து குளிரருவி கொலுசிட்டு
நட்சத்திர விண்மீன்களைக் கொண்டையில் சூடிக்கொண்டாள்
அவள் மீது
கோபத்தில் வெடித்திட்ட மின்னல்களை - கொவ்வை
இதழால் குளிரூட்ட கார் குழலில் ஒத்தடமிட்டாள்
ஒத்தடத்தால் சொக்கிப் போன வான மங்கை
ஒய்யாரமாய்ச் சிரித்திட்டாள் சிந்தியது மழைத்துளிகளே!
சிந்திய மழைத்துளிகளைச் சிதறாது தாங்கிக்கொள்ள
சின்னாளம் பட்டுச் சேலையாக வானவில்லை வீசிட்டாள்
வண்ணக் கதிரோனின் வனப்பான அழகில் சொக்கிப்போன
வானமங்கைகளுக்கெனச் சிரித்திட்டாள் வந்தது இடிதானே!
மானிடரே
இயற்கையின் அழகில் ஒன்றுபடுவோம் - அதன்
இனிமையைச் சுவைத்தே ஆராதிப்போம் - நம்
சுயநலத்திற்காய் இயற்கையைச் சுருக்கிடாமல்
சுதந்திரமாய்க் காடுகளை வளர்த்திடுவோம் மனிதம் காப்போம்!


தங்க. ஆரோக்கியதாசன், ஆவடி

இது பூக்களின் காலம் . . .


பொங்கலுக்காவது
வருவீயாப்பா?
கொண்டாடுவதற்கென்று
தோற்றுவித்த பண்டிகைகள்
சந்திப்பதற்கென்றாகிப் போனது
ஊரில் வாழும் அம்மாக்களுக்கு
           - யுகபாரதி
வானில் அணுக்கரு தோன்றியது
அது வளர்ந்து நெருப்புக் கோளமானது
பின் காற்று, நீர், நிலம் தோன்றின
இதுவே உலக தோற்றமென்று
அன்றே சொன்ன இனம்
கேழ்வரகு, தினை உண்டு
செழுமையாய் இருந்த இனம்
கல்லிலே கலை செய்த இனம்
வெள்ளத்தைத் தடுத்து
பாசனம் செய்யும் நுட்பத்தைச்
சிந்து வெளியில் கண்ட இனம்
கல்லணை கட்டி ஆண்ட இனம்
ஆயிரத்தி இருநூறுக்கும் மேல்
நெல் வகைகளை வைத்திருந்த இனம்
பசுமைப் புரட்சியால்
பாழாய்ப் போன இனம்
தேத்தாங்காய் கொட்டை போட்டு
நீர் பருகிய இனம்
இப்படி வரலாறு கொண்ட இனம்
கூட்டுக் குடிநீருக்கும்
சுத்திகரிப்பு நிலையத்திலும்
இன்று
வரிசையில் நிற்கும் இனம்.    
பண்பாடுகள் அத்தனையும்
கடமைக்குரியது
பின் சடங்காகிப்போனது
மஞ்சத் தண்ணிக் கண்டா
பெருசுகளெல்லாம்
இளசுகளாகும்
சீர்வரிசையில்
வாழை, கரும்போடு
பசுக்கன்றும் சேரும்
மனு­ மக்களோடு
ஆடு மாடும்
எண்ண தேச்சி
தலைகுளிக்கும்
தை வந்தா
எறும்புகூட
கரும்பு தின்னும்
கழனியயல்லாம்
கருது சுமக்கும்
வாழைகூட
வாயும் வயிறுமா இருக்கும்
மண்பானையோடு
மஞ்சளும் சேர்ந்திருக்கும்
இப்படித்தான்
முன்பு பொங்கல் இருக்கும்
இப்ப பொங்கலெல்லாம்
அம்மாக்களின் கவலையோடும்
குக்கர் விடும் மூனு சத்தத்தோடும்
மூச்சிரைக்கும்.


ஜே. தமிழ்ச்செல்வன்

இறையழைத்தலில் இறைவேண்டல்


ஒரே கிராமத்தில் 323 இறை அழைத்தல்கள். அதில் 152 குருக்கள், 171 கன்னியர்கள் என்றால் நம்ப முடிகின்றதா? உண்மையில் நம்பித்தான் ஆக வேண்டும். வடக்கு இத்தாலியில், தூரின் நகருக்கு 90 கி.மீ. கிழக்கே அமைந்துள்ள குக்கிராமம்தான் லூ (ஸிU). சுமார் 1000 பேர் வசிக்கும் அக்கிராமத்தின் தாய்மார்கள் 1881-இல் ஒரு நாள் பங்குத் தந்தை அலெக்ஸாண்ட்ரோ கானோர அடிகளாரின் ஒருங்கிணைப்பில் ஒன்றுகூடினர். இந்தக் கூடுகையின் நோக்கம் தம் பிள்ளைகளுக்கு இறையழைத்தல் கிடைக்கச் செபிப்பதுவேயாகும். “அதற்காக ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையிலும் திவ்விய நற்கருணை ஆண்டவரை ஆராதித்து இறை யழைத்தலுக்காக ஜெபிப்பது, மாதத்தின் முதல் ஞாயிறன்று பூசையில் பக்தியுடன் பங்கெடுத்து ஒப்புக்கொடுப்பது, பூசைக்குப் பின்பு ஊரிலுள்ள எல்லாத் தாய்மார்களும் குருத்துவ, துறவற இறையழைத்தல் பெருக குறிப்பிட்ட ஜெபத்தைச் சொல்லி மன்றாடுவது.” அவர்களது நம்பிக்கையும், எதிர் நோக்குள்ள இறைவேண்டலும் இறை இரக்கத்தைத் தொட்டன. குடும்பங்களில் ஆழ்ந்த மகிழ்ச்சி, கிறிஸ்தவ புண்ணியங்கள் தழைத்தன. அதனால் குடும்பத்துப் பிள்ளைகள் இறையழைத்தல்களை உணர்ந்து கொண்டார்கள். குருத்துவ, துறவற அழைத்தல்கள் பெருகின. 1946-ஆம் ஆண்டு அக்கிராமத்தில் இருந்த குருக்கள், துறவியரின் எண்ணிக்கை 323. இப்பங்கிலிருந்து உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் ஊழியம் புரிந்துவந்த குருக்கள், கன்னியர் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுவார்கள். அது சிறந்த நன்றியறிதல் கொண்டாட்டமாக இருக்கும்.

இறையழைத்தல்
இறையழைத்தல் - குருத்துவ அல்லது துறவற வாழ்விற்கான அழைப்பு - எல்லா மனிதர்களுக்கும் இவ்வுல கிலேயே நேரிய வாழ்வை அடைய விடுக்கப்படும் பொது அழைப்பிலிருந்து வேறுபட்ட அழைப்பு ஆகும். இறை யழைத்தலானது இறைவன் தான் தேர்ந்தெடுக்கிறவர்கள் மேல் பொழியும் ஓர் இலவசக் கொடை. ஏனெனில், “நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ள வில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்” (யோவான் 15:16) என்று இறைமகன் தாமே கூறி யிருக்கிறார். ஆகையால்தான் இறை மகன் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் அழைத்துக்கொண்டார் என்று நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த அழைப்புகள் பல சமயங்களில் நாம் சிறிதும் எதிர்பாராதவர்களுக்கும் விடுக்கப்படுகிறது.  பாவியான மரிய மதலேனாள் இறைமகனின் சீடத்தியாகவும், அதிக வரிதண்டி தீர்வையைச் சம்பாதித்த மத்தேயு நற்செய்தியின் தூதுவராகவும், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய சவுல் புற இனத்தாரின் திருத்தூதராகவும் அருள்பொழிவு செய்யப் பட்டனர். தூய தாமஸ் அக்குவினாசு கூறுவதுபோல் முந்தைய பாவ வாழ்வு இறைமகனின் அழைத்தலுக்கு ஒரு போதும் இடையூறாக இருப்பது இல்லை.

