அன்பெனப்படுவது

"என்ன பொழப்புடா இது! நாய் பொழப்பு" என்று சிலர் அலுத்துக்கொள்வார்கள். என்னுடைய பொழப்பும் நாய்களைப் புடிக்கிற பொழப்புதான். ஆனால் ஒரு நாள் கூட நான் அதற்காய் அலுத்துக்கொள்வதில்லை. நாய் புடிக்கும் மாநகராட்சி லாரியில் ஒரு கையில் சுருக்குக் கையிறோடு இன்னொரு கையில் லாரியைப் பிடித்துக்கொண்டு ஸ்டைலாக நின்னு வந்தேன்னா, எமன் தான் பாசக்கயிறோடு வர்ரான்னு தெருவில் இருக்கும் நாய்கள் எல்லாம் பம்மிப் பதுங்கி வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடும்.

அந்த நாய்கள் என்னைப் பார்த்து பயந்து ஓடுவதைப் பார்க்கும்போது எனக்குப் பேரானந்தமாக இருக்கும். சில நாய்கள் திமிரோடு என்னைப் பார்த்து முறைப்பதைப் பார்த்தால் எங்கிருந்துதான் எனக்குக் கோபம் வருமோ தெரியாது. தலைக்கு மேலே கையைத் தூக்கி, சுருக்குக் கையிறை ஒரு சுத்து சுத்தி சுழட்டி முறைக்கும் நாயின் மீது வீசினால் சும்மா கில்லி மாதிரி, தலைவர் நம்ப பாசக் கயித்துலே மாட்டிக்கினு ஒரு துள்ளு துள்ளுவாரு பாருங்கோ, அது அப்படி ஒரு துள்ளலா இருக்கும்.

கடைசியா உயிர் போகும் போது மரண ஓலம்முன்னு சொல்லுவாங்க பாருங்க அப்படி மரண ஓலமிட்டுக் கத்தும் அந்த நாய். அந்தக் கத்தல்தான் என் கோபத்த தணிக்கும். மாட்டிக்கின அந்த நாயின் வாயக் கட்டி ஒரே இழுவா இழுத்து வண்டியிலே தூக்கிப் போட்டு வாய்க்கட்டி நேக்கா அவுத்து கூண்ட முடும் போது உண்மையிலே ஒரு கம்பீரமான பெருமிதம் என் மனசுக்குள்ளே ஏற்பட்டு பரவசமடையும். அந்தச் சுகமே தனி அலாதியானது.

மாட்டிக்கின அந்த நாய் வண்டியிலே அப்படியும் இப்படியுமா ஓடி.. ஓடி... கடைசியிலே விதி விட்ட வழின்னு உக்காந்திடும். அப்போ அந்த நாயப் பாக்கும் போது ரொம்ப பரிதாபமா இருக்கும். எங்கிட்டயா உன் வேலய காட்டுற, செய்யிற வேலையிலே நான் ரொம்ப கறாருன்னு மனசுக்குள்ள நானே சொல்லிக்குவேன்.

இதுலே இன்னொரு வேடிக்கை இன்னான்னா, ஒரு ஏரியாவுல இருந்து இன்னொரு ஏரியாவுக்குப் புது நாய் ஒன்னு வந்தா, அந்த ஏரியாவுல இருக்கிற எல்லா நாய்களும் ஒன்னா சேந்துன்னு அந்தப் புது நாயப் பாத்து கொலைக்கும் பாருங்க, அப்படி ஒரு கொலைப்பா இருக்கும். கொலச்சி விரட்டி விரட்டி அடிக்கும். தப்பித் தவறி அந்த நாய் மாட்டிக் கொண்டால் எல்லா நாய்களும் ஒன்னா சேந்து கடிச்சி கொதறி எடுத்துடும்.

ஆனா பாருங்க, நாய் வண்டியிலே மாட்டிக் கொண்ட நாய்கள் எல்லாம் கொஞ்ச நேரம் ஒன்னப் பார்த்து ஒன்னு உறுமிக் கொலைக்கும். அதற்கு அப்புறம் தாங்கள் ஒன்றாக மாட்டிக் கொண்டோம் என்பதை உணர்ந்து பயந்த சுபாவத்துடன் கம்பிகளுக்கு வெளியே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு செல்லும். அதற்குப் பிறகு அவைகளுக்குள் சண்டையே ஏற்படாது.

