இறையழைத்தலில் இறைவேண்டல்


ஒரே கிராமத்தில் 323 இறை அழைத்தல்கள். அதில் 152 குருக்கள், 171 கன்னியர்கள் என்றால் நம்ப முடிகின்றதா? உண்மையில் நம்பித்தான் ஆக வேண்டும். வடக்கு இத்தாலியில், தூரின் நகருக்கு 90 கி.மீ. கிழக்கே அமைந்துள்ள குக்கிராமம்தான் லூ (ஸிU). சுமார் 1000 பேர் வசிக்கும் அக்கிராமத்தின் தாய்மார்கள் 1881-இல் ஒரு நாள் பங்குத் தந்தை அலெக்ஸாண்ட்ரோ கானோர அடிகளாரின் ஒருங்கிணைப்பில் ஒன்றுகூடினர். இந்தக் கூடுகையின் நோக்கம் தம் பிள்ளைகளுக்கு இறையழைத்தல் கிடைக்கச் செபிப்பதுவேயாகும். “அதற்காக ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையிலும் திவ்விய நற்கருணை ஆண்டவரை ஆராதித்து இறை யழைத்தலுக்காக ஜெபிப்பது, மாதத்தின் முதல் ஞாயிறன்று பூசையில் பக்தியுடன் பங்கெடுத்து ஒப்புக்கொடுப்பது, பூசைக்குப் பின்பு ஊரிலுள்ள எல்லாத் தாய்மார்களும் குருத்துவ, துறவற இறையழைத்தல் பெருக குறிப்பிட்ட ஜெபத்தைச் சொல்லி மன்றாடுவது.” அவர்களது நம்பிக்கையும், எதிர் நோக்குள்ள இறைவேண்டலும் இறை இரக்கத்தைத் தொட்டன. குடும்பங்களில் ஆழ்ந்த மகிழ்ச்சி, கிறிஸ்தவ புண்ணியங்கள் தழைத்தன. அதனால் குடும்பத்துப் பிள்ளைகள் இறையழைத்தல்களை உணர்ந்து கொண்டார்கள். குருத்துவ, துறவற அழைத்தல்கள் பெருகின. 1946-ஆம் ஆண்டு அக்கிராமத்தில் இருந்த குருக்கள், துறவியரின் எண்ணிக்கை 323. இப்பங்கிலிருந்து உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் ஊழியம் புரிந்துவந்த குருக்கள், கன்னியர் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுவார்கள். அது சிறந்த நன்றியறிதல் கொண்டாட்டமாக இருக்கும்.

இறையழைத்தல்
இறையழைத்தல் - குருத்துவ அல்லது துறவற வாழ்விற்கான அழைப்பு - எல்லா மனிதர்களுக்கும் இவ்வுல கிலேயே நேரிய வாழ்வை அடைய விடுக்கப்படும் பொது அழைப்பிலிருந்து வேறுபட்ட அழைப்பு ஆகும். இறை யழைத்தலானது இறைவன் தான் தேர்ந்தெடுக்கிறவர்கள் மேல் பொழியும் ஓர் இலவசக் கொடை. ஏனெனில், “நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ள வில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்” (யோவான் 15:16) என்று இறைமகன் தாமே கூறி யிருக்கிறார். ஆகையால்தான் இறை மகன் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் அழைத்துக்கொண்டார் என்று நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த அழைப்புகள் பல சமயங்களில் நாம் சிறிதும் எதிர்பாராதவர்களுக்கும் விடுக்கப்படுகிறது.  பாவியான மரிய மதலேனாள் இறைமகனின் சீடத்தியாகவும், அதிக வரிதண்டி தீர்வையைச் சம்பாதித்த மத்தேயு நற்செய்தியின் தூதுவராகவும், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய சவுல் புற இனத்தாரின் திருத்தூதராகவும் அருள்பொழிவு செய்யப் பட்டனர். தூய தாமஸ் அக்குவினாசு கூறுவதுபோல் முந்தைய பாவ வாழ்வு இறைமகனின் அழைத்தலுக்கு ஒரு போதும் இடையூறாக இருப்பது இல்லை.

