உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்கள்


இறை இயேசுவில் அன்புள்ள சகோதர சகோதரிகளே!

கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!

புனித வாரமும்உயிர்ப்புப் பெருவிழாவும் நெருங்கி வந்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில்இத்தவக்காலத்தில் நாம் மேற்கொண்ட நேர்மையான நோன்புதாராள தர்மம்உருக்கமான செபம் நம் உள்ளத்தையும்ஆன்மாவையும் புதுப்பித்துள்ளன. இறையாட்சிக்கு நம்மை நெருக்கமாகச் செய்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

நம் வாழ்வில் ஏற்பட்ட தோல்விகள்மன அழுத்தம்உறவுச் சிக்கல்கள்விரக்தியான சூழல் போன்றவற்றை நாம் போதுமான அளவு ஏற்க கற்றுக் கொண்டதால் பணியாளர்களாகவும்சீடர்களாகவும் வாழ முடிகிறது. இப்படிப்பட்ட சவால் நிறைந்த வாழ்விற்கு கிறிஸ்துவே முன்னோடியாக இருக்கின்றார். கிறிஸ்து தன் பாடுகளினாலும் பலியாலும் நம்மை மீண்டும் கடவுளின் அன்புப் பிள்ளைகளாக மீட்டெடுத்துள்ளார்.

உயிர்ப்புப் பெருவிழா நம்மைப் பற்றிய நலம் தரும் எண்ணங்களையும் நமக்குத் தருகின்றது. வேதனையும் வலிகளும் முழுமையாக நம்மை விட்டு விலகாது ஏன் இப்போது உள்ள துன்பம் உயிர்ப்புப் பெருவிழாவிற்குப் பின்பும் நம்மைத் தொடர்ந்து வரும். ஆகவே இத்தகைய யதார்த்தங்கள் மாறுவதில்லை ஆனால் அவை நம்மை மாற்றிவிடுகின்றன! நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமல் போகலாம்.ஆனால் பிரச்சினைகளைச் சந்திக்கின்ற வளங்களையும்ஆற்றலையும் உயிர்த்த ஆண்டவர் தருகின்றார்.

ஆன்மீக ஒளி கொண்டு உலக நிகழ்வுகளை ஆய்வு செய்து இளைஞர்இளம் பெண்களுக்கு வழிகாட்டஅழைத்தலில் ஊக்கப்படுத்த அன்னை மரியாள் நமக்குத் துணைபுரிவாராக!

அனைவருக்கும் மகிழ்வான உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்கள்!

கிறிஸ்துவின் ஊழியன்

ஜுடு பால்ராஜ்

பாளையங்கோட்டை ஆயர்

உயிர்ப்பு அது இரண்டு வகைப்படும்

இம்மாதத்தில் ‘உயிர்ப்பு' என்கிற தலைப்பில் கட்டுரை வரையப் பணிக்கப் பட்டிருந்தேன். அதையயாட்டி சிந்தித்தேன்.

உயிர்ப்பு அது இரண்டு வகைப்படும் எனப் பளிச்சென எனக்குள் தோன்றியது.

ஒருவர் இறந்த பின்பு மீண்டும் உயிர் பெறுவது முதல் வகை.

வழக்கமாக உயிர்ப்பு விழா என்றதும், இயேசு இறந்த மூன்றாம் நாள் உயிர்த் தெழுந்தார் - என்கிற இந்த முதல் வகை உயிர்ப்பையே நாம் நினைவு கொள்கிறோம்.

இறந்த பின் உயிர் பெறுவது என்பது மனித சக்தியால் இயலாதது. இயற்கைக்குப் புறம்பானது. எனவே அது அதிசயமானதாக, அற்புதமானதாகப் பார்க்கப்படுகிறது. இறைவனால் அல்லது இறைசக்தி யால் மட்டுமே இயலக் கூடியது.

எனவேதான் அது இயேசுவின் வாழ்க்கையில் மட்டும் நடந்தேறியது.

இறந்த லாசர் உயிர் பெற்றதும், 12 வயது சிறுமி மீண்டும் உயிர் பெற்றதும் இறைமகன் இயேசுவின் இறை ஆற்றலால் மட்டுமே நடந்தேறியது.

இந்த இறை சக்தியே இயேசுவை இறைமகனாக அடையாளப்படுத்தியது. உயிர்த்த இயேசுவின் இறைசக்தியைத் தன் வாழ்க்கையில் அனுபவமாகப் பெற்ற புனித பவுல், இறந்த இயேசு உயிர்த்து எழவில்லை என்றால் நமது விசுவாசம் வீண் என்று தெளிவுபடுத்துகின்றார்.

ஆனால் நமது இறைமகன் இயேசு இறை சக்தியால் அற்புதங்கள் மட்டும் நிகழ்த்திட்ட ஆண்டவர் அல்லர்.
           
மாறாக, மனித அவதாரம் எடுத்து மனிதருக்குள்ளும் மாணிக்கமாய் வாழ்ந்து காண்பித்த ‘மாதிரி மனிதன்'. அவருடைய அந்த மனித வாழ்க்கையிலும் அவர் உயிர்ப்புடன் இருந்தார். மூச்சு நின்று விடுவதால் மட்டுமே ஒருவருக்கு மரணம் ஏற்படுவதில்லை. மாறாக முயற்சிகளை நிறுத்திவிடுவதும் மரணத்திற்குரியதே என்பதை உணர்ந்து உலகிற்கு உணர்த்தி தாம் உயிருடன் வாழும்போதே உயிர்ப்புடன் வாழ்ந்து காண்பித்தவர் அவர்.

அதுவே நாம் சுட்டும் இரண்டாம் வகை உயிர்ப்பு. நமக்குத் தெரிந்த இயேசுவின் மூன்றாண்டு கால பொது வாழ்க்கையைச் சற்று கூர்ந்து கவனித்தால் அவர் வெறுமனே உயிருடன் வாழவில்லை. மாறாக ஒவ்வொரு வினாடியும் உயிர்ப்புடன் வாழ்ந்தார் என்பதை உணரலாம். சமூகம் வகுத்த எந்தக் கட்டுக்குள்ளும், வரையறைக்குள்ளும் கண்மூடித் தனமாய்ச் சிக்குண்டு வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும் செக்கு மாட்டு வாழ்க்கையில் சிக்கிட வில்லை அவர்.

மாறாக தான் வாழ்ந்த சமூகத்தை, அது விதித்த விழுமியங்களை, விதிகளைக் கேள்விக்குட்படுத்தி விமர்சனப்பூர்வமாய்ப் பார்த்தார். அந்த விமர்சனப் பார்வையிலும்கூட தன்னுடைய விருப்பு, வெறுப்புகள் கலந்து நிற்கக் கூடாது என்று தன்னையும் சுய விமர்சனத்திற் குட்படுத்தினார்.

தனிமையில் சென்று தனது அன்றாட பணியைத் தன்னளவில் சீர்தூக்கிப் பார்த்து சுய விமர்சனத்திற்குட்படுத்தியும், மக்கள் என்னை யாரெனக் கருதுகிறார்கள்? நீங்கள் என்னைக் குறித்து என்ன எண்ணுகிறீர்கள்? எனத் தம்மோடு இருந்தவர்களிடம் வினா எழுப்பி விடை தேடியும் பிறர் விமர்சனத்திற்கும் தன்னை உட்படுத்தினார்.

இப்படியாக எந்தவொரு க(வ)ட்டத்திலும் முடங்கிவிடாது உயிர்ப்புடன், துடிப்புடன் அவரின் வாழ்க்கைப் பயணம் நகர்ந்தது.

இந்த உயிர்த்துடிப்புடன் கூடிய வாழ்க்கை முறையே அவரது வாழ்க்கைக்கு ஒரு பரிணாம வளர்ச்சியை - பக்குவத்தைக் கொடுத்தது.

"என் தந்தையின் இல்லத்தைக் (ஜெருசலேம் தேவாலயத்தை) கள்வர் குகையாக்காதீர்கள்" எனச் சாட்டை எடுத்தவர் பின்பு அதே கள்வர்கள் கையில் தன்னையே (தன் உடலாகிய ஆலயத்தை) கையளித்தார்.

கோபத்தால் அல்ல குணத்தால், வன்முறையால் அல்ல அகிம்சையால் அந்தக் கள்வர்களை வென்றெடுக்கும் வழி முறையை அவர் தெரிந்தெடுக்கிறார் இப்படியாக அவர் உயிருடன் வாழும் போதே ஒவ்வொரு நொடியும் உயிர்ப்புடன் வாழ்ந்ததால்தான் இறந்த பின்பும் உயிர்த்து எழுந்து இன்றளவும் இவ்வுலகோர் மனங்களில் இறைவனாய் இருக்கின்றார்.

ஆக இயேசு காட்டிய உயிருடன் வாழும்போதே உயிர்ப்புடன் வாழ்வது என்கிற இரண்டாம் வகை உயிர்ப்பு வாழ்வில் மனிதர்கள் எல்லோரும் வாழ வேண்டும் என அவர் விரும்புகின்றார். இதற்கு இறைத்துணை தேவைப்படலாம்.

