கவிஞர் கண்ணதாசனின் கடைசி மகள்தான் விசாலி கண்ணதாசன்; தற்போது திருமதி விசாலி மனோகரன். திருவாசகத்தையும் திருமந்திரத்தையும் இறைப்பாசுரமாய்ப் பாடிய இவரது வாய் இன்று இயேசுவின் திருநாம கீதம் பாடிக்கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்று அவரே இவ்வாறு குறிப்பிடுகிறார் :
“என் திருமண வாழ்வில் எண்ணற்ற கஷ்டங்களையும் கண்ணீரையும் நான் அனுபவித்தேன். வாழ்வில் தனிமை என்னை வாட்டியது. என் கணவரைத் தவிர எனக்குத் துணை நின்றவர்கள் ஒருவரும் இல்லை. அச்சமயத்தில்தான் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ எனப் பாகம் பாகமாய் எழுதிய என் தந்தை கண்ணதாசனின் வாழ்வின் கடைசி அத்தியாயம் என் நினைவில் வந்தது. எத்தனையோ திரையிசைப் பாடல்கள், காவியங்கள், கதைகள் எழுதினாலும், அவர் வாழ்வின் நிறைவு இயேசு காவியத்தில்தான் நிறைவு பெற்றது. நானும் பைபிளைத் திறந்தேன். வாசித்தேன், தியானித்தேன். இயேசு என் உடன் இருப்பவராக, வருகிறவராக, வாழ்பவராய் என்னுடன் ஐக்கியமானார். கிறிஸ்துவில் ஞானஸ்நானம் பெற்றேன் நான் பெற்ற இறைமகிழ்வைப் பிறரோடு பகிர்ந்து மகிழ்வுடன் வாழ்கிறேன்.”
வேதாகமத்தில் “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர் ஒளி உதித்துள்ளது” என எசாயா (9:20) இயேசுவின் சுடரொளியின் தன்மை பற்றிக் கூறுகிறார்.
மத்தேயு 2:1-12 வரை வாசிக்கும் பொழுது கீழ்த்திசை ஞானிகள் பாலன் இயேசுவைத் தேடி வருவதைக் காண்கிறோம். கீழ்த்திசை ஞானிகள் பெர்சியா நாட்டைச் சார்ந்த குருகுல முதல்வர்கள்; அரச வம்சத்தைச் சார்ந்தவர்கள். சமுதாயத்தின் உயர்ந்த நிலை யையும், மக்களின் உயர் மதிப்பையும் பெற்று, ஆலயப் பீடத்தில் பணி செய்பவர்களாயும் இருந்தார்கள்.
அவர்கள் செல்வத்தில், மதிப்பில், அந்தஸ்தில் உயர்ந்தவர்களாய் இருப்பினும், உள்ளம் மட்டும் உண்மை இறைவனைத் தேடும் தாகத்தில் இருந்தது. அவர்கள் கல்விமான்களும், வான ஆராய்ச்சி யாளர்களும், வேதாகம அறிவில் சிறந்தவர்களுமாய் இருந்ததால், அதிசய விண்மீன் உலக மீட்பர் பிறப்பை அறிவிப்பதை உணர்ந்தார்கள்.
நெடும்பயணம் பாலைவனத்தில் செய்து, பல தடைகளையும் கடந்து, விண்மீன் வழிநடத்த பாலன் இயேசுவை மாட்டுக் கொட்டிலில் காண்கிறார்கள். தலையைக் குணிந்து இயேசுவின் பிறப்பிடம் சென்று தெண்டனிட்டு வணங்கி காணிக்கை செலுத்துகிறார்கள். இயேசுவை ராஜாவாக, குருவாக, அபிஷேகம் செய்பவராய் ஏற்றுக் கொண்டு தங்கள் நாடு திரும்புகிறார்கள்.
இன்று துறவியர்கள்கூட இறை மகிழ்வை விட்டுவிட்டு, செல்வ மாயையில், புகழின் போதையில், சிற்றின்ப வேட்கையில் மூழ்கிக் கிடப்பது அவர்களின் அறியாமையைத்தான் வெளிப்படுத்துகிறது.
புனித பவுல் இவ்வாறு எழுதுகிறார் : “யூதர்கள் அரும் அடையாளம் வேண்டும் எனக் கேட்கிறார்கள். கிரேக்கர்கள் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பறைசாற்றுகிறோம்” (1 கொரி 1:22).
ஒரு சமயத்தில் இறைப்பணிக்குச் செல்லும் வழியில் உள்ள என் உடன் பிறந்த மூத்த சகோதரியின் வீட்டில் தங்கியிருந்தேன். இரவு தூங்கிவிட்டு காலையில் வெராண்டா நாற்காலியில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தேன்.
சுமார் 12 வயது சிறுமி என் அக்கா வீட்டு வாசற்படி ஏறியவுடன், “ஜோசியம் பாருக்கா, நான் சொல்வேன்” என அடுக்கிக் கொண்டே போனாள். நான் விளையாட்டுக்காக, “எனக்கு ஜோசியம் பார்ப்பாயா?” எனக் கேட்டேன். அவர் சரியயனக் கூறி கையில் உள்ள கத்தை ஏடுகளை எனக்கு முன் நீட்டி, அவள் வைத்திருந்த நூலைக் கொடுத்து, ஏடுகளின் ஊடே சொருகச் சொன்னாள். நானும் செய்தேன். விரித்தபோது பாடுபட்ட சிலுவைநாதர் படம் வந்தது. அவள் உடனே சற்று பதட்டத்துடன், “நீங்கள் யார்? நீங்கள் தெய்வத்திற்குச் சமமானவர். எங்களைப் போன்ற வர்களிடம் நீங்கள் விளையாடலாமா? நான் தொழில் செய்வதற்கு ஏதேதோ சொன்னாலும், நான் வணங்கும் தெய்வம் இயேசுதான்” எனக் கூறி கழுத்தில் இருந்த கயிற்றில் இருந்து சட்டையில் மறைக்கப்பட்டிருந்த பாடுபட்ட சுரூபத்தைக் காண்பித்தாள். நான் வெட்கத்தில் உறைந்தேன்.
இப்புனித நாட்களில் நாமும் இயேசு இரட்சகரையே தேடும் பிள்ளைகளாவோம். ஆமென்.
0 comments:
Post a Comment