துறவறம் - நேற்று இன்று நாளை

உள்ளதைக் கொடுத்து மனிதனாக வாழும் சராசரி நிலை கடந்து, உள்ளத்தைக் கொடுத்து புனிதனாக வாழவும், உள்ளதையயல்லாம் கொடுத்து இறைவனாக மாறவும் படிப்படியாக வாழ விழைவதே துறவற அழைப்பாகும்.
இன்று துறவறத்தில் அனுபவ ரீதியாக பல சவால்களைச் சந்திக்க முறையீடின்றி முன்வரும் நாம் ஆன்மீக ரீதியான சவால்களைச் சில முறைகள் கூட சந்திக்க கட்டாயத்தினால் மட்டுமே சம்மதிக்கிறோம். கடந்த காலத்தில் “ஒருவன் உலகம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டாலும் ஆன்மாவை இழந்தால் பயன் எதுவும் இல்லை” என்ற உன்னத நிலையில் இருந்த துறவறம், இன்று “ஆன்மாவைச் சேகரித்துக் கொண்டாலும் ஒரு துறவி உலகம் முழுவதையும் தனதாக்கி வாழ்ந்தால் மட்டுமே பயன் பெற முடியும்” என்ற உறுதிநிலையை அடைந்துள்ளது. ஆனால் நாளை அதாவது எதிர்காலத்தில் உலகத்தை மட்டுமே தனதாக்கி வாழும் இறுதி நிலைக்குத் துறவறம் தன்னை மாற்றி வருகிறது.
இந்த அபாயகரமான ஆனால் உண்மையான சகாராச் சூழலில் பயணித்துக் கொண்டிருக்கும் நீங்களும் நானும் நமது இறை அழைப்பின் குரலுக்குப் பதிலாக எதை இழந்துள்ளோம்? எந்த அளவு இழந்துள்ளோம்? என்று சிந்தித்து நம்மைச் சீர்திருத்த வேண்டிய கட்டாய நிலையில் கால் பதித்துள்ளோம். இன்றைய அதிகபட்ச தேவை 
  • சின்னத்திரை சீரியல்களைப் பார்த்து வாழ்வைச் சீர்திருத்தத் துடிப்பது அல்ல!
  • விவேகம் மறந்த வேகத்திலும், சிந்தனை இழந்த முயற்சியிலும், சுயநலம் விரவிய செயல்களிலும் விழுந்து மடிவது அல்ல!
  • வீதியில் வாழும் ஏழைகளை விதி என்று உதறி விட்டு மனிதம் மறந்த மண்ணாங்கட்டிகளாய் மாடியில் வாழ விரும்புவது அல்ல! 
மாறாக,
  • மரணம் வருமுன்னே தினமும் இறந்து வாழும், கோழைகளாய் உருமாறி நிற்கும் ஏழை மனிதத்தைத் தேடிச் செல்ல நீயும் நானும் தயார் நிலையில் இருக்க வேண்டும்...
  • வீடுகளைச் சந்திக்கச் செல்லும் போது நிமிர்ந்து செல்லும் மாடி வீட்டிற்கு என்று மட்டும் செல்லாமல், குனிந்து மட்டுமே செல்ல முடிந்த குடிசை வீட்டிற்குள் செல்வதில் விருப்பம் கொள்ள வேண்டும்...
  • சிலுவை மரணம் மட்டும் கீழ்ப்படிந்து தன்னைத் தாழ்த்திய அன்பர் இயேசுவின் முழு அர்ப்பணிப்பு மனநிலை நம் சின்னஞ்சிறிய செயல்களில் வெளிப்பட வேண்டும்...
  • நேரம் காட்டும் கடிகாரம், தேதி காட்டும் நாட்காட்டி இவற்றிற் கிடையே உண்மை, நேர்மையையும்; அன்பு, அமைதியையும் பிரதிபலித்துக் காட்ட முயற்சிக்க வேண்டும்...
இவ்வாறான சிந்தனைகளை உருவாக்க நம் செயல்களை விவிலிய மொழிகளால் செதுக்கிட சம்மதம் சொல்வோம். அப்போதுதான்
  • எதிர்காலத்தில் மலிந்து கிடக்கும் போலிகளை இனம் கண்டு, மறைந்து கிடக்கும் நிஜங்களை நிமிர்த்திவிட முடியும்!
  • குழந்தைகள், இளைஞர்கள், பெரியோர், முதியோரைச் சந்திக்கும் வேளையில் அவர்களின் ஏக்கத் தாக்கங்களைத் தணித்திட முடியும்!
  • இறையழைத்தல் என்னும் தரமற்ற விதைக்கு வீரியம் மிக்க உரமிட்டு மீண்டும் வளர்த்திட முடியும்!
  • பொருளாதாரத்தில், உறவுகளில் தோற்றுப்போன நெஞ்சங்களை நம் திடம் மிக்க தோள்களில் தூக்கி நிறுத்த முடியும்!
இதற்காக சாரமும் சக்தியும் பெற வேதம் என்னும் ஒளிக்குள் நம் பாதம் பதியச் செய்வோம். ஆன்மீகப் பயணத்தில் ஆன்மாக்களைச் சேகரிக்கும் இலக்கினை எட்டிப் பிடிப்போம்.

சகோ. பாப்பா,
இயேசுவின் திரு இருதய சபை, தூத்துக்குடி

0 comments:

Post a Comment