ஆனால் அற்புதங்கள்,ஆச்சரியங்கள் வேண்டியதில்லை. நாம் வாழும் சூழலில் நாமாகவே சில வட்டங்களுக்குள், சடங்குகளுக்குள், சம்பிரதாயங்களுக்குள் மாட்டிக் கொண்டு செத்த மனிதர்கள் போல் "தேமே"ன்னு வாழாமல் ஒவ்வொன்றையும் உற்று நோக்கி உரசிப் பார்த்து, உய்த்துணர்ந்து உயிரோட்டத் துடன் வாழ்ந்தால்,

அந்த உற்றுப் பார்ப்பதும் உரசிப் பார்ப்பதும் நமது சுயநல நோக்கில் இல்லாமல் பிறர் நல நோக்கில் குறிப்பாக ஏழைகள் நோக்கில் இருந்தால்

அதற்காகவே நமது வாழ்க்கை உயிர்ப்புடன் துடித்தால்,

நாமும் இறந்த பின்பும் வாழ்வோம். உயிர்த்து எழுவோம்.

எனவே இறந்த பின்பு உயிர்க்க விரும்பும் ஒவ்வொருவரும் உயிரோடு வாழ்வதல்ல வாழ்க்கை. மாறாக உயிர்ப்போடு வாழ்வதே வாழ்க்கை என வாழும் போதே உயிர்ப்போடு வாழ்வோம். அதன் மூலம் நாம் இறந்த பின்பும் நமது வாழ்க்கைப் பதிவுகளால் பிறர் மனங்களில் தொடர்ந்து உயிர்த்தெழுந்து வீற்றிருப்போம். அதுவே இயேசுவின் உயிர்ப்பு விழா நமக்கு கொடுக்கும் அழைப்பு . . .

எஸ். எரோணிமுஸ்,
"ஊற்றுக்கண் " ஆசிரியர், திருச்சி

சிலுவையை நோக்குவோம்

சிலுவையை நோக்குவோம் - அதில்நம்
சிந்தையைப் பதிப்போம் அன்பின் உருவத்தை
கருணையின் இருப்பிடத்தை மரத்தோடு மரமாய்
இணைத்திட்ட நம் பாவ ஆணிகளை அதில் பார்ப்போம்

சிலுவையைச் சுமக்க இயேசு சிந்தை கலங்கவில்லை
சாட்டை அடிகளுக்கும் சண்டாளர் வார்த்தைகளுக்கும் - தவச்
சீலன் தவறி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை - இவர்
தவக்கோலம் பூண்ட தத்துவ வித்து - தரணிக்கு வந்த நல்முத்து.

விண்ணகத்தில் மணிமுடியைத் தரித்த மகன் - இம்மண்ணில்
கொடிய முள்முடியைச் சூட்டி கொடும் வேதனைப்படுவது
தலைக்கணம் மிக்கோராய் நாம் இத்தரணியில்
தரிகெட்ட வாழ்வை நெறி தவறி வாழ்வதால்தானே!

மரியின் மடியில் தவழ்ந்த மகன் கண்மணியாய் வளர்ந்த மகன்
கல்வாரி மலையும் கதறித் துடிக்கும் வண்ணம் கைதியாய்ப்
போகின்றார் கண்டோரெல்லாம் கதறித் துடிக்கின்றனரே - நண்பா
நீ செய்த பாவங்களுக்காய்க் கதறி அழுவது எப்போது?

ஆடையை உரித்து அவமானப் படுத்துகின்றனர் - மேடைபோட்டு
அவர் மேனியை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர் - இருந்தாலும்
தந்தாய் இவர் செய்கையை மன்னியும் என்றாரே - நண்பா
பிறர் செய்த தீமைகளை நீ மன்னிப்பது எப்போது? இருந்தாலும்

சிலுவையை நோக்குவோம் அதில் நம் சிந்தையை வைப்போம்
இல்லையென வந்தோர்க்கு இல்லை எனச் சொல்லாமல் – இருப்பதைப் பகிர்ந்துண்டு மகிழ்ந்திடுவோம் உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் கொடுக்காமல் கடமையைச் செய்திடுவோம் தவக்காலத்திலே.

-தங்க. ஆரோக்கியதாசன், ஆவடி

எது ஈஸ்டர்?

தவ முயற்சிகள் செய்து, ஜெபம் நிறைய செய்து, தியாகம் பல செய்து இந்தத் தவக்காலத்தில் நம்மைத் தயார்படுத்துவது ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவிற்காக. ஆம்!

உயிர்ப்புப் பெருவிழா - அது நம்
உயிர்ப்பின் பெருவிழா!

உயிர்ப்பு என்பது என்ன? நமக்குத் தெரிந்தது இயேசு பாடுகள் பட்டார், சிலுவை சுமந்தார், உயிர் நீத்தார், அடக்கம் செய்யப்பட்டார், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அவ்வளவுதான். மேலும் தவக்காலத்தில் பூ, பொட்டு வைப்பதில்லை, கறி, மீன் சாப்பிடுவதில்லை. உயிர்ப்புப் பெரு விழாவாகிய ஈஸ்டர் அன்று புது ஆடை உடுத்தி, பொட்டு வைத்து, தலை நிறைய பூ வைத்து, இரவு கோவிலுக்குச் செல்ல வேண்டும். மறுநாள் நல்ல அசைவ உணவு சமைத்து உறவினரோடு உண்ண வேண்டும். அதோடு உயிர்ப்புப் பெருவிழா முடிந்துவிட்டது என்பதுதான் நமது எண்ணம்.

அதுவல்ல ஈஸ்டர். நம் ஆண்டவர் இயேசு யாருக்காகப் பாடுபட்டார்? யாருக்காக மரித்தார்? யாருக்காக உயிர்த்தார்? சிந்திப்போம்.

தவக்காலத்தில் வெளி அடையாளங்கள் தாண்டிய நம் மனமாற்றமே அவருக்குத் தேவை. அதையே இயேசு விரும்புகிறார். எனவே உயிர்ப்புப் பெருவிழாவினைக் கொண்டாட நாம் நம் மனத்தளவில் தயாராக வேண்டும்.

ஆண்டவர் இயேசு,
 சாவை வீழ்த்தி உயிர்த்தார்.
 அநியாயங்களை வீழ்த்தி உயிர்த்தார்
 பொய்மையை வீழ்த்தி உயிர்த்தார்
 பகைமையை வீழ்த்தி உயிர்த்தார்.

ஆகவே, நாமும் உயிர்ப்பின் உண்மையான பொருளினைப் புரிந்து தவக்காலத்தில் நம்மைத் தயார் செய்துகொண்டு இறை இயேசுவின் உயிர்ப்பினால் மகிழ்வோடு பங்குபெறக் காத்திருப்போம். உயிர்ப்புப் பெருவிழாவினை இயேசுவின் வெற்றிப் பெருவிழாவாகக் கொண்டாடுவோம். Happy Easter

அ.வென்ஸி, மணவாளநல்லூர்

நம்பிக்கையும் உயிர்ப்பும்

2010 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த
உன் உயிர்ப்பை இறைவா தினம்
நாங்கள் தரிசிக்கின்றோம் மனதால்
உயிர்ப்பை உணர்கிறோம் உணர்வால்

மண்ணைப் பிளந்துவரும் சிறுவிதை உயிர்ப்பு
துயில் எழுப்பும் தென்றல் உயிர்ப்பு
ஒளிதரும் சூரியன் தோன்றுதல் உயிர்ப்பு
தினம்தினம் போராடி வாழ்தல் உயிர்ப்பு

மொட்டானது மலராகி மகிழ்விப்பது உயிர்ப்பு
மலர் காயாகி, பின் கனியாகி இனிப்பது உயிர்ப்பு
பசுமை நிறம் பூமித்தாயின் உயிர்ப்பு
நீலவானம் உன்னத உன்னுடைய உயிர்ப்பு

வாழ்க்கைப் போராட்டம் உயிர்ப்பு
வியாதிப் போராட்ட வெற்றி உயிர்ப்பு
தன்னம்பிக்கை உணர்வு ஓர் உயிர்ப்பு
உயர்வில் தாழ்மை ஓர் உயிர்ப்பு
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் அன்பின் உயிர்ப்பு
மன்னித்தலும் மன்னிப்பு பெறுதலும் உயிர்ப்பு
வெல்லுதல் சாதனையின் உயிர்ப்பு -
தோற்றுப் போதல் மறுமுறை முயற்சியின் உயிர்ப்பு

உழைப்பு ஒரு உயிர்ப்பு - உணர்வுப்
போராட்டம் ஒரு உயிர்ப்பு
வாழ்தல் மண்ணில் உயிர்ப்பு
சாதல் விண்ணில் உயிர்ப்பு

நாள்முழுவதும் உழைத்தபின் ஏற்படும் களைப்பு
எடுத்துக்கொள்ள வேண்டிய ஓய்வு
மெல்ல இதமாக்கும் தென்றல், குளிர்ச்சி
தரும் இரவும் நிலவும் விண்மீன்களும்

எல்லாவற்றிலும் உன் அருளும் ஆசீரும்
அனுதினம் நாங்கள் வாழ உன் அருள்
சிகரமாய் எம்மேல் உம் அன்பும்
உம்மேல் எங்கள் நம்பிக்கையும் உயிர்ப்பு ஆகும்.

