போராட்டத்தில் முளைத்த பூக்கள் - புனிதர்களான இளைஞர்கள்

ஆக்னஸ் போஜாக்யு அன்னை தெரேசா ஆனதெப்படி?
கரோல் ஒய்ட்டியோலா திருத்தந்தை ஜான்பால் ஆனதெப்படி?
கோடிக்கணக்கான இளைய இதயங்களில் பாதிப்பை ஏற்படுத்தி நம்பிக்கை விதைகளை விதைத்துச்சென்ற அண்மைக்கால மாமனிதர்கள் அன்னை தெரேசா மற்றும் போப் ஜான்பால் என்றால் மிகையாகாது. நாமெல்லாம் அவர்களின் வயதான முகங்களைப் பார்த்துப் பார்த்து மனதில் பதிவுசெய்து வைத்திருக்கிறோம். புன்னகையும் நம்பிக்கையும் தெய்வீகமும் தவழும் அவர்களின் இளம்வயது புகைப்படங்களை பார்த்ததுண்டா? நம் இளைஞர்களைப் பார்த்து அந்த மலர்ந்த முகங்கள்,“பாருங்கள், நாங்களும் ஒருகாலத்தில் உங்களைப்போல் இளைமையாய் இருந்தோம். உங்களைப்போல் நல்லது செய்யவும், சாதிக்கவும் துடித்தோம். கடவுள் எங்கட்கு வழிகாட்டினார்” என்று கூறும் முகங்கள் அவை.
18வயதில் 1928ல் மேல்நிலைப் பள்ளி முடித்ததும் ஆக்னஸ் எடுத்துக்கொண்ட  புகைப்படத்தையும், 1940ல் தன் 19வது வயதில் கல்லூரி முதல் ஆண்டில் கரோல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும்தான் இங்கே நாம் பார்க்கிறோம்.
தங்கள் வாழ்வில் மிக முக்கியமான தைரியமான முடிவுகளை அவர்கள் எடுத்த நேரத்தின் புகைப்படங்கள் இவை. ஆக்னஸ் பள்ளிபடிப்பை முடித்து துறவறத்தை ஏற்க ஆசைப்பட்ட காலம் அது. இந்த புகைப்படம் எடுத்த சில நாட்களில் அவள் கன்னியர் மடம் கால் வைத்தாள். கரோல் இந்தப்படத்தை ஒரு நாடக குழுவின் விளம்பர சுவரொட்டிக்காக ஒரு புகழ்வாய்ந்த நடிகராக வேண்டும் என்ற ஆர்வத்தில் எடுத்துக் கொடுத்தார்.
இந்தப் படங்களில் சாந்தமாக தீர்க்கமாக தங்கள் எதிர்காலத்தை நோக்கி பார்க்கும் இந்த இளைய முகங்கள் பிற்காலத்தில் ‘அன்னை’ ‘திருத்தந்தை’ என்று உலகமே அன்பாய் அழைக்கும் பேறுபெறப்போகிறார்கள் என அப்போதிருந்தவர்கள் நினைத்துப்பார்த்திருப்பார்களா? “உங்களுக்குள்ளும் இளைஞர்களே ஒளிமயமான எதிர்காலம் ஒட்டிக்கொண்டிருப்பதை என்றும் மறவாதீர்கள்” என சொல்வதாய் படுகிறது. நம் மனதில் அவர்களை வழிநடத்திய இதயத்தின் இரகசியங்கள் எவை என்ற தேடல் தொடர்கிறது.
உடன் பயணித்த கடவுளின் குரல்கள்
வாழக்கைப் பயணத்தை கூர்ந்து கவனிக்கிற எவரும் கடவுளின் கரமும் குரலும் கூடவே பயணிக்கிறதை கண்டுகொள்வார்கள். கடவுள் நம்மை வாழவைக்க வழிநடக்கிற தெய்வம். அதை பெரியவர்கள் நமக்கு கற்றுத்தருகிறார்கள். ஆக்னஸ் கரோல் இருவருமே பக்தியான கத்தோலிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஒருவர் அல்பேனியா நாட்டிலும் மற்றவர் தெற்கு போலந்து நாட்டிலும் பிறந்து அப்போதிருந்த தேசத்தின் சுதந்திர காற்றை சுவாசித்தார்கள். அந்தோ! சிலகாலமே. இருவருமே இளவயதில் பாசத்திற்குறிய பெற்றோர்களில் ஒருவரை இழக்க வேண்டிய கையறுநிலைக்கு ஆளாகினர். ஆக்னசின் தந்தை அவரின் 9ம் வயதிலும் கரோலின் தாய் அவரின் 7ம் வயதிலும் இறைவனடி சேர்ந்தனர்.
