இது பூக்களின் காலம் . . . பேர் சொல்லும் பிள்ளை


திண்ணையில் வசித்த
அப்பா வீட்டுக்குள் வந்தார்
புகைப்படமாய் 
                            - பா. சேது மாதவன்

பின்பற்றக்கூடிய
ஒன்றும்
பின்பற்றக்கூடா
ஒன்றும்
வரலாற்றில்
ஒன்றாக இருக்கிறது.
வைப்பாட்டிக்கு
அரண்மனை கட்டித் தந்தான்
மைசூர் மகராஜா!
காதல் மனைவிக்கு
நினைவுச்
சின்னம் எழுப்பினான்
ஷாஜஹான்!
ஹரின் திலோத்தியின்
கண்ணீர்தானே
யமுனையானது!
அன்பு நாயகி
முத்தம்மாளுக்கு
சத்திரம் சாவடி
கட்டித் தந்தான்
மன்னன் சரபோஜி!
வாரிசு வாழ்க்கையில்
வந்தவர்கள்
இத்தனை கட்டியவர்கள்
பெற்றோருக்கு
என்ன கட்டினார்கள்?
யிபிள்ளை வரம் கேட்டு
அரச மரம் சுற்றினாள்
அங்கம் புரண்டாள்!
பத்தியமிருந்தாள்
பட்டினி கிடந்தாள்!
முதலில் பிள்ளை வரம்
கேட்டவர்கள் - பின்
ஆண் - பெண்ணென்று
பால் பிரித்தார்கள்
கள்ளிப்பால் கொடுத்தார்கள்!
பேர் சொல்ல
பிள்ளையயன்றார்கள்
பின்
கொள்ளிவைக்க
பிள்ளையயன்றார்கள்!
பதினெட்டு பிள்ளை
பெற்றவர்
பரதேசி ஆனதும் உண்டு!
பட்டணத்தில் வசித்தவர்
பட்டினி கிடந்து
செத்ததும் உண்டு!
இப்படி தவமிருந்து
பெற்றவர்கள்
தனிமைப்படுத்தப்பட்டார்கள்!
அனாதை இல்லத்திலும்
முதியோர் இல்லத்திலும்
இருக்கும்போது
பசி தீர்க்காத பிள்ளை
இறந்தபின் பால் ஊற்றுவதில்
என்ன பயன்?
சிந்திக்கலாமே!

ஜே. தமிழ்ச்செல்வன்

சுதந்திர காற்று வீசுகிறதா?


“என்ன வாழ்க்கையிது?
ஒன்றும் புரியாமல்
ஒரே மாதிரியாக
என்றாவது
ஒரு நாள்
ஏதாவது புரியும்” 
இப்படிப்பட்ட வாழ்க்கைதான் நம்முடைய வாழ்க்கை. ஏன், நாம் வாழும் முறை என்றே சொல்ல வார்த்தைகள் படையயடுக்கின்றன. அதைச் சரியான தொரு பாதையில், பயணிக்க வைப்பது தான் ‘சுதந்திரம்’.

சுதந்திரம் என்பது வெறுமனே நமக்கு மட்டுமே பயன்தரக்கூடிய கைப் பொருளாக இருக்கக்கூடாது. மாறாக, நமக்கும் நம்மைச் சுற்றி வாழும் அனைவருக்குமே பயனை விளைவிக்கக் கூடிய கைப்பொருளாக அமைய வேண்டும். அப்போதுதான் நாம் முழுமையான பலனை அடைய முடியும். அவ்வாறாக முயற்சித்துப் பயனைத் துய்க்கும்போதுதான் நாம் மேற்கொண்டிருக்கும் இச்சுதந்திரப் பயணம், பல மலைகள் ஏறி, ஆறுகள் கடந்து, சிகரங்கள் தாண்டி, வீர நடைபோடும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

நீங்கள் உங்கள் பயணத்தைத் தேர்ந்தெடுங்கள்; அதற்கு நீங்களே வழிகாட்டியாய் இருங்கள். அத்தகைய வழிகாட்டி மட்டுமே நல்லதொரு பாதையைக் காட்ட முடியும். பயணத்தை எளிதாய்த் துவக்கி, விரைவாய் முடிக்க முடியும். ஆகவே, நீங்கள் பயணிக்கக் கூடிய இப்பயணம் அர்த்தமுள்ளதா, நியாயமானதா, உண்மையானதா, மற்றவருக்கு ஏற்ற ஒன்றா என்ற கேள்விகளை உங்கள் மனத்தில் பதித்து, என் சுதந்திரப் பயணத்தைத் தொடர்கிறேன்; முடிந்தால் என்னைப் பின்தொடருங்கள்...

உன் சுதந்திரம் எது?
கடந்த மாதம் விடுமுறை நாளில் ஒரு நாள் நான் என் நண்பர்களுடன் பூண்டி மாதா பசிலிக்காவிற்குச் சென்றிருந்தேன். அங்கே பூசை பார்த்துவிட்டு, அங்குள்ள பூங்காவில் சற்று நேரம் விளையாடிவிட்டு, மீண்டும் நாங்கள் அனைவரும் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தோம். அப்போது நண்பர்கள் அனைவரும் கல்லணைக்குப் போகலாம் என்று சொன்னவுடன் நாங்கள் வரும் வழியில் கல்லணைக்குச் சென்றோம். அங்கு இறங்கியவுடன், நான் ஒரு காதல் ஜோடியைக் கண்டேன்.  அவர்கள் இருந்த நிலை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது வரும்போது என் நண்பர் ஒருவர், “ஏன் பிரதர், இவங்க இப்படி இருக்காங்க? இவங்களுக்கு அசிங்கமா இல்லையா? இவங்க ஏன் இப்படி செய்றாங்க?” என்று கேட்டார். ஆம், அந்த நண்பரின் மனத்தில் எழுந்த கேள்விகள் உங்கள் மனத்திலும் எழ வாய்ப்புகள் உண்டு. எல்லா வற்றையும் மீறி அவர்களிடம், “ஏன் இப்படி நடக்கிறீர்கள்?” என்று கேட்டால், “இது என்னுடைய சுதந்திரம்; உங்களுக்கு என்ன பாதிப்பு?” என்று நம்மை வாயடைக்கச் செய்வார்கள்.

சுதந்திரம் என்னவோ எல்லாருக்கும் ஒன்றுதான். ஆனால், அது மற்றவரையும் நம்மையும் பாதிக்காமல் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பயணத்தைத் தான் நாம் தொடங்க, தொடர வேண்டும் என்பதுதான் நம்முடைய குறிக்கோள் மற்றும் இலட்சியம். அத்தகைய இலட்சியத்தை அடைய முயற்சிப்போம்.
சுதந்திரத் தீ எரிகிறதா?
“நீ இருந்தபோது
முழுமை
இரவு ஒளியானது
இப்போது வெறுமை
பகலும் இருளானது” 
அல்லல்பட்டு, அனுதினமும் பாடுபட்டு, அடி உதைபட்டு, எனக்கு உயிர் தேவையில்லை, என் நாடே தேவை என்று உயிர் துறந்தவர்களால் அன்று முழுமை பெற்றோம். அப்போது இரவுகூட ஒளியானது. இப்போதைய நிலையைச் சற்று யோசித்துப் பாருங்கள். உங்கள் இதயமே சற்று இயங்காமல் நின்று, மீண்டும் இயங்க முற்படும். இதுதான் இன்றைய உண்மை நிலை.

கடந்த வாரம் ஓர் ஆங்கில வார இதழில் ஒரு கொடூரமான நிகழ்வினை வாசித்தேன். அந்நிகழ்வை இப்போது உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப் படுகிறேன். இதைப் படித்துவிட்டு நீங்களே முடிவு எடுங்கள், சுதந்திரத் தீ எரிகிறதா? அல்லது அணைந்துவிட்டதா? என்பதை.