செல்வி சாந்தி ராபர்ட்ஸ், உதகை

உயிர்ப்பு

உயிர்ப்பு விழாவை உவகையுடனும்
உற்சாகத்துடனும் கொண்டாடும் மனிதா!
மண்ணில் மலர்ந்த நாள் முதல் மாசுபட்ட
உன்னிடம் உயிர்க்க வேண்டியவை ஏராளம்
சாதிச் சாக்கடையினின்று சந்தடி படாமல்
எழுந்து நல்மனிதனாய் உயிர்த்தெழு!
அடுத்தவர் பெயர் கெடுக்க ஆளாய்ப் பறக்கும்
அக்கப்போர் சகதியினின்று புடமிட்டு உயிர்த்தெழு!
பாலுறவை இயற்கை உபாதையாகக் கருதி
கற்பைக் கேள்விக்குறியாக்கும் களவாணித்
தனத்திலிருந்து உயிர்த்தெழு!
தான் வாழ பிறரைச் சாகடித்து
சன்மார்க்கம் தேடும் நீ
சுயநலக் கழிவினின்று உயிர்த்தெழு!
அயலானை அன்பு செய்கிறேன் என்று
உறவாடிக் கெடுக்கும் ஈனத்தனத்தினின்று உயிர்த்தெழு!
உயிர்ப்பு விசுவாச சத்தியம் மட்டும் அன்று
உண்மையும்கூட!
உயிர்ப்பால் மறுரூபம் அடைய
உலுத்துப்போன உலக ஆசாரங்களை
நம்பிக்கைகளை முழுமையாய் விட்டொழி!
ஐயமற்ற விசுவாசம் பெரும் மலையையும்
இடம்பெயரச் செய்யும்
களைப்பதராகப் பாதாளம் சென்றுவிடாமல்
உயிர்ப்பின் மகிமை காண
உண்மைக் கடவுள் இயேசுவை நம்பு!
அவர்தம் வார்த்தையைக் கடைப்பிடி!
எல்லாம் ஒன்றாகும் நன்றாகும் மண்ணிலே!

ச. செல்வராஜ், விழுப்புரம்

அன்பெனப்படுவது

"என்ன பொழப்புடா இது! நாய் பொழப்பு" என்று சிலர் அலுத்துக்கொள்வார்கள். என்னுடைய பொழப்பும் நாய்களைப் புடிக்கிற பொழப்புதான். ஆனால் ஒரு நாள் கூட நான் அதற்காய் அலுத்துக்கொள்வதில்லை. நாய் புடிக்கும் மாநகராட்சி லாரியில் ஒரு கையில் சுருக்குக் கையிறோடு இன்னொரு கையில் லாரியைப் பிடித்துக்கொண்டு ஸ்டைலாக நின்னு வந்தேன்னா, எமன் தான் பாசக்கயிறோடு வர்ரான்னு தெருவில் இருக்கும் நாய்கள் எல்லாம் பம்மிப் பதுங்கி வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடும்.

அந்த நாய்கள் என்னைப் பார்த்து பயந்து ஓடுவதைப் பார்க்கும்போது எனக்குப் பேரானந்தமாக இருக்கும். சில நாய்கள் திமிரோடு என்னைப் பார்த்து முறைப்பதைப் பார்த்தால் எங்கிருந்துதான் எனக்குக் கோபம் வருமோ தெரியாது. தலைக்கு மேலே கையைத் தூக்கி, சுருக்குக் கையிறை ஒரு சுத்து சுத்தி சுழட்டி முறைக்கும் நாயின் மீது வீசினால் சும்மா கில்லி மாதிரி, தலைவர் நம்ப பாசக் கயித்துலே மாட்டிக்கினு ஒரு துள்ளு துள்ளுவாரு பாருங்கோ, அது அப்படி ஒரு துள்ளலா இருக்கும்.

கடைசியா உயிர் போகும் போது மரண ஓலம்முன்னு சொல்லுவாங்க பாருங்க அப்படி மரண ஓலமிட்டுக் கத்தும் அந்த நாய். அந்தக் கத்தல்தான் என் கோபத்த தணிக்கும். மாட்டிக்கின அந்த நாயின் வாயக் கட்டி ஒரே இழுவா இழுத்து வண்டியிலே தூக்கிப் போட்டு வாய்க்கட்டி நேக்கா அவுத்து கூண்ட முடும் போது உண்மையிலே ஒரு கம்பீரமான பெருமிதம் என் மனசுக்குள்ளே ஏற்பட்டு பரவசமடையும். அந்தச் சுகமே தனி அலாதியானது.

மாட்டிக்கின அந்த நாய் வண்டியிலே அப்படியும் இப்படியுமா ஓடி.. ஓடி... கடைசியிலே விதி விட்ட வழின்னு உக்காந்திடும். அப்போ அந்த நாயப் பாக்கும் போது ரொம்ப பரிதாபமா இருக்கும். எங்கிட்டயா உன் வேலய காட்டுற, செய்யிற வேலையிலே நான் ரொம்ப கறாருன்னு மனசுக்குள்ள நானே சொல்லிக்குவேன்.

இதுலே இன்னொரு வேடிக்கை இன்னான்னா, ஒரு ஏரியாவுல இருந்து இன்னொரு ஏரியாவுக்குப் புது நாய் ஒன்னு வந்தா, அந்த ஏரியாவுல இருக்கிற எல்லா நாய்களும் ஒன்னா சேந்துன்னு அந்தப் புது நாயப் பாத்து கொலைக்கும் பாருங்க, அப்படி ஒரு கொலைப்பா இருக்கும். கொலச்சி விரட்டி விரட்டி அடிக்கும். தப்பித் தவறி அந்த நாய் மாட்டிக் கொண்டால் எல்லா நாய்களும் ஒன்னா சேந்து கடிச்சி கொதறி எடுத்துடும்.

ஆனா பாருங்க, நாய் வண்டியிலே மாட்டிக் கொண்ட நாய்கள் எல்லாம் கொஞ்ச நேரம் ஒன்னப் பார்த்து ஒன்னு உறுமிக் கொலைக்கும். அதற்கு அப்புறம் தாங்கள் ஒன்றாக மாட்டிக் கொண்டோம் என்பதை உணர்ந்து பயந்த சுபாவத்துடன் கம்பிகளுக்கு வெளியே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு செல்லும். அதற்குப் பிறகு அவைகளுக்குள் சண்டையே ஏற்படாது.

மிருக வதை தடுப்புச் சட்டத்தின்படி தெரு நாய்களைப் பிடித்து புளூ கிராஸ் அமைப்பினரிடம் சேர்த்துவிடுவோம். அவர்கள் ஒவ்வொரு நாயையும் பிடித்து மயக்க ஊசியைப் போட்டு அவைகளுக்குக் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்து அதே வண்டியில் ஏற்றி அனுப்பி விடுவார்கள். எங்காவது ஒரு மைதானத்தில் அவைகளை விட்டு விடுவோம். இதுதான் நம்ப தொழிலு.

அன்னிக்கு வேலைக்குப் போயி மாநகராட்சி ஆபீசுக்குப் பக்கத்தில் இருக்கிற டீ கடையில் டீ குடிச்சினு இருக்கும்போது, பெரிய ஆபீசர் உன்னக் கூட்டினு வரச் சொன்னாருன்னு சொல்லி கூட வேல செய்யிற கோவிந்தன் வந்து கூப்புட்டான். இன்னாத்துக்குக் கூப்புட்டாருன்னு நௌச்சிக்கினே ஓட்டமும் நடையுமா ஓட அவரு முன்னால போய் நின்னேன். வடிவேலு, ஒரு கம்ப்லெயின்ட் வந்து இருக்கு. அக்ரகாரத்து மேலத் தெருவுல தெரு நாய்ங்க தொல்லை அதிகமா இருக்குதாம். தெருக்காரங்க எல்லாம் ஒன்னா கையயழுத்துப் போட்டு கம்ப்லெயின்ட் குடுத்து இருக்குறாங்க. அது பத்தாதுன்னு பேப்பர்ல வேறு எழுதிட்டாங்க. மேல இருந்து என்ன ஏதுன்னு பாக்கச் சொல்லி மேல உத்தரவு. போய் பாத்துட்டு வா.

சார்.. போன மாசம்தான் அந்த ஏரியாவுல இருக்குற எல்லாத் தெரு நாய்களையும் மொத்தமா புடிச்சினு போயி ஆபரேசம் பண்ணி விட்டோம். மறுபடியும் போவனுமா? போனாக்கூட சும்மா வேஸ்ட்டுதான் சார். ஒரு நாய்கூட மாட்டாது. யோவ், நாய்கள் மாட்டுதோ இல்லையோ, வண்டிய எடுத்துனு போய் ஒரு சுத்து சுத்திட்டு வா... நாய் புடிக்க வந்தாங்கன்னு பேராவது இருக்கும். அந்த ஏரியா வார்டு மெம்பர்ல இருந்து, கவுன்சிலர் வரைக்கும் தினமும் போன் போட்டு கேக்கறாங்க. அப்படி அனுப்ப லேன்னா; எம்.எல்.ஏ, எம்.பி. வரைக்கும் போவோமுன்னு மெரட்டல் வேற. வண்டிய எடுத்துனு போய் ஒரு சுத்து சுத்திட்டு வா... போ...

பெரிய ஆபீசர் சொன்ன மாதிரி, வண்டிய எடுத்துனு போயி அக்ரகாரத்
தெருவையே அலசிப் பார்த்துட்டோம். ஒரு நாய்கூட கண்ணுக்கு மாட்டல. அக்ரகார நாலு தெருவையும் சுத்தி சுத்தி வந்ததுதான் மிச்சம். சோர்ந்துபோய் வண்டியிலே திரும்பும்போது, ஒரு சந்துல செவிலிக் கலர் நாய் ஒன்னு என்னைப் பாத்து பதுங்கி... பதுங்கி... போறதைப் பார்த்து சட்டுனு கையில இருக்கிற கயித்தோட நானும் பதுங்கிப் பதுங்கிப் போய் கப்புனு அந்த நாய்க் கழுத்துல சுருக்குக் கயித்தைப் போட்டு புடிச்சி வண்டிலே போட்டுனு புளூ கிராஸ் ஆபீசுக்கு வண்டிய விட்டேன்.

