உயிர்ப்பு

உயிர்ப்பு விழாவை உவகையுடனும்
உற்சாகத்துடனும் கொண்டாடும் மனிதா!
மண்ணில் மலர்ந்த நாள் முதல் மாசுபட்ட
உன்னிடம் உயிர்க்க வேண்டியவை ஏராளம்
சாதிச் சாக்கடையினின்று சந்தடி படாமல்
எழுந்து நல்மனிதனாய் உயிர்த்தெழு!
அடுத்தவர் பெயர் கெடுக்க ஆளாய்ப் பறக்கும்
அக்கப்போர் சகதியினின்று புடமிட்டு உயிர்த்தெழு!
பாலுறவை இயற்கை உபாதையாகக் கருதி
கற்பைக் கேள்விக்குறியாக்கும் களவாணித்
தனத்திலிருந்து உயிர்த்தெழு!
தான் வாழ பிறரைச் சாகடித்து
சன்மார்க்கம் தேடும் நீ
சுயநலக் கழிவினின்று உயிர்த்தெழு!
அயலானை அன்பு செய்கிறேன் என்று
உறவாடிக் கெடுக்கும் ஈனத்தனத்தினின்று உயிர்த்தெழு!
உயிர்ப்பு விசுவாச சத்தியம் மட்டும் அன்று
உண்மையும்கூட!
உயிர்ப்பால் மறுரூபம் அடைய
உலுத்துப்போன உலக ஆசாரங்களை
நம்பிக்கைகளை முழுமையாய் விட்டொழி!
ஐயமற்ற விசுவாசம் பெரும் மலையையும்
இடம்பெயரச் செய்யும்
களைப்பதராகப் பாதாளம் சென்றுவிடாமல்
உயிர்ப்பின் மகிமை காண
உண்மைக் கடவுள் இயேசுவை நம்பு!
அவர்தம் வார்த்தையைக் கடைப்பிடி!
எல்லாம் ஒன்றாகும் நன்றாகும் மண்ணிலே!

ச. செல்வராஜ், விழுப்புரம்

0 comments:

Post a Comment