அழகான பெண், 16 வயது, வீட்டின் வறுமையால் வேலை தேடிச் சொந்த ஊரான நேபாளத்தில் ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கினாள். கடைசியாக ஒருவனிடம் அவள் வேலை வாங்கித் தாருங்கள் என்று சொன்னவுடன், அவன் அந்தப் பெண்ணை நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்து சிவப்பு விளக்குப் பகுதியில் விற்றுவிட்டான். வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ஏமாற்றி விட்டான். அதன்பின் அவளது வாழ்க்கை தலைகீழாய்ப் போனது. தினமும் 20 பேருக்காவது விருந்தாக்கப்பட்டாள். அவளது வாழ்க்கை இருட்டானது. அது மட்டுமல்லாமல், அவளை வசியப்படுத்தி ஒரு சிறுநீரகத்தைத் திருடி 1 இலட்சத்து 9 ஆயிரத்துக்கு விற்றுவிட்டார்கள். அந்த விற்றக் கும்பலிலுள்ள ஒருத்தனுக்கே திருமணம் செய்து வைத்து, பணத்தையும் கொடுத்தார்கள். புதிய வாழ்க்கை மீண்டும் படையயடுக்க ஆரம்பித்தது. விபசார விடுதியின் கதவைத் தட்டியது. பிரபல பெண் கவிஞர் ஆண்டாள் பிரியதர்´னி தன்னுடைய கவிதையில் கீழ்க் கண்டவாறு ஒரு விபசாரப் பெண்ணின் நிலையைக் குறிப்பிடுகிறார் : 
“குறுகிய காலப் பத்தினி
நான்
தினசரி
அஞ்சு பேருக்காவது” 

இது கதையாக மட்டும்தான் நம் மனத்தில் தோன்றும். இந்நிகழ்வினைச் சற்று யோசித்தீர்களானால், நான் இப்பத்தியைத் துவங்கும் முன் எழுதிய கவிதைக்கு அர்த்தம் புரியும். அந்தப் பெண் வெறும் வறுமையினால் மட்டும் வாழ வில்லை. தன் உடல் வெறுமை யினாலும் வாழ்ந்தாள் என்பதுதான் உண்மை. ஆகவே, மனமுள்ள மகேசன்களே... மனமுள்ள மங்கையரே... 
இப்பேர்ப்பட்ட கொடுமையான நிகழ்வினைக் கேட்கும்போது நாம் சுதந்திரம் பெற்று விட்டோமா? என்று சிறு நெருடல் ஏற்படுவது நியாயம்தான். சுதந்திரத் தீயை ஏற்றக்கூடிய நல்ல உள்ளங்களாக மாற முற்படுவோம். இல்லையேல், காந்தி சமாதியில் மட்டும் தான் சுதந்திரத் தீ எரியும்; மற்றெங்கும் அணைந்துவிடும். 

இப்போதாவது புரிகிறதா உங்களுக்கு...? இப்போது வெறுமை மட்டுமே உள்ளது. ஆகையால் நண்பகல்கூட இருளாய் இருக்கிறது. 

சுதந்திரப் பயணத்தைத் தொடருங்கள்
“அரும்பு
பூ
பிஞ்சு
காய்
பழமாகியும்
கனிந்தும்
காம்பிடம் தவிக்கும் பழத்தைக் 
காற்று
தடவினாலும் போதும்
விழுந்து விடும்
அந்த வேலை காற்று செய்யவில்லை
அந்த வேளை பழத்திற்கு வரவில்லை” 
நம்முடைய நிலையும் இதுதான். நாமும் சுதந்திரமாய் இருப்பதில்லை. பிறரையும் சுதந்திரமாய்  வாழ விடுவதில்லை. நம்முடைய சுதந்திரம் பிறருக்குப் பாதிப்பை விளைவிக்கிறது என்றால் அங்கே சுதந்திரம் பறிபோனது என்றுதான் அர்த்தம். பின்வரும் ஒவ்வொரு கவிதையும் ஒரு தனிப்பட்ட மனிதனின் சுதந்திரம், நீங்களே யோசித்து முடிவெடுங்கள். அவர்களுக்குச் சுதந்திரம் உள்ளதா என்று. அதன்பின் உங்கள் சுதந்திரப் பயணத்தைத் தொடருங்கள்.

“பிடிக்கவில்லை
விடுமுறை நாட்களில்
வீடு” 
இது ஒரு மாணவனின் சுதந்திரம். இவன் பயணம் எதை நோக்கி...?
“சமையலறை தேடிச்
செல்கின்றன
என் கால்கள்
தாளிட்ட கதவுகளால்...” 
இது ஒரு பெண்ணின் சுதந்திரம். இவரின் பயணம் எதை நோக்கி...?
“எதற்காகவோ காத்திருந்து
மெளனத்தில்
கரைகிறது என் வாழ்க்கை!” 
இது மூதாட்டி ஒருவரின் சுதந்திரம். இவன் பயணம் எதை நோக்கி...?
இவர்களுக்கு இன்று வரை சுதந்திரப் பூ மணம் பரப்பவில்லை. பிறரின் சுதந்திரத்தை நாம் பறிக்காமல் இருக்கும்போது நம்முடைய சுதந்திரப் பயணம் எந்தவித தடையுமின்றி சுகமாக அமையும். ஆகவே, வாருங்கள் மனமுள்ள மனிதர்களாய் நம் சுதந்திரப் பயணத்தைத் தொடர்வோம்.

சுதந்திரக் காற்றைச் சுவாசித்து உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்களுடன்,  

சகோ. மாணிக்கம்
திருச்சி மறைமாவட்டம்

அன்னை மரியாள் நம் தாய்


அன்புச் சகோதரனே, சகோதரியே, இயேசுவின் இணையற்ற நாமத்தில் என் அன்பான வாழ்த்துக்கள். நீங்கள் நலமாக இருக்கவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக விளங்கவும் இறைவனை மன்றாடுகிறேன்.

நம் இந்தியத் திருச்சபை இருபெரும் விழாக்களைக் கொண்டாடி மகிழ்கின்றது. அன்னையின் விண்ணேற்பு மற்றும் நம் நாடு சுதந்திரம் அடைந்த நாள் நினைவாகக் கொண்டாடுகிறது. இவ்விழா, நாம் விழாமல் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு நினைவூட்டலே. சுதந்திர நாடு என்று சொல்லிக் கொண்டே, எதையும் செய்கின்ற போக்கு இருக்கும் வரை நமக்கு ஏது சுதந்திரம்? செய்ய வேண்டியதை மட்டுமே செய்தால், இந்த உலகம் சுதந்திரப் பறவையாய் உலா வரலாம்; விழா கொண்டாடலாம் என்று விண்ணேற்படைந்த அன்னை நமக்குத் தெரிவிக்கின்றார்.

ஆம், “அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார். நிலா அவருடைய காலடியில் இருந்தது. அவர் பன்னிரு விண்மீன்களைத் தலையில் சூடியிருந்தார்” (தி.வெ. 12:1). இந்த அருமையான வார்த்தைகள் திருச்சபையைப் பற்றியே என்றாலும், பல காலமாகப் புரிந்தோ புரியாமலோ அன்னை மரியாவுக்கென்றே பயன்படுத்துகிறார்கள். அத்துணை அற்புதமான பெண்மணி அவர்.

வானம் வளைந்து வந்து வணங்கியது. வணக்கம் கூறி உன்னதனுக்குக் கருவில் குடி கேட்டது. தந்தார், அவர் வந்து பிறந்தார். வளர்ந்து நமக்கு வாழ்வு  கொடுக்க உயிர் கொடுத்தார், உயிர்த் தெழுந்தார், விண்ணேறினார். மறுபடியும் வானம் வளைந்து வந்து அன்னை மரியாவை எடுத்துச் சென்றது.

“நான் இருக்குமிடத்தில் என் தொண்டரும் இருப்பார். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்” (யோவா 12:26). பொதுத் தீர்வைக்கு முன்னரே, உலக முடிவுக்கு முன்னரே அன்னை எப்படி விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்? இது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா? என்று கேட்டால், நானும் உங்களைக் கேட்பேன். கானாவூரில் திராட்சை இரசம் தீர்ந்துபோன நிகழ்வில் இயேசுவின் நேரம் இன்னும வரவில்லை என்ற நிலையில், அதை முன்கூட்டியே வரவைத்தாரே அன்னை மரியா! இது ஓவர்தானே! அன்னை மரியா என்றுமே ஓவர்தான். சீடன் குருவை மிஞ்சி... நன்கு பயிற்சி பெற்ற சீடன் குருவைப் போல இருப்பான். இப்படிப்பட்ட நிலையில் அன்னை மரியாவை ஆண்டவர் உயர்த்தி வைத்திருக்க நம்மில் சிலர் பைபிளை மட்டும் தூக்கிக்கொண்டு மரியா வேண்டாம், திருப்பலி வேண்டாம், இந்தத் திருவிழா வேண்டாம் என்று சொல்லுகின்ற போக்கு இயேசுவுக்குப் பிடித்தமானதாகுமா?

தேரில் வைத்து அழகு பார்க்கவும், தெருத்தெருவாய்ப் பவனி சென்று அன்னை மகிமையையும் அதற்குக் காரணமான ஆண்டவர் மகிமையையும் எடுத்துரைக்கும் உங்களில் பலரும் அந்த அன்னையின் விண்ணேற்பன்று திருப்பலிக்குக்கூட செல்லுவதில்லையே! இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இத்தனை ஆசீர்வாதமான அன்னை யைக் குறித்துப் பேசுபவர்கள் பலர் இறை வார்த்தையைத் தினமும் படிப்பவர்கள்கூட இல்லை. இது என்ன விதமான பக்தி, நம்பிக்கையோ எனக்குத் தெரியவில்லை. நீங்களும் நானும்கூட விண்ணேற்பு அடையும் பொருட்டு இறைவாக்கிற்குச் செவிமடுப்போம். அறிவிப்பதோடு நில்லாமல் ஆர்ப்பரிப்புடன் வாழ்ந்து காட்டுவோம். அப்போது, “உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர், நீங்கள் இப்பொழுது இருப்பதைவிட ஆயிரம் மடங்கு உங்களைப் பெருகச் செய்வாராக. வாக்களித்தது போல உங்களுக்கு வாரி வழங்குவாராக” (இச 11).