குய்யோ முறையோன்னு கொலச்ச அந்த நாய் கொஞ்ச நேரத்துல கம்முன்னு வெளியே வேடிக்கை பாத்துனு வந்தது. என்னையா பாத்துட்டு பதுங்குற இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு ஆபரேசன் தலைவா என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு, அப்போதுதான் அது ஆணா பெண்ணான்னு பார்த்தேன். அது ஆண் நாய்தான்.

நாய் வண்டி போய்க்கொண்டே இருந்தது. அந்த வண்டியில் கூண்டுக்கு அந்தப் பக்கம் அந்த நாயும், இந்தப் பக்கம் நானும் மட்டும்தான் இருந்தோம். அன்று காலை என் மனைவி பேசிய பேச்சு என் மனதில திடீரென்று ஒலிக்க ஆரம்பித்தது. கண்களில் கண்ணீரோடு, ஏங்க, நமக்குக் குழந்தையே பொறக்காதா? நானும் வேண்டாத கடவுள் இல்ல. போகாத கோயில் இல்ல, சாப்பிடாத மாத்திரை மருந்துகள் இல்ல. நமக்குக் கல்யாணமாகி பத்து வருசங்களுக்கு மேல் ஆச்சி. என் வயித்துல ஒரு புழு, பூச்சிகூட உண்டாக மாட்டேங்குது. பாக்குறவங்க எல்லாம் இன்னுமா கொழந்த பொறக்குலேன்னு கேட்டு நச்சரிக்கிறாங்க. எந்த ஒரு நல்ல காரியத்துக்கும் சொந்தக்காரங்க வீட்டுக்கும், அக்கம்பக்கம்கூட போக முடியலே. ரொம்ப அவமானமா இருக்கு என்று சொன்ன போது என்னையே நான் நொந்து கொண்டேன். குறை உனக்கு இல்லேம்மா, என் உடம்புலதான் குறை. அதற்கு நீ என்ன பண்ண முடியும் என்று அவளைத் தேற்றிவிட்டு வேலைக்கு வந்துவிட்டேன். என் உடம்புல குறைய வச்சிக்கினு என்ன கட்டிக்கிட்ட பாவத் துக்காக அந்தப் பொண்ணு அவமானப்படுதேன்னு என் மனம் மிகவும் வேதனைப்பட்டது. ச்சே... கடவுள் என்னை இப்படி விளங்கா படச்சிட்டானே என்று மனதுக்குள் விரக்தியாய் நினைத்த எனக்குள் திடீரென்று ஒரு ஒளிக்கீற்றாய் மின்னல் எண்ணங்கள்.

எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ, இப்படி மலடாய்ப் பிறந்து கட்டிய பொண்டாட்டிய அவமானப்பட வைத்து விட்டேன். அதற்கு பிராயச்சித்தமாக இந்த நாயை விட்டுவிடலாம், அதாவது சந்தோசமாக இருந்து குட்டிகளைப் பெற்று தன் இனத்தை விருத்தி செய்யட்டும் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டு அந்த நாயைப் பார்த்தேன். என் பார்வையில் இப்போது கொலை வெறியோ, வெறுப்பு உணர்ச்சியோ, பழி தீர்க்கும் எண்ணமோ இல்லை என்பதை உணர்ந்துகொண்ட அந்த நாயும் என்னைப் பாசத்துடன் பார்த்தது. அதற்கு அடையாளமாக தன் வாலை ஆட்டி சிநேக மனப்பான்மையுடன் குழைந்து குழைந்து தன் முன்னங் காலைக் கம்பியின் மீது வைத்துப் பிராண்டியது.

டிரைவர் வண்டியை நிறுத்து... நிறுத்து.. என்று கத்தி வண்டியை நிற்க வைத்து, அந்த நாயை வெளிவே விட்டேன். சுதந்திர உணர்வு என்ன என்பது அடிமைப்பட்டவனுக்கு மட்டும்தான் தெரியும். அதைப்போல இந்த நாயும் ஒரே தாவலாக தாவி வெளியே ஓடியது. அது ஓடுவதையே பார்த்துக்கொண்டிருக்கும் போது, கொஞ்ச தூரம் ஓடிய அந்த நாய், ஒரு முறை என்னைத் திரும்பிப் பார்த்தது. அது எதற்காக அப்படிப் பார்த்தது? தன் நன்றி உணர்ச்சியினாலா? அல்லது சுயநலத்தால் கடமையைத் தவறியவனே என்று சுட்டிக்காட்டத்தானா? யாருக்குத் தெரியும்.

இனி ஒரு விதி செய்வோம்

எந்தக் கட்சிக் கொடி
கேட்டுக் கொண்டே ஏற்றினார்
அரசு விழாவில் அமைச்சர்

எல்லாம்
தலை கீழாய் நடக்கும்
காலம்

முதல் நாள்
ரோஜா மாலை
மறு நாள்
செருப்பு மாலை

முன்பு வாக்களிப்பது
சனநாயகம்
இப்போது
பணநாயகம்

அண்ணாவின்
இறுதி ஊர்வலக் கூட்டத்தை
முறியடித்தது
டயானாவின் இறுதி ஊர்வலம்

கோமணம் கட்டிக் கொண்டு
கோடீஸ்வர அரசியல்
நடத்தினார்கள் அன்று

கோடீஸ்வரராய்
இருந்து கொண்டு
மக்களைக்
கோமாளி ஆக்குகிறார்கள்
இன்று!

பெருந்தலைவர்
இறந்தபோது
இருந்தது
அறுபத்தி மூன்று ரூபாய்!

அன்று
ஊழல் இல்லை
இன்று
ஊழல் இல்லாமல்
உலகமில்லை!

கொடியும் தெரியாது
கொள்கையும் அறியாது
அரசியல் செய்கிறார்கள்

ஆகவே
பரிசுச் சீட்டும்
வாக்குச் சீட்டும்
ஒன்றாகிப் போனது
பாமரனுக்கு!

கோட்டு போட்டிருந்த
காந்தியை
கோமணம் கட்ட வைத்ததும்
அரசியல்தான்

அம்பேத்கரை
அண்ணல் ஆக்கியதும்
அரசியல்தான்!

பேருந்தில் பயணம் செய்த
கக்கன் எங்கே?
ஸ்பெக்ட்ரத்தில் பங்கு போட்ட
பெருச்சாலிகள் எங்கே?

இன்னுமா விளங்கவில்லை?
‘இனியயாரு விதி செய்வோம்'

உங்கள்
வாக்குச் சீட்டு
வஞ்கச வரலாறை
மாற்றட்டும்!


- தமிழ்நெஞ்சன்

உடலோடு உயிர்க்க

உடலை ஒறுக்க அழைப்புப் பெற்ற தவக்காலத்தைத் தொடர்ந்து உடலோடு உயிர்க்க அழைப்புப் பெறும் பாஸ்கா காலம் இதோ வந்துவிட்டது. "சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்" என்ற அபயக்குரல் அழிந்து, "அல்லேலூயா, அல்லேலூயா" என்ற ஆர்ப்பரிப்புக் குரல் இதோ கேட்கிறது. பாவத்தின் கொடு முடியாம் பாடுகளைக் கல்வாரிக் கொடுமுடியில் தொலைத்துவிட்டு, சாவுக்குச் சாவு மணி அடித்துச் சங்கூதினார் விண்ணகத் தந்தையின் ஒரே மகன் இயேசு. இயேசுவின் பிறப்பு, வாழ்வு, பணி, பாடுகள், மரணம், உயிர்ப்பு இவை சரித்திரம். நமக்கு விட்டுச்சென்ற தனிப்பெரும் சொத்தாகும். இவற்றைக் கட்டிக் காக்க நாம் எடுத்து வைக்கும் அடியில் துணை நின்று காப்பது நமது அழைப்பாகும்.

நாம் அழைக்கப்பட்டதால் பேறுபெற்ற மக்களாய் இருக்கிறோம் (கிறிஸ்தவர்கள் ஆனதால்). கோழைகளாய் இருந்து இறை மதிப்பீடுகளை மறந்து, நீதியை நிர்வாணமாக்கி, நேர்மையை நிர்மூலமாக்கி, மனிதத்தை மண்ணில் புதைத்து கோடி முறை சாவதைவிட, அன்பு வாசலை அகலத் திறந்து, மன்னிப்பு என்னும் மாளிகைக்குள், மனிதத்துக்கு வாழ்வளித்து ஒரே ஒரு முறை வீர மரணம் அடைய இக்காலம் நமக்குக் கற்றுத் தருவதாய் இருந்தால் நாம் பெற்றுள்ள கிறிஸ்தவப் பேற்றினைப் பெரும் மகிழ்வோடு வாழ்பவராவோம்.

