பாலன் பிறந்தார் - புத்தாண்டு பிறந்தது

கள்ளமில்லா வெள்ளை நிலவாய், இம்மண்ணில் உதித்த தெய்வமனிதன் இயேசுவின் தனிப்பெரும் பிறப்பைச் சீர்மிகு உளத்துடன் சிறப்பித்தோம். அதன் விளைவாய் மண்ணில் பிறந்த தேவனைக் கண்ணில் காணும் மனிதரில் கண்டு மகிழ்கிறோம். சமூகத் தாக்கத்திற்குள் சிக்குண்டு வறுமையை உண்டு வாழும் எளியர் நடுவில் ஆன்மீகத் தாகம் கொண்டு இறை வார்த்தையை உண்டு வாழ சீரிய சொற்களாலும், நேரிய வாழ்க்கை யாலும் வழியமைக்க இசைந்தோம்.
மேலும், தனது பிறப்பின் பரிசாய் இன்னொரு ஆண்டைப் பார்க்க நமக்கு மாபெரும் வாய்ப்பு வழங்கிய இறைவேந்தன் புவி மீது புலம்பி அழுவோரின் வாழ்வில் எதிர்ப்படும் பூகம்பங்களையயல்லாம் பூவின் மென்மையால் வருட வாய்ப்புகள் வழங்கியுள்ளார். கனிவோடும் கருணையோடும், உரிமையோடும் உறவோடும் நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டு வாழ புத்தாண்டில் நம்மைப் பக்குவப்படுத்துகிறார்.
எனவே, உலகியலைக் கடந்த இறையியல் வாழ்வுக்குத் தளங்கள் அமைத்து, அதற்கான தடங்கள் பதிக்க, இயேசு உன்னையும் என்னையும் உரிமையுடன் அழைக்கிறார். இயேசு பாலகனின் பிறப்பும், புதிய ஆண்டின் பிறப்பும் நம்முன் படம்பிடித்துக் காட்டப்பட்டிருப்பினும், இவை சொல்லும் பாடங்களை உணர்ந்து பார்க்கவும், உரசிப் பார்க்கவும் நாம் கடமைப் பட்டுள்ளோம். முடிவில் கண்ட விடிவாய் நாம் சுவைத்து அசைபோட வேண்டியவை ஐந்து கோணங்களில் நம்மை வந்தடை கின்றன. அவை,   

  • ஆறாத காயங்களில் மனித நேயங்கள்
  • உணரப்படாத இயேசுக்களின் உண்மை உருவங்கள்
  • இறைப்பணிக்கு அர்ப்பணிப்பதில் அதிர வைக்கும் ஏமாற்றங்கள்
  • வியப்புகளை வித்தியாசமாய் இனம் காணும் இதயங்கள்

இந்த ஒட்டுமொத்த சந்தர்ப்பங் களைச் சந்தித்துச் சாதனை புரிய நீயும் நானும் தயங்காமல் முன்வர வேண்டும் என்பதே இன்றைய இரகசியத் தேவையும், பகிரங்க அறைகூவலுமாக உள்ளது. எனவே, எதிர்கால இறையரசுக் கனவுகளை நிகழ்கால இவ்வுலகக் கவலைகள் கலைத்து விடாமல் இருக்க முயற்சிப்போம், முடிவெடுப்போம். நகர மறுக்கும் நம் நாடி நரம்புகளில் எல்லாம் இறைநாதம் இசைக்கச் செய்வோம். இறைப்பணி செய்ய ஒருவர் பிறருக்கு வழிகாட்டுவோம். நம் ஆன்மீகப் பணியால் ஏங்கி நிற்கும் மனிதத்தை ஏந்தி நிற்கத் துணிவு பெறுவோம். பிறரன்புப் பணி எனும் சங்கிலிச் செயல்பாட்டிற்குள் நம் பணி எனும் முத்திரை பதிக்க முன்வருவோம்.

சகோ. வே. அன்னத்தாய், 
இயேசுவின் திரு இருதய சபை, தூத்துக்குடி

0 comments:

Post a Comment