மக்கள் கடவுளை விட்டுத் தடம் புரண்டபோது இறைவாக்கினர் மற்றும் தலைவர்கள் மூலம் மக்கள் மனம் மாறி இறைவனிடம் வரச் செய்தார் எனப் பழைய ஏற்பாட்டில் காண்கின்றோம். ஆனால் இயேசு கிறிஸ்து சிலுவையடியில் மனுக் குலத்தைத் தன் தாயிடம் ஒப்படைத்தபின் அன்னையின் தாயுள்ளம் அவ்வப்போது பல இடங்களில் காட்சி கொடுத்து (வேளாங் கண்ணி, லூர்து நகர், மெக்சிகோ), “மனம் மாறுங்கள். செபம் செய்யுங்கள், செபமாலை சொல்லுங்கள்” என்று அறைகூவல் விடுகிறார் அன்னை மரி. நாமும் மரியாளைப் போல் “அவர் உங்களுக்குச் சொல்வ தெல்லாம் செய்யுங்கள்” (யோவா 2:5). நாம் நம் அன்னையின் சொற்படி நடப்போமா? அவர் வழியில் செல்வோமா? 

புhதை தேடும் பயணம்


இரண்டு வாரங்களுக்கு முன்பு நண்பர் ஒருவரைச் சந்தித்தேன. மிகக் குறுகிய காலத்தில் தொழிலதிபராக உயர்ந்தவர் அவர். “உங்கள் வளர்ச்சியின் இரகசியமென்ன?” என்று கேட்டதற்கு, “என் வாழ்க்கைக்குப் பாதை காட்டுபவர் கணினி உலகில் முத்திரை பதித்த பில்கேட்ஸ்; அவர்தான் என் தலைவர்; அவர் கடும் உழைப்பினால் உயர்ந்த உன்னத மனிதர்; என் இளமையிலிருந்தே அவரை முன்மாதிரியாக வைத்துச் செயல்படு கிறேன்; அவருடைய நேர்மை, மனந்தளரா உழைப்பு, நேரத்தைத் திட்டமிட்டுச் செயல்படுதல், பிறரை மதிக்கும் மனித நேயம் இவை யாவும் அவரிடம் என்னைக் கவர்ந்த மதிப்பீடுகள்” என்று நண்பர் பகிர்ந்து கொண்டார்.

இளமைக் காலத் தேடல்களில் ஒன்று தலைமைக்கான தேடல். “என்னை வழிநடத்த யாராவது இருந்தால் நன்றாக இருக்குமே” என்று எண்ணும் பருவம் அது. நடிகர்கள், அரசியல்வாதிகள், அறிவியல் மேதைகள், சமூக ஆர்வலர்கள், தேசியவாதிகள், தன்னார்வத் தொண்டர்கள்... இப்படிப் பலரால் ஈர்க்கப்படும் காலம் இளமைக் காலம். இவர்களில் “என் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு தலைவராக நான் யாரைத் தெரிவு செய்வது?” என்பதே அந்தத் தேடல்.

எல்லாருமே தலைவர்களாக இருக்க நினைக்க இக்காலத்தில், தன்னலம் மறந்து, பிறர்நலம் நாடும் நல்ல தலைவர்களைத் தெரிவு செய்வது சற்று கடினம்தான். குறிப்பாக, ஊடகங்களினால் தலைவர்களாக முன்னிறுத்தப்படுகின்ற ஒருசில போலிகளைக் குறித்து நாம் மிகவே கவனமாக இருக்க வேண்டும். எனவே பொது வாழ்வில் பிடிப்பு, இலக்கு நோக்கிய கவனக் குவிப்பு, கடின உழைப்பு, பிறருக்கு நல்வழி காட்டும் முனைப்பு, நம் இரத்த நாளங்களையும் சுண்டி இழுக்கும் உரை வீச்சு, தளர்ச்சியின்றி நம் வளர்ச்சிக்குப் பாதை காட்டும் விரிந்த பார்வை... இவை யாவும் நல்ல தலைவருக்கான ஒருசில அடை யாளங்கள். இத்தனை தகுதி களையும் சேர்ந்த ஒரு தலைவரை நம் வாழ்வின் முன்மாதிரி யாகத் தேர்ந்து கொள்ளும் போதுதான் நம் சாதனைகள் சாத்தியமாகும்.

நல்ல தலைவர்கள் நம் வாழ்வின் உந்து சக்தியாக அமைகிறார்கள்; இருளைக் கிழித்து, உழைப்பின் வெளிச்சத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்கள். சாதனை வேட்கையை ஏற்படுத்தி, வெற்றிக் கோட்பாடுகளையும் செயல்முறை களையும் வகுத்து, சாதிக்கும் ஆற்றலைத் தட்டி எழுப்புகிறார்கள். சுருங்கக் கூறின், நம் வாழ்வின் உச்சிக்குச் செல்ல ஏணிப் படிகளாக இருப்பவர்கள் இவர்கள்.

இளமைக்கால கனவுகளும் கற்பனைகளும் உருப்பெற நல்ல தலைவர்கள், வழிகாட்டிகள் நமக்குப் பலமாக அமைகிறார்கள். நல்ல தலைமையால் நாம் வழிநடத்தப்படும் போது நாமே வழிகாட்டிகளாகவும் மாற முடியும். பணி. 

அந்தோணி மதலைமுத்து
நல்லாயன் குருமடம், கோவை

வேற்றிச் சரித்திரம்


‘அழகிய தீயே’, ‘ மொழி’, ‘அபியும் நானும்’ போன்ற பல வெற்றிப் படங்களை, தத்ரூபமான படங்களை, தமிழ் மொழிக்குத் தந்து பெருமை கலந்த களைப்பில் இருந்தனர் இயக்குநர் ராதா மோகனும், தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜும்.  இப்படங்களின் வெற்றிகளை எல்லாம் வித்தியாச மாக கொண்டாட விரும்பி னார்கள்.  பிரம்மாண்ட அரங்குகள், பளபளக்கும் நட்சத்திரக் கூட்டம், கண்ணை கூச வைக்கும் வண்ண விளக்குகள் இப்படி எதுவும் இல்லாமல் மிகவும் சாதாரண முறையில் வெற்றி விழாவைக் கொண்டாட வேண்டும்.  அதுவும் பேசப்படும்படிக்கு இருக்க வேண்டும் என தீர்மானித்து திட்டமிட்டார்கள்.

நிசப்தமான கொண்டாட்டத்திற்காக நீலகிரி மலையைத் தங்களின் விழா மேடையாகக் கொண்டார்கள்.  இப்படங்களில் நடித்தவர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், உதவியாளர்கள் இப்படி ஒருவரையும் விட்டுவிடாமல் அவர்கள் குடும்பத்தினரோடு ஒரு பெரும் பரிவார மாகக் கிளம்பினார்கள்.  பயணம் ஆனந்தமாக இருந்தது.  அமர்க்கள மாகவும் இருந்தது,  உதகை நகரின் புறநகர்ப் பகுதியில் ஒரு தற்காலிக ஊரையே அமைத்து அதில் தங்கி சில நாட்களைக் கழித்தார்கள்.  அப்போது தான் அவர்கள் இருந்த இடத்தின் சற்றுத் தொலைவில் ஒரு பெரிய ஆசிரமம் இயற்கை சூழலிலேயே நடப்பதாகக் கேள்விப்பட்டு அந்த இடம் தங்கள் நிகழ்ச்சிக்கு அமைப்பாக இருக்கும் எனத் தீர்மானித்து அவ்விடத்தில் விழா நடத்த முற்பட்டார்கள்.

அங்கே, இருப்பவர்களுக்கும் அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என நம்பினார்கள்.  ஆசிரம நிர்வாகிகளைச் சந்தித்து அனுமதி பெற்றனர்.  ஆசிரம வளாகம் மிகவும் அழகாக ஜோடிக்கப்பட்டது.  வயது வித்தியாசமின்றி மாற்றுத் திறனாளிகள், மனவளர்ச்சி அற்றவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டோர், வயதானதால் விலக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற குழந்தைகள் எனப் பலதரப்பட்ட மக்கள் அங்கு இருந்தனர்.  இவர்களைச் சந்தோ­ப்படுத்துவதே தங்களின் வெற்றிக் கொண்டாட்டமாக இருக்குமென அவர்கள் நம்பினார்கள்.  ஆனால் அவர்களால் இவர்கள் வாழ்வு புரட்டிப் போடப்படும் என்று நினைக்கவில்லை.