இறையழைத்தலில் இறைவேண்டல்
இறையழைத்தலை ஊக்குவிக்க பள்ளிகள், கல்லூரிகள், பங்குகள் மற்றும் இளைஞர் சார் பணிகளுடைய மனிதரைச் சந்திக்கும்போது என் மனத்தில் ஒருவித தேக்கநிலை நிலவுகிறது. ஏறக்குறைய 2000 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் கூட, “... உமக்கு இன்னமும் ஒன்று குறைவாய் இருக்கிற . . . என்னைப் பின்செல்” என்ற அதே மெல்லிய அழைப்புக் குரல் இன்றும் இளைஞர் பலரின் காதுகளில் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருந்தாலும், சிலர் அந்த சப்தத்தைக் கேட்டு மகிழ்வோடும் உளப் பூரிப்போடும் ஆண்டவரின் அழைப்புக்குப் பதில் தருகின்றனர். மற்றவர்கள் அந்த அழைப்பிற்குச் செவிகொடுக்க மறுத்து அச்சத்தால் வேறுபுறம் திரும்பிக்கொள்கின்றனர். இன்னும் பலரோ அழைப்பைக் கேட்டு நிற்கிறார்கள், கவனிக்கிறார்கள், அதன் பொருள் என்னவென்று அறிய ஆசிக்கின்றனர். அத்தகைய ஒரு அழைப்பு தங்களுக்குத்தானா? என்று, அழைப்பு விடுத்த இறைமகன் அவர்களைக் கடந்து சென்று, மிகத் தொலைவு தூரம் சென்றுவிடும் வரையிலும், தங்களையே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

ஒருசில பங்குத் தளங்களில் பங்குப் பணியாளர்களைச் சந்திக்கும் போது, அவர்கள் தம் பணி வாழ்வினில் சந்தித்த ஏமாற்றங்கள், உளைச்சல்கள்,  ஆதரவற்ற நிலை போன்ற எதார்த்தங்களை இறையழைத்தல் ஊக்குநராகிய என்னிடம் பகிரும்போது அவை என்னை இன்னும் ஆழமாகக் கலவரப்படுத்துகின்றன. ஒருசில தலைமையாசிரியர்கள் (அருள்பணி யாளர்கள்) என்னிடம் “அட! என்ன சாமி, இந்தக் காலத்துல யார் சாமியாரா போக ஆசைப்படுறா? நீங்க இங்க வருவதே வேஸ்ட். அவனவன் ஒரு பிள்ளையையும் இரண்டு பிள்ளை யையும் பெத்து வெச்சிருக்கான்” எனக் கூறும்போது, இந்த இறையழைத்தல் பணி நமக்குத் தேவைதானா? அதற்கு நான் இசைந்தவனா? எனும் கேள்விகளும் என்னை ஆழம் பார்க்கின்றன. இந்தத் தோல்விகள், விரக்திகள், இயலாமைகள் போன்றவற்றைத் தனிமையான இறை உறவு நேரங்களில் ஆண்டவரிடம் கொண்டு வரும்போது, மனமானது இலேசாகிறது. “அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, ‘அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்’ என்றார்” (மத் 9:37-38) போன்ற இறைவார்த்தைகள் சோர்வைப் போக்கி, இறைபணிக்கு ஆள்களைத் தருவது இறைமகனின் வேலை, நான் அதீத நம்பிக்கை கொண்டு அவரிடம் இறைஞ்சவே வேண்டும் என்ற நம்பிக்கை என்னை உந்தித் தள்ளுகிறது. 

லூ கிராமத்தினர் ஒருமனப்பட்டு இறை இரக்கத்தில் நம்பிக்கை வைத்து வேண்டியபோது, எண்ணற்ற மக்களை இறைவன் தன் குருத்துவ மற்றும் துறவற பணிக்காகத் தேர்ந்துகொண்டது நம்மை நிச்சயமாக நம்பிக்கையில் பயணிக்க வைக்கும்.

நாம் இறை பராமரிப்பை, இரக்கத்தை முன்னிட்டே நமது பணியை முனைந்து தொடர முயற்சிக்கும்போது, இறைவன் தாமே நம் சார்பில் செயலாற்றுவதை நாம் காண முடியும். “ஆண்டவரிலேயே மகிழ்ச்சிகொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்து விடு. அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்” (திபா 37:4-5).

ஆழமாய் இறைவேண்டல் செய்வோம்!
இறையழைத்தல் பெருகுவதைக் காண்போம்!!
இறையரசு முழுமையாய் மலர்வதில் மகிழ்வோம்!!!

அருட்திரு. ஜெயபாலன் C.M.F.
கும்பகோணம்

இயேசுவை தேடும் பிள்ளைகளாவோம்

கவிஞர் கண்ணதாசனின் கடைசி மகள்தான் விசாலி கண்ணதாசன்; தற்போது திருமதி விசாலி மனோகரன். திருவாசகத்தையும் திருமந்திரத்தையும் இறைப்பாசுரமாய்ப் பாடிய இவரது வாய் இன்று இயேசுவின் திருநாம கீதம் பாடிக்கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்று அவரே இவ்வாறு குறிப்பிடுகிறார் :

“என் திருமண வாழ்வில் எண்ணற்ற கஷ்டங்களையும் கண்ணீரையும் நான் அனுபவித்தேன். வாழ்வில் தனிமை என்னை வாட்டியது. என் கணவரைத் தவிர எனக்குத் துணை நின்றவர்கள் ஒருவரும் இல்லை. அச்சமயத்தில்தான் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ எனப் பாகம் பாகமாய் எழுதிய என் தந்தை கண்ணதாசனின் வாழ்வின் கடைசி அத்தியாயம் என் நினைவில் வந்தது. எத்தனையோ திரையிசைப் பாடல்கள், காவியங்கள், கதைகள் எழுதினாலும், அவர் வாழ்வின் நிறைவு இயேசு காவியத்தில்தான் நிறைவு பெற்றது. நானும் பைபிளைத் திறந்தேன். வாசித்தேன், தியானித்தேன். இயேசு என் உடன் இருப்பவராக, வருகிறவராக, வாழ்பவராய் என்னுடன் ஐக்கியமானார். கிறிஸ்துவில் ஞானஸ்நானம் பெற்றேன் நான் பெற்ற இறைமகிழ்வைப் பிறரோடு பகிர்ந்து மகிழ்வுடன் வாழ்கிறேன்.” 

வேதாகமத்தில் “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர் ஒளி உதித்துள்ளது” என எசாயா (9:20) இயேசுவின் சுடரொளியின் தன்மை பற்றிக் கூறுகிறார்.

மத்தேயு 2:1-12 வரை வாசிக்கும் பொழுது கீழ்த்திசை ஞானிகள் பாலன் இயேசுவைத் தேடி வருவதைக் காண்கிறோம். கீழ்த்திசை ஞானிகள் பெர்சியா நாட்டைச் சார்ந்த குருகுல முதல்வர்கள்; அரச வம்சத்தைச் சார்ந்தவர்கள். சமுதாயத்தின் உயர்ந்த நிலை யையும், மக்களின் உயர் மதிப்பையும் பெற்று, ஆலயப் பீடத்தில் பணி செய்பவர்களாயும் இருந்தார்கள்.

அவர்கள் செல்வத்தில், மதிப்பில், அந்தஸ்தில் உயர்ந்தவர்களாய் இருப்பினும், உள்ளம் மட்டும் உண்மை இறைவனைத் தேடும் தாகத்தில் இருந்தது. அவர்கள் கல்விமான்களும், வான ஆராய்ச்சி யாளர்களும், வேதாகம அறிவில் சிறந்தவர்களுமாய் இருந்ததால், அதிசய விண்மீன் உலக மீட்பர் பிறப்பை அறிவிப்பதை உணர்ந்தார்கள்.

நெடும்பயணம் பாலைவனத்தில் செய்து, பல தடைகளையும் கடந்து, விண்மீன் வழிநடத்த பாலன் இயேசுவை மாட்டுக் கொட்டிலில் காண்கிறார்கள். தலையைக் குணிந்து இயேசுவின் பிறப்பிடம் சென்று தெண்டனிட்டு வணங்கி காணிக்கை செலுத்துகிறார்கள். இயேசுவை ராஜாவாக, குருவாக, அபிஷேகம் செய்பவராய் ஏற்றுக் கொண்டு தங்கள் நாடு திரும்புகிறார்கள்.

இன்று துறவியர்கள்கூட இறை மகிழ்வை விட்டுவிட்டு, செல்வ மாயையில், புகழின் போதையில், சிற்றின்ப வேட்கையில் மூழ்கிக் கிடப்பது அவர்களின் அறியாமையைத்தான் வெளிப்படுத்துகிறது.

புனித பவுல் இவ்வாறு எழுதுகிறார் : “யூதர்கள் அரும் அடையாளம் வேண்டும் எனக் கேட்கிறார்கள். கிரேக்கர்கள் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பறைசாற்றுகிறோம்” (1 கொரி 1:22).