இந்த உலகக் கடலில் வாழ்க்கைக் கப்பலில் பயணம் செய்யும் நாம் சுனாமி போல் எழுந்து நிற்கும் சோதனைப் பேரலைகளால் அலைக்கழிக்கப்பட்டாலும் அழிந்து போகாமல் இருக்க இயேசு என்னும் நங்கூரச் சொந்தம் நமக்குத் தேவை என்பதை உணர்வோம். சமூகச் சீரழிவுச் சீற்றங்களால் சீர்குலையாமல் இருக்க இயேசு என்னும் வசந்தத்தை வாழ்வாக்குவோம். ஒலித்துக் கொண்டிருக்கும் இறை குரலை இயற்கையிலிருந்து இனம் பிரித்துப் பார்த்து இதயம் நிறைந்த நன்றியை நம் வார்த்தையாலும் வாழ்க்கையாலும் அள்ளிக் கொடுப்போம். நமது ஒவ்வொரு வார்த்தையையும் பிறரின் நல்வாழ்வுக்கு உரமாக்கும் வரம் பெறுவோம். அப்போது எல்லாக் காலமும் இறையருளின் காலமாகும்; எல்லார் முகமும் இறையவனின் சாயலாகும்; எல்லா இடமும் இறையரசின் சாட்சியாகும்; எல்லா வேளையும் நாம் உடலோடு உயிர்ப்பவராவோம்.

என்னால் உலகை மாற்ற முடியுமா?

அனுபவமிக்க அறிவான வயதான ஞானி ஒருவர் தங்களைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார்.

நான் இளமையாக இருந்த காலத்தில் ஒரு புரட்சி மனிதராக வாழ்ந்தேன். அப்பொழுது இறைவனிடம் "உலகை மாற்ற சக்தியைக் கொடும் தெய்வமே" என்று மன்றாடினேன். பிறகு நான் நடுத்தர வயதை அடைந்த பொழுது, வாழ்வின் பாதி நாட்களை கடந்தும் ஒருவரைக்கூட மாற்ற முடிய வில்லையே என நொந்துபோய் என் மன்றாட்டை மாற்றிக் கொண்டு, ஆண்டவரே, என்னோடு வாழும் என் குடும்பத்தினர், என் நண்பர்கள் ஆகியோர்களை மட்டும் மாற்ற அருள் புரியும். அப்பொழுது தான் நான் மன நிறைவு பெறுவேன் எனப் பிரார்த்தனை செய்தேன். அதுவும் நிறைவேறவில்லை. மனம் வருந்தி, முதிர்ந்த வயதில் என் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டு வாழ்ந்து வருகையில், என் எண்ணங்கள் இவ்வாறாக வெளிப்பட்டன. நான் எவ்வளவு முட்டாள் தனமாக நினைத்து; வாழ்ந்து விட்டேன் என வருந்தி என் வேண்டுதலை முயன்றேன். "ஆண்டவரே என்னையே மாற்றிக் கொள்ள வரம் தாரும். என் வாழ்வின் தொடக்க காலத்திலேயே இவ்வாறாகச் செபிக்காமல் பிறரை மாற்ற வேண்டும் என செபித்து என் வாழ்நாட்களை வீணாக்கி விட்டேனே என வேதனைப்படுகின்றேன். இன்று முதல் என்னையே மாற்றி நல்லவராக வாழும் வரம்தாரும்" என்றேன். எனவே நம்மையே நாம் உணர்வோம். வாழும் நாட்களில் பிறரையும் ஏற்று வாழுவோம்.

"இந்த உலகில் வாழும் மனிதர்களில் நானும் ஒருவன். என்னால் முடிந்தவரை கடினமாக உழைத்து அனைவருக்கும் நன்மைகள் பல புரிந்து உதவுவேன். மக்கள் மனதில் இடம் பெறுவேன் என்ற எண்ணத்தை மேற்கொள்வேன். இறப்பதற்கு முன்பே என்னை முழுமையாக பிறருக்குக் கையளிப்பேன். வாழ்க்கை ஒரு சிறிய மெழுகு வர்த்தி (Brief Candle). என் குறுகிய வாழ்நாட்களில் பெற்றுக் கொண்ட பிரகாசமான, அற்புதமான வாழ்வாகிய ஒளியை எதிர்காலத் தலைமுறைக்கு கொடுக்கும் முன்பே, இன்றே, இப்பொழுதே முடிந்த வரை பிரகாசமாக ஒளிரச் செய்து வாழ்ந்து காட்டுவேன்".

- ஜார்ஜ் பெர்னாட்ஷா.

சியன்னா நகர் புனித கத்தரின் (1347 - 1380)

இத்தாலி நாட்டின் சரித்திரத்திலேயே மிகப் புகழ் வாய்ந்த பெண்மணி என்று கருதப்படுகின்றார். இவரின் நினைவுச் சின்னம் உரோமை நகரில் மிக முக்கியமான இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. தொமினிர் 3ஆம் சபையில் சேர்ந்தவர். இவருக்கு 5 காயங்களை ஆண்டவர் கொடுத்திருந்தார்.

இவரது அன்புப் பெற்றோரின் 25 மக்களில் கடைசிக் குழந்தையாவார். 6 வயதிலேயே ஆண்டவரின் தரிசனம் பெற்றார். ஜெபத்தையும் தனிமையையும் சிறு வயதிலேயே விரும்பினார். 16 வயதில் டொமினிக்கன் 3வது சபை உறுப்பினராகச் சேர்ந்து கொண்டார். திருப்பலிக்கும் ஆன்ம குருவிடம் பாவசங்கீர்த்தனம் செய்வதற்கும் மட்டுமே அறையை விட்டு வெளியே செல்வார். தனது வீட்டு வேலைகளைச் செய்வதுடன், நோயாளிகள், ஏழைகள் ஆகியோரைப் பராமரிப்பதிலும் ஈடுபாடு கொண்டார்.

இவரது கடைசி நாட்களில் திருச்சபைக்குள் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டது. சொல்ல முடியாத தீய மாதிரிகைக்கு இது வழி ஆயிற்று. இவ்வாறு அலைக்கழிக்கப்பட்டு வேதனையுற்ற திருச்சபைக்காகத் தன் வாழ்வைக் காணிக்கையாக்கி உயிர் விடுவதாகக் கூறி 35 வயதில் உரோமையில் அமைதியாகக் காலமானார்.

இயேசுவில் உயிர்ப்பில்

உயிரோட்டமாய் வாழ்ந்தால்
உயிர்ப்பு என்பது உண்மையாகும்
சிறு விதை நிலம் கிழித்தால்
பலர் தங்கும் பரந்த மரமாகும்
அற்பப் புழு முனைந்தால்
பாழான மண் பண்படையும்.

 இயேசுவின் பாடுகள், மரணமே
அவருக்கு உயிர்ப்பைத் தந்தது
நமக்கு மீட்பைக் கொணர்ந்தது.
ஆணிகளும், சாட்டையும்
ஈட்டியும், முள்முடியும்
உயர்ந்து நின்ற மரச்சிலுவையும்
கல்லறை உடைக்க
துணை நின்ற கருவிகளே.

நமது துன்பமும்
நல் இன்பத்திற்கான வழியே.
நாம் உயிரோட்டமாய் வாழ்ந்து
உயிர்த்தால் மட்டும் போதுமா?
பிறரையும் உயிர்ப்பிக்க வேண்டாமா?
இனிமேல் பாவம் செய்யாதே
எழுந்து உன் படுக்கையை எடுத்துச் செல்
‘தலித்தாகூம்'
வெளியே வா
என்ற வார்த்தைகள் உயிர்தந்தவையல்லவா.

 உதவிக் கரம் நீளும்போது
‘இவரே என் அன்பார்ந்த மகன்'
என்ற அங்கீகார வார்த்தையை
நாமும் கேட்கலாம்.
காற்றைப் போல
சாதி, மதம், மொழி கடக்கும்போது
திரைச் சீலை நம் வாழ்விலும்
மேலிருந்து கீழ்வரை கிழியலாம்

உயிரோட்டமும், உயிர்ப்பும்
துன்பமும், இன்பமும் வேறுவேறல்ல.
நாமும் வாழ்ந்து
பிறரையும் வாழவைத்தால்
நமக்கும் தாபோர் அனுபவமே.
உயிர் கொடுத்து
உயிர்ப்போம், உயிர்ப்பிப்போம்

திருமிகு. புஷ்பா
ஆசிரியை, சிவகங்கை

நம் வாழ்வின் நெறிமொழி

18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதின் காலங்களில் பிரான்ஸ் நாடு முழுவதும் ஒரு இருள்மயமான சூழ்நிலைல் கடந்து சென்றது. குறிப்பாக திருச்சபைன் பிள்ளைகள் நெருக்கடியான காலச் சூழ்நிலை களில் கடந்து சென்றார்கள்.

பிரெஞ்சுப் புரட்சினாலும் நெப்போலியன் போனபார்ட்டின் கொடும் அரசாட்சினாலும் திருச்சபை மக்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளானார்கள். ஆலய வழிபாடுகள் இல்லை. குருவானவர்கள் வெளியரங்கமாய் நடமாட முடியவில்லை. ‘கிறிஸ்தவர்கள்' எனக் கூறுவதற்கே மக்கள் அச்சமடைந்தார்கள். இராணுவத்தின் கொடூரப் பிடியில் மக்கள் சிக்கித் தவித்தார்கள்.

அப்போது மதவிரோதக் கும்பல் ஒன்று குருவானவரைப் பிடித்து சிறையிலடைத்துத் துன்புறுத்த எண்ணம் கொண்டது. எனவே ஒரு வீட்டுக்குச் சென்று அவ்வீட்டின் தலைவரை வியாதிப்படுக்கையில் இருப்பதுபோல் நடிக்க வைக்க வேண்டும் எனத் தீர்மானித்து, அதன் படியே செயல்பட்டார்கள்.

எப்படியோ ஒரு கிறிஸ்தவரைக் கண்டுபிடித்து நோயில்பூசுதல் திருவருள்சாதனம் நிறைவேற்ற ஒரு குருவானவரை அழைத்து வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். வஞ்சகமாய்ச் செயல்பட்ட அவர்களின் எண்ணங்களை அறியாத இவரும் சாதாரண உடையணிந்து ஒரு குருவானவரை அழைத்து வந்தார்.