விழா நாளன்று அனைவரும் வளாகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.  அவர்களின் சவாலான மனநிலையைக் கண்டு வந்திருந்தவர்கள் வியந்துப் போயினர்.  விளையாட்டுகளும், போட்டிகளும், பட்டிமன்றங்களும், நகைச்சுவை நிகழ்ச்சிகளும் எனப் பல சிறப்பம்சங்கள் இருந்தன.  எல்லோரும் உற்சாகமாக கலந்து கொண்டு பரிசுகள் வென்றனர்.  சென்னையின் பரபரப்பில், உஷ்ணத்தில், ஓய்வு ஒழிசலில்லாத உழைப்பில், கூட்ட நெரிசலில் அலைக்கழிக்கப்பட்டிருந்த படப்பிடிப்புக் குழுவினருக்குக்கூட இவ்வனுபவம் வித்தியாசமாக சந்தோ­ மாக இருந்தது.  

அன்று மதியம் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருடனான கலந்துரை யாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  எல்லோர் முன்னிலையில் அவர்கள் மேடையில் அமர்ந்திருக்க அவர்களிடம் நேயர்கள் பல கேள்விகளைக் கேட்டு பதில் பெற்றுக் கொண்டிருந்தார்கள்.  அப்போது அக்கூட்டத்திலிருந்த, முகம் விகாரமான ஒருவர் எழுந்து கேட்டார், “ஐயா, நீங்க திரையில்  அழகா இருக்கிற வர்களை, எந்த உடல் குறைபாடும் இல்லா தவர்களைக் கொண்டு படம் பண்ணி சாதிக்கிறீர்கள்.  ஆனால் இங்கே இருப்பவர் களைப் போல, சாதிக்கத் துடிக்கும் ஆசையுள்ளவர்களை ஏன் பயன்படுத்த மாட்டோம் என்கிறீர்கள்.  இவர்கள் குறை யுள்ள மனிதர்கள் என்பதாலா.  ஆயினும் இவர்களும் மனிதர்கள்தானே.  இவர்களுக்கும் அப்படிப்பட்ட ஆசைகள் இருக்கத்தானே இருக்கும்.  பல சாதனைகளைத் தந்துள்ள நீங்கள் ஏன் இப்படி ஒரு சாதனையைச் செய்யக்கூடாது?  இது உங்கள் உண்மையான சாதனையாக அமையும் தானே. உண்மையிலேயே நீங்கள் உலக மெங்கும் பேசப்படுவீர்களே, செய்வீர்களா?” எனக் கேட்டு அமர்ந்து விட்டார்.   

உடனே பதில் சொல்ல முடிய வில்லை அவர்களால்.  மனதிற்குள் யோசனை குடைய ஆரம்பித்தது.  ‘ஏன்?  செய்தால் என்ன?’ என யோசித்தார்கள்.  தங்களுடைய எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்தார்கள்.  கதைக்களம் உருவாக்கப்பட்டது.  இரவும் பகலும் யோசித்து அழகான கதை உருவானது.  கதைக்கேற்ற இசை உருவெடுத்தது.  அந்த ஆசிரமத்திலிருந்தே ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்றவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.  ஒப்பனைகளை கட்டின.  ஆடை அலங்காரங்கள் அசத்தின.  பேசப்பட்ட வசனங்கள் உள்ளத்தின் குமுறலாக வெளிப்பட்டன.  இசை உணர்வுகளின் வெளிப்பாடாக இருந்தது.  கடின உழைப்பும், உண்மையான திறமையும் ஒன்று கலந்து ஒரு பெரிய வெற்றிப்படம் சரித்திரமாக, சாதனையாக ஒரே மாதத்தில் உருவானது.  வெற்றிவிழா கொண்டாட வந்தவர்கள் ஒரு வெற்றிச் சரித்திரத்தைப் படைத்துவிட்டு ஊருக்குத் திரும்பினார்கள்.  ஆசிரமக்காரர்களும் உள்ளூர்வாசிகளும் கண்ணீருடன் விடைதர, படப்பிடிப்புக் குழுவினர் கண்ணீருடன் விடை பெற்றனர்.

சென்னை சென்ற ஒருசில வாரங்களில் படம் திரையிடப்பட்டது.  திரையிடப் பட்ட அரங்கெல்லாம் உண்மை உணர்வு களைக் காண மக்கள் வெள்ளமென திரண்டனர்.  கண்ணீர் மல்க படம் பார்த்து வந்தனர்.  தன் சக மனிதனை சிநேகிக்கும் உணர்வு ஒவ்வொருவருள்ளும் ஊற்றாக ஊறியது.  மனதாலும் உடலாலும் ஊனப்பட்டவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட்டன.  அரசின் வரிவிலக்கு அளிக்கப்பட்டது.  தமிழக அரசின் பல வெற்றி விருதுகளை வாங்கிக் குவித்தது.  படப்பிடிப்பினருக்குப் பாராட்டு மழை குவிந்தது.  ஒவ்வொரு மாநிலத்திலும் படம் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டது.  உச்சக்கட்டமாக இந்திய அரசின் திரைப்படத் துறைக்கு மகுடமாக விளங்கிய தங்கத்தாமரை விருது அப்படத்திற்குக் கிடைத்தது.  இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் தங்க மகுடத்தில் வைரமாகப் பதிக்கப்பட்டது அப்பட வெற்றி.  ஒரு சின்னக் கேள்வி படைத்த வெற்றிச் சரித்திரம் வியக்க வைத்தது.

விண்ணகத்தின் ஏணி


ஒரு சமயத்தில் மிசனரி குருவானவர் ஒருவர், குறிப்பிட்ட கிராம மக்களுக்குத் திருப்பலி செய்வதற்காக பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு நிறுத்தத்தில் பஸ் நின்றது. குருவானவரும் இறங்கினார். ஆனால் அவர் அப்பகுதிக்குப் புதிதாய் இருந்ததால் சரியான நிறுத்தத்தில் இறங்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டார்.

இருப்பினும் அங்கிருந்த குக்கிராமத்தின் வீடுகளை ஏறிட்டுப் பார்த்தார். அவருக்கு எதிர்ப்பட்டவரிடம் தான் தவறாக இறக்கிவிடப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு அவரிடம், “இங்கு ஏதாவது மாதா கோவில் இருக்கிறதா? கிறிஸ்தவர்கள் யாராவது இருக்கிறார்களா?” எனக் கேட்டார்.அதற்கு அவர், “இங்கு ஒரு சிறிய ஆலயம் இருக்கிறது. எப்பொழுதாவது திறப்பார்கள். ஆனால் இங்கு இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒருவர் முதிர்வயதில் இருக்கிறார். அவர் கிறிஸ்தவரா என்பது தெரியாது. ஆனால் அவர் ஆலயத்தைக் கடந்து போகும்போதெல்லாம் தன் தலைத் தொப்பியை எடுத்துவிட்டு தலைதாழ்த்தி வணங்கிவிட்டு அந்த ஆலயத்தைக் கடந்து போவார். அவரது வீடு ஊருக்குள் குறிப்பிட்ட தெருவில் இருக்கிறது” என்றார்.
குருவானவரும் அங்குச் சென்றார். குறிப்பிட்ட இராணுவ வீரரைப் பற்றிக் கேட்டார். அந்த வீட்டிலிருந்தவர்கள் ஆச்சரியமடைந்து, குருவானவரை வரவேற்று மாடியில் வியாதிப் படுக்கை யிலிருந்த அவரிடம் அழைத்துச் சென்றார்கள். முதியவரும் ஆச்சரியத்தில் மகிழ்ந்து வரவேற்றார் தன் மெல்லிய குரலால் அவர் குருவானவரிடம், “ஃபாதர், நான் ஒரு கிறிஸ்தவன்தான். இராணுவம் சென்ற பிறகு ஆலயம் செல்வதையே நிறுத்திவிட்டேன். திருப்பலிக்குச் சென்றது இல்லை. பாவசங்கீர்த் தனமோ நற்கருணையோ நான் பெற்று 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் நான் புதுநன்மை பெறும்பொழுது எங்களைப் பயிற்றுவித்த  குருவானவர், ஆலயத்தைக் கடந்து போகும்போதெல்லாம் ஆலயத்தில் உள்ள ஆண்டவர் இயேசுவுக்கு வணக்கம் செலுத்த தலை தொப்பியை எடுத்து விட்டு, தலைகுனிந்த பின் செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் மரண நேரத்தில் அன்னை கன்னி மரியாள் உங்களை மோட்சம் சேரச் செய்வார்கள் என்றார். நானும் இந்நாள்வரை செய்து வந்திருக்கிறேன். ஆச்சரியம், என் மரணப் படுக்கையில் மாதா உங்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள்” என்றார் ஆனந்த கண்ணீர் வடித்த நிலையில்.மரணப் படுக்கையில் இருந்தவரும் திருவருட்சாதனங்களைப் பெற்று சில மணி நேரத்தில் புனிதமாய் மரித்தார்.
குருவானவர் அபிஷேகத்தில் பெற்ற ஆசீர்வாதமான பரிசுத்த ஆவியைக் குறித்து இவ்வாறு வாசிக்கிறோம் : “ஆண்டவரின் ஆவி என்மேலே. ஏனெனில் ஆண்டவர் என்னை அபிஷேகம் செய்துள்ளார். உள்ளம் நொந்தவர்களைக் குணப்படுத்தவும், எளியோர்க்கு நற்செய்தியை அறிவித்து, உள்ளம் நொந்தவர்களைக் குணப் படுத்தவும் ஆண்டவர் என்னை அபிஷேகம் செய்துள்ளார்” (எசா 61:1) எனக் காண்கிறோம்.