ஒரு சமயத்தில் இறைப்பணிக்குச் செல்லும் வழியில் உள்ள என் உடன் பிறந்த மூத்த சகோதரியின் வீட்டில் தங்கியிருந்தேன். இரவு தூங்கிவிட்டு காலையில் வெராண்டா நாற்காலியில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தேன்.

சுமார் 12 வயது சிறுமி என் அக்கா வீட்டு வாசற்படி ஏறியவுடன், “ஜோசியம் பாருக்கா, நான் சொல்வேன்” என அடுக்கிக் கொண்டே போனாள். நான் விளையாட்டுக்காக, “எனக்கு ஜோசியம் பார்ப்பாயா?” எனக் கேட்டேன். அவர் சரியயனக் கூறி கையில் உள்ள கத்தை ஏடுகளை எனக்கு முன் நீட்டி, அவள் வைத்திருந்த நூலைக் கொடுத்து, ஏடுகளின் ஊடே சொருகச் சொன்னாள். நானும் செய்தேன். விரித்தபோது பாடுபட்ட சிலுவைநாதர் படம் வந்தது. அவள் உடனே சற்று பதட்டத்துடன், “நீங்கள் யார்? நீங்கள் தெய்வத்திற்குச் சமமானவர். எங்களைப் போன்ற வர்களிடம் நீங்கள் விளையாடலாமா? நான் தொழில் செய்வதற்கு ஏதேதோ சொன்னாலும், நான் வணங்கும் தெய்வம் இயேசுதான்” எனக் கூறி கழுத்தில் இருந்த கயிற்றில் இருந்து சட்டையில் மறைக்கப்பட்டிருந்த பாடுபட்ட சுரூபத்தைக் காண்பித்தாள். நான் வெட்கத்தில் உறைந்தேன்.

இப்புனித நாட்களில் நாமும் இயேசு இரட்சகரையே தேடும் பிள்ளைகளாவோம். ஆமென்.

இறையழைத்தல் ஞாயிறு


இதழின் அட்டைப்படத்தைப் பார்த்தவுடன் சிலருக்கு ஆச்சரியம் எழுந்திருக்கலாம். வழக்கமாக ஏப்ரல் அல்லது மே மாதம் கொண்டாடப்படும் இறையழைத்தல் வாரம் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வந்துள்ளதே என்று நினைக்கலாம்.  இறையழைத்தல் ஊக்குநர்களின் கூட்டத்தில் இந்த நாள் மாற்றத்திற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டன.  இக்காரணங் களைக் கருத்தில் ஏற்று தமிழக ஆயர் பேரவையும் இம்மாற்றத்திற்கான ஒப்புதல் அளித்தது.

இதுவரை இறையழைத்தல் ஞாயிறு கொண்டாடப்பட்ட பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு, பொதுவாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வருகிறது. அக்காலம் பள்ளிகளுக்கு விடுமுறை காலமாக உள்ளது.  

பல சமயங்களில் இறையழைத்தல் ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முன்பாகவே இறையழைத்தல் முகாம்கள் (ஏப்ரல் மாதத்தில்) முடிவுற்று விடுகின்றன.  இதனால் கொண்டாட்டம் முக்கியத்துவமும் முழுப் பொருளும் இல்லாமல் மாறிவிடுகின்றது.

மே மாதம் என்பதால் நமது பிள்ளைகள் மற்றும் இளையோர் பங்கேற்பு குறைந்தே போகிறது.  இக்காரணங்களால் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் இக்கொண்டாட்டம் தகுந்த முறையில் கொண்டாடப்பட்டு பலன் கிடைக்கும் வகையில் அமைய விரும்புகிறோம்.  

பங்குகளில், பள்ளிகளில் இந்த இறையழைத்தல் விழாவினைச் சில சிறப்பு நிகழ்வுகள் மூலமாக மக்களோடு, சிறார்களோடு, இளையோரோடு இணைந்து கொண்டாடத் திட்டமிடுவோம்.

இறையழைத்தல் முகாம்களுக்கு முன்பே இறையழைத்தல் பற்றிய சிந்தனைகளை நமது பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பாக அமைப்போம்.

பள்ளி நாட்களாக (ஜனவரி மாதம்) இருப்பதால் நமது பள்ளிகளிலும் கூட கத்தோலிக்கப் பிள்ளைகளுக்கு இறையழைத்தல் பற்றிய விதையை ஊன்றும் வாய்ப்பாகப் பயன்படுத்துவோம்.

இக்கொண்டாட்டம் “நம் ஆண்டவர் இயேசு ஆலயத்தில் காணிக்கையாக்கப்படும்” நாளுக்கு (பிப்ரவரி 2) முன் உள்ள ஞாயிறன்றும் அதற்கு முந்தைய வாரமும் கொண்டாடப் படுவதனால், இயேசுவின் அர்ப்பணத்தோடு நமது அர்ப்பணமும் இணைந்து புதிய சமூகத்திற்காக உழைக்கும் சிந்தனையைப் பெறுவோம்.

இந்த ஆண்டு (2011) கொண்டாட்டம் ஜனவரி 30ஆம் தேதி வருகின்றது.  சிறப்பாகக் கொண்டாட வழிகாட்டும் திருவழிபாடு குறிப்புகள், சுவரொட்டிகள் பங்குகளுக்கும் இறையழைத்தல் ஊக்குநர்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

கவனிக்க : இந்த ஆண்டு (2011) இளையோர் ஆண்டு விழாவை முன்னிட்டு இதே நாளில் (ஜனவரி 30-ல்) மாபெரும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் அதற்கு முக்கியம் தருகிற சமயத்தில் உங்கள் பங்கு மற்றும் பள்ளியில் அதற்கு அடுத்த வாரத்தில்கூட இவ்விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யலாம்.

இறையழைத்தல் சிறப்பான தன்மையிலும் எண்ணிக்கையிலும் உயர்ந்திட அனைவரும் திட்டமிட்டு உழைக்க வேண்டிய காலம் இது.  இறையழைத்தலுக்கான எண்ணம் இல்லாமலோ அல்லது தவறான சிந்தனைகளோ உள்ள சூழலில், அழைத்தல் பற்றிய நேர்மறையான எண்ணங்களும் சிந்தனைகளும் பரவலாக்கப்படுவதற்கான முறைகளையும் உருவாக்குவோம். மறைமாவட்ட, துறவற இறை யழைத்தல் ஊக்குநர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளுமே பலன் தர எல்லோருமே இணைந்து செயல்படத் தேவையாகிறது.  இன்றைய சூழலில் இப்பணி சவால் நிறைந்த பணியே.

சில பரிந்துரைகள் :
பங்குகளில் : 
  • சிறப்பு வழிபாட்டுக் கொண்டாட்டங்கள், மறையுரைச் சிந்தனைகள்.
  • ஞாயிறு மறைக்கல்வியில் ‘இறையழைத்தல்’ பற்றிய சிந்தனைப் பகிர்வு
  • அன்றைய அன்பியக் கூட்டங் களிலும் “அழைத்தல்” பற்றிய சிறப்புப் பகிர்வுக்கு வழிவகுத்தல்  அழைத்தலை மையப்படுத்திய
  • -மாலை நேர கலை நிகழ்வுகள் ஏற்பாடு செய்தல்
  • -பீடச் சிறார்களை ஊக்கப்படுத்தி சிறப்புக் கூட்டம் நடத்துதல்

பள்ளிகளில் : 
  • மறைக்கல்வி வகுப்புகளில் “அழைத்தல்” பற்றிய பாடம் / விளக்கம் தரல். 
  • கத்தோலிக்க பிள்ளைகளை மட்டும் ஒன்று சேர்த்து சில நிகழ்வுகள், அழைப்புப் பற்றிய ம்Vம், கருத்துரை, நாடகம், நடனம் அமைத்தல்.
  • இன்னும் உங்கள் வசதிக்கேற்ப புதிய வழிமுறைகள் வகுத்துச் செயல்பட வாழ்த்துகிறோம்.


ஊருக்குத்தான் உபதேசம் நமக்கில்லை


1.நம் மத்தியில் சொல்வதற்கு ஆயிரக்கணக்கில் இருக்கின்றன - அற்புதமான அறிவுரைகள், அட்டகாசமான சொற்பொழிவுகள்.  ஆனால் அதன்படி நடப்பதற்குத்தான் ஆட்கள் இல்லை.

