The Commission of Tamil Nadu Latin Bishops Council for Vocation dedicates itself to promote vocation to Priesthood and Consecrated Life, for the building up of the Church and the Salvation of the World.
Mission Statement
The Primary Duty of the Commission is to sow the seed of vocation in the hearts of the Families, Youth and Children.
Methodology
1.Commission inspires, guides and coordinates the activities of vocation promotion in the Region.
2.Forming the Vocation Promoters in their mission of finding good spirited people who incline to say ‘Yes’ to the Call of God,the Commission makes the links between Dioceses and Religious Congregations.
3.Through seminars and ongoing training programmes, Commission concentrates on the formation of Youth and Children.
புனித ஜான் மரிய வியான்னியார் இறந்த 150-ஆவது ஆண்டு இது. இதனை அருள்பணியாளர்களுக்கான ஆண்டு எனத் திருத்தந்தை அறிவித்துள்ளார். இதன் நோக்கம் வியான்னியாரின் அருள் வாழ்வையும் அரிய பணிகளையும் சீரிய எடுத்துக்காட்டாகக் கொண்டு இன்றைய அருள்பணியாளர்கள் சிறப்புறச் செயல்பட வேண்டும் என்பதே. இருப்பினும் அருள் பணியாளர்களின் உயர்மாதிரி என அவரைப் பற்றிப் பேசும்போது அவர் கல்வித் திறன் அற்றவர், இறையியல் பாடத் தேர்வுகளில் தொடர்ந்து தோல்வியே கண்டவர், ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுவதில் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் செலவிட்டவர் எனும் செய்திகளேமீண்டும் மீண்டும் அழுத்தி யுரைக்கப்படுகின்றன. ஆனால் வியான்னியார் வாழ்விலும் பணியிலும் அதிகம் கண்டு கொள்ளப்படாத இன்னொரு பரிமாணம் உண்டு. அது பழமையிலே மூழ்கிக்கிடந்த 19-ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய திருச்சபையில் அவர் பழகிப்போன பல மரபுப் பணிகளைக் காலத்தின் தேவைக்கு ஏற்ப புதிய பாணிகளிலே செயல்பட முனைந்தவர் என்பதுவே.
பாமர மக்களேஅதிகமாக வாழ்ந்த ஆர்சு எனும் ஊரிலே அவர் பணி செய்தவர். அங்குள்ளமக்களைப் போல் அவரும் எளிமையாக வாழ்ந்தவர். அன்றைய பெரும்பாலான ஏனைய அருள்பணியாளர்களைப் போல அவர் மக்களிடமிருந்து தம்மை அந்நியப்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக அவர்களுடன் கூட்டுத்தோழமை ஏற்படுத்திக் கொண்டு அவர்களின் சகோதரப் பணியாளராகச் செயல்பட்டார். பாமர மக்களுடன் தோழமை கொண்டிருந்தாலும், அன்றைய ஐரோப்பாவில் நிகழ்ந்து கொண்டிருந்த சமூக-பொருளாதார- அரசியல்-பண்பாட்டு மாற்றங்களைக் கண்டுகொள்ளாது, ஆர்சு எனும் சிற்றூரின் குறுகிய வட்டத்திற்குள் தம் அக்கறைகளைமுடக்கிக்கொண்டவர் அல்ல வியான்னியார். மாறாக, பிரஞ்சுப் புரட்சி, மக்களாட்சியின் மலர்ச்சி, பகுத்தறிவுச் சிந்தனையின் வளர்ச்சி என்பவை மரபுக் கிறிஸ்துவ விழுமியங்களுக்கு எழுப்பிய சவாலையும், அதனால் மக்கள் மனங்களில் ஏற்பட்டிருந்த இறைநம்பிக்கை, ஆன்மீகம், அறவாழ்வு என்பவை சார்ந்த குழப்பங்களையும் அவர் நன்கு உணர்ந்திருந்தார். இதனால்தான் தெளிவு தேடி, ஆயிரக்கணக்கில் அவரிடம் வந்த அறிஞர்கள், அறிவியலார்கள், அரசியல் தலைவர்கள், கலை உலக சாதனையாளர்கள் என்பவர்களுடைய மனக்குழப்பங்களையும், வாழ்வுப் பிரச்சினைகள், தேடல்கள் என்பவற்றையும் நன்கு புரிந்து அவர்களைஅவர் நன்னெறிப் படுத்த முடிந்தது. இவ்வகையில் ஒப்புரவு அருளடையாளக் கொண்டாட்டத்தில் அவர் கொண்டு வந்தது புதுமையான ஒரு மாற்றம். அதாவது, அதுவரை பெரிதும் வெறும் பாவ அறிக்கை, பாவ மன்னிப்பு என்பவற்றிலேயே முடிந்துவிட்ட அதனை ஆன்மீக ஆற்றுப்படுத்தலுக்கு ஏற்ற தளமாக மாற்றிய சிறப்பு வியான்னியாருக்குத் தனிப்பட்ட முறையில் உரியது.