மிருக வதை தடுப்புச் சட்டத்தின்படி தெரு நாய்களைப் பிடித்து புளூ கிராஸ் அமைப்பினரிடம் சேர்த்துவிடுவோம். அவர்கள் ஒவ்வொரு நாயையும் பிடித்து மயக்க ஊசியைப் போட்டு அவைகளுக்குக் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்து அதே வண்டியில் ஏற்றி அனுப்பி விடுவார்கள். எங்காவது ஒரு மைதானத்தில் அவைகளை விட்டு விடுவோம். இதுதான் நம்ப தொழிலு.

அன்னிக்கு வேலைக்குப் போயி மாநகராட்சி ஆபீசுக்குப் பக்கத்தில் இருக்கிற டீ கடையில் டீ குடிச்சினு இருக்கும்போது, பெரிய ஆபீசர் உன்னக் கூட்டினு வரச் சொன்னாருன்னு சொல்லி கூட வேல செய்யிற கோவிந்தன் வந்து கூப்புட்டான். இன்னாத்துக்குக் கூப்புட்டாருன்னு நௌச்சிக்கினே ஓட்டமும் நடையுமா ஓட அவரு முன்னால போய் நின்னேன். வடிவேலு, ஒரு கம்ப்லெயின்ட் வந்து இருக்கு. அக்ரகாரத்து மேலத் தெருவுல தெரு நாய்ங்க தொல்லை அதிகமா இருக்குதாம். தெருக்காரங்க எல்லாம் ஒன்னா கையயழுத்துப் போட்டு கம்ப்லெயின்ட் குடுத்து இருக்குறாங்க. அது பத்தாதுன்னு பேப்பர்ல வேறு எழுதிட்டாங்க. மேல இருந்து என்ன ஏதுன்னு பாக்கச் சொல்லி மேல உத்தரவு. போய் பாத்துட்டு வா.

சார்.. போன மாசம்தான் அந்த ஏரியாவுல இருக்குற எல்லாத் தெரு நாய்களையும் மொத்தமா புடிச்சினு போயி ஆபரேசம் பண்ணி விட்டோம். மறுபடியும் போவனுமா? போனாக்கூட சும்மா வேஸ்ட்டுதான் சார். ஒரு நாய்கூட மாட்டாது. யோவ், நாய்கள் மாட்டுதோ இல்லையோ, வண்டிய எடுத்துனு போய் ஒரு சுத்து சுத்திட்டு வா... நாய் புடிக்க வந்தாங்கன்னு பேராவது இருக்கும். அந்த ஏரியா வார்டு மெம்பர்ல இருந்து, கவுன்சிலர் வரைக்கும் தினமும் போன் போட்டு கேக்கறாங்க. அப்படி அனுப்ப லேன்னா; எம்.எல்.ஏ, எம்.பி. வரைக்கும் போவோமுன்னு மெரட்டல் வேற. வண்டிய எடுத்துனு போய் ஒரு சுத்து சுத்திட்டு வா... போ...

பெரிய ஆபீசர் சொன்ன மாதிரி, வண்டிய எடுத்துனு போயி அக்ரகாரத்
தெருவையே அலசிப் பார்த்துட்டோம். ஒரு நாய்கூட கண்ணுக்கு மாட்டல. அக்ரகார நாலு தெருவையும் சுத்தி சுத்தி வந்ததுதான் மிச்சம். சோர்ந்துபோய் வண்டியிலே திரும்பும்போது, ஒரு சந்துல செவிலிக் கலர் நாய் ஒன்னு என்னைப் பாத்து பதுங்கி... பதுங்கி... போறதைப் பார்த்து சட்டுனு கையில இருக்கிற கயித்தோட நானும் பதுங்கிப் பதுங்கிப் போய் கப்புனு அந்த நாய்க் கழுத்துல சுருக்குக் கயித்தைப் போட்டு புடிச்சி வண்டிலே போட்டுனு புளூ கிராஸ் ஆபீசுக்கு வண்டிய விட்டேன்.

குய்யோ முறையோன்னு கொலச்ச அந்த நாய் கொஞ்ச நேரத்துல கம்முன்னு வெளியே வேடிக்கை பாத்துனு வந்தது. என்னையா பாத்துட்டு பதுங்குற இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு ஆபரேசன் தலைவா என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு, அப்போதுதான் அது ஆணா பெண்ணான்னு பார்த்தேன். அது ஆண் நாய்தான்.