2.அதைக்கூட உன்னால் செய்ய முடியாதா?  நானாக இருந்தால் இந்நேரம் அதனை முடித்திருப்பேன் என்று பெரிய அளவிற்குப் பேசுவோம்.

3.நமது ஊர்ப் பெரியோரைப் போல் இன்று பிள்ளைகளும் பேச ஆரம்பித்து விட்டனர்.  பேச்சு அதிமாகிறது.  வேலை முடியும் நிலை இல்லாமற் போகிறது.

4.இதனால் முடியவேண்டிய செயற் பாடுகள் முடிவு பெறாத நிலையை அடைகின்றன.

5.ஒரு சிலவற்றையே சொல்வோம், சொல்வதன்படியே செய்வோம்.

6.பேச்சைக் குறைப்போம்;  உற்பத் தியைப்  பெருக்குவோம்.

7.பேசுகிறவனை மக்கள் நம்ப மறுப்பார்கள்.  ஆனால் செய்பவனை மக்கள் மதிப்பார்கள்.  ஏனெனில் அவன் செய்யும் செயல் அவனது பேச்சிற்கு ஊர்ஜிதம் தருகிறது.

8.வாழ்க்கை வேறு, பேச்சு வேறு என்றிருந்தால் அது ஒரு மனிதனை இரண்டாகப் பிரித்து முரண்பட்ட மனிதனாகக் காட்டுகிறது.


நன்றி!  மலர்களே மலருங்கள்

இறையழைத்தல்


 “அறுவடையோ மிகுதி. வேலையாட்களோ குறைவு” (மத் 9:37). இவ்வுலகில் பலவிதங்களில் அழைப்பு வருகின்றது. தொலைபேசியில் அழைப்பு, புதுமனை புகுவிழா அழைப்பு, திருமண விழா அழைப்பு, இறையழைத்தல் (குருக்களாக, துறவியர்களாக) போன்றவை ஆகும். இதில் முதல் அழைப்பு சில மணித்துளிகள் வரைதான் நீடிக்கும். அடுத்த இரண்டு அழைப்புகள் ஒன்று அல்லது இரண்டு நாட்கள்தான். ஆனால் இறை அழைத்தலோ வாழ்விற்கான அழைப்பாக, வாழ்க்கை முழுவதற்கான அழைப்பாக உள்ளது. இது கடவுளின் மாபெரும் கொடையாகும்.

திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்தவளும், கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும், மறு கிறிஸ்துவாக வாழ அழைக்கப்பட்டவர்கள்தான். பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம், மோசே, ஆரோன் போன்றவர்களை இறைப் பணிக்காகக் கடவுள் அழைத்தார். ஆரோன்தான் முதல் குருவாக அழைக்கப்பட்டார். அவரது புதல்வர்களும், அவரது வழிவந்தவர்களும் திருநிலைப்படுத்தப்பட்டனர். 

புதிய ஏற்பாட்டில் இயேசுவே முதன்மையான குருவாக இருந்தார். அன்னை மரியாளுக்குப் பிறப்பு அறிவிப்புச் செய்தியில் இயேசுவின் பிறப்பு, பணி வாழ்வு அனைத்தும் வானதூதரால் தெளிவாகக் கூறப்பட்டது. இதையறிந்த மரியாள், “நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே ஆகட்டும்” என்றார். எனவே மரியாள் கடவுளிடமே முழுமையாக சரண் அடைந்து, தன் வாழ்வைக் கடவுளுக்கு அர்ப்பணித்து வாழ்ந்து வந்தார்.

எனவே இயேசுவையும், அன்னை மரியாளையும் பின்பற்றி ஆண்களும் பெண்களும், தங்கள் வாழ்வை இறைவனுக்கும் மக்களுக்கும் அர்ப்பணம் செய்து வாழ்ந்தனர். பல பள்ளத்தாக்குகள் சரிசெய்ய, சில மலைகளைத் தகர்ப்பது சரியானதே. எனவே துன்பம் கண்டு துவளாமல், கவலை கண்டு கண்ணீர் வடிக்காமல், இயேசுவை இறுகப் பற்றிக்கொள்வதே துறவறமாகும். இன்று துறவறத்தை மேற்கொண்டு வாழும் அநேக துறவற சபைகள் உண்டு. சில பெண் துறவற சபைகள் திருத்தந்தையர்களாலும், சில மறைமாவட்ட ஆயர்களாலும் நிறுவப்பட்டவை. “ஆண்டவரின் ஆவி என் மேல் உள்ளது. ஏனெனில் அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்; பார்வை இழந்தோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கபட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்” (லூக் 4:16 முதல்)

ஆகவே தெளிந்த மன நிறைவு பெற்றவர்களாகவும், பரந்த சிந்தனை உடையவர் களாகவும், பல நன்மைத் தனம் உள்ளவர்களாகவும், சினம் கொள்ளத் தாமதிப்பவர்களாகவும், சிறந்த இரக்க குணம் உடையவர்களாகவும், நீதிக்கும் நேர்மைக்கும் சான்று பகரக் கூடியவர்களாகவும், நீரற்ற ஓடைகளில் அருவி ஓடச் செய்பவர்களாகவும், தன்னை இழக்கவும் கொடுக்கவும் அர்ப்பணித்துக்கொள்வதுதான் துறவறத்தின் முக்கிய நோக்கமாகும். இயேசுவின் இதயத்தில் நிரந்தரமாக இடம் பிடித்த இறைப்பணியாளர் துன்ப துயரங்களையும், சோதனை வேதனை களையும், சுமைகளையும் சோகங்களையும் எளிதில் வெல்பவர். மேலும் வாழ்வின் தடைக்கற்களையயல்லாம் படிக்கற்களாக மாற்றி வளர்ச்சியின் எழுச்சிக்கு மக்களை அழைத்துச் செல்வர்.

பண்பாடு, சமூக அமைப்பு போன்ற பலவித மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, இன்றைய நவீன உலகில் இறைப்பணி செய்து இயேசுவின் மதிப்பீடுகளின்படி வாழ முன்னுரிமை கொடுத்து வாழுவதே சிறப்பாகும். ஒரே ஆயனாகிய இயேசுவின் குரலைக் கேட்டு ஒரே பணியாகிய இயேசுவின் பணியைச் செய்ய அநேக இளம் உள்ளங்கள் முன்வர முயற்சிகள் எடுப்போம். மேலும் இறைப்பணிக்கு இளம் உள்ளங்கள் இதயத்தையும் விலையாகக் கொடுக்கவும், மனித நேயத்திற்கு அனைத்தையுமே இழக்கவும் முன்வருபவர்களை ஊக்குவிப்போம்.

இறை அழைத்தலை ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், நமது சொல், செயல், எண்ணம் முதலிய வற்றில் அவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து, இளம் உள்ளங்கள் இறை அழைத்தலில் ஆர்வம் கொள்ள நாம் வாழ்ந்து காட்டுவோம். பலர் இறையழைத்தலை ஏற்க நம் செபங்களை இயேசுவிடம் ஏறெடுப்போம்.

சகோ. தெரசிட்டா F.S.J.

புனித வனத்து அந்தோணியார் மடாதிபர் (கி.பி. 251 - 356)


எகிப்து நாட்டைச் சார்ந்த தவ முனிவர், கிறிஸ்தவத் துறவு வாழ்வுக்கு வித்திட்டவர். பெற்றோரை இழந்த நிலையில், 18 வயதில் தேவ அழைத்தலை உணர்ந்தார். இவருக்கு உரிமைச் சொத்தாக இருந்த ஒரு தோட்டத்தைத் துறந்துவிட்டு இயேசுவைப் பின்செல்ல உதவியாக இருந்தவை, இயேசுவின் அப்போஸ்தலர்கள் அனைத்தையும் துறந்தபின், அவரைப் பின்சென்றார்கள் என்ற வார்த்தைகள் (மத் 19:21). தன் சகோதரிக்கு மட்டும் ஒரு சிறு தொகையைக் கொடுத்துவிட்டு மீதியைத் தானம் பண்ணியபின் துறவற வாழ்வை மேற்கொண்டார். தனது ஊருக்கு அருகிலேயே கடின உழைப்பு, வேதாகம நூலை வாசித்தல், ஜெபம் இவற்றில் நாள்தோறும் நேரத்தைச் செலவிட்டார்.