மக்கள் பிரச்சினைகளைமுன்னிறுத்தி மரபுப் பணிகளையும் மாற்றுப் பாணியில் செய்த வியான்னியார் இன்றைய திருச்சபைக்கும் அருள்பணியாளர்களுக்கும் விடுக்கும் சவால் ஒன்று உண்டு. அது இன்றைய காலத்தின் அறிகுறிகளுக்கும் மக்கள் பிரச்சினை களுக்கும் ஏற்ப தம் பணிகளைஅமைத்துக் கொள்வதற்கான அறைகூவலே. ஆம், பழமையின் பாதுகாப்புக்குள் பழகிவிட்ட பாணிகளின் எளிதான, தெளிவான வரையறைக்குள் தன் பணிகளைமுடக்கிக் கொள்ளக்கூடிய ஆபத்து எப்போதுமே திருச்சபைக்கு உண்டு. ஆனால், காலத்தின் அறிகுறிகளைக் கண்டு செயல்படத் தவறும் திருச்சபை விரைவில் காலாவதி ஆகிவிடலாம். மக்களின் வாழ்வுப் பிரச்சினைகள் பற்றிய அக்கறை இல்லாத அருள்பணியாளர்களின் பணிகள் மீது மக்களும் அதிக ஆர்வம் காட்டப் போவதில்லை.
இக்கண்ணோக்கில் நாம் தொடர்ந்து இன்றைய தமிழகத் திருச்சபை சந்திக்கும் முக்கிய பிரச்சினைகள் யாவை எனக் காண முயல்வோம். அப்பிரச்சினைகளைச் சமூகம் சார்ந்தவை, சபை சார்ந்தவை எனப் பிரித்து நோக்கலாம். எனினும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாத இரு வகையான பிரச்சினைகள் அல்ல. மாறாக, சமூகம்சார் பிரச்சினைகளேபெரிதும் சபைசார் பிரச்சினைகளுக்கும் காரணிகளாக அமைகின்றன. கிறிஸ்தவர்கள் இங்கு மிகச் சிறுபான்மையினர் எனும் வகையில் சபைசார் பிரச்சினைகளின் தாக்கம் புற சமூகத்தில் மிகப் பெரிது என நாம் கூற இயலாது. எனினும் உலகின் ஒளியாக, நிலத்தின் உப்பாக, மாவில் புதைக்கப்பட்ட புளிக்காரமாக சமூகத்தை இறை ஆட்சியாக வளர்த்தெடுப்பதே திருச்சபையின் பணி. எனவே சமூக ஈடுபாடு இன்றி திருச்சபை இல்லை.
சமூகம்சார் பிரச்சினைகள்:
இன்றைய நமது சமூகத்தில் நாம் சந்திக்கும் முதல் முக்கிய பிரச்சினை ஏழ்மை என்பதே. நமது நாட்டு மக்கள் தொகையில் ஏறக்குறைய 30%டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. வறுமை என்பது வயிறார உண்ண உணவு கிடைக்காத நிலை. பட்டினிக்கு ஆளாகி, நலிந்து மெலிந்து, நோய்வாய்ப்பட்டு, உயிர்பிழைக்க மருந்து வாங்கக்கூட வசதி இன்றி படிப்படியாக மக்கள் செத்துக்கொண்டிருக்கும் நிலையே வறுமை.
