குப்பை கொட்டுவது எப்படி?

இந்தப் பகிர்வு அரசாங்கத்தின் குப்பை மேலாண்மைக் கோட்பாட்டில் (அறிவிப்பில்) வரும் மக்கும் குப்பை, மக்கா குப்பையை எங்கு, எப்படி கொட்டுவது என்பது பற்றியது அல்ல.
ஓர் அனுபவமுள்ள இறைப்பணியாளரிடம் ஒரு குறிப்பிட்ட ஊரைப் பற்றிப் பேசும்போது அவர், “நானும் அங்கே ஐந்து ஆண்டுகள் குப்பை கொட்டியிருக்கிறேன்; அந்த ஊரைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும்” என்கிறார்.
குப்பை கொட்ட வந்த கோமகன்
அப்படியயன்றால், “ஆண்டவரின் ஆவி என் மேல் உளது; ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்...” என்ற எசாயாவின் இறைவாக்கைத் தன் விருதுவாக்காய் முழங்கி, முப்பத்து மூன்று ஆண்டுகள், அதில் மூன்று ஆண்டுகள் சுற்றும் சூரியனாய், வற்றாத நதியாய், பார்த்தோர் மீது பரிவு கொண்டு பணியாற்றினாரே, அவரென்ன குப்பை கொட்ட வந்த கோமகனா?
அழைக்கப் பெற்றோர் குப்பை கொட்ட வந்த குப்பைத் தொட்டிகளும் அல்ல; குப்பை எண்ணங்களை உள்வாங்கி துர்நாற்றம் வீசும் குப்பைத் தொட்டிகளும் அல்லர். (“தூயதோர் உள்ளத்தை இறைவா என்னகத்தே உருவாக்கும்”) பல்வகை குப்பைகளை அகற்றி, பரிசுத்தமாக்க வந்த குப்பைப் பொறுக்கிகள். 
கேட்ட கதை
குட்டித் தீவு ஒன்றில் பெரியவர் ஒருவர் தனியாளாய் நீண்ட நாட்களாக வாழ்ந்து வருகிறார். கடல்சார் விபத்துகள், ஆபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. மனித நேயத்தோடு மக்களைக் காப்பாற்றி கரைசேர்த்து வருகிறார். காலம் கடக்கிறது. அவரும் காலமாகிப் போகிறார். கப்பல் ஒன்று விபத்தில் சிக்குகிறது. ஆனால் காப்பாற்ற யாரும் வரவில்லை. தப்பிப் பிழைத்தோரில் சிலர் கரை சேர்ந்தனர். அம்மனிதரை நினைத்து அவர் பெயரால் தாங்களே அவர் பணியை ஆர்வத்தோடு தொடர்ந்தனர். இஃது ஓர் உயிர் காக்கும் பணியாக, பிணி போக்கும் பணியாக இருந்ததால் பலரும் சேர்ந்துகொள் கின்றனர். காலப்போக்கில் பணிச்சுமை இல்லாததால், பொழுதுபோக்கு அம்சங் களையும், வருவாய் வழிமுறைகளையும் தேடிக்கொள் கின்றனர். அதிக ஆட்களையும் அமர்த்திக் கொள்கிறார்கள். பிற்காலத்தில் பல குழுக்களாக இணைந்தும் பிரிந்தும் செயல்பட்டுத் தங்கள் சுயநல நோக்கத்தை நிறைவேற்ற ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கவும், தொல்லை கொடுக்கவும் தொடங்குகிறார்கள். ஆக மொத்தம் வந்த வேலையை விட்டு சொந்த வேலையைப் பார்க்கத் தொடங்குகிறார்கள்.
இந்தக் கதையின் நாயகன் ஒரு வயதான பெரியவர். இறையாட்சிப் பணியில் ஈடுபட அழைக்கப்பெற்றோர் என்று சொல்லிக்கொண்டு, கடவுள் பெயரால் காலத்தைக் கடத்தும் என் போன்றோரின் வாழ்க்கைக் கதையின் நாயகன், இயேசு என்னும் அந்த எரியும் நெருப்புப் பந்தம், தீமையயனும் குப்பைகளைப் பொசுக்கி, பாவ இருள் சூழ்ந்தோர் மனத்தில் ஒளிக்கீற்றாய் உதித்த உயிரோட்டமுள்ள இளைஞன்.
