இது பூக்களின் காலம் . . .


பொங்கலுக்காவது
வருவீயாப்பா?
கொண்டாடுவதற்கென்று
தோற்றுவித்த பண்டிகைகள்
சந்திப்பதற்கென்றாகிப் போனது
ஊரில் வாழும் அம்மாக்களுக்கு
           - யுகபாரதி
வானில் அணுக்கரு தோன்றியது
அது வளர்ந்து நெருப்புக் கோளமானது
பின் காற்று, நீர், நிலம் தோன்றின
இதுவே உலக தோற்றமென்று
அன்றே சொன்ன இனம்
கேழ்வரகு, தினை உண்டு
செழுமையாய் இருந்த இனம்
கல்லிலே கலை செய்த இனம்
வெள்ளத்தைத் தடுத்து
பாசனம் செய்யும் நுட்பத்தைச்
சிந்து வெளியில் கண்ட இனம்
கல்லணை கட்டி ஆண்ட இனம்
ஆயிரத்தி இருநூறுக்கும் மேல்
நெல் வகைகளை வைத்திருந்த இனம்
பசுமைப் புரட்சியால்
பாழாய்ப் போன இனம்
தேத்தாங்காய் கொட்டை போட்டு
நீர் பருகிய இனம்
இப்படி வரலாறு கொண்ட இனம்
கூட்டுக் குடிநீருக்கும்
சுத்திகரிப்பு நிலையத்திலும்
இன்று
வரிசையில் நிற்கும் இனம்.    
பண்பாடுகள் அத்தனையும்
கடமைக்குரியது
பின் சடங்காகிப்போனது
மஞ்சத் தண்ணிக் கண்டா
பெருசுகளெல்லாம்
இளசுகளாகும்
சீர்வரிசையில்
வாழை, கரும்போடு
பசுக்கன்றும் சேரும்
மனு­ மக்களோடு
ஆடு மாடும்
எண்ண தேச்சி
தலைகுளிக்கும்
தை வந்தா
எறும்புகூட
கரும்பு தின்னும்
கழனியயல்லாம்
கருது சுமக்கும்
வாழைகூட
வாயும் வயிறுமா இருக்கும்
மண்பானையோடு
மஞ்சளும் சேர்ந்திருக்கும்
இப்படித்தான்
முன்பு பொங்கல் இருக்கும்
இப்ப பொங்கலெல்லாம்
அம்மாக்களின் கவலையோடும்
குக்கர் விடும் மூனு சத்தத்தோடும்
மூச்சிரைக்கும்.


ஜே. தமிழ்ச்செல்வன்

0 comments:

Post a Comment