குருவானவர் வியாதிப்பட்டவர் போல் படுக்கையில் படுத்திருந்தவரின் அருகில் சென்றார். அவரைத் தொட்டவுடன் குரு, "அவர் ஏற்கெனவே மரித்து விட்டாரே" எனக் கூறினார்.

வஞ்சகக் கூட்டமோ கேலி பண்ணி சிரித்தது. ஆனால் படுக்கையில் நடிக்க வைக்கப்பட்டவர் உண்மைலேயே மரித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பயத்தில் உறைந்து போனார்கள்.

வேதாகமத்தில், "ஆண்டவரே, என் வாழ்வின் முடிவையும், என் வாழ்வின் எண்ணிக்கையையும் எனக்குத் தெரிவியும். எவ்வளவு நிலையற்றது என் வாழ்வு! இதை நான் அறிவேனாக" (திபா 39:4-5) என வாசிக்கிறோம். மோயீசன் இஸ்ராயேல் மக்களிடம் "நீ உன்னையும் உன் ஆன்மாவையும் கவனமாய்க் காக்கக் கடவாய்" (இச 4:9) என்று கூறுகிறார்.

மத்தேயு 5 - 7 அதிகாரங்களில் இயேசுவின் மலைப்பொழிவின் அறிவுரை களைக் காணலாம். மகாத்மா காந்தி அவர்கள், "ஒவ்வொரு மனிதனும் மத் 5 - 7 அதிகாரங்களை மட்டும் வாசித்து அவைகளைக் கடைப்பிடித்தால் இந்த பூமி முழுவதையும் தெய்வீக சமாதானம் நிறைக்கும்" என்கிறார்.

இயேசு பிறந்த 2000 ஆண்டின் நினைவாக எனக்குப் புனித பூமி செல்லும் பாக்கியம் கிடைத்தது. இயேசு மலைப் பொழிவு செய்த இடத்தில் எட்டு பட்டயங்களைக் கொண்ட ஓர் ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. எட்டு பாக்கியமான வாக்கியங்கள் (5:3-10) நினைவாக அவ்வாலயம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நான் அந்த ஆலயத்தில் மண்டிட்டு இந்த மூன்று அதிகாரங்களையும் வாசித்துத் தியானம் செய்தேன். அன்று ஞாற்றுக்கிழமை. காலை எட்டு மணிக்கு இயேசு மலைப்பொழிவு செய்த இடமாய்ப் பாரம்பரியமாய் நினைக்கப்படுகின்ற இடத்திலுள்ள மரத்தினடி பலிபீடத்தில் திருப்பலி செய்தேன். உடன் பயணித்த திருயாத்திரிகர்கள் பங்கு பெற்றார்கள். எத்தனை பாக்கியமான திருப்பலி அது!

இயேசுவின் அருள்மொழிகள் கூறப்பட்ட இடத்திலிருந்து பார்த்தால், மக்கள் உட்கார்ந்து இறைவார்த்தையைக் கேட்ட இடம் ஒரு பள்ளத்தாக்குப்பகுதியாகத்தான் இருக்கிறது. இயேசுவின் மலைப்பொழிவு மிக எளிதாக, தெளிவாகப் புரிந்துகொள்ளும் சூழ்நிலையைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.

மத் 5:1-இல் இயேசு திரளான கூட்டத்தைக் கண்டு மலை மீது அமர்ந்து திருவாய் மலர்ந்து போதிக்கலானார் என வாசிக்கிறோம்.

மலைப்பொழிவு முழுவதும், "உங்கள் இறைவன் பரிசுத்தர், எனவே நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்" என்ற அறிவுரை ன்படியே இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் மிகவும் புனிதனாய் வாழ இயேசு கற்பிக்கிறார். நாமும் மலைப் பொழிவு மக்கள் கூட்டத்தில் பங்குபெற்று இயேசுவில் வாழ வழி அறிவோம்.

ஒரு சமயத்தில் கிராமப்புறப்பங்கில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அன்று ஆகஸ்ட் 15-ஆம் தேதி - சுதந்திர தினமும் மரியாள் விண்ணேற்புத் திருநாளும் உள்ள திருப்பலிக்கு மக்கள் வந்திருந்தார்கள்.

அக்கிராமத்தில் அநேகர் ஆசிரியப்பணி செய்து வந்தார்கள். அரசுப்பள்ளிகளிலும் வேலை பார்த்து வந்தார்கள். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி

"உங்கள் இறைவன் பரிசுத்தர், எனவே நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்"

செல்வதோ, குழந்தைகளுக்குக் கடமை உணர்வு, அக்கறையோடு பாடங்கள் நடத்தாததைக் கேள்விப்பட்டு மறையுரையில் சற்று கடுமையாகத் திட்டினேன்.

ஆசிரியப் பிள்ளைகளோ அன்று சுதந்திர தினமாகையால் மற்ற சக ஆசிரியர்களிடம் நான் திட்டியது குறித்துக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்கு அவர்களோ, "உங்களை உரிமையோடு திட்டுவதற்கு ஒருவர் இருக்கிறாரே, எங்களைத் திட்டி வழிநடத்த ஒருவரும் இல்லையே" என்றார்களாம்.

இயேசுவின் அருள்மொழிகள் நம் வாழ்வு செம்மைப்படுத்தப்படவும், நெறிப்படுத்தப்படவும் கூறப்பட்டிருக்கின்றன. நாம் அவைகளை வாசிப்போம், தியானிப்போம். அவற்றின்படியே வாழுவோம். இந்தப் பூமியில் வாழ்வில் மட்டுமே நாம் நம் பாவங்களுக்காகக் கண்ணீர்விட முடியும்; இறை மன்னிப்பும் பெற முடியும். ஏனெனில் இப்பூமின் நாட்கள் இரக்கத்தின் நாட்கள் என்பதை உணருவோம். ஆமென்.

Fr. ஜெகநாதன், அய்யம்பாளையம், திண்டுக்கல்

Happy Easter


இறைமனிதன் மனிதனாக மண்ணில் மனுவுரு எடுத்து
பிறந்தது - வாழ்வின் தொடக்க காலம்
பணி வாழ்வில், போதனை, சாதனை, புதுமை புரிந்தது
வாழ்வின் இடைப்பட்ட காலம்.
பாடுகளினால் கிடைத்த பரிசாகிய இறப்பு
வாழ்வின் இறுதிக் காலம்.
முக்காலத்திற்கும் மணிமகுடம் சூட்டிய மாபெரும் நிகழ்வு
இயேசுவின் உயிர்ப்பு!
மரித்த மனிதர்களாய் வாழும் மனிதர்களும் உண்டு
வாழும் நாட்களிலே மடிந்து போகும் மனிதர்களும் உண்டு
மரித்த மனிதர்கள் மறைந்து போகின்றவர்களும் உண்டு
உயிர்த்தது! உயிர்ப்புக்குச் சான்று பகர்ந்தது
மாமனிதன் கிறிஸ்து ஒருவரையே சாரும்.
இயேசு கிறிஸ்துவைத் தவிர உயிர்ப்பு
இதுவரை நிகழ்ந்தது இல்லை
பாடுகளினால் பாவத்தைப் போக்கினார் கிறிஸ்து
மரணத்தால் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார் கிறிஸ்து
சாதிக்கத் துணிந்த இயேசுவுக்கு இறப்பும் உயிர்ப்பே!
பாடுகள் தந்த பரிசு இறப்பு
இறப்பு தந்த பரிசு உயிர்ப்பு
உயிர்த்தார்! உலகை வென்றார்!
தோல்வியோ! துயரமோ!
சோதனையோ! வேதனையோ!
இருளோ! இடர்ப்பாடுகளோ!
எதுவானும்
முடியும் என்று முயற்சி செய்வோம்.
தளர்ந்து விட்டாயா?
திடப்படுத்திக்கொள் (இயேசுவைப் போல்)
விழுந்துவிட்டாயா?
எழுந்திட முயற்சி செய் (இயேசுவைப் போல்)
இருளிலிருந்து உயிர்ப்போம் - வெளிச்சத்திற்கு!
பொய்மைலிருந்து உயிர்ப்போம் - உண்மைக்கு!
அறியாமைலிருந்து உயிர்ப்போம் - ஞானத்திற்கு!
தோல்விலிருந்து உயிர்ப்போம் - வெற்றிக்கு!
ஏமாற்றத்திலிருந்து உயிர்ப்போம் - வாய்ப்பிற்கு!
குறுகிய மனதிலிருந்து உயிர்ப்போம் - பரந்த மனத்திற்கு!
குறை கூறுவதிலிருந்து உயிர்ப்போம் - நிறையைப் பார்ப்பதற்கு!
மானுடமே
மாயை வலைக்குள்
விழுந்து விடாமல்
மடிந்து விடாமல்
முடங்கி விடாமல்
முடிந்தவரை முயற்சி செய்வோம்
உயிர்ப்போம்! உலகை வெல்வோம்!