இந்தக் கதை யாருக்குப் புரிகிறதோ இல்லையோ, இறையழைத்தல் பெற்ற எல்லோருக்கும் புரியும் என நம்புகிறேன்.
அன்றும் இன்றும்
நான் பத்து ஆண்டுகளுக்கு முன் சொல்வேன், “உயிரைக் கொடுத்த என் இறைவனுக்கு என் உயிரைக் கொடுத்து ஊழியம் செய்வேன்” என்று. இன்று அந்தத் தாகமும் வேகமும் என்னிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
அன்று கடவுளே கதி என்று ஆழ்ந்த ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும், அதற்காக ஒறுத்தலும் தியாகமும் செய்ய வேண்டும் என்று எப்போதும் எண்ணியதுண்டு. இப்போது எப்போதாவது இவ்வெண்ணம் வந்துபோகிறது. ஒறுத்தல் முயற்சியும், உயிரோட்டமுள்ள விசுவாசமும் என் வாழ்வில் உணவு போல் இல்லாமல், ஊறுகாய் போல் உள்ளன.
அருட்பணிக்காக அயல்நாட்டில் படிக்கச் சென்ற ஒருவர், ஒரே ஆண்டில் நம் தாய்நாட்டில் வந்து படிக்கத் தொடங்கினார். பல காரணங்களில் ஒரு காரணம் : ஒட்டுத் துணிகூட இல்லாமல் வறுமையே உருவாக தொங்குகிறவரைப் பின்பற்ற செய்யப்படும் பகட்டு ஆர்ப்பாட்டங்கள் தன் அழைத்தல் வாழ்வுக்குப் பொருந்தாத அருவருப்பான காரியமாகக் கருதியதுதான்.
எளிமையும் இறையாட்சிப் பணியும் பிரிக்க முடியாக் கலவை என்பதை அறிந்து மட்டும் வைத்திருக் கிறேன் அழுத்தமாக பின்பற்றாமல்.
இறைவன் பெயரால் அழைக்கப் பட்டோர் அனைவருக்கும் மணியடித்தால் சாப்பாடு..., அவர்களில் யாரும் வயிறு வாடி செத்ததாக சரித்திரம் இல்லை என்பது நம்மைப் பற்றி அடிக்கடி பேசப்படுகிற ஒன்று. இருப்பினும் கூலிக்கு மாரடிப்போர் கூட்டம் போல்தான் ஊக்கமில்லாமல் உள்ளது என் பணி சில சமயங்களில்.
பயிற்சிக் காலம் முடிந்துவிட்டால் பணி நிறை வந்துவிட்டது போல் ஒரு மெதப்பு.   அழைக்கப்பெற்றோருக்கு இறுதி வரை பயிற்சிதான், வளர்ச்சி தான். என் பேராசிரியர் சொல்வார் : 
We are called to live with unfulfilled desires
-நாம் நிறைவேறாத ஆசைகளோடு வாழ்வதற்காக அழைக்கப் பெற்றிருக்கிறோம்.
நமது தலைவர் இயேசு சொல்வது போல்,  “உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராக / உங்கள் விண்ணகத் தந்தை தூயவராக இருப்பதைப் போல நீங்களும் நிறைவுள்ளவர்களாக, தூயவராக இருங்கள்.” அப்படியானால் நாம் முழுமையான நிறைவை நோக்கி, தூய்மையை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருக்கிறோம்.
இந்தப் பயிற்சியிலே, பயணத்திலே நாம் காட்டும் ஈடுபாடு பலரை இறைவன்பால் ஈர்க்கக்கூடியதாக அமைந்து, இறைவனைத் தேடும் நெஞ்சங்கள் அதிகரிக்கட்டும். 
நம் தலைவரைப் பின்பற்றிய பல புனிதர்களும், அழைத்தல் வாழ்வை முழுமையாய் வாழும் நல்மனிதர்களின் வாழ்வும் நம் வாழ்வுக்குத் துணை நிற்கட்டும்! இறைவன் அவர் பாதையில் நம்மை வழிநடத்தட்டும். அழைத்தல் வாழ்வை ஆரோக்கியமாக வாழ வாழ்த்தி இறைவனை வேண்டி முடிக்காமல் முடிக்கிறேன் எனது பகிர்வை.

இறையாட்சிப் பணியில்,
பணியாள் மைக்கேல் 
முதியனூர், ஈரோடு

0 comments:

Post a Comment