சிலுவையை நோக்குவோம்

சிலுவையை நோக்குவோம் - அதில்நம்
சிந்தையைப் பதிப்போம் அன்பின் உருவத்தை
கருணையின் இருப்பிடத்தை மரத்தோடு மரமாய்
இணைத்திட்ட நம் பாவ ஆணிகளை அதில் பார்ப்போம்

சிலுவையைச் சுமக்க இயேசு சிந்தை கலங்கவில்லை
சாட்டை அடிகளுக்கும் சண்டாளர் வார்த்தைகளுக்கும் - தவச்
சீலன் தவறி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை - இவர்
தவக்கோலம் பூண்ட தத்துவ வித்து - தரணிக்கு வந்த நல்முத்து.

விண்ணகத்தில் மணிமுடியைத் தரித்த மகன் - இம்மண்ணில்
கொடிய முள்முடியைச் சூட்டி கொடும் வேதனைப்படுவது
தலைக்கணம் மிக்கோராய் நாம் இத்தரணியில்
தரிகெட்ட வாழ்வை நெறி தவறி வாழ்வதால்தானே!

மரியின் மடியில் தவழ்ந்த மகன் கண்மணியாய் வளர்ந்த மகன்
கல்வாரி மலையும் கதறித் துடிக்கும் வண்ணம் கைதியாய்ப்
போகின்றார் கண்டோரெல்லாம் கதறித் துடிக்கின்றனரே - நண்பா
நீ செய்த பாவங்களுக்காய்க் கதறி அழுவது எப்போது?

ஆடையை உரித்து அவமானப் படுத்துகின்றனர் - மேடைபோட்டு
அவர் மேனியை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர் - இருந்தாலும்
தந்தாய் இவர் செய்கையை மன்னியும் என்றாரே - நண்பா
பிறர் செய்த தீமைகளை நீ மன்னிப்பது எப்போது? இருந்தாலும்

சிலுவையை நோக்குவோம் அதில் நம் சிந்தையை வைப்போம்
இல்லையென வந்தோர்க்கு இல்லை எனச் சொல்லாமல் – இருப்பதைப் பகிர்ந்துண்டு மகிழ்ந்திடுவோம் உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் கொடுக்காமல் கடமையைச் செய்திடுவோம் தவக்காலத்திலே.

-தங்க. ஆரோக்கியதாசன், ஆவடி

0 comments:

Post a Comment