நாளடைவில் ஊரை விட்டு வெகுதொலைவில் உள்ள இடத்தைச் தேடிச் சென்றார். அங்கு புனித அத்தனாசியாருக்கு இவரது தோழமை கிடைத்தது. நாளடைவில் பலரும் இவரை அணுகவே, ஆங்காங்கே குழுக்களாக துறவு வாழ்வு மேற்கொண்டார். புனித அத்தனாசியார் இவரது துறவு வாழ்வு பற்றி விரிவாக எழுதியுள்ளார். இந்தக் குறிப்புகளின் பலனாக பலரும் பாலை நிலத்திற்கும் காடுகளுக்கும் சென்று வாழ்நாளெல்லாம் தவ, ஜெபவாழ்வு வாழ்ந்து இறைவன் பதம் சென்றனர்.“இவ்வுலக வாழ்வு எத்துணை மின்னல் வேகத்தில் தோன்றி மறைகிறது; ஆனால் நித்தியம், நித்திய பேரின்பம் என்பது எத்துணை மேலானது” என்று தியானிப்பது எவ்வளவு பலன் தருகிறது என்று இவர் கொடுத்து வந்த மறையுரை புனித அகுஸ்தினாரை மிகவும் கவர்ந்திழுத்தது. இவர் தனது 105-ஆவது வயதில் செங்கடலுக்கருகில் 356-ஆம் ஆண்டு கோல்சீம் குன்றில் இறைவனடி சேர்ந்தார்.

சிந்தனைக்கு : “இவரது புண்ணிய மாதிரிகையாலும், மன்றாட்டினாலும் நாங்கள் எங்களையே ஒறுத்து, எல்லாவற்றிற்கும் மேலாக உம்மையே நேசிக்க வரமருளும்.”

எட்வர்டு

துறவறம்


உள்ளதைக் கொடுத்து மனிதனாக வாழும் சராசரி நிலை கடந்து, உள்ளத்தைக் கொடுத்து புனிதனாக வாழவும், உள்ளதை எல்லாம் கொடுத்து இறைவனாக மாறவும் படிப்படியாக வாழ விழைவதே துறவற அழைப்பாகும்.

இன்று துறவறத்தில் அனுபவ ரீதியாக பல சவால்களைச் சந்திக்க முறையீடின்றி முன்வரும் நாம் ஆன்மீக ரீதியான சவால்களைச் சில முறைகள் கூட சந்திக்க கட்டாயத்தினால் மட்டுமே சம்மதிக்கிறோம். கடந்த காலத்தில் “ஒருவன் உலகம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டாலும் ஆன்மாவை இழந்தால் பயன் எதுவும் இல்லை” என்ற உன்னத நிலையில் இருந்த துறவறம், இன்று “ஆன்மாவைச் சேகரித்துக் கொண்டாலும் ஒரு துறவி உலகம் முழுவதையும் தனதாக்கி வாழ்ந்தால் மட்டுமே பயன் பெற முடியும்” என்ற உறுதிநிலையை அடைந்துள்ளது. ஆனால் நாளை அதாவது எதிர்காலத்தில் உலகத்தை மட்டுமே தனதாக்கி வாழும் இறுதி நிலைக்குத் துறவறம் தன்னை மாற்றி வருகிறது.

இந்த அபாயகரமான ஆனால் உண்மையான சகாராச் சூழலில் பயணித்துக் கொண்டிருக்கும் நீங்களும் நானும் நமது இறை அழைப்பின் குரலுக்குப் பதிலாக எதை இழந்துள்ளோம்? எந்த அளவு இழந்துள்ளோம்? என்று சிந்தித்து நம்மைச் சீர்திருத்த வேண்டிய கட்டாய நிலையில் கால் பதித்துள்ளோம். இன்றைய அதிகபட்ச தேவை 

சின்னத்திரை சீரியல்களைப் பார்த்து வாழ்வைச் சீர்திருத்தத் துடிப்பது அல்ல!  விவேகம் மறந்த வேகத்திலும், சிந்தனை இழந்த முயற்சியிலும், சுயநலம் விரவிய செயல்களிலும் விழுந்து மடிவது அல்ல!

வீதியில் வாழும் ஏழைகளை விதி என்று உதறி விட்டு மனிதம் மறந்த மண்ணாங்கட்டிகளாய் மாடியில் வாழ விரும்புவது அல்ல! மாறாக,மரணம் வருமுன்னே தினமும் இறந்து வாழும், கோழைகளாய் உருமாறி நிற்கும் ஏழை மனிதத்தைத் தேடிச் செல்ல நீயும் நானும் தயார் நிலையில் இருக்க வேண்டும்...

வீடுகளைச் சந்திக்கச் செல்லும் போது நிமிர்ந்து செல்லும் மாடி வீட்டிற்கு என்று மட்டும் செல்லாமல், குனிந்து மட்டுமே செல்ல முடிந்த குடிசை வீட்டிற்குள் செல்வதில் விருப்பம் கொள்ள வேண்டும்...

சிலுவை மரணம் மட்டும் கீழ்ப்படிந்து தன்னைத் தாழ்த்திய அன்பர் இயேசுவின் முழு அர்ப்பணிப்பு மனநிலை நம் சின்னஞ்சிறிய செயல்களில் வெளிப்பட வேண்டும்...

நேரம் காட்டும் கடிகாரம், தேதி காட்டும் நாட்காட்டி இவற்றிற் கிடையே உண்மை, நேர்மையையும்; அன்பு, அமைதியையும் பிரதிபலித்துக் காட்ட முயற்சிக்க வேண்டும்...

இவ்வாறான சிந்தனைகளை உருவாக்க நம் செயல்களை விவிலிய மொழிகளால் செதுக்கிட சம்மதம் சொல்வோம். அப்போதுதான் எதிர்காலத்தில் மலிந்து கிடக்கும் போலிகளை இனம்கண்டு, மறைந்து கிடக்கும் நிஜங்களை நிமிர்த்திவிட முடியும்!

குழந்தைகள், இளைஞர்கள், பெரியோர், முதியோரைச் சந்திக்கும் வேளையில் அவர்களின் ஏக்கத் தாக்கங்களைத் தணித்திட முடியும்!  இறையழைத்தல் என்னும் தரமற்ற விதைக்கு வீரியம் மிக்க உரமிட்டு மீண்டும் வளர்த்திட முடியும்!

பொருளாதாரத்தில், உறவுகளில் தோற்றுப்போன நெஞ்சங்களை நம் திடம் மிக்க தோள்களில் தூக்கி நிறுத்த முடியும்!

இதற்காக சாரமும் சக்தியும் பெற வேதம் என்னும் ஒளிக்குள் நம் பாதம் பதியச் செய்வோம். ஆன்மீகப் பயணத்தில் ஆன்மாக்களைச் சேகரிக்கும் இலக்கினை எட்டிப் பிடிப்போம்.

சகோ. பாப்பா,
இயேசுவின் திரு இருதய சபை, தூத்துக்குடி

முத்திரை பதிக்க முன்வருவோம்


கள்ளமில்லா வெள்ளை நிலவாய், இம்மண்ணில் உதித்த தெய்வமனிதன் இயேசுவின் தனிப்பெரும் பிறப்பைச் சீர்மிகு உளத்துடன் சிறப்பித்தோம். அதன் விளைவாய் மண்ணில் பிறந்த தேவனைக் கண்ணில் காணும் மனிதரில் கண்டு மகிழ்கிறோம். சமூகத் தாக்கத்திற்குள் சிக்குண்டு வறுமையை உண்டு வாழும் எளியர் நடுவில் ஆன்மீகத் தாகம் கொண்டு இறை வார்த்தையை உண்டு வாழ சீரிய சொற்களாலும், நேரிய வாழ்க்கையாலும் வழியமைக்க இசைந்தோம்.

மேலும், தனது பிறப்பின் பரிசாய் இன்னொரு ஆண்டைப் பார்க்க நமக்கு மாபெரும் வாய்ப்பு வழங்கிய இறைவேந்தன் புவி மீது புலம்பி அழுவோரின் வாழ்வில் எதிர்ப்படும் பூகம்பங்களையயல்லாம் பூவின் மென்மையால் வருட வாய்ப்புகள் வழங்கியுள்ளார். கனிவோடும் கருணையோடும், உரிமையோடும் உறவோடும் நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டு வாழ புத்தாண்டில் நம்மைப் பக்குவப்படுத்துகிறார்.