லூக் 10:29-37 வரை வாசிக்கும் பொழுது, நல்ல சமாரியருடைய உவமையைக் காண்கிறோம். அடிபட்டுக் கிடக்கும் யூதனுக்குப் பணிவிடை செய்யும் நல்ல சமாரியர்தான் ஒவ்வொரு குருவானவரும். மக்களுக்குச் செய்யும் இறைப்பணியும் அன்புப் பணியும் நல்ல சமாரியனுடைய செயல்களைத்தான் பிரதிபலிக்கின்றன. குறிப்பாக, 33-34 வசனங்கள் குருவானவரின் இறைப் பணியைக் குறிக்கின்றன.

ஆண்டவர் இயேசுவை விட்டுப் பாவத்தினால் பிரிந்து சென்று நித்திய வாழ்வை இழந்தவர்களைத்தான் அடிபட்டுக் கிடக்கும் யூதனின் நிலை குறிக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்காய் ஜெபித்து இறை ஆசீர் பெற இறைமக்களை அணுகிச் செல்பவர்தான் ஒரு குருவானவர். எல்லா மக்களையும் அணுகி அன்பு செய்பவரும் அவரே.

மனந்திரும்பிய அவர்களுக்கு ஞானஸ்நானத்தின் மூலம் புதிய பிறப்பையும், அபிஷேக எண்ணெய் பூசி பரிசுத்த ஆவியின் வல்லமைப் பொழிவில் அவர்களை இயேசுவில் வாழச் செய்பவர்தான் குருவானவர்.

திருப்பலியில் கல்வாரிப் பலன்களைப் பெற்றுத் தந்து இயேசுவின் திருவுடல் திருஇரத்தத்தையும் ஆன்மீக உணவாகவும் பானமாகவும் கொடுப்பவர்தான் இந்த அருட்பணியாளர். ஆன்மீக உணவாய் இயேசுவையே தருகிறார்.
பாவத்திற்காய்க் கண்ணீர் வடித்து பாவசங்கீர்த்தனம் செய்யும் ஒவ்வொரு வரின் உடைந்த உள்ளத்தை நல்ல சமாரியன் போல் கட்டு போடுபவரும் இந்தக் குருவானவரே.

கடைசியில் நோயில்பூசுதல் திருவருட்சாதனம் மூலம் மோட்ச வாழ்வுக்கு இட்டுச் செல்பவரும் இந்தக் குருவானவரே. எனவே, ஒவ்வொரு இறைப்பணி யாளரான குருவானவரும் நல்ல சமாரியனே.

மரணப் படுக்கையில் இருப்பவர்களின் மனநிலை பற்றி உளவியல் ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் :
மரிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு நம் சரீரம் செயல்பாடுகள் அற்று உணர்விழந்து விடுகிறது. ஆனால் சிந்தனையாற்றல் மட்டும் செயல்படுகிறது. நமது மூளையின் செயலால் பிறப்பிலிருந்து இந்நாள் வரை நடந்துள்ள முக்கிய காட்சிகளெல்லாம் சில நிமிட திரைப்படம் போல் வெளிப் படுகின்றன. வாழ்வின் தவறுகளும் நிழற்படமாய் நிறுத்தப்படுகின்றன.
.இவ்வாறு பிரான்சிஸ் பியோபோர்ட் (Francis Beaufort) என்பவர் கூறுகிறார். 

மலையேற்றம் செய்யும் S.W. கோசென்ஸ்(Cozzens) என்பவர் மலையேறும்போது தவறி விழுந்தார். சுயநினைவை இழந்து மரணத்தின் பிடியில் இருந்து மீண்டும் சுயநினைவு பெற்று இவ்வாறு கூறியிருக்கிறார் : “நான் இறைவனோடு வாழும் வாழ்வைக் கொண்டிருந்ததால் மரண நினைவு என்னைப் பயமுறுத்தவில்லை. அதிசய விண்ணக காட்சிகளைக் கண்டேன். சில நொடிப் பொழுதிலேயே என் வாழ்வின் அனைத்து நினைவுகளும் வெளிப்பட்டு காட்சியாய்த் தென்பட்டன. இறை மகிமையில் வீற்றிருக்கும் மகிழ்வு என்னை ஆட்கொண்டதை அனுபவித்தேன்.” 

1935-ல் வெளிவந்த “Month” என்ற பத்திரிக்கையில் அருட்தந்தை தாஸ்டன் (Thurston) S.J. என்ற இயேசு சபைக் குருவானவர் இவ்வாறு எழுதுகிறார் : “மனிதனின் கடைசி நிமிடத்திலும் இறைவனின் இரக்கம் வெளிப்படுகிறது. தவறுகளும், பாவச் செயல்களும், செய்த குற்றங் குறைகளும் வெளிப்படுகின்றன. ஆத்துமாவில் இறையருளை இயேசு ஊற்றுகிறார். நல்ல கள்ளனைப் போல் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கும் ஆன்மாவுக்குள் விண்ணக மகிழ்வு நிரம்புகிறது.” 

குருவானவர் அளிக்கும் நோயில்பூசுதல் திருவருட்சாதனம் இத்தகைய உளநிலையில் கடந்து செல்பவர்களையும் விண்ணகம் சேர்க்கும் பெருங்கடல் படகாக இருக்கிறது. குருவானவர் இறைப் பணியின் மேன்மைக்காக ஜெபிப்போம். ஆமென்.

Fr.  ச. ஜெகநாதன்,
அய்யம்பாளையம், திண்டுக்கல்

புனித லீமா ரோஸ் 1586-1671


பெரு நாட்டிலுள்ள லீமா நகரில் 1586-ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது ஞானஸ்நானப் பெயர் இசபெல்லா. இவரது முகம் ரோஜா மலரை ஒத்திருந்ததால், பின்னர் இவருக்கு ரோஸ் எனப் பெயர் வழங்கலாயிற்று. பாவிகள் மனந்திரும்பும் படியாக இவர் அடிக்கடி செபிப்பார், உழைப்பார், அழுவார். தன் தந்தையின் தோட்டத்தில் ஒரு சிறு குடிசை அமைத்து அங்கு போய் செபிப்பார்.

ஆண்டவர் பட்ட பாடுகளைப் பற்றி அடிக்கடி சிந்திப்பார். உள்ளத்தின் வேதனைகளையும், உடலின் நோவுகளையும் சகிப்பது இவருக்கு எளிதாயிற்று. ‘இனிய இயேசுவே, உமது திருச்சித்தத்தின்படியே எனது வேதனைகளையும், அதே நேரத்தில் உம்மீது எனக்குள்ள அன்பையும் அதிகரியும்’ என்பார். வேதனைகளைப் பொறுமை யோடு சகிப்பார். தானே தவ முயற்சிகளைத் தேர்ந்தெடுத்து செய்து வருவார். இளம் வயதிலேயே தன் கன்னிமையைக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்தார். புனித சியன்னா கத்தரீனம்மாளை மேல்வரிச் சட்டமாக வைத்து தவ வாழ்வு நடத்தினார். தையல் வேலை இவருக்கு நன்றாகத் தெரியும். குடும்பத்தில் பணமுடை ஏற்பட்டபோது, இவர் தையல் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார். பலர் இவரை மணக்க விரும்பியதால், இவர் தன் தலைமுடியை வெட்டி 11 ஆண்டுகளாகத் தவ வாழ்வு நடத்தினார்.

கற்புக்கும் விசுவாசத்திற்கும் மாறான சோதனைகளை அவர் வீரத்துடன் எதிர்த்துப் போராடுவார். பின் அவர் மனதில ஒப்பற்ற அமைதியும் ஆனந்தமும் ஏற்படும். பாவிகளின் பாவங்களுக்குப் பரிகார மாகவும், உத்தரிக்கிற ஆத்துமங்களுக்கு ஆதரவாகவும் தனது தவ முயற்சிகள் அனைத்தையும் ஒப்புக்கொடுப்பார்.

சிந்தனை : ‘நம் ஆண்டவரின் கரங்களில் ஒரு பெரிய தராசைக் கண்டேன். அவர் மக்களுக்கு வர அனுமதித்த துன்ப துயரங்களுக்கு ஏற்ப வரங்களைக் கவனத்துடன் பகிர்ந்து கொடுத்தார். கடவுளுடைய தராசில் துன்பத்தின் அளவு வரப்பிரசாதம் கிடைக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும். நமது சிலுவைகள் யாருடைய தராசில் நிறுக்கப்படுகின்றன என்று அறிவோமானால், நமக்கு வரும் சிலுவைகளைப் பற்றி நாம் ஒருபொழுதுமே முறையிடமாட்டோம். 