இறையழைத்தலில் இறைவேண்டல்
இறையழைத்தலை ஊக்குவிக்க பள்ளிகள், கல்லூரிகள், பங்குகள் மற்றும் இளைஞர் சார் பணிகளுடைய மனிதரைச் சந்திக்கும்போது என் மனத்தில் ஒருவித தேக்கநிலை நிலவுகிறது. ஏறக்குறைய 2000 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் கூட, “... உமக்கு இன்னமும் ஒன்று குறைவாய் இருக்கிற . . . என்னைப் பின்செல்” என்ற அதே மெல்லிய அழைப்புக் குரல் இன்றும் இளைஞர் பலரின் காதுகளில் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருந்தாலும், சிலர் அந்த சப்தத்தைக் கேட்டு மகிழ்வோடும் உளப் பூரிப்போடும் ஆண்டவரின் அழைப்புக்குப் பதில் தருகின்றனர். மற்றவர்கள் அந்த அழைப்பிற்குச் செவிகொடுக்க மறுத்து அச்சத்தால் வேறுபுறம் திரும்பிக்கொள்கின்றனர். இன்னும் பலரோ அழைப்பைக் கேட்டு நிற்கிறார்கள், கவனிக்கிறார்கள், அதன் பொருள் என்னவென்று அறிய ஆசிக்கின்றனர். அத்தகைய ஒரு அழைப்பு தங்களுக்குத்தானா? என்று, அழைப்பு விடுத்த இறைமகன் அவர்களைக் கடந்து சென்று, மிகத் தொலைவு தூரம் சென்றுவிடும் வரையிலும், தங்களையே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

ஒருசில பங்குத் தளங்களில் பங்குப் பணியாளர்களைச் சந்திக்கும் போது, அவர்கள் தம் பணி வாழ்வினில் சந்தித்த ஏமாற்றங்கள், உளைச்சல்கள்,  ஆதரவற்ற நிலை போன்ற எதார்த்தங்களை இறையழைத்தல் ஊக்குநராகிய என்னிடம் பகிரும்போது அவை என்னை இன்னும் ஆழமாகக் கலவரப்படுத்துகின்றன. ஒருசில தலைமையாசிரியர்கள் (அருள்பணி யாளர்கள்) என்னிடம் “அட! என்ன சாமி, இந்தக் காலத்துல யார் சாமியாரா போக ஆசைப்படுறா? நீங்க இங்க வருவதே வேஸ்ட். அவனவன் ஒரு பிள்ளையையும் இரண்டு பிள்ளை யையும் பெத்து வெச்சிருக்கான்” எனக் கூறும்போது, இந்த இறையழைத்தல் பணி நமக்குத் தேவைதானா? அதற்கு நான் இசைந்தவனா? எனும் கேள்விகளும் என்னை ஆழம் பார்க்கின்றன. இந்தத் தோல்விகள், விரக்திகள், இயலாமைகள் போன்றவற்றைத் தனிமையான இறை உறவு நேரங்களில் ஆண்டவரிடம் கொண்டு வரும்போது, மனமானது இலேசாகிறது. “அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, ‘அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்’ என்றார்” (மத் 9:37-38) போன்ற இறைவார்த்தைகள் சோர்வைப் போக்கி, இறைபணிக்கு ஆள்களைத் தருவது இறைமகனின் வேலை, நான் அதீத நம்பிக்கை கொண்டு அவரிடம் இறைஞ்சவே வேண்டும் என்ற நம்பிக்கை என்னை உந்தித் தள்ளுகிறது. 

லூ கிராமத்தினர் ஒருமனப்பட்டு இறை இரக்கத்தில் நம்பிக்கை வைத்து வேண்டியபோது, எண்ணற்ற மக்களை இறைவன் தன் குருத்துவ மற்றும் துறவற பணிக்காகத் தேர்ந்துகொண்டது நம்மை நிச்சயமாக நம்பிக்கையில் பயணிக்க வைக்கும்.

நாம் இறை பராமரிப்பை, இரக்கத்தை முன்னிட்டே நமது பணியை முனைந்து தொடர முயற்சிக்கும்போது, இறைவன் தாமே நம் சார்பில் செயலாற்றுவதை நாம் காண முடியும். “ஆண்டவரிலேயே மகிழ்ச்சிகொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்து விடு. அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்” (திபா 37:4-5).

ஆழமாய் இறைவேண்டல் செய்வோம்!
இறையழைத்தல் பெருகுவதைக் காண்போம்!!
இறையரசு முழுமையாய் மலர்வதில் மகிழ்வோம்!!!

அருட்திரு. ஜெயபாலன் C.M.F.
கும்பகோணம்

0 comments:

Post a Comment