எனவே, உலகியலைக் கடந்த இறையியல் வாழ்வுக்குத் தளங்கள் அமைத்து, அதற்கான தடங்கள் பதிக்க, இயேசு உன்னையும் என்னையும் உரிமையுடன் அழைக்கிறார். இயேசு பாலகனின் பிறப்பும், புதிய ஆண்டின் பிறப்பும் நம்முன் படம்பிடித்துக் காட்டப்பட்டிருப்பினும், இவை சொல்லும் பாடங்களை உணர்ந்து பார்க்கவும், உரசிப் பார்க்கவும் நாம் கடமைப் பட்டுள்ளோம். முடிவில் கண்ட விடிவாய் நாம் சுவைத்து அசைபோட வேண்டியவை ஐந்து கோணங்களில் நம்மை வந்தடை கின்றன. அவை, ஆறாத காயங்களில் மனித நேயங்கள்உணரப்படாத இயேசுக்களின் உண்மை உருவங்கள்இறைப்பணிக்கு அர்ப்பணிப்பதில் அதிர வைக்கும் ஏமாற்றங்கள் வியப்புகளை வித்தியாசமாய் இனம் காணும் இதயங்கள்

இந்த ஒட்டுமொத்த சந்தர்ப்பங்களைச் சந்தித்துச் சாதனை புரிய நீயும் நானும் தயங்காமல் முன்வர வேண்டும் என்பதே இன்றைய இரகசியத் தேவையும், பகிரங்க அறைகூவலுமாக உள்ளது. எனவே, எதிர்கால இறையரசுக் கனவுகளை நிகழ்கால இவ்வுலகக் கவலைகள் கலைத்து விடாமல் இருக்க முயற்சிப்போம், முடிவெடுப்போம். நகர மறுக்கும் நம் நாடி நரம்புகளில் எல்லாம் இறைநாதம் இசைக்கச் செய்வோம். இறைப்பணி செய்ய ஒருவர் பிறருக்கு வழிகாட்டுவோம். நம் ஆன்மீகப் பணியால் ஏங்கி நிற்கும் மனிதத்தை ஏந்தி நிற்கத் துணிவு பெறுவோம். பிறரன்புப் பணி எனும் சங்கிலிச் செயல்பாட்டிற்குள் நம் பணி எனும் முத்திரை பதிக்க முன்வருவோம்.

சகோ. வே. அன்னத்தாய்,
இயேசுவின் திரு இருதய சபை,
தூத்துக்குடி

சாத்தானை மிதிப்போம்


கடவுளைப் போல் ‘நான்’
அகம்பாவம் கொண்டவன்
தான் இழந்த சொர்க்கம்
தனக்குக் கீழ் மனிதன்
அடைய ஒவ்வானோ?
துன்மார்க்கன் முதல் பெண் ஏவாளை
வஞ்சித்து தீமையை இரத்தத்தில்
கலந்தான்
அன்று முதல் பொறாமை
கொலை கீழ்ப்படியாமை
இன்னபிற அரங்கேறின
மனித வரலாற்றில்
உலகம் சாத்தானின் பிடியில்
முழுவதும் உள்ளது
மானுடர் மீது கொண்ட
தணியா தாகத்தால் தம்
ஒரே பேறான அன்பு மகனைப்
பரிகாரப் பலியாக்கினார்
அன்பு தந்தை
ஒவ்வோர் ஆன்மாவும் மீட்கப்படுவது
இறைச்சித்தம்.
‘நிலையற்ற அற்ப இன்பத்தைத் தேடி
ஆன்மாவை இழப்பது பெரும்பாவம்’
ஜெப ஆவியை எழுப்பிக்
கதறி மன்றாடும்போது
கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார்
மனிதன் மனிதனுக்கு எதிரியல்ல
மனிதர் அனைவர்க்கும்
பொது எதிரி அலகையே!
‘நம் அழிவு’ அவன் உயிரில்
கலந்ததாலேயே!
‘அவனை’ மிதிப்போம் முறியடிப்போம்
ஒன்றுசேர்வோம் போராடுவோம்
சாத்தானை வெல்ல ஆவியின்
வரம் வேண்டி நாளும் வேண்டுவோம்
ஆயிரம் கால இறையாட்சியைச்
சொந்தமாக்குவோம்
இறுதி நாளில் அக்கினித் தீர்ப்பினின்று
தப்புவோம்
புதிய வானம் புதிய பூமி
காண்போம்
புனிதராய் மூவொரு கடவுளை
தினம் துதிப்போம்
நித்திய பேரின்பம் சுவைப்போம்
முகம் முகமாய் இறைவனைக்
காணும் பேறு பெறுவோம்!

ச. செல்வராஜ், 
விழுப்புரம்

இன்று பீடச்சிறுவர்! நாளை?


இன்று பீடச் சிறுவர் - நாளை
திருப்பலி செலுத்தும் குருக்கள்
நன்கு செயல்(ப) டுத்தின் - பல
நன்மை வந்து விளையுமே
இளைஞர் இயல்பு ஊக்கம் - நன்கு
திறம்படச் செய்தால் பின்பு
விளைவு நம்மால் காண - முடியும்
சிந்தனை செய்யின் வெற்றி!
ஆர்வம் உள்ள இளைஞர் - கண்டால்
ஆக்கம் ஊக்கம் கொடுத்து
நேர்மை வழியில் வளர்த்தால் - பல
நேர்த்தி யான குருக்கள்
தீர்க்க மாக வருவர் - உண்மைத்
திறமை நன்கு வெளிப்படும்
பார்த்து மகிழ்வு கொள்வோம் - நல்ல
பலனை அறுவடை செய்வோம்
பீடச் சிறுவர் உள்ளத்திலே - நல்ல
வீரியம் பிறக்கும் சிந்திப்பீர்
மாட லாக நாமிருந்தால் - தானே
மனத்தில் நன்கு பதியும்
நாளைய உலகம் இளைஞர் - கையில்
நன்றாய்ப் பேணி ஊக்குவோம்
காளைகள் போல வளர்த்து - அவரின்
கவினை மலரச் செய்வோம்.

(கவிஞர் பெஸ்கிதாசன்)

குப்பை கொட்ட வந்த கோமகன்




இந்தப் பகிர்வு அரசாங்கத்தின் குப்பை மேலாண்மைக் கோட்பாட்டில் (அறிவிப்பில்) வரும் மக்கும் குப்பை, மக்கா குப்பையை எங்கு, எப்படி கொட்டுவது என்பது பற்றியது அல்ல.

ஓர் அனுபவமுள்ள இறைப்பணியாளரிடம் ஒரு குறிப்பிட்ட ஊரைப் பற்றிப் பேசும்போது அவர், “நானும் அங்கே ஐந்து ஆண்டுகள் குப்பை கொட்டியிருக்கிறேன்; அந்த ஊரைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும்” என்கிறார்.

குப்பை கொட்ட வந்த கோமகன்
அப்படியயன்றால், “ஆண்டவரின் ஆவி என் மேல் உளது; ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்...” என்ற எசாயாவின் இறைவாக்கைத் தன் விருதுவாக்காய் முழங்கி, முப்பத்து மூன்று ஆண்டுகள், அதில் மூன்று ஆண்டுகள் சுற்றும் சூரியனாய், வற்றாத நதியாய், பார்த்தோர் மீது பரிவு கொண்டு பணியாற்றினாரே, அவரென்ன குப்பை கொட்ட வந்த கோமகனா?