கரோல் தன் பாசமான தந்தையோடு சேர்ந்து சாப்பிட்டான், செபித்தான் நீண்டதூரம் காலார நடந்தான். ஆக்னஸின் தாய் கரிசனையோடு விட்டருகில் வாழ்ந்த நோயாளிகளுக்கு உணவெடுத்துச் செல்ல கூடவே சிறுகை பிடித்து நடப்பாள் ஆக்னஸ். பிற்காலத்தில் தன் தாய் பற்றி நினைவு கூறும்போது அன்னை சொன்னார்கள், “ நன்மைகள் செய்யும் போது சலனமில்லாமல் கடலுக்குள் கல்லை போடுவது போல செய்ய வேண்டும் என என் அம்மா சொல்வதுண்டு” என்றார்கள்.
இந்த எதிர்கால உலகமகா தலைவர்களை தங்கள் வெற்றியை நோக்கி சில அன்பான இதயங்கள் வழிநடத்தின. ஆகனஸ் தன் பள்ளியில் தந்தை ஜாம்பரே எனும் ஏசு சபை குரு நடத்திய இளைஞர் குழுவில் உறுப்பினராயிருந்தார். இந்தியாவிலிருந்து மறைபோதக ஏசுசபை குருக்கள் எழுதும் கடிதங்களை அவர் தன்னுடைய இளைஞர்களுக்கு படித்துக் காட்டுவது வழக்கம். இப்படி ஏழ்மையிலும் அறியாமையிலும் வாடும் இந்தியர்களுக்கு பணிசெய்யும் ஆர்வம் ஆக்னஸ் இதயத்தில் பற்றிக்கொண்டது.
கரோல் சற்று வித்தியாசமாக கிரக்கோ நகரில் சமூக அக்கறையோடு கலையில் ஈடுபட்டிருக்கும் நாடக இளைஞர்கள் குழுவில் சுறுசுறுப்பான உறுப்பினராயிருந்தார். அந்நேரம் 1939ம் ஆண்டு ஜெர்மனியின் படைகள் போலந்தை அநியாயமாய் கைப்பற்றி பல்லாயிரக்கணக்கானவர்களை இரக்கமில்லாமல் கொன்றும் சிறையிலடைத்தும் சித்திரவதை செய்த காலம். அப்போழுது டைரனாஸ்கி எனும் டைலர் ஒருவர் கொண்டிருந்த பக்தியும் இளைஞர்களை ஒன்று சேர்த்து செய்த நற்பணிகளும் கரோலைக் கவர்ந்தது. பிற்காலத்தில் இதைப்பற்றி இவ்வாறு ஜான்பால் எழுதினார், “துன்ப நேரத்தில் கடவுளை தூற்றாமல் ஒருவர் மிகவும் கடவுளுக்கு நெருக்கமாகவும்கூட வாழ முடியும் என நிரூபித்தார். அவரிடமிருந்து உண்மைகளை கற்கத்தொடங்கினேன்”.
இந்த கடினமான வருடங்கள் பல இழப்புகளை கொண்டுவந்தன. ஜெர்மானியர் கல்லூரிகள் கல்வி நிலையங்களை மூட படிக்கும் வாய்ப்பை இழந்தார். ஒவ்வொரு நாளும் பசிக்கு உணவை பெறவே போராடிய துக்க நேரத்தில் தன் ஒரே சொத்தான தந்தையையும் இழந்த நாளில் முழுவதும் இடிந்தே போனார் கரோல். பின்னாளில் “ அன்றுபோல் என்றும் வெறுமையை உணர்ந்ததில்லை” என நினைவுகூர்ந்தார்.
