இறையழைத்தல்

அறுவடையோ மிகுதி. வேலையாட்களோ குறைவு (மத் 9:37).
இவ்வுலகில் பல விதங்களில் அழைப்பு வருகின்றது. தொலைபேசியில் அழைப்பு, புதுமனை புகுவிழா அழைப்பு, திருமண விழா அழைப்பு, இறையழைத்தல் (குருக்களாக, துறவியர்களாக) போன்றவை ஆகும். இதில் முதல் அழைப்பு சில மணித்துளிகள் வரைதான் நீடிக்கும். அடுத்த இரண்டு அழைப்புகள் ஒன்று அல்லது இரண்டு நாட்கள்தான். ஆனால் இறை அழைத்தலோ வாழ்விற்கான அழைப்பாக, வாழ்க்கை முழுவதற்கான அழைப்பாக உள்ளது. இது கடவுளின் மாபெரும் கொடையாகும்.
திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்தவளும், கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும், மறு கிறிஸ்துவாக வாழ அழைக்கப்பட்டவர்கள்தான். பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம், மோசே, ஆரோன் போன்றவர்களை இறைப் பணிக்காகக் கடவுள் அழைத்தார். ஆரோன்தான் முதல் குருவாக அழைக்கப் பட்டார். அவரது புதல்வர்களும், அவரது வழிவந்தவர் களும் திருநிலைப்படுத்தப்பட்டனர்.
புதிய ஏற்பாட்டில் இயேசுவே முதன்மையான குருவாக இருந்தார். அன்னை மரியாளுக்குப் பிறப்பு அறிவிப்புச் செய்தியில் இயேசுவின் பிறப்பு, பணி வாழ்வு அனைத்தும் வானதூதரால் தெளிவாகக் கூறப்பட்டது. இதையறிந்த மரியாள், “நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே ஆகட்டும்” என்றார். எனவே மரியாள் கடவுளிடமே முழுமையாக சரண் அடைந்து, தன் வாழ்வைக் கடவுளுக்கு அர்ப்பணித்து வாழ்ந்து வந்தார்.
எனவே இயேசுவையும், அன்னை மரியாளையும் பின்பற்றி ஆண்களும் பெண்களும், தங்கள் வாழ்வை இறைவனுக்கும் மக்களுக்கும் அர்ப்பணம் செய்து வாழ்ந்தனர். பல பள்ளத்தாக்குகள் சரிசெய்ய, சில மலைகளைத் தகர்ப்பது சரியானதே. எனவே துன்பம் கண்டு துவளாமல், கவலை கண்டு கண்ணீர் வடிக்காமல், இயேசுவை இறுகப் பற்றிக்கொள்வதே துறவறமாகும். இன்று துறவறத்தை மேற்கொண்டு வாழும் அநேக துறவற சபைகள் உண்டு. சில பெண் துறவற சபைகள் திருத்தந்தையர்களாலும், சில மறைமாவட்ட ஆயர்களாலும் நிறுவப்பட்டவை.
ஆண்டவரின் ஆவி என் மேல் உள்ளது. ஏனெனில் அவர் எனக்கு  அருள் பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்; பார்வை இழந்தோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கபட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் அவர் என்னை அனுப்பியுள்ளார் (லூக் 4:16 முதல்)
ஆகவே தெளிந்த மன நிறைவு பெற்றவர்களாகவும், பரந்த சிந்தனை உடையவர் களாகவும், பல நன்மைத் தனம் உள்ளவர்களாகவும், சினம் கொள்ளத் தாமதிப்பவர்களாகவும், சிறந்த இரக்க குணம் உடையவர்களாகவும், நீதிக்கும் நேர்மைக்கும் சான்று பகரக் கூடியவர்களாகவும், நீரற்ற ஓடைகளில் அருவி ஓடச் செய்பவர்களாகவும், தன்னை இழக்கவும் கொடுக்கவும் அர்ப்பணித்துக்கொள்வதுதான் துறவறத்தின் முக்கிய நோக்கமாகும். இயேசுவின் இதயத்தில் நிரந்தரமாக இடம் பிடித்த இறைப்பணியாளர் துன்ப துயரங்களையும், சோதனை வேதனை களையும், சுமைகளையும் சோகங் களையும் எளிதில் வெல்பவர். மேலும் வாழ்வின் தடைக்கற்களையயல்லாம் படிக்கற்களாக மாற்றி வளர்ச்சியின் எழுச்சிக்கு மக்களை அழைத்துச் செல்வர்.
பண்பாடு, சமூக அமைப்பு போன்ற பலவித மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, இன்றைய நவீன உலகில் இறைப்பணி செய்து இயேசுவின் மதிப்பீடுகளின்படி வாழ முன்னுரிமை கொடுத்து வாழுவதே சிறப்பாகும். ஒரே ஆயனாகிய இயேசுவின் குரலைக் கேட்டு ஒரே பணியாகிய இயேசுவின் பணியைச் செய்ய அநேக இளம் உள்ளங்கள் முன்வர முயற்சிகள் எடுப்போம். மேலும் இறைப்பணிக்கு இளம் உள்ளங்கள் இதயத்தையும் விலையாகக் கொடுக்கவும், மனித நேயத்திற்கு அனைத்தையுமே இழக்கவும் முன்வருபவர்களை ஊக்குவிப்போம்.
இறை அழைத்தலை ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், நமது சொல், செயல், எண்ணம் முதலிய வற்றில் அவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து, இளம் உள்ளங்கள் இறை அழைத்தலில் ஆர்வம் கொள்ள நாம் வாழ்ந்து காட்டுவோம். பலர் இறையழைத்தலை ஏற்க நம் செபங்களை இயேசுவிடம் ஏறெடுப்போம்.

Sr. Theresita FSM

0 comments:

Post a Comment