அழைக்கப் பெற்றோர் குப்பை கொட்ட வந்த குப்பைத் தொட்டிகளும் அல்ல; குப்பை எண்ணங்களை உள்வாங்கி துர்நாற்றம் வீசும் குப்பைத் தொட்டிகளும் அல்லர். (“தூயதோர் உள்ளத்தை இறைவா என்னகத்தே உருவாக்கும்”) பல்வகை குப்பைகளை அகற்றி, பரிசுத்தமாக்க வந்த குப்பைப் பொறுக்கிகள். 
கேட்ட கதை

குட்டித் தீவு ஒன்றில் பெரியவர் ஒருவர் தனியாளாய் நீண்ட நாட்களாக வாழ்ந்து வருகிறார். கடல்சார் விபத்துகள், ஆபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. மனித நேயத்தோடு மக்களைக் காப்பாற்றி கரைசேர்த்து வருகிறார். காலம் கடக்கிறது. அவரும் காலமாகிப் போகிறார். கப்பல் ஒன்று விபத்தில் சிக்குகிறது. ஆனால் காப்பாற்ற யாரும் வரவில்லை. தப்பிப் பிழைத்தோரில் சிலர் கரை சேர்ந்தனர். அம்மனிதரை நினைத்து அவர் பெயரால் தாங்களே அவர் பணியை ஆர்வத்தோடு தொடர்ந்தனர். இஃது ஓர் உயிர் காக்கும் பணியாக, பிணி போக்கும் பணியாக இருந்ததால் பலரும் சேர்ந்துகொள்கின்றனர். காலப்போக்கில் பணிச்சுமை இல்லாததால், பொழுதுபோக்கு அம்சங்களையும், வருவாய் வழிமுறைகளையும் தேடிக்கொள்கின்றனர். அதிக ஆட்களையும் அமர்த்திக்கொள்கிறார்கள். பிற்காலத்தில் பல குழுக்களாக இணைந்தும் பிரிந்தும் செயல்பட்டுத் தங்கள் சுயநல நோக்கத்தை நிறைவேற்ற ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கவும், தொல்லை கொடுக்கவும் தொடங்குகிறார்கள். ஆக மொத்தம் வந்த வேலையை விட்டு சொந்த வேலையைப் பார்க்கத் தொடங்குகிறார்கள்.

இந்தக் கதையின் நாயகன் ஒரு வயதான பெரியவர். இறையாட்சிப் பணியில் ஈடுபட அழைக்கப்பெற்றோர் என்று சொல்லிக்கொண்டு, கடவுள் பெயரால் காலத்தைக் கடத்தும் என் போன்றோரின் வாழ்க்கைக் கதையின் நாயகன், இயேசு என்னும் அந்த எரியும் நெருப்புப் பந்தம், தீமையயனும் குப்பைகளைப் பொசுக்கி, பாவ இருள் சூழ்ந்தோர் மனத்தில் ஒளிக்கீற்றாய் உதித்த உயிரோட்டமுள்ள இளைஞன்.

இந்தக் கதை யாருக்குப் புரிகிறதோ இல்லையோ, இறையழைத்தல் பெற்ற எல்லோருக்கும் புரியும் என நம்புகிறேன்.

அன்றும் இன்றும்
நான் பத்து ஆண்டுகளுக்கு முன் சொல்வேன், “உயிரைக் கொடுத்த என் இறைவனுக்கு என் உயிரைக் கொடுத்து ஊழியம் செய்வேன்” என்று. இன்று அந்தத் தாகமும் வேகமும் என்னிடம் இருப்பதாகத் தெரியவில்லை.அன்று கடவுளே கதி என்று ஆழ்ந்த ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும், அதற்காக ஒறுத்தலும் தியாகமும் செய்ய வேண்டும் என்று எப்போதும் எண்ணியதுண்டு. இப்போது எப்போதாவது இவ்வெண்ணம் வந்துபோகிறது. ஒறுத்தல் முயற்சியும், உயிரோட்டமுள்ள விசுவாசமும் என் வாழ்வில் உணவு போல் இல்லாமல், ஊறுகாய் போல் உள்ளன.

அருட்பணிக்காக அயல்நாட்டில் படிக்கச் சென்ற ஒருவர், ஒரே ஆண்டில் நம் தாய்நாட்டில் வந்து படிக்கத் தொடங்கினார். பல காரணங்களில் ஒரு காரணம்: ஒட்டுத் துணிகூட இல்லாமல் வறுமையே உருவாக தொங்குகிறவரைப் பின்பற்ற செய்யப்படும் பகட்டு ஆர்ப்பாட்டங்கள் தன் அழைத்தல் வாழ்வுக்குப் பொருந்தாத அருவருப்பான காரியமாகக் கருதியதுதான்.

எளிமையும் இறையாட்சிப் பணியும் பிரிக்க முடியாக் கலவை என்பதை அறிந்து மட்டும் வைத்திருக்கிறேன் அழுத்தமாக பின்பற்றாமல்.

இறைவன் பெயரால் அழைக்கப்பட்டோர் அனைவருக்கும் மணியடித்தால் சாப்பாடு..., அவர்களில் யாரும் வயிறு வாடி செத்ததாக சரித்திரம் இல்லை என்பது நம்மைப் பற்றி அடிக்கடி பேசப்படுகிற ஒன்று. இருப்பினும் கூலிக்கு மாரடிப்போர் கூட்டம் போல்தான் ஊக்கமில்லாமல் உள்ளது என் பணி சில சமயங்களில்.

பயிற்சிக் காலம் முடிந்துவிட்டால் பணி நிறை வந்துவிட்டது போல் ஒரு மெதப்பு.   அழைக்கப்பெற்றோருக்கு இறுதி வரை பயிற்சிதான், வளர்ச்சி தான். என் பேராசிரியர் சொல்வார் : “We are called to live with unfulfilled desires” - நாம் நிறைவேறாத ஆசைகளோடு வாழ்வதற்காக அழைக்கப்பெற்றிருக்கிறோம்.

நமது தலைவர் இயேசு சொல்வது போல்,  “உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராக / உங்கள் விண்ணகத் தந்தை தூயவராக இருப்பதைப் போல நீங்களும் நிறைவுள்ளவர்களாக, தூயவராக இருங்கள்.” அப்படியானால் நாம் முழுமையான நிறைவை நோக்கி, தூய்மையை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருக்கிறோம்.

இந்தப் பயிற்சியிலே, பயணத்திலே நாம் காட்டும் ஈடுபாடு பலரை இறைவன்பால் ஈர்க்கக்கூடியதாக அமைந்து, இறைவனைத் தேடும் நெஞ்சங்கள் அதிகரிக்கட்டும். 

நம் தலைவரைப் பின்பற்றிய பல புனிதர்களும், அழைத்தல் வாழ்வை முழுமையாய் வாழும் நல்மனிதர்களின் வாழ்வும் நம் வாழ்வுக்குத் துணை நிற்கட்டும்! இறைவன் அவர் பாதையில் நம்மை வழிநடத்தட்டும். அழைத்தல் வாழ்வை ஆரோக்கியமாக வாழ வாழ்த்தி இறைவனை வேண்டி முடிக்காமல் முடிக்கிறேன் எனது பகிர்வை.

இறையாட்சிப் பணியில்,
பணியாள் மைக்கேல் 
முதியனூர், ஈரோடு

தேவ அழைத்தல்-குருக்கள் / துறவிகளின் பங்கு



(கடந்த 27.11.2010 அன்று நடைபெற்ற மாநில தேவ அழைத்தல் பணிக் குழுவின் பொதுக்குழுக் கூட்டத்தில் அழைத்தல் பெருகிட குருக்கள் / துறவிகளின் பங்கு குறித்து பகிர்ந்து கொண்ட ஒரு குடும்பத் தலைவரின் கருத்து - தொடர்ச்சி).

1. முன்மாதிரி முகங்கள்
பெற்றோர்களாகிய எங்களால் ஒரு நல்ல பெற்றோராக இருக்க மட்டுமே மாதிரி காட்ட முடியும், எங்கள் குழந்தைகள் நல்ல குருவாகவோ துறவியாகவோ மாறிட வேண்டுமாயின் அவர்களுக்குச் சரியான முன்மாதிரிகளைக் காட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் குருக்கள், துறவிகளாகிய உங்களிடமே இருக்கிறது.  அது அதிகரிக்கப்பட வேண்டும்.  Our children don’t need priests and professors but they need only Pastors.  They don’t need administrators, managers, superiors etc. but they need only religious and humanists. இன்றைய இளைஞர்களின் இத்தகைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் சூழல்கள் அதிகமாகும் போது தேவ அழைத்தலும் பெருகும்.  இத்தகைய சூழல்கள் குறைய குறைய தேவ அழைத்தலும் குறைகிறது அல்லது தேய்கிறது.

2. நல்லவைகளை பதிவு செய்க
பொதுவாகவே தீயவை வேக மாகவும் நல்லவை மிக மெதுவாகவும் நகரும் என்பது நாமறிந்ததே.  அதிலும் இந்த தகவல் தொழில் நுட்பக் காலத்தில் இது அதிகமாகவே உள்ளது.  அதனால் தான் நமது குருக்களும் துறவிகளும் ஆங்காங்கே செய்திடும் எவ்வளவோ நல்ல பல செயல்கள் வெளியே தெரியாமல் ஆங்காங்கே நடக்கும் போன்ற சில செயல்பாடுகள் (திருச்சி நிகழ்வு)  ஊடகங்களால் பரபரப்பாக்கப் பட்டு மக்களின் மனங்களை உலுக்கிப் போடுகின்றன.  இதற்குக் காரணம் என்ன வென்றால் ஆங்காங்கே நம் குருக்கள், துறவிகள் சபை அளவில், தனி நபர் அளவில் புரிந்திடும் நல்ல பல பணிகள் பதிவு செய்யப்படாமல் இருப்பதே.