போராட்டத்தில் முளைத்த பூக்கள்
இருளும் இழப்பும் சூழ்ந்த நிலையில் வானிலிருந்து ஒளியும் நம்பிக்கையும் பெற்ற நினைவுகளை அவர்கள் என்றும் மறந்ததில்லை. “என் 12ம் வயதில் முதலில் நான் துறவியாய் வாழ்ந்திட ஆசைப்பட்டு என் தோழியிடம் விளையாட்டாய் தெரிவித்தேன். ஆதைப்பற்றி தெளிவோ, தீர்க்கமோ என்னிடம் இல்லை. அது விவரிக்க முடியாத ஆழ்ந்த அனுபவமாய் இருந்தது” என்று பின்னாளில் சொன்னார். பின் வந்த சில காலங்கள் தன் அழைப்பின் அர்த்தம் புரியாமல் தவிப்பில் காலம் கடத்தினாள்.  ஒருநாள் தந்தை ஜாம்பரேவிடம் சென்று, “தந்தையே ஒருவரை கடவுள் அழைக்கிறார் என்பதை அவர் எப்படி உணர்ந்துகொள்ள முடியும்?” என்று கேட்டார். அதற்கு பக்திமிகுந்த ஜாம்பரே “ அதைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் மனதில் இனம்புரியாத சந்தோம் வளரும். அதுவே சிறந்த அடையாளம்” என்றார். இருந்தும் இந்த இன்பத்தை அவள் உடனே அடைந்திடவில்லை.
குடும்ப வாழ்விலிருந்து பிரிந்து போவது அவளைப்பொறுத்த வரையில் முடியாததாக தோன்றியதும் உண்டு. கனவன் பிள்ளைகள் என்ற குடும்ப வாழ்வும் அவள் போற்றியதாகவே இருந்தது. பிற்காலத்தில் ஒரு பத்திரிக்கையாளர் “நீங்கள் எத்தனையோ தாய்மார்களின் குழந்தைகளை பராமரிக்கின்றீர்கள். ஒருநாளாவது நானும் இப்படி குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லையா? என்று கேட்டதற்கு அன்னை “உண்மை, உண்மை  உண்மையாகவே நாங்கள் கடவுளுக்காக செய்யும் மாபெறும் தியாகமே இதுதான். இதுதான் கடவுளுக்கு நாங்கள் கொடுக்கும் விலைமதிக்கமுடியாத பரிசு” என்றார்.
கரோலைப் பொறுத்த மட்டில் மேல்நிலைப்பள்ளி வரை ஒருநாளும் தவறியும் ஒரு குருவாகிட அவன் நினைத்ததில்லை. எப்போதும் நாடகம் கலையரங்கம் என ஆர்வமாய் அலைந்தான். ஜெர்மானியர்களுக்கெதிராக கருத்துக்கள், நாட்டுப்பற்று, விடுதலை உணர்வுகள் கொண்ட போலந்து நாடகங்களை மறைமுகமாக தயாரித்து நடிக்கும் குழுவில் துடிப்புமிக்க உறுப்பினராய் இருந்தான். மிகவும் ஆபத்தான இந்த பிழைப்பு கண்டுபிடிக்கப்பட்டால் கொலைகளம்தான். அப்படி கொல்லப்படும் பலரைக் கண்டும் தைரியமாய் தொடர்ந்தான் கரோல்.
கடவுளின் திட்டங்கள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டதல்லவா! ஒருபோதும் நினைத்துப் பாராத கரோல் மனதில் மிக அடர்த்தியாய் குருவாகிட அழைக்கும் குரல் வலுத்தது. ஏனெனில் கண்ணீரிலும் குழப்பத்திலும் போரிலும் செத்துமடியும் தன் தேசபிள்ளைகளை மீட்டெடுக்க சிறந்த வழி இதுவே என கடவுள் காட்டுவதாய் உணர்ந்தார். பின்னாளில் கூறினார் “ போர்களின் கொடூர முகங்களில் குருத்துவத்தின் அர்த்தமும் அதனால் வரப்போகும் நல்விளைவும் எனக்குத் தெள்ளத்தெளிவானது.” இந்த முடிவு அவ்வளவு எளிதல்ல ஏனெனில் தன் உயிருக்கும் மேலாய் காதலித்த நாடக சாலையை அது தந்த நன்பர்களை துறப்பது இறப்பதற்கு சமமாய் இருந்தது. அது உண்மையிலேயே ஒரு புதிய வாழ்விற்குள் புக அவர்கொண்ட மரணமே.