நாய் வண்டி போய்க்கொண்டே இருந்தது. அந்த வண்டியில் கூண்டுக்கு அந்தப் பக்கம் அந்த நாயும், இந்தப் பக்கம் நானும் மட்டும்தான் இருந்தோம். அன்று காலை என் மனைவி பேசிய பேச்சு என் மனதில திடீரென்று ஒலிக்க ஆரம்பித்தது. கண்களில் கண்ணீரோடு, ஏங்க, நமக்குக் குழந்தையே பொறக்காதா? நானும் வேண்டாத கடவுள் இல்ல. போகாத கோயில் இல்ல, சாப்பிடாத மாத்திரை மருந்துகள் இல்ல. நமக்குக் கல்யாணமாகி பத்து வருசங்களுக்கு மேல் ஆச்சி. என் வயித்துல ஒரு புழு, பூச்சிகூட உண்டாக மாட்டேங்குது. பாக்குறவங்க எல்லாம் இன்னுமா கொழந்த பொறக்குலேன்னு கேட்டு நச்சரிக்கிறாங்க. எந்த ஒரு நல்ல காரியத்துக்கும் சொந்தக்காரங்க வீட்டுக்கும், அக்கம்பக்கம்கூட போக முடியலே. ரொம்ப அவமானமா இருக்கு என்று சொன்ன போது என்னையே நான் நொந்து கொண்டேன். குறை உனக்கு இல்லேம்மா, என் உடம்புலதான் குறை. அதற்கு நீ என்ன பண்ண முடியும் என்று அவளைத் தேற்றிவிட்டு வேலைக்கு வந்துவிட்டேன். என் உடம்புல குறைய வச்சிக்கினு என்ன கட்டிக்கிட்ட பாவத் துக்காக அந்தப் பொண்ணு அவமானப்படுதேன்னு என் மனம் மிகவும் வேதனைப்பட்டது. ச்சே... கடவுள் என்னை இப்படி விளங்கா படச்சிட்டானே என்று மனதுக்குள் விரக்தியாய் நினைத்த எனக்குள் திடீரென்று ஒரு ஒளிக்கீற்றாய் மின்னல் எண்ணங்கள்.

எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ, இப்படி மலடாய்ப் பிறந்து கட்டிய பொண்டாட்டிய அவமானப்பட வைத்து விட்டேன். அதற்கு பிராயச்சித்தமாக இந்த நாயை விட்டுவிடலாம், அதாவது சந்தோசமாக இருந்து குட்டிகளைப் பெற்று தன் இனத்தை விருத்தி செய்யட்டும் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டு அந்த நாயைப் பார்த்தேன். என் பார்வையில் இப்போது கொலை வெறியோ, வெறுப்பு உணர்ச்சியோ, பழி தீர்க்கும் எண்ணமோ இல்லை என்பதை உணர்ந்துகொண்ட அந்த நாயும் என்னைப் பாசத்துடன் பார்த்தது. அதற்கு அடையாளமாக தன் வாலை ஆட்டி சிநேக மனப்பான்மையுடன் குழைந்து குழைந்து தன் முன்னங் காலைக் கம்பியின் மீது வைத்துப் பிராண்டியது.

டிரைவர் வண்டியை நிறுத்து... நிறுத்து.. என்று கத்தி வண்டியை நிற்க வைத்து, அந்த நாயை வெளிவே விட்டேன். சுதந்திர உணர்வு என்ன என்பது அடிமைப்பட்டவனுக்கு மட்டும்தான் தெரியும். அதைப்போல இந்த நாயும் ஒரே தாவலாக தாவி வெளியே ஓடியது. அது ஓடுவதையே பார்த்துக்கொண்டிருக்கும் போது, கொஞ்ச தூரம் ஓடிய அந்த நாய், ஒரு முறை என்னைத் திரும்பிப் பார்த்தது. அது எதற்காக அப்படிப் பார்த்தது? தன் நன்றி உணர்ச்சியினாலா? அல்லது சுயநலத்தால் கடமையைத் தவறியவனே என்று சுட்டிக்காட்டத்தானா? யாருக்குத் தெரியும்.

0 comments:

Post a Comment