எட்வர்டு

சுதந்திர பயணம் தொடரட்டும்


வெள்ளயர்களிடமிருந்து நாம் சுதந்திரத்தைத் தந்திரமாகப் பெற்றோம் என்பதைவிட, அவர்களின் கைகளில் ‘நம் குடுமிகளைக் கொடுத்து, மீண்டும் பெற்றோம்’ என்பதை வரலாறு மறக்காது. ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க நினைத்தார் திப்பு சுல்தான். நல்ல சிந்தனை. ஆனால் அவர்களை விரட்ட பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடியது அவரது பலவீனம். போர்ச்சுக்கல் நாட்டைச் சார்ந்த வாஸ்கோடகாமாவின் உதவியைக் கள்ளிக் கோட்டை ஜாமரின் மன்னர் நாடினார். ஏனெனில் அவருக்குப் பல பகைவர்கள் பக்கத்திலே இருந்தனர். வியாபாரம் செய்ய வந்த வாஸ்கோடகாமா கோவாவின் முதல் ஆளுநரை நியமித்தார். தற்காலக் கூட்டணிகளைப் போல, முற்காலத்திலும், ஏன், இயேசுவின் காலத்திலும் கூட்டணிகள் இருந்திருக்கின்றன. இயேசுவைத் தொலைக்க, கருத்து வேறுபாடுகள் உள்ள பரிசேயர்களும் சதுசேயர்களும் ஒன்றுசேரவில்லையா? இந்து - முஸ்லீம் பிரச்சினை பெரிதாகி, ‘கைநழுவிப் போன காலத்தில்’, ‘சட்டி சுட்டதா கை விட்டதடா’ என்ற பாணியில் ஆங்கிலேயர்கள் பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்த மறுநாள் நமக்குச் சுதந்திரம் தந்தார்கள்.

20-ஆம் நூற்றாண்டில் 40களில் பெரும்பாலான நாடுகள் சுதந்திரம் பெற்றன. இஸ்ராயேல் முதல் இந்தியா வரை பல நாடுகள் அரசியல் சுதந்திரம் பெற்றன. ஜூலை மாதம் 9-ஆம் நாள் தெற்கு சூடான் சுதந்திரம் பெற்று, 193-வது நாடாக ஐ.நா. சபையில் ஐக்கியமானது.

நாம் பெற வேண்டிய சுதந்திரம் பலப்பல. பொருளாதார, சமூக, மத விடுதலைகளும், ஆணவம், வெறுப்பு, பேராசை, பழிக்குப் பழி, கீழ்ப்படியாமை, பிறரை மதிக்காத தன்மை, பகிர்ந்து கொள்ள மறுக்கும் நிலை போன்ற உள்மனச் சிறையிருப்புக்களிலிருந்து விடுதலை பெற வேண்டும். பொருட்கள் கிடைக்க வில்லையே (problem of scarcity) என்ற நிலை மாறி, எந்தப் பொருளை வாங்குவது (problem of affluence) என்னும் குழப்ப நிலைக்கு நாம் உந்தப்பட்டிருக்கிறோம். நுகர்வோர் கலாச்சாரம் (consumerism) பெருகி விட்டது. சமூக அளவில் மாணவர் சேர்க்கை எந்தெந்த விழுக்காடு என்ற அடிமைத்தனம், வேலைவாய்ப்புக்களில் சாதி வாரியான ஒதுக்கீடு மூலம் தரமான கல்வி பயின்றோர் புறக்கணிக்கப்படும் நிலை, பெண்களுக் கான 50% இடஒதுக்கீடு என்னும் பல அடிமைத்தனங்களிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும்?

ஊழல், கறுப்புப் பணம், வரி ஏய்ப்பு, கள்ளக்கடத்தல், வேலையின்மை, சிகப்புநாடா முறை, சுவிஸ் வங்கியில் பணம் சேர்த்தல், தாராளமயமாக்கல், உலக மயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்ற பல அடிமைத்தனங்களிலிருந்தும், மதச் சுதந்திரம் பெறாத நிலையிலிருந்தும் விடுதலை பெற வேண்டும்.

நம்மவர்களைப் பொறுத்தமட்டில், தற்கால நிலை
முதல் நிலை: திருஆட்சியாளர்களுக்குக் கீழ்ப்படிவதுதான் பொதுநிலையினரின் கடமை
இரண்டாம் நிலை:திருஆட்சியாளருடன் இணைந்து பொதுநிலையினர் பணிபுரிய வேண்டும்
மூன்றாம் நிலை:பொதுநிலையினர் திருச்சபையின் ஓர் அங்கம்
நான்காம் நிலை:பொதுநிலையினரே திருச்சபை

சுவாசத்தின் விலை !!!


கல்வி வேண்டும்!  கல்வி வேண்டும்!!
மாணவனின் போர்ப்பறை!
வேலை வேண்டும்!  வேலை வேண்டும்!!
இளைஞனின் மனக்குறை!
மின்சக்தி வேண்டும்!  மின்சக்தி வேண்டும்!!
தொழிலாளியின் அகப்பறை!
தண்ணீர் வேண்டும்!  தண்ணீர் வேண்டும்!!
விவசாயிகளின் அழுகைப்பறை!
நீதி வேண்டும்!  நீதி வேண்டும்!!
ஒடுக்கப்பட்டவனின் முழக்கப்பறை!
இலவசம்!  இலவசம்!!  இலவசம்!!!
சுவாசக் காற்று இலவசம்!
சுவாசிப்போம் சுதந்திரமாக!
தொடரட்டும் சுதந்திரப் பயணம்

திருமதி ஜுலியா மார்டின்,
திருச்சி

வேண்டாம் சு(தந்திரம) ; வேண்டும் சுதந்திரம

“தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?          
சர்வேசா இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம் கருகத்
திருவுளமோ?
எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ணவிளக்கிஃது மடியத் திருவுளமோ?
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபின்னர்
வாராது போலவந்த மாமணியைத்
தோற்போமோ?
தர்மமே வெல்லுமெனும் சான்றோர்சொல்  
பொய்யாமோ?” 
என்று பாடினான் பாரதி. ஆம், அவ்வாறு வளர்த்த சுதந்திரப் பயிரை, கண்ணீரால், தம் இன்னுயிரால் காத்தவர்கள் பலர். அந்த நெல்மணியைக் காக்கிறேன் என்று கூறி நிலத்தையே அபகரித்து, அவைகளில் களைகள் மண்டுகின்றன என்று கூறி, நற்பயிருக்கு ஈடாக, ‘களைகளாக’ வளர்ந்து, வளர்த்து ஊழல் பண்ணும் மனிதர்கள் மத்தியில் 64-வது சுநத்திர தினமா? வேண்டாம்.

சுதந்திரம் அதிலே ‘தந்திரம்’ என்ற வார்த்தை உள்ளது. பார்த்துப் பயன் படுத்துங்கள். வார்த்தையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும்தான். ஏனென்றால், ‘வாதாம் கொட்டை’ எடுக்க வந்தவனைத் தீவிரவாதி என்று தலையில் சுடுகிறார்கள் இராணுவத்தார். நாட்டைக் காப்பவர்கள் இப்பொழுது இளம்பிஞ்சைக் கொலை செய்கிறார்கள். எப்படிப்பட்டவர்களை நாம் பாதுகாப்புக்கு வைத்துள்ளோம்? 

‘Times Now’ சேனலில் இளைஞர் ஒருவரை 4 பேர் சேர்ந்து அடித்து, நிர்வாணப்படுத்தி, தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொன்றனர். இது நடந்தது இந்த சுதந்திரத் தாய்நாட்டில்தான். ஊழல், கொலை, கொள்ளை, பலாத்காரம், அபகரிப்பு என்ற எதிர்மறை எண்ணங் களையே எதிர்காலமாகக் கொண்ட மனிதர்கள் மத்தியிலா, உண்மைச் சுதந்திரம்? வேண்டாம், வேண்டாம்.
சுதந்திரத்தைப் பொறுத்தவரை மனிதர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. இதைச் செய்தால் ‘எனக்கு என்ன கிடைக்கும்?’ என எண்ணும் மனிதர்கள்
2. இதைச் செய்தால் ‘என் சமூகத்திற்கு என்ன பலன் கிடைக்கும்?’ என எண்ணும் மனிதர்கள்.
முதல் வகை மனிதர்களைத்தான் இச்சமூகம் உருவாக்குகிறது. இவர்களால் பிறர் காயப்படுத்தப்பட்டாலும், தம் உரிமைகள் பறிபோகாமல் காத்துக்கொள்ளும் சுயநல வாதிகள். இவர்களை நாம் இன்றைய அரசியல்வாதிகளுக்கு ஒப்பிடலாம். ஏனென்றால், இவர்களால் விலைவாசியைச் சரிசெய்ய முடியும். விலை கொடுத்து வாங்க முடியும். ஆனால் ஏழைகள், நடுத்தர மக்களால் இதனைச் செய்ய முடியாது. ஆனாலும்  விழிப்புணர்வற்ற மக்கள் அவர்களைக் கொணர்ந்து நல்ல பயிருடன் இணைக்கிறார்கள். பாதிப்பு என்னவோ நமக்குத்தான்.