உதாரணமாக கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வத்தலக் குண்டுப் பகுதியில் வருடந்தோறும் ஆயிரம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டி கல்வி தந்து வாழ்வளித்து வரும் தெலசால் சபை சகோதரர் ஜேம்ஸ் கிம்ஸ்டன் (86) அவர்களின் பணியை நம்மில் பலரே அறியாத போது மற்றவர்கள், குறிப்பாக நமது அடுத்த தலைமுறையினர் எப்படி அறிய முடியும்?

எனவே இவைபோன்ற அரும் பணிகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை அப்படியே பதிவு செய்து நம் குழந்தைகளும் அறியும் வண்ணம் எடுத்துச் செல்லப்பட முயற்சிகள் வேண்டும்.  அதற்கு நமது தமிழக கலைத் தொடர்பு பணிக் குழுவும் தேவ அழைத்தல் பணிக்குழுவும் இணைந்து முன்முயற்சிகளைத் தொடங்கிடலாம்.  இதனால் இன்றைய குழந்தைகள் உந்தப்பட்டு தாமும் அவ்வித பணிகளில் ஈடுபட ஆர்வமாய் முன்வர வாய்ப்புண்டு.

3. வீடு சந்திப்பு
எத்தகைய நிறுவனங்களில் எவ்வித உயர் பதவியில் இருக்கும் குருக்களும் துறவிகளும் தம் அழைப்பை அர்த்தப்படுத்தும் வகையில் அவர்தம் நிலையிலிருந்து இறங்கி, நிறுவன வேலையிலிருந்து விலகி வாரந்தோறும் ஒரு நாள் மக்களின் இல்லங்களைச் சந்தித்து நற்செய்தியை அறிவித்து அம்மக்களின் உள்ளங்களில் குடியிருக்க முயன்றிட வேண்டும்.  இத்தகைய வீடு சந்திப்பு நிகழ்வுகள், உரையாடல்கள் மூலம் அதிகமான குழந்தைகள் ஆர்வமாய் இறைப்பணி ஆற்றிட முன்வரச் செய்திடலாம்.  இப்பணி தேவ அழைத்தல் ஊக்குநர் போன்ற ஏதோ ஒரு சில நபர்களுக்கு மட்டுமே உரித்தானது என்பது போல் அல்லாமல் ஒவ்வொரு குருவும் துறவியும் இதுவே தமது உண்மையான, உருப்படியான பணி என்பதை உணர்ந்து தாகத்தோடு ஈடுபட்டால் தேவ அழைத்தலைத் தேடிப் போகவேண்டிய தேவையில்லை.  மாறாக அது தானாக தழைத்து, தரமானதாக வளர்ந்து இப்படி செயல்படும் சபைகளை நோக்கி நேர்த்தியாய் வந்து சேரும்.  

4. தல குழு வாழ்வு
எந்தவொரு குரு/துறவற இல்லமும் மக்களை விட்டு விலகி தனித்து இருக்க அனுமதிக்கக் கூடாது.  மாறாக ஒரு பங்கில் / ஊரில் இருக்கும் குரு/துறவற இல்லமானது அங்கிருக்கும் பாமர மக்களுக்கானது என்கிற உணர்வை ஏற்படுத்தும் வகையில் அதன் நிர்வாக மற்றும் செயல்முறைகளில் மாற்றம் கொணர வேண்டும்.

ஒரு துறவற / குருத்துவ சபையின் உறுப்பினர்கள் மூன்று அல்லது நான்கு பேர் ஒரு ஊரில் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, இல்லம் அமைத்து தங்கி அந்நிறுவனத்தை நடத்துவது என்பது குழு வாழ்வாக (Community Life) இருக்க முடியாது. மாறாக அந்த ஊரில் / தலத்தில் இருக்கும் அந்தத் தல மக்களின் பங்களிப்போடு அத்தல மக்களுக்கான பணிகளை அடையாளம் கண்டு 3 அல்லது 5 ஆண்டு திட்டம் வகுத்து தல மக்களோடு இணைந்த திட்டம், செயல்பாடு மற்றும் திறனாய்வு என ஒவ்வொரு கட்டத்திலும் அம்மக்களை ஈடுபடுத்தி ஒளிவு மறைவற்ற  திறந்த மனதோடு செயல்படுத்துவதே அப்பகுதி மக்களுக்கான “கம்யூனிட்டி லைஃப்” என்கிற பதத்திற்கு உண்மை யான அர்த்தமாய் அமைந்திட முடியும்.

இப்படி செய்திடும்போது நம்மோடு கூட இருந்து நம் அசைவுகள் ஒவ்வொன்றையும் உள்வாங்கும் அத்தல மக்களில் எத்தனையோ பேர் நம்மைப் போல தேவ அழைத்தல் வாழ்வை முதன்மையாக்கி மூர்ச்சையாகும் அளவிற்கு உழைக்க முன்வருவர். எனவே இதனைச் சபைகளும் அதன் தலைவர்களும் கவனத்தில் கொண்டு செயல்பட்டு தேவ அழைத்தல் பெருக வழி செய்யலாம்.   

5. எளிமை, ஏழ்மை
தங்களின் சொல், செயல், சிந்தனை என எந்தச் சூழ்நிலையிலும் எளிமையை, ஏழ்மையை எல்லா மட்டத்திலும் (Top to Bottom) குரு / துறவிகள் அதிகரிக்க வேண்டும்.  படாடோபம் துறந்து பகட்டு மறையும் போது அதுவே பாமரர்களும் பரமனும் எளிதாக வந்து போகும் இடமாக மாறும்.

6. தரம் தேவை
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு எண்ணிக்கையை (Quantity) பெருக்குவதில் கவனம் செலுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி விட்டு ஏற்கனவே துறவற / குருத்துவ சபைகளில் மற்றும் இல்லங்களில் உள்ளவர்களின் தரத்தை (Quality) பெருக்குவதில் கவனம் செலுத்தி மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்திட வேண்டும்.  இது இன்றைய காலத்தின் கட்டாயம்.  இதன் மூலம்தான் மக்கள் மத்தியில் உள்ள தவறான எண்ணங்கள் உடைபட்டு தேவ அழைத்தல் மேல் ஒரு புதிய நம்பிக்கை ஏற்படுத்தமுடியும்.  இது எண்ணிக்கை பெருக்கம் என்பது உறுப்பினர்களைப் பெருக்குவதில் மட்டும் அல்ல நிறுவனங்களை / இல்லங்களைப் பெருக்குவது போன்ற எல்லா மட்டத்திலும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

7. முகாம்கள் 
ஒவ்வொரு சபையும் தனித்தனியே செலவு செய்து நடத்தும் தேவ அழைத்தல் முகாம்களுக்குப் பதிலாக கத்தோலிக்க மாணவர்கள் அனைவரும் பங்கு பெறும் வகையில் அவர்களின் வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிய வைக்கும் முகாமாக பெயர் மாற்றத்துடன் நடத்தப்பட வேண்டும்.  இது ஒரு பங்கில் உள்ள அனைத்து இளைஞர்களும் பங்கு பெறும் வகையில் சபைகளால் திட்டமிட்டுத் தெரிவு செய்யப் பட்டு எல்லா இடங்களிலும் நடத்தப்பட வேண்டும்.  இதன் மூலம் கத்தோலிக்க இளைஞர்களாக வாழும் அழைப்பைப் பெற அனைவரும் தூண்டப்படுவர்.  அவர்களில் சிலர் முழு நேர அழைப்பு வாழ்வையும் ஏற்க வாய்ப்புப் பெறுவர்.  

8. கள அனுபவம்
குருக்கள் மற்றும் துறவிகள் வாழ்க்கை முறையை அவர் தம் இல்லங்களில் ஒரு குறிப்பிட்ட கால அளவிறகுத் தங்கி இளைஞர்கள் அனுபவித்து பார்த்து (Exposure) முடிவு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும்.  

எஸ். எரோணிமுஸ்,  
“ஊற்றுக்கண்” ஆசிரியர், திருச்சி