சங்க காலத்துப் பாணர் முதல் இன்றைய ஊர்ப்புறப் பாமரத் தொழிலாளி வரை வறுமை என்பது காலாகாலமாக இங்குப் பலரைப் பாதிப்பது. இருப்பினும் அறிவியல், தொழில்நுட்பம் காரணமாக இன்று வளமை பெருகியுள்ளது; வறுமையை முற்றாக ஒழிப்பதற்கு உரிய வழிமுறை களும் இன்று உள்ளன. இருப்பினும்கூட வறுமை இன்னும் தொடருகின்றது என்பதே மிகப் பெரிய கொடுமை. அதிலும் குறிப்பாக, உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், சந்தைமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்பவற்றால் உலகில் சில நாடுகள் ஏனைய நாடுகளையும், ஒவ்வொரு நாட்டிலும் சில முதலாளிகள் ஏனைய மக்களையும் சுரண்டி தாங்கள் கொழுக்கும் நிலையே உள்ளது. இதனால் ஊர்ப்புற மக்களின் தொழில்கள் நலியவிடப்படுகின்றன; அவர்களுடைய வாழ்வு ஆதாரங்கள் மீது அவர்களுக்கு உள்ளஉரிமை படிப்படியாகப் பறிக்கப்படுகிறது; விலைவாசி மிக உயர்ந்த அடிப்படைத் தேவைகளுக்கான பொருள்களைக் கூட பல மக்கள் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஊர்ப்புறங்களிலும் அங்கிருந்து மக்கள் பிழைப்புத் தேடி வந்து குடியேறும் நகர்ப்புறச் சேரிகளிலும் வேலையில்லாத் திண்டாட்டம், பட்டினி, கல்வியறிவின்மை, சுகாதார மருத்துவ வசதி என்பவை இன்மை, சிறார் தொழில் என்பன பரவிக் கொண்டிருக்கின்றன. அவற்றுடன் இணைந்து போதைப் பழக்கமும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
ஊர்ப்புறத் தாய்மொழி அரசுக் கல்விக்கூடங்களில் கல்வியின் தரம் மிகவும் தாழ்ந்திருக்கிறது. இதனால் ஓரளவு வசதியானவர்கள்கூட அதிகப் பணச்செலவில் தங்கள் பிள்ளைகளைத் தனியார் நடத்திக் கொள்ளைஇலாபம் சேர்க்கும் உயர்தர ஆங்கில மொழிவழிக் கல்விக்கூடங்களுக்கே அனுப்புகின்றனர். அத்தகைய கல்விக்கூடங்களுக்குச் செல்ல வசதியில்லாத பிள்ளைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பது அரிதாகிறது. இதனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி வறுமையின் பிடியிலிருந்து வெளியேற இருக்கும் ஒரே கதவும் அவர்களுக்கு அடைக்கப்படுகிறது. மேலும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் நாட்டிலேயே ஆங்கில மொழிவழிக் கல்வி கற்றவர்களுக்கே பல்வேறு துறைகளில் முன்னிடம் தரப்படுவதாலும், அவர்கள் நாகரீகம் உள்ளவர்கள், ஏனையோர் நாகரீகம் இல்லாதவர்கள் எனும் எண்ணம் பரப்பப்படுவதாலும் இங்கு ஆங்கிலக் கல்வி கற்றவர்கள் மதிப்பு அதிகம் உடையவர்கள், ஏனையோர் மதிப்புக் குறைந்தவர்கள் எனும் சமூகப் பிளவும் ஏற்படுத்தப்படுகிறது.
ஊர்ப்புறங்களிலும் நகர்ப்புறச் சேரிகளிலும் வறுமைக்கு ஆளாகி, தரமான கல்வி வாய்ப்புகள் இன்றி வாடுவோருள் மிகப் பெரும்பான்மையானவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்டவர்களாகிய தலித்களே. இவர்கள் இந்தியா சுதந்திரம் பெற்று ஆண்டுகள் அறுபதுக்கும் அதிகம் ஆகிய பின்பும் இங்குள்ளஉயர்சாதியினரால் பல வகைகளில் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். தலைமுறை தலைமுறையாக ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டு, சம உரிமைகள் மறுக்கப்பட்டு, உயர்சாதியினரால் உழைப்பு சுரண்டப்பட்டு, தீட்டு எனக் கருதப்பட்ட தொழில்களைச் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டு பல வேளைகளில் விலங்குகளிலும் இழிவாக இவர்கள் நடத்தப் படுகின்றவர்கள். இன்று அரசு தரும் சில சலுகைகள், கிறிஸ்தவம் தருகின்ற சில கல்வி வாய்ப்புகள் என்பவற்றைப் பயன்படுத்தி அவர்களுள் சிறுபான்மையினர் பொருளாதாரத்தில் முன்னேறியிருப்பது மெய்மையே. எனினும் அவர்களுள் பெரும்பாலோர் ஏழைகளாகவே உள்ளனர்; தாழ்வாகவே நடத்தப்படவும் செய்கின்றனர். சாதிய கொடுமைகள் பற்றிப் பரவிவரும் விழிப்புணர்வும், அவற்றிற்கு எதிராக அணிதிரளும் முயற்சிகளும் போராட்டங்களும் இன்றைய காலத்தின் அறிகுறிகள். இத்தகைய முயற்சிகளின் வழியாக சிறந்த சில வெற்றிகளைஅவர்கள் பெற்றிருப்பினும் சமூக சமநிலை என்பது அவர்களுக்கு இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது. உயர்ந்த சாதியினரின் உரிமை மறுப்புகளும், தாழ்த்தப்பட்ட சாதியினருள் முன்னேறிவிட்டவர்கள் ஏனையோரின் தாழ்நிலை பற்றிக் கொண்டிருக்கும் அக்கறையின்மையும் அவர்கள் நடுவே உள்ளபிளவுகளும் அவர்கள் சமத்துவம் பெற முக்கிய தடைகளாக இருப்பவை.