இரண்டாம் வகையினர் சமூகத்திற்காகப் பலன் தேடக்கூடியவர்கள். அதற்காகத் தங்கள் வாழ்வைத் துச்சமெனக் கருதி செயல்படுபவர்கள். அவர்களில் அண்ணல் தொட்டு அன்னா ஹசாரே வரை பலர் உள்ளனர். அவர்களைக் கொண்டு இந்தச் சுதந்திரப் பயிரைக் காக்க முடியும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. இது எப்பொழுது சாத்தியம் என்றால், நாம் நமது கரங்களை அவருடன் இணைக்கும் போதுதான். நமது ஒத்துழைப்பை இத்தகைய மனிதர்களுக்குக் கொடுக்க வேண்டும். அந்த ‘சுதந்திரம்’தான் வேண்டும். 

சரி, யார் இவர்கள்? இரயில் நிலையத்தில் இறங்கியபோது, ஆடையின்றி இருந்த பலரைக் கண்டவுடன், இனி நானும் மேலாடை அணிவதில்லை என்றார் அண்ணல் காந்தியடிகள். எனது படிப்பை விட, என் மக்களின் துன்பம் தரும் பாடம் எனக்குக் கிடைக்கும் பட்டயத்தை விடச் சிறந்தது என்று வாழ்பவர் சமூக சேவகி மேத்தா பட்கர். செல்வச் செழிப்பிலே  வாழ்ந்தேன். ஆனால் என் தாய், ‘அந்தத் தாழ்ந்த சமூகத்தினனுடன் சேராதே’ என்றார்; அவர்களுக்கே என் வாழ்வு என்ற சமூக சேவகர் பாபா ஆம்தே. ஏழாம் வகுப்பு படிக்க முடியவில்லை, எனவே இராணு வத்தில் ஓட்டுநராகச் சென்று, கற்று, இன்றும் ‘நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும்; சுதந்திரப் பயிர் நன்றாக வளர்ந்து இச்சமூகம் பலன் பெற வேண்டும்’ என ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரதம் இருப்பேன்; இந்த மண்ணுக்காக என் இன்னுயிரைக் கொடுப்பேன் என்றார் அன்னா ஹசாரே. இவர்கள்தான் வேண்டும். இவர்களில் சிலருக்குக் ‘கை’ உயர்த்தினோம். இன்று இவர்களுக்குக் ‘கை’ கொடுப்போம். அத்தகைய ஒரு சுதந்திரம்தான் வேண்டும். 

முயல்வோம். முயன்று பல சாதனைகள் புரிவோம்!

உலக கல்விப் புரட்சி நாள்


“கோவில்கள் அனைத்தும் கல்விச்சாலைகள் செய்வோம்” – பாரதி

"நாட்டின் தலைவர்கள் வகுப்பறையில்தான் உருவாகிறார்கள்”                  நெப்போலியன்

ஜூலை 28-ஆம் நாள் கல்விப் புரட்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. கல்விதான் நாட்டின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படைக் காரணியாக உள்ளது. உடைமைகளில் சிறந்தத, அழியாத உடைமையாகக் கருதப்படுவது கல்வி மட்டுமே. கற்றறிந்தவருக்குச் செல்லும் இடமெல்லாம் சிறப்பு. ஒருவர் பெற்ற கல்வி ஏழு பிறப்பிற்கும் பயன் தரும் என்பதை மையப்படுத்தியே திருவள்ளுவர்,
 “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து” 
எனப்பரிந்துள்ளார்.கல்வி உலகளாவிய சூழலில் இன்று மிக அதிக அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், இந்தியச் சூழமைவிலும், தமிழகச் சூழமைவிலும் எந்நிலையில் நடைபயிலுகின்றது எனக் காணலாம்.

உலகில் வேறெங்கும் நடைபெறாத அளவுக்கு இந்தியாவில்தான் கல்வி பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது. குருகுலக் கல்வி, திண்ணைக் கல்வி எனத் தொடங்கி, பல்கலைக் கழகங்களாக, நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக உயர்ந்து நிற்கின்றது. ஆனால் இந்த வளர்ச்சி, இந்தியா முழுவதும் எதிரொலித்து, அனைத்து மக்களுக்கும் கல்வி கிடைத் துள்ளதா எனில் அது கேள்விக்குறியே.

113 கோடியைத் தாண்டிவிட்ட இந்திய மக்கள் தொகையில் 42 விழுக்காட்டினர் குழந்தைகள், பள்ளி செல்லும் வயதினர். இதுதான் இந்தியத் திருநாட்டின் மனித வளத்திற்கான அச்சாணி. இந்த 42 விழுக்காட்டினரும் கல்வி கிடைக்கப்பெற வில்லை என்பது வேதனையான ஒன்றாகும்.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, 2009-ஆம் ஆண்டில்தான் அனைவருக்கும் கல்வி கிடைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் சட்டம் இயற்றப்பட்டது. இது எந்த அளவுக்கு நடைமுறைப் படுத்தப்படும் எனக் கல்வியாளர்கள் எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

1968-ஆம் ஆண்டு நடுவண் அரசு, தனது ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கையில் கல்விக்காக ஒதுக்கிய தொகை 4 விழுக்காடு ஆகும். இன்று அது 10 விழுக்காட்டினைத் தாண்டியிருக்க வேண்டும். ஆனால் இன்றும் அதே 4 விழுக்காடுதான் ஒதுக்கப்படுகிறது. அதே நேரத்தில், பிற துறைகளுக்கான ஒதுக்கீட்டுத் தொகை ஆண்டு தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய அரசால் ‘அனைவருக்கும் கல்வி’ (சர்வ சிஷ்ய அபியான்) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட தொகை பின்வருமாறு :

2005-06ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டது 21,032.84 கோடி
2006-07ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டது 29,513.85 கோடி
செலவிடப்பட்டது 27,827.87 கோடி

குழந்தைகள் மற்றும் கல்விச் சூழமைவுகளுக்கான செலவினங்கள முந்தைய நிதிநிலை அறிக்கையைவிட வெறும் 21.65 விழுக்காடு மட்டுமே அதிகம். இது அரசின் பாராமுகத்தினைக் காட்டுகிறது.

இந்தியாவில் தமிழகம் கல்விக்கான தனிச் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. இந்திய ஆட்சிப் பணியகத் தேர்வுகளில் தமிழர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய நிகழ்வாகும். அதே நேரத்தில் இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் கல்வி வணிகமயமாகிவிட்ட சூழலும் தமிழகத்தில்தான் நடந்தேறி வருகிறது. ஒருபுறம் அரசு மற்றும் தமிழ்வழிப் பள்ளிகள் மூடுவிழா கண்டுகொண்டிருக்க, மறுபுறமோ புற்றீசல் பேபால் நாள்தோறும் பெருகிவருகின்றன தனியார் ஆங்கில வழிக்கல்வி (மெட்ரிக் பள்ளிகள்) நிறுவனங்கள்.

கடந்த ஜூன் மாதம் முழுவதும் சமச்சீர் கல்வியா? பழைய பாடத்திட்டமா? என்ற நிலை ஒட்டுமொத்த தமிழகத்தையும் திகைக்கச் செய்தது. இதற்கிடையில் தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயக் குழுக்கள் வேறு. பெரும்பாலான பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் தரம் இல்லையயனக் கூறி, தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் தரம் குறைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது. 1968-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட  கோத்தாரி ஆணையம் முதல் 2007-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட எஸ். முத்துக்குமரன் குழு வரை பல்வேறு பரிந்துரைகள் அளித்துள்ளன. அவை பெரும்பாலும் அரசியலாக்கப்பட்டு வருகின்றன என்பது வேதனை தரும் நிகழ்வாகும்.

தனியார் பள்ளிக் கட்டணத்தைப் பொறுத்தவரையில், 2009-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதன்படி, கட்டணத்தினை நிர்ணயிக்க தமிழகத்தில் உள்ள 10,233 தனியார் பள்ளிகளிடம் பதில் கேட்கப்பட்டது. 701 பள்ளிகளிடமிருந்து பதில் இல்லை. 6,400 பள்ளிகள் மேல்முறையீடு செய்தன. வெறும் 4,000 பள்ளிகள் மட்டுமே இக்கருத்தினை ஏற்றுக்கொண்டன. மீண்டும் நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அது நிர்ணயித்திருக்கிற சூழலிலும் தினமும் அல்லலுறுவது தமிழக மக்கள் தான். அதே நேரத்தில் கல்வியில் கொள்ளை இலாபம் ஈட்ட பள்ளிகள் தயாராகிவிட்டன.

