இயேசுவில் உயிர்ப்பில்

உயிரோட்டமாய் வாழ்ந்தால்
உயிர்ப்பு என்பது உண்மையாகும்
சிறு விதை நிலம் கிழித்தால்
பலர் தங்கும் பரந்த மரமாகும்
அற்பப் புழு முனைந்தால்
பாழான மண் பண்படையும்.

 இயேசுவின் பாடுகள், மரணமே
அவருக்கு உயிர்ப்பைத் தந்தது
நமக்கு மீட்பைக் கொணர்ந்தது.
ஆணிகளும், சாட்டையும்
ஈட்டியும், முள்முடியும்
உயர்ந்து நின்ற மரச்சிலுவையும்
கல்லறை உடைக்க
துணை நின்ற கருவிகளே.

நமது துன்பமும்
நல் இன்பத்திற்கான வழியே.
நாம் உயிரோட்டமாய் வாழ்ந்து
உயிர்த்தால் மட்டும் போதுமா?
பிறரையும் உயிர்ப்பிக்க வேண்டாமா?
இனிமேல் பாவம் செய்யாதே
எழுந்து உன் படுக்கையை எடுத்துச் செல்
‘தலித்தாகூம்'
வெளியே வா
என்ற வார்த்தைகள் உயிர்தந்தவையல்லவா.

 உதவிக் கரம் நீளும்போது
‘இவரே என் அன்பார்ந்த மகன்'
என்ற அங்கீகார வார்த்தையை
நாமும் கேட்கலாம்.
காற்றைப் போல
சாதி, மதம், மொழி கடக்கும்போது
திரைச் சீலை நம் வாழ்விலும்
மேலிருந்து கீழ்வரை கிழியலாம்

உயிரோட்டமும், உயிர்ப்பும்
துன்பமும், இன்பமும் வேறுவேறல்ல.
நாமும் வாழ்ந்து
பிறரையும் வாழவைத்தால்
நமக்கும் தாபோர் அனுபவமே.
உயிர் கொடுத்து
உயிர்ப்போம், உயிர்ப்பிப்போம்

திருமிகு. புஷ்பா
ஆசிரியை, சிவகங்கை

0 comments:

Post a Comment