எனக்கெல்லாம் ஏசுவே
மாபெறும் முடிவுகளை யாரும் சுலபமாய் புன்னகையோடு எடுப்பதில்லை. எத்தனையோ போராட்டத்துக்கு பின்தான் இன்னொருவர் திட்டத்தில் அர்த்தம் பிறக்கிறது. இந்த இருவருக்குள்ளும் நடந்த போராட்டமென்ன? யார் அமைதியை கொணர்ந்தது? என நாம் யோசிப்பது சரியே.
ஒருநபரை நேருக்கு நேராய் சந்திக்க வேண்டிய கட்டாயம் வேறு வழியே இல்லாமல் வந்து சேர்ந்தது. உணர்வுகளைக் கொட்டவும், கேள்விகளைக் கேட்கவும் முகமுகமாய் வெளிப்படுத்தவும் வேண்டிய சூழ்நிலை. இருவர் மட்டுமே தனியாய் இயேசுவும் ஆக்னசும் இயேசுவும் கரோலும் என்ற சந்திப்பு உறையாடல் மாற்றங்களை ஏற்படுத்தியது.
உள்ளுக்குள் வெளிச்சம்
நெருக்கமானவர்களுக்கு கூட அவர்களிடம் தோன்றும் வித்தியாசங்களின் வேர்புரியவில்லை. ஒருநாள் அவர்கள் வெளிப்படையாய் திட்டத்தை சொல்கையில் சிலருக்கு வியப்பாகவும் கசப்பாகவும் இருந்தது. கரோலின் நன்பர்கள் எப்படியாவது அவரைத் தடுத்திட முயற்சித்தனர். 20ம் நூற்றாண்டின் இதயங்களை திரும்பிபார்க்க வைத்த தலைவர்களின் இதயங்கள் உள்ளுக்குள் வெளிச்சமடைந்தது யாருமற்ற பாலைவன அமைதியில் அவர்கள் சந்தித்த கடவுடளிமிருந்ததுதான். பின் கரோல் எழுதினார் “ ஒருநாளும் இல்லாத ஒளியை என் உள்ளத்தில் கண்டேன். கடவுளின் அழைப்பையும் அது கொடுக்கும் பேரமைதியையும் உணர்ந்தேன்”. அன்னை தெரசா கூறினார் “ என் 18ம் வயதில் நான் முழுவதும் கடவுளுக்கே சொந்தமானவள் என அறிந்தேன். கடவுளே இதை நான் உணர்ந்திடச்செய்தார். அதன்பின் ஒருபோதும் என் முடிவில் நான் சந்தேகம் கொண்டதில்லை”.
இயேசு அழைக்கிறார்
ஆக்னஸ் மற்றும் கரோல் இருவரும் கடவுளோடு பயணித்த வாழ்வு நமக்கு இன்று விட்டுச்செல்லும் பாடங்கள் சில உறுதியானவை. நமக்குள் நடக்கும் சில விவரிக்க முடியாத நாடகங்களுக்கு இறைவனை நாடுதலும் உறையாடுதலும் பதிலாகலாம். பிறர் வாழ்வு நமக்கு பாடமாகும் வேளையில் நம் ஒவ்வொருவரின் வாழ்வுமே மற்றவர்க்கு பாடமாகிட விரும்பும் கடவுளை நீ அறிவாயோ மனமே? உன் குழப்பத்தில் தனிமையில் நீ கடவுளை நாடுகிறாயா?  கடவுளைத் தேடுவது ஏதோ சிறுவர்கள் படிக்காதவர்களின் அறியாமை, பழக்கம் என நினைக்கிறாயா? தவறு, உலகமே போற்றுவோர் சென்ற வழி அதுதான் என நீ அறிந்திடவேண்டும். உன் வாழ்வில் இருளையும் வெறுமையும் கண்டு பயப்படுகிறாயா? இயேசுவை சந்திப்பதால் அனுபவிப்பதால் வரும் முகத்தின் சாந்தத்தை இந்த இருவரின் முகங்களில் கண்டுகொள்ள. உன்னைத் தேடும் இறைவனை நீ தேட ஆரம்பித்தால் வாழ்வின் நிறைவடைவாய் இளைஞனே, இளம்பெண்ணே!

Fr. Adaikalam, SdC.
Chennai

0 comments:

Post a Comment