சமச்சீர் கல்வி தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்ற பேச்சு எழுந்ததும் பல்வேறு தனியார் பள்ளிகள் தங்களது பாடத்திட்டத்தினை மாநில திட்டத்திலிருந்து, மத்திய அரசின் பாடத்திட்டங்களுக்கு மாற்றியமைத்ததினை நினைவிற்கொள்க.

தாய்மொழிக் கல்வி பெருமளவில் புறக்கணிக்கப்படுவதும், தாய்மொழியே கற்காமல், என்னவென்று தெரியாமல் ஒருவர் அரசு வேலைவாய்ப்பினைப் பெறுவதும் தமிழகத்தின் கதை.

உலக கல்விப் புரட்சி நாள் நமக்கு விடுக்கும் அறைகூவல், வெறும் மதிப்பெண்களை மட்டுமே முன்னிலைப்படுத்தாமல், மனித மாண்புகளை வளர்த்தெடுக்கும் கல்வியைப் பெறவும், தாய்மொழியையும், தாய்மண்ணையும் நேசிக்க வேண்டும் எனவும் எடுத்துரைப்ப தாகும். நன்னெறிக் கல்வியின் வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கும் தனியார் தொண்டு நிறுவனங்கள், மாணவர்களின் உரிமைக்காகப் போராடும் ஜனநாயக இளைஞர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் என இவர்களுடன் இணைந்து பணியாற்ற முன்வருவோம்; புதிய சமுதாயத்தினை உருவாக்குவோம்.

சகோ. ச. நேசம்
நல்லாயன் குருமடம், கோவை

சுதந்திரம்


சுதந்திரம் பெற்ற 64 ஆண்டுகளை நினைவுகூரும் இந்தியா மீண்டும் சுதந்திர போராட்ட சூழலுக்குத் தள்ளப்பட்டது போன்ற நினைவைப் பல்வேறு நிகழ்வுகள் உருவாக்குகின்றன. கடந்த மாதங்களில் நடைபெறும் நிகழ்வுகள் கறுப்புப் பணத்திற்கு எதிராக, லஞ்சம் ஊழலுக்கு எதிராக, கல்வி நிறுவனங்கள் மீண்டும் பணம் உருவாக்கும் கருவிகளாக மாறாமல் இருக்க எடுக்கப்படும் முன்னெடுப்புகள், வன்முறைகளும் பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும் நீதிக்காகக் காத்திருக்கும் சூழல்கள் எல்லாம் மீண்டும் நிறை சுதந்திரத்தை எதிர்பார்க்கும் மனநிலையை உணர்த்துகின்றன.

பணம், பதவி, அதன் விளைவான செருக்கும் தற்பெருமையும் மட்டுமே தலைதூக்கி நிற்கும் சூழலில், மீண்டும் பொருளுள்ள இந்தியச் சமூகத்தையே எதிர்பார்க்கிறோம்.

கலாச்சார முன்னேற்றம் (?), கண்டுபிடிப்புகளின் முன்னேற்றம், அறிவுப்பூர்வமான வளர்ச்சி, வசதிகளின் பெருக்கம் போன்றவை எல்லாம் வளர்ந்துவிட்ட நாடுகளுக்கு இணையாக நம் நாட்டைத் தூக்கிப் பிடித்தாலும், மக்களின் மனநிலையில் நிறைவும், நிலையான ஒழுங்குமுறையும் இல்லாமல், பண்பு இல்லாத பண்பாடும் தலைதூக்கி நிற்கும் சூழல் நாட்டின் முன்னேற்றத்தை (?) சந்தேகத்திற்கு அழைத்துச் செல்கிறது.

‘தனிமனித வளர்ச்சி சமூக வளர்ச்சி’ என்றாலும் தீமையைச் செய்யும் தனிமனிதர்கள் ஒன்றுகூடி தன்னலத்திற்கான சமூகமாய் மாறிப்போனதால், ஏதோ சில தனிமனிதர்கள் மட்டும் தம் தம் வாழ்க்கையை நல்லவற்றில் நிலை நிறுத்திக்கொள்ள முடியாமல் தத்தளிக்கிற நிலை. நல்லவர்களாக வாழ்கிறவர்களும், வாழ நினைக்கிறவர்களும் ஒரு காலக்கட்டத்தில் ‘நாம் ஏமாந்து போய் பிழைக்கத் தெரியாமல் வாழ்கிறோமா?’ என்று எண்ணுகிற நிலைக்கு நம் சமூகச் சூழல் உள்ளதை உணர்வோம்.

நம் திருத்தந்தை இவ்வுலகின் போக்கு பற்றிச் சொல்கிறபோது, இறைத்தன்மை இல்லாத ஓர் உலகத்தை இன்று மக்கள் உருவாக்குகிறார்கள் - கடவுளை இவ்வுலகிலிருந்து விரட்டுகிற நிலை உருவாகிறது எனக் குறிப்பிடுகிறார். நம் நாட்டில் இது ஓரளவு உண்மை என்றாலும், மிகுதியான மக்கள் வாழ்க்கையில் இன்னும் பக்திக்கும் பரவசத்திற்கும், கோவிலுக்கும் கொண்டாட்டத்திற்கும் பஞ்சமில்லை. ஆனால் எத்தகைய பக்தியும் கொண்டாட்டமும் மக்களை ஆட்கொண்டுள்ளன என்பதே கேள்வி. கடவுள் பக்தி இருக்கட்டும் என் மனதில் - ஆனால் அது எனக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்ற நினைப்புதான் அதிகம். கொண்டாட்டம் இருக்கட்டும் -  ஆனால் அது நான் நினைக்கிற, விரும்புகிற வாழ்க்கைக்கு  மட்டுமே துணை போக வேண்டும் என்ற வாதத்தில் நமது இறைச்சிந்தனைகள் மாற்றம் உருவாக்காத மழுங்கல்தனமாகவே மாறிவிடுகின்றன. என்ன பலன்?

படிப்பும் பட்டமும் நிறையவே வளர்கின்றன. பாராட்டுகின்றோம். இவற்றின் மூலம் வரும் நன்மைத்தனத்தை, ஞானத்தின் மேன்மையை, ஒழுக்கத்தின் உயர்வைப் போற்றி வளர்ப்பவர்கள் எத்தனை பேர்? படிப்பும் பட்டமும் பணம் சம்பாதித்துத் தரும் கருவிகளாக மட்டுமே மாறிப்போவதால், தனிமனித கலாச்சாரம், பண்பாடு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றை வாழும் எண்ணம் இல்லாத ‘படிப்பாளிகள்’ உண்டு. வேலைகள் செய்வதால் பணம் பண்ணும் பெரியோர்கள் சமூகச் சிந்தனையோடு பிறருக்காக வாழும் நிலையைக் காண்பது அரிது. படித்து உயர்ந்தோரின் குடும்பங்களில்தான் எத்தனை தீர்க்க முடியாத பிரச்சனைகள்! ஒருவர் ஒருவருக்காக வாழ வேண்டிய குடும்பங்களில் ஒருவர் மற்றவரைப் ‘பிறர்’ என்று அந்நியப்படுத்திப் பார்க்கும் பார்வை உள்ளவரை ‘சமூகம்’ என்ற  பெரிய குடும்பத்தை உருவாக்குவது எப்படி?

ஆகஸ்டு 15 ‘மரியன்னை விண்ணேற்புக் கொண்டாட்டம்’. நம் நாட்டின் விடுதலை நாளில் கொண்டாடும் சிறப்பு நமக்கு உண்டு. அந்த அன்னையின் விழாவில் வரும் சிந்தனைப் பாடல் : செருக்கும் செல்வமும் மறைக்கப்படும் நிலையே இறையரசின் உண்மை வளர்ச்சி நிலை. செருக்குற்றோரைச் சிதறடித்து, செல்வரை வெறுங்கையராய் மாற்றி, தமது உடன்படிக்கையில் உண்டாகும் உலகைக் கடவுள் நிலைநிறுத்தும்போது அடிமைத்தனம் என்பது இருக்காது. இந்த உயரிய மாற்றமும் மனதுமே ஒரு சுதந்திர நாட்டின் வாழ்வாதாரமாக அமையும்.

ஒரு தனிப்பட்ட மரியாள் என்னும் பெண்ணால் இச்சமூகம் பற்றிய மாற்றுச் சிந்தனையைப் பாட முடிந்தது என்றால், சமூக மாற்றம் வேண்டும் என்று போராடும் எத்தனையோ மனிதர்களின் ஒருமைப்பாட்டால் ஏன் புதிய சமூகம் உருவாக்க முடியாது? சிந்திப்போர் ஒன்றுபடவும், ஏமாற்றம் அடையாமல் உறுதிப்படவும் சுதந்திர நாள் வலு தரட்டும்! நம் வலு இழத்தலே மீண்டும் அடிமையை உருவாக்கும். திறம் பெற்ற வலுவோடு உருவாகுவோம். சுதந்திரம் வளர்க!   

சே. சகாய ஜாண்