கொஞ்சும் சப்தம் கேட்டு கண் விழித்த மலைமங்கை
பச்சைத் தாவணியைப் பக்குவமாய் உடுத்தி - காலைச்
சூரியக் காதலன் கரம் பற்ற அங்கே காத்திருந்தாள்
அவளருகே
கொள்ளை கொள்ளும் அழகு குளிரோடை - குளிர்
தென்றல் வீசும் நீரோடை காதல் களிப்பால்
கைகோத்து நீந்தித் திரியும் மீன் ஓடை
செங்கமல தாமரைகள் துயில் கொள்ளும் நீரோடை
அப்போது
காலை வந்த சூரியக் காதலனின் சூடு தணிக்க
மாலையிலே மலைமங்கை வான்மேக ஆடை பூண்டு
குளிர் பால்நிலவில் குளித்தெழுந்து குளிரருவி கொலுசிட்டு
நட்சத்திர விண்மீன்களைக் கொண்டையில் சூடிக்கொண்டாள்
அவள் மீது
கோபத்தில் வெடித்திட்ட மின்னல்களை - கொவ்வை
இதழால் குளிரூட்ட கார் குழலில் ஒத்தடமிட்டாள்
ஒத்தடத்தால் சொக்கிப் போன வான மங்கை
ஒய்யாரமாய்ச் சிரித்திட்டாள் சிந்தியது மழைத்துளிகளே!
சிந்திய மழைத்துளிகளைச் சிதறாது தாங்கிக்கொள்ள
சின்னாளம் பட்டுச் சேலையாக வானவில்லை வீசிட்டாள்
வண்ணக் கதிரோனின் வனப்பான அழகில் சொக்கிப்போன
வானமங்கை களுக்கெனச் சிரித்திட்டாள் வந்தது இடிதானே!
மானிடரே
இயற்கையின் அழகில் ஒன்றுபடுவோம் - அதன்
இனிமையைச் சுவைத்தே ஆராதிப்போம் - நம்
சுயநலத்திற்காய் இயற்கையைச் சுருக்கிடாமல்
சுதந்திரமாய்க் காடுகளை வளர்த்திடுவோம் மனிதம் காப்போம்!
தங்க. ஆரோக்கியதாசன், ஆவடி
0 comments:
Post a Comment