உயிர்ப்பின் சாட்சிகளாய்

"இறைவார்த்தையானது அருள் வாழ்வை நமக்குக் கொடுக்கும் கருவி. உலகின் முகத்தைப் புதுப்பித்து அனைத்தையும் புதுப்படைப்பாக்குகிறது. இறைவார்த்தையைக் கேட்பவர்களாக மட்டும் நாம் இல்லாமல், அதற்குச் சான்று பகர்பவர்களாகவும் இருக்க வேண்டும்" (ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு, எண் 91). இறைவார்த்தைக்குச் சான்று பகர்வதே குருத்து வத்தின் முதன்மையான பணியாக அமைகிறது. எனவேதான் திருத்தூதர் பவுல், "பிற இனத்தாரும் கடவுளுக்கு உகந்த காணிக்கையாகும்படி அவர்களுக்கும் நற்செய்தி அறிவிப்பதே என் குருத்துவப்பணி" (உரோ 15:16) என்று கூறுகிறார். இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் தூய மகதலா மரியா எவ்வாறு நமது சான்று வாழ்வுக்கு மாதிரி காட்டுகிறார் என்பதை நற்செய்தியாளர் யோவானோடு சேர்ந்து சிந்திப்பது நமது இறைப்பணி வாழ்வுக்கு உதவியாக அமையும்.

தாகத்தோடு ஒரு தேடல் (யோவா 20:1-10)

கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவைத் தேடிச் சென்ற முதல் பெண் மகதலா மரியா. அவர் இயேசுவைத் தேடிச்சென்ற நாள் வாரத்தின் முதல் நாள். நேரமோ அதிகாலைப் பொழுது. ஆக, ஒரு பகல் பொழுதின் முதல் மணித்துளிகளில் இயேசுவை மட்டுமே தன் வாழ்வில் முதன்மைப்படுத்தித் தேடுகிற அளவுக்கு அவருக்குள் உள்ளார்ந்த தாகம் இருப்பதை இது நமக்கு வெளிப்படுத்துகிறது. மகதலா மரியா இயேசுவைத் தேடிக் கல்லறைக்குச் செல்லுகின்ற நிகழ்வை நற்செய்தியாளர் யோவான் இரண்டு விவரிப்புகளாகத் தனது நற்செய்தியில் பதிவு செய்கிறார் (யோவா 20:1-10; 20:11-18)

முதல் தேடல் தந்த அனுபவம் (யோவா 20:2)

மகதலா மரியா ஆர்வத்தோடு இயேசுவைத் தேடிக் கல்லறைக்கு வந்தாலும், இயேசுவின் உயிர்ப்பைக் குறித்து அவர் பெறுகின்ற முதல் அனுபவம்

எதிர்மறையானதாகவே அமைகிறது. கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டு வெறுமையாகக் காணப்பட்ட கல்லறையைப் பார்த்தவுடனே அவர் பதறிப்போய், ‘இயேசு உயிர்த்தெழவில்லை, மாறாக அவருடைய உடலானது திருடப்பட்டுவிட்டது ' என்ற எதிர் மறையான முடிவுக்கு வருகின்றார்.
அந்த எதிர்மறை அனுபவத்தை உடனடியாக மற்ற திருத்தூதரிடம் தாமதிக்காமல் வந்து பகிர்ந்து கொள்கிறார் (யோவா 20:2).

தொடர் தேடலின் படிநிலைகள் (யோவ 20:11-18)

மகதலா மரியா இயேசுவின் வெறுமையான கல்லறையை இரண்டாவது முறையாகப் பார்வைடும் விவரிப்புப்பகுதியை யோவான் 20:11-18இல் வாசிக்கின்றோம். உயிர்த்த இயேசுவுக்கும் மகதலா மரியாவுக்குமிடையே நடைபெறும் தனிப்பட்ட, உள்ளார்ந்த, ஆத்மார்த்தமான சந்திப்பு நிகழ்வாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற நற்செய்தியாளர்கள் வேறு சில பெண்கள் கல்லறைக்குச் சென்று பார்க்கும் குறிப்புகளைத் தரும் வேளையில் (மாற் 16:1; மத் 28:1; லூக் 24:1), மகதலா மரியாவை மட்டும் இயேசுவின் வெறுமையான கல்லறையருகே தனிமைப்படுத்திக் காட்டுவது யோவானின் தனிச் சிறப்பாக அமைகிறது. உயிர்த்த இயேசுவைச் சந்திக்க மகதலா மரியா மேற்கொள்ளும் இந்தத் தொடர் தேடல், இயேசுவின் உயிர்ப்பில் அவரைப்படிப்படியாக விசுவாசத்தின் முழுமைக்கு அழைத்துச் செல்வதை நாம் பார்க்கிறோம்.
                                   
அடையாளம் காண முடியவில்லை (யோவா 21:4-7; லூக் 24:13-31). மகதலா மரியா இன்னும் விசுவாசத்தின் உள்ளொளியைப் பெறவில்லை. எனவேதான் இயேசுவைத் தோட்டக்காரர் என்று அவர் நினைக்கின்றார். இயேசு அடக்கம் செய்யப்பட்ட கல்லறை புதிதாக இருந்ததால், ஒரு வேளை தோட்டக்காரர் அவரின் உடலை இடம் மாற்றி வைத்திருக்கக்கூடும் என்று நினைத்து, அந்த இடத்தை அறிய முற்படுகின்றார். இவ்வாறு தனது தேடலை இன்னும் ஆழப்படுத்துகிறார்.

"மரியா" (யோவா 20:16)

தனது தேடலின் ஆழத்திலே இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளுகின்ற உச்ச நிலைக்கு மரியா வருவதை இங்கு பார்க்கிறோம். இயேசு மகதலா மரியாவைப் பெயர் சொல்லி அழைக்கின்றார். உடனே விசுவாசத்தோடு அவரைப்பற்றிக் கொள்கிறார். அதாவது முகம் தரையில் முழுமையாகப்படுமாறு பயபக்தியோடு அவரைத் தாழ்ந்து பணிந்து வணங்குகிறார். பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் இறைவெளிப்பாட்டின்போது நடக்கின்ற நிகழ்வை இச்செயல் நம் நினைவுக்கு கொண்டுவருகிறது (நீத 13:20; 1 அர 18:42). மகதலா மரியாவின் இச்செயலானது அவர் சிறிது சிறிதாக உயிர்த்த இயேசுவைத் தொடர்ந்து தேடி, அவரில் விசுவாசம் கொள்ளும் உச்ச நிலைக்கு வந்துவிட்டார் என்பதையே நமக்குக் காட்டுகிறது. உயிர்த்த இயேசு ஒரு நல்ல ஆயர், அவர் தனது ஆடுகளைப் பெயர் சொல்லி அழைக்கின்றார். அவர் மந்தைன் ஆடுகளும் அவரின் குரலை அறிந்து நேர்மறையாகப்பதில் கொடுக்கின்ற உண்மையை இங்கு நாம் பார்க்கிறோம் (யோவா 10:14)

மரியாவின் சான்று : "நான் ஆண்டவரைக் கண்டேன்" (யோவா 20:18)

மகதலா மரியா உயிர்த்த இயேசுவை அடையாளம் கண்டு, அவரில் முழுமையாக நம்பிக்கை கொண்டு, தான் பெற்ற உயிர்ப்பு அனுபவத்தைத் தனது சகோதரர்களிடம் சென்று சான்று பகர இயேசு கட்டளைடுகின்றார். "ஆண்டவர் இயேசு தான் முன்பு உரைத்தபடியே உயிர்த்துவிட்டார். இப்போது தனது தந்தையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார் " என்று அவரது உயிர்ப்பை அறிக்கைடும் முதல் சாட்சியாக மகதலா மரியா அனுப்பப்படுகிறார். மகதலா மரியாவின் "நான் ஆண்டவரைக் கண்டேன்" எனும் அனுபவ நற்செய்தியானது, ஆண்டவர் உயிர்த்துவிட்டார், அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற நற்செய்தியை நமக்குப்பறைசாற்றுகிறது.

மகதலா மரியாவின் தேடல் நம் வாழ்வின் தேடல்

உயிர்த்த இயேசுவைத் தேடுதலில் மகதலா மரியா மேற்கொள்ளும் தொடர் முயற்சி, நம் அனைவரின் வாழ்விலும் இயேசுவை முதன்மைப்படுத்த, அவரை மட்டுமே தொடர்ந்து தேட அழைப்புக் கொடுக்கின்றது. இயேசுவால் பெயர் சொல்லி அவர் பணி செய்ய அழைக்கப்பட்ட இறைப்பணியாளரின் முதன்மையான ஆன்மீகத் தேடல் இயேசுவாக மட்டுமே இருக்க முடியும். வாரத்தின் முதல் நாளில், அதிகாலையில் கருக்கலோடு தைரியமாக தன்னந்தனியாக கல்லறையருகே சென்று இயேசுவைத் தேடும் மகதலா மரியாவின் தணியாத தாகம் இறைப்பணி வாழ்வில் நமக்கும் என்றும் குன்றாமல் குறையாமல் இருக்க வேண்டும் என்பதையே காட்டுகின்றது. உயிர்த்த இயேசுவைத் தேடுதலில் சிறிது சிறிதாக விசுவாசத்தின் முழுமையைப் பெற்ற மகதலா மரியா தான் பெற்ற உயிர்ப்பு அனுபவத்தை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளும் முதல் சாட்சியாகத் திகழ்கிறார். மகதலா மரியா பெற்ற அதே உயிர்ப்பு அனுபவம் நேற்றும் இன்றும் என்றும் மாறாத அனுபவமாக, ஒரு தொடர் அனுபவமாக நம் வாழ்வில் நிகழ்கிறது. இறைப்பணியாளர் என்ற நிலையில் உயிர்த்த இயேசு அனுபவத்தால் தூண்டப்பட்டு, உயிர்ப்பின் சாட்சிகளாய் என்றும் வாழ இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நமக்கு உதவட்டும்!