இன்றைய நமது சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும் இன்னொரு சாரார் பெண்கள். நமது சமூகம் ஆணாதிக்கப் பாணியில் கட்டமைக்கப்பட்டிருப்பதால் பெண்கள் அதில் எல்லா வகையிலும் இரண்டாம் நிலையினரே. மேலும் கருவிலேயே சிதைக்கப்படுவது தொடங்கி விதவை நிலையில் ஒதுக்கப்பட்டுக் கைவிடப் படுவது வரை அவர்களுள் பெரும்பாலோர் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் எத்தனையோ பாகுபாடுகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர்; சம உரிமைகளும் வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு, தங்கள் ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களில் முழு வளர்ச்சி அடைய முடியாதவர்களாகவும் அதனால் சமூக நலனுக்குத் தங்களது முழுமையான பங்களிப்பைச் செய்ய முடியாதவர்களாகவும் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுள் பலர் இன்று விழிப்புணர்வு பெற்றுள்ளனர் என்பது உண்மையே. அதனால் அவர்கள் தங்களுடைய சம உரிமைகளுக்காகவும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைஎதிர்த்தும் பல இடங்களில் குழுக்களாக இணைந்து போராடத் தொடங்கியுள்ளனர். அத்தகைய முற்போக்குப் பெண்கள்கூட பல வேளைகளில் வரதட்சிணை, புகுந்த வீட்டில் உரிமையின்மை, கணவனது வன்முறை, வேலை செய்யும் இடங்களில் பாலியல் சீண்டல்கள் எனப் பல கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
வறுமையும் அறியாமையும் ஆதிக்கங்களும் இல்லாத சம நீதி நிலவும் சமூகம் செய்ய இன்று மிகப் பெரும் தடையாக இருப்பது இங்குள்ளஊழல் மயமான அரசியல் என்றால் அது மிகையாகாது. நமது நாட்டு அரசியல், கொள்ளையர்களின் சொர்க்கம் என்பதில் கேள்விக்கே இடமில்லை. பாமர மக்களுக்குப் பணம் கொடுத்து அவர்களது வாக்குகளால் இங்கு அரசியல் பதவிகளைப் பெறுபவர்களுள் பலர் சமூக விரோதிகளாயும் கொலைகாரர்களாயும்கூட இருக்கின்றனர் என்பது நாடறிந்த உண்மை. அத்தகையோர் நடத்துவது பெரிதும் கோடி கோடியாக பொதுமக்கள் பணத்தை அரசிடமிருந்தோ மக்களிடமிருந்தோ பல்வேறு வகைகளில் திருடும் மோசடி அரசியலே.
இத்தகைய அரசியல்வாதிகள் பெரும்பான்மையாகத் தங்களுக்கு வாக்களித்த பாமர மக்களது நலனில் அதிக அக்கறை காட்டுவதில்லை; அவர்களது உண்மையான மேம்பாட்டிற்காக உருப்படியான திட்டங்களைஉருவாக்கிச் செயல்படுத்துவது மில்லை. மாறாக, இந்த அரசியல்வாதிகள் தங்களுக்குக் கோடிகோடியாகக் கையூட்டுத் தரும் பெரும் முதலாளிகள் அல்லது பணக்காரர்கள் நலனுக்காகவே செயல் படுகின்றனர். இத்தகைய பண ஆதிக்கத்துடன் இணைந்து நமது அரசியலைச் சீர்குலைப்பவை தலைமை வழிபாடு, சாதியச் சார்பு, குடும்ப வாரிசு ஆதிக்கம் என்பன.
