புனித வனத்து அந்தோணியார் மடாதிபர் (கி.பி. 251 - 356)


எகிப்து நாட்டைச் சார்ந்த தவ முனிவர், கிறிஸ்தவத் துறவு வாழ்வுக்கு வித்திட்டவர். பெற்றோரை இழந்த நிலையில், 18 வயதில் தேவ அழைத்தலை உணர்ந்தார். இவருக்கு உரிமைச் சொத்தாக இருந்த ஒரு தோட்டத்தைத் துறந்துவிட்டு இயேசுவைப் பின்செல்ல உதவியாக இருந்தவை, இயேசுவின் அப்போஸ்தலர்கள் அனைத்தையும் துறந்தபின், அவரைப் பின்சென்றார்கள் என்ற வார்த்தைகள் (மத் 19:21). தன் சகோதரிக்கு மட்டும் ஒரு சிறு தொகையைக் கொடுத்துவிட்டு மீதியைத் தானம் பண்ணியபின் துறவற வாழ்வை மேற்கொண்டார். தனது ஊருக்கு அருகிலேயே கடின உழைப்பு, வேதாகம நூலை வாசித்தல், ஜெபம் இவற்றில் நாள்தோறும் நேரத்தைச் செலவிட்டார்.

நாளடைவில் ஊரை விட்டு வெகுதொலைவில் உள்ள இடத்தைச் தேடிச் சென்றார். அங்கு புனித அத்தனாசியாருக்கு இவரது தோழமை கிடைத்தது. நாளடைவில் பலரும் இவரை அணுகவே, ஆங்காங்கே குழுக்களாக துறவு வாழ்வு மேற்கொண்டார். புனித அத்தனாசியார் இவரது துறவு வாழ்வு பற்றி விரிவாக எழுதியுள்ளார். இந்தக் குறிப்புகளின் பலனாக பலரும் பாலை நிலத்திற்கும் காடுகளுக்கும் சென்று வாழ்நாளெல்லாம் தவ, ஜெபவாழ்வு வாழ்ந்து இறைவன் பதம் சென்றனர்.“இவ்வுலக வாழ்வு எத்துணை மின்னல் வேகத்தில் தோன்றி மறைகிறது; ஆனால் நித்தியம், நித்திய பேரின்பம் என்பது எத்துணை மேலானது” என்று தியானிப்பது எவ்வளவு பலன் தருகிறது என்று இவர் கொடுத்து வந்த மறையுரை புனித அகுஸ்தினாரை மிகவும் கவர்ந்திழுத்தது. இவர் தனது 105-ஆவது வயதில் செங்கடலுக்கருகில் 356-ஆம் ஆண்டு கோல்சீம் குன்றில் இறைவனடி சேர்ந்தார்.

சிந்தனைக்கு : “இவரது புண்ணிய மாதிரிகையாலும், மன்றாட்டினாலும் நாங்கள் எங்களையே ஒறுத்து, எல்லாவற்றிற்கும் மேலாக உம்மையே நேசிக்க வரமருளும்.”

எட்வர்டு

0 comments:

Post a Comment