பணி. அந்தோணி மதலைமுத்து,
நல்லாயன் குருமடம், கோவை

இளைஞனே! விழித்தெழு! ஒளிவீசு!!


முன்னுரை

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்பதற்கேற்ப இந்த உலகத்தில் பிறந்திருக்கிற இளைஞர்களிடம் நிறைய திறமைகள் உள்ளன. ஆனால் பொறுமை இல்லை. அவர்களுடைய திறமை இந்த உலகிற்கு எப்படி ஒளிவீசும் என்பதைப் பினவருமாறு காண்போம்.

இளமைப் பருவம் என்றால் என்ன?

இளமைப் பருவம்தான் குறிப்பிடத் தக்க பருவம். எதனையும் செய்யத் துடிக்கும் பருவம். துணிச்சல் மிக்க பருவம். சாதனைகள் பல செய்யத் துடிக்கும் பருவம். கனவுகள் பல காணத் துடிக்கும் பருவம். வெயிலின் அருமை நிழலிலே தெரியும். அதுபோல இளமையின் அருமை முதுமையில் தெரியும். செய்ய வேண்டிய எந்தச் செயலையும் இளமையிலே செய்து முடித்தல் வேண்டும்.

இளைஞர்களிடம் இருக்க வேண்டியவை

அமைதியாக இருஅடிமையாக இராதே.

பணிவாக இருபதுங்கி விடாதே.

நம்பிக்கை என்பது நூறாவது படி என்றால் துணிச்சல் என்பதுதான் தொண்ணூற்று ஒன்பதாவது படி.

வெற்றி என்பது நூறாவது படி என்றால் முயற்சி என்பதுதான் முதற்படி.

உன் முயற்சி வளர்க! வெல்க!

மாரூர் தாராபாரதி சிந்தனைகள்.

மூலையில் கிடக்கும் வாலிபனே!

வேலை கிடைக்கவில்லை என்று மூலையில் கிடக்கும் வாலிபனேமுயற்சி செய்யாவிட்டால் எப்படி வேலை கிடைக்கும் எனது வாழ்க்கை பயனற்ற பாலைவனம் போல் ஆகிவிட்டதே என்று எதற்குப் பல்லவி பாடுகிறாய்.

விரல்கள் பத்தும் சொத்து

வேலை செய்ய ஒரு பொருளும் இல்லையே என்று நினைப்பது அறியாமைக் குணம். இருகை விரல்களும் மூலதனம். அவற்றின் மூலம் கருங்கல்லையே தூள் தூளாக ஆக்கிவிடலாம். உலகையே ஒரு கையில் சுழற்றிவிடலாம்.

சுண்டுவிரல் நகமாய் வானம்

கை கட்டை விரலின் உயரத்தைவிட இமயமலை குட்டையானது என்று கூறு. சுண்டுவிரலின் நகமாய் விரிந்த வானம் சுருங்கிவிட்டது எனப் பிறருக்குச் சொல்.

தொடுவானம்தான் உனக்கு எல்லை

உன் வலிமை மிக்க இரண்டு தோள்களும் நீ தொழில் புரியும் தொழிற் சாலையாகும். நீ விரும்பித் தொழில் புரியும் இடமே உனக்கு மலர்ச்சோலை ஆகும். இனி உனக்கு இல்லை கவலை. இனி தொடுவானம்தான் உன் எல்லை.

கங்கையும் சிந்துவும் ஓடி வரும்

உன் கால் விரல்களோடு கோடு கிழித்தால் அதில் கங்கை நதியும்சிந்து நதியும் ஓடி வரும். உன் வலிமை மிக்க தோள்கள் வடதுருவத்தையும் தென் துருவத்தையும் இணைக்கும் பாலமாகும்.

வேலைகளல்ல வேள்விகளே

மனிதனே மாபெரும் சக்தி கொண்ட நீ மண்புழு அல்ல. உன் சக்தியை விண்ணடை சென்று வெற்றி கொள். உன் மாபெரும் சக்தியை அங்கு நிகழ்த்து.

விண்ணிலும் மண்ணிலும் ஏற்படும் நிகழ்வுகள் வேலைகளல்ல வேள்விகளே.

இளைஞர்களுக்கு விழிப்பூட்டும் கவிதைகள்

இளைஞனே!

விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் எல்லாம்

உழைத்துக் கொண்டிருப்போம்.

உளிபடாத கல் சிலையாவதில்லை

உழைப்பில்லாத கனவு நனவாவதில்லை

சோர்வும் சோம்பலும் கண்டு நூறு நாட்கள் வாழ்வதைவிட

பேருழைப்போடு ஒரு நாள் வாழ்தல் மேலானது.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும் வாழ

நின்றால் ஓடி விடுவதில்லை

எதையும் தாங்கும் இதயமிருந்தால்

இறுதி வரை அமைதி கிடைக்கும்

இளைஞனே!

எழுச்சி கொள் உறக்கம் என்பது புதைமணல்

போராடு போராட்டம் இல்லாத வாழ்க்கை

நீரோட்டம் இல்லாத ஆறு போன்றது.
எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்
எனவே இளைய நண்பர்களே!

வேகத்தைக் குறையுங்கள்

விவேகத்தைத் தேடுங்கள்

வாழ்வு வளமாக அமையும்.

இளைஞர்களே! மேற்கண்ட கருத்துகள் மூலம் உங்கள் திறமையை இந்த உலகிற்கு ஒளிவீசுங்கள். பிறப்பைச் சம்பவமாக்கிஇறப்பைச் சரித்திரமாக்க வேண்டும் என்ற உறுதி எடுத்து இந்தியாவைத் தலை நிமிர்ந்து நிற்கச் செய்ய வேண்டும்.

வாழ்க இளமை! வளர்க திறமை!

அஞ்சுதா
ஆம் வகுப்பு
புனித பேட்ரிக் மே.நி.பள்ளி
அளுந்தூர்  திருச்சி

நல்லவற்றில் நிலைக்க


SMS செய்தி ஒன்று வந்தது : "ஏப்ரல்1 ஆம் தேதி ஏமாந்தால் ஒரே ஒரு நாளோடு முடிந்துவிடும். ஆனால் ஏப்ரல் 13ஆம் தேதி ஏமாந்தால் அது ஐந்து ஆண்டு களுக்கு நீடிக்கும். எனவே நன்றாக சிந்தித்து நல்லவர்களுக்கு ஓட்டு பதிவு செய்யுங்கள்".

இவ்விதழ் உங்கள் கைகளுக்குக் கிடைக்கும்போது ஓட்டு போட்டு முடித்திருப் பீர்கள். இன்னும் சரியாக ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். அதன் விளைவு என்ன என்று தெரிந்து கொள்ள. நல்லதே விளையும் என நம்புகிறோம்ஜெபிக்கிறோம்.

இயேசுவின் இறப்போடு எல்லாம் முடிந்து போயிற்று. இனி புதிய போதகனின் தொந்தரவு இல்லை என்றுதான் நினைத்தது ஒரு கூட்டம். ஆனால் விரைவாகவே அவர்களுக்கு வந்தது ஏமாற்றம்.  நாட்களில் வந்த "உயிர்ப்பின் செய்தி" பெரும் அதிர்ச்சியாயிற்று அவர்களுக்கு. நம்ப முடியாமல் ஆயிற்று. இயேசுவை எதிர்த்தவர்கள் மட்டுமல்லஅவருடைய சீடர்களுமேகூட நம்ப முடியாமல் இருந்தனர்.

நம்பிக்கை என்கிற வார்த்தை மனித வாழ்விற்கு அடிப்படையே. இயேசுவின் உயிர்ப்பு பற்றி சிந்தனையளவில் உள்ளோர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தாலும் பதில் என்பது விசுவாசத்தோடு இணைந்ததே. ஆனால் எனக்குள் எழும் கேள்வியும் சிந்தனையும் இதுவே. எல்லோருமே உயிர்ப்பைநம்பக்கூடிய அளவிற்கு ஈஸ்டர் கொண்டாடும் கிறிஸ்தவர்கள் சான்று பகரவில்லையா வாழ முடியவில்லையா உயிர்ப்பின் மகிமைக்கு விழா எடுப்போர் தம் வாழ்வில் நல்லவற்றை உயிர்ப்பிக்கவில்லையா முழுமையாக இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. சாவுக்குப் பின் உயிர்ப்பு எனச் சொல்வோர் தாம் வாழும் இக்காலத்தில் நல்ல வாழ்வுசெயல்கள் மூலம் உயிர்ப்பின் மகிமையை உணர மறந்த நிலை. தீமைகள் புதைக்கப் படுவதும் நன்மைகள் வாழ்வதுமே உயிர்ப்பின் மகிமை. இத்தன்மை புரியாத நிலையில் தீமைகளோடு இணைந்து கொண்டு இயேசுவின் மதிப்பீடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிடும் நிலையில் உயிர்ப்பு அர்த்தமே இல்லாமல் மாறிப் போனது.

சமூக நன்மைகள் . . . அதை வளர்க்கும் மனித மனங்கள் . . . நல்லவற்றில் நிலைத்து நிற்கும் செயல்பாடுகள் உயிர்க்க வேண்டும் என விரும்புகிறோம். நாமும்வீடும்சமூகமும்திருச்சபையும் உயிரூட்டமுள்ளதாய் மாற தனி மனித மனங்கள் உயிர்க்க வாழ்த்துகிறேன்.

உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்கள்!


சே. சகாய ஜாண்