மக்களாட்சியோடு பின்னிப்பிணைந்து கிடக்கும் ஊழல்தான் நம் நாட்டுச் சுற்றுச் சூழல் சீரழிவிற்கும் முக்கிய காரணமாகத் திகழ்கிறது. பெரும் முதலாளிகளும் தொழில் அதிபர்களும் அரசியல் தலைவர்களுக்குத் தரும் கையூட்டு அவர்களுக்குக் கண்பூட்டு, கைப்பூட்டு, வாய்ப்பூட்டாகவும் மாறிவிடுகிறது. இதனால் அவர்கள் முதலாளிகளும் தொழிலதிபர்களும் துணிந்து செய்யும் மணல் கொள்ளை, காடுகளைஅழிக்கும் மரக் கொள்ளை, பொது நிலங்களைஅபகரிக்கும் நிலக் கொள்ளைஎன்பவற்றைக் கண்டு கொள்வதில்லை. மேலும் தொழிற்சாலைகள் கக்கும் கழிவுகளால் நம் நீர், நிலம், காற்று எனும் வாழ்வு ஆதாரங்கள் மாசுபடுத்தப் படுவதையும், அதனால் மக்களது உடல் நலத்திற்குக் கேடுகள் பல ஏற்படுவதையும் தடுக்க அரசியல்வாதிகள் திட்டவட்டமான முயற்சிகள் எதுவும் எடுப்பதில்லை.
இன்று நமது சமுதாயம் எதிர்கொள்ளும் இன்னொரு முக்கிய சவால் பண்பாட்டுச் சீர்குலைவு ஆகும். காலங்காலமாக நமது மக்கள் சமூகத்தைக் கட்டிக்காத்த நமது மரபுத் தமிழ்ப் பண்பாடு இன்று மிக வேகமாகவே வீழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் மையமாக இருந்த மனிதநேய விழுமியங்கள் இன்று அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வெளிநாட்டு, உள்நாட்டு முதலாளியத்தால் இங்குத் திட்டமிட்டுப் பரப்பப்படும் அந்நிய, ஆதிக்க நுகர்வு வெறிக் கலாச்சாரம் புதுப்புது இன்பங்களையும் சுகங்களையும் வசதிகளையும் அனுபவிப்பதையும் அதற்குத் தேவையான பணம் சேர்ப்பதையுமே முதன்மைப்படுத்துகின்றது. இதனால் வக்கிர உணர்வும், குறுக்கு வழிகளில் பணம் சேர்க்க முயலும் குற்றச் செயல்களுமே பெருகி வருகின்றன.
இதில் சமூகத் தொடர்பு ஊடகங்களின் பங்களிப்பு பெரிது. நலன்கள் பல விளைவிக்கும் இந்த ஊடகங்கள் அதே வேளையில் நமது பண்பாட்டுச் சீரழிவுக்கும் முக்கிய காரணங்கள் ஆகின்றன. அந்நிய அமெரிக்க கலாச்சாரத்தையும் ஆதிக்கப் பார்ப்பனிய கலாச்சாரத்தையும் அவை பட்டிதொட்டிகளில் உள்ளபாமர மக்களின் மனங்களில்கூட ஆழப் பதிய வைக்கின்றன. இதனால் ஏற்படும் மனிதநேய விழுமியங்களின் வீழ்ச்சி காரணமாக போட்டிகளும் பொறாமைகளும் அதிகரிக்கின்றன; ஒற்றுமையோடு மக்கள் வாழ்ந்த ஊர்களிலும் குடும்பங்களிலும் இன்று உறவுகள் சீர்குலையத் தொடங்கியுள்ளன. மனமுறிவுகளும் மணமுறிவுகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகுவோர் இளைய தலை முறையினரே. பாலியல் நெறிகேடுகள், போதைப் பழக்கம் என்பவற்றில் அவர்களுள் பலர் ஈடுபடுவதால் அவர்களது வருங்கால வாழ்வே கேள்விக்கு உள்ளாகியுள்ளது.
மனித நேய உணர்வுகள் மழுங்கடிக்கப்படும் போது இயல்பாகவே உண்மையான இறை உணர்வும் மறைந்துவிடுகிறது. சமயச் செயல்பாடுகள் போலியானவையாயும் வெற்றுச் சடங்குகளாகவும் மாறிவிடுகின்றன. இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தின் ஒரு விளைவு நம் சமய வாழ்வு பெரிதும் சடங்குமயமாகிவிட்டதும் ஆடம்பர கொண்டாட்டமயமாகிவிட்டதும்தாம். தங்கள் ஊர்களில் உள்ளகோயில் வழிபாடுகளிலும் தங்களது அன்றாட ஆன்மீகச் செயல்பாடுகளிலும் மக்களது பங்கேற்பும் ஈடுபாடும் குறைந்து கொண்டு வருகின்றன. அவற்றில் பங்கேற்போரின் வாழ்வுகளில்கூட அவை அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாத வெற்றுச் சடங்குகளாகவே தொடர்கின்றன. உள்ளூர் கோயில் திருநாள்களிலும் ஆடம்பரங்கள், கேளிக்கைகள் மிகுந்து, அவை ஆன்மீக தாக்கங்கள் அதிகம் ஏற்படுத்தாத வெறும் சமூகக் கொண்டாட்டங்களாகவே மாறிக் கொண்டிருக்கின்றன.
இருப்பினும் இன்றைய முதலாளிய போட்டி உலகில் மக்களுக்குத் தங்களது வேலையின்மை, நோய்கள், உறவுப் பிரச்சினைகள் என்பன போன்ற தங்களுடைய பிரச்சனைகளுக்குத் தாங்களாகவே தீர்வு காண இயலாதவர்களாக மக்கள் தவிக்கின்றனர். இந்நிலையில் விண்ணக உதவி உறுதியாகக் கிடைக்கும் என விளம்பரம் செய்யப்படும் திருத்தலங்களுக்கும் நவநாள் பக்திமுயற்சிகளுக்கும் அவர்கள் பெரும் திரளாக வந்து பக்தி ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். வேறு சிலரோ தங்களைப் பக்திப் பரவசத்தில் மூழ்கடிக்க வைக்கும் அருங்கொடை அல்லது பெந்தக்கோஸ்தே செபக்கூட்டங்களுக்கு செல்கின்றனர். இத்தகைய கூட்டங்கள் தரும் பரவச அனுபவங்கள் பெரிதும் தங்களுடைய வாழ்வுப் பிரச்சினைகளையும் உறவுச் சிக்கல்களையும் தற்காலிகமாக மறந்து ஒருவகைப் பக்தி மயக்கத்திலும் ஆன்மீகப் போதை நிலையிலும் அவர்களைமெய்மறந்து இருக்க வைக்கின்றன. தங்களது வாழ்வுகளையும் உறவுகளையும் தாம் வாழும் சமூகத்தையும் இறைவார்த்தை தரும் அருள்ஒளியோடும் தூய ஆவி தரும் ஆற்றலோடும் மாற்றியமைக்க அவை அவர்களைஅதிகம் தூண்டுவதில்லை.
இத்தகைய வெறும் உணர்ச்சிமயமான இறைஅனுபவத்தையும் தேடுவோர் பலர் இன்று உளர். இரு சாராருமே கத்தோலிக்க சபையைப்பற்றிக் கூறும் ஒரு குறைபாடு உண்டு. அது கத்தோலிக்க சபையில் அவர்களுக்கு ஆழமான இறைஅனுபவம் அதிகம் கிடைக்கவில்லை என்பதுதான். இந்தக் குறைகூறலில் ஓரளவாவது உண்மை உள்ளது என்பதை நாம் மறுக்க இயலாது. உணர்ச்சிகளைஅதிகம் வெளிப்படுத்தாத மிகவும் அருவமான மன்றாட்டுக்கள், அடிமன ஆழங்களையும் சிந்தனைகளையும் தொடாத மிகவும் அறிவார்ந்தவையாயும் அந்நியப் பண்பாட்டைச் சார்ந்தவையுமான அடையாளங்கள், சூழ்நிலைக்கு ஏற்ப அதிகம் மாற்ற இயலாதவாறு துல்லியமாக முன்தீர்மானிக்கப்பட்டு தரப்பட்டுள்ளசடங்குமுறைகள், கூடிவரும் சமூகத்தின் இன்பதுன்பங்களையும் அனுபவங்கள் தேவைகளையும் மையப்படுத்தாது மிகவும் பொதுமைப்படுத்தப்பட்டுள்ளமன்றாட்டுகள், மறைஉரைகள், அன்றாட வாழ்வில் சகோதர உறவுகளாக, செயல்பாடுகளாக மலராத கோயில் வழிபாடுகள் என்பன கத்தோலிக்க சபையினர் உண்மையான இறைஅனுபவம் பெறத் தடையாக இருப்பவை.
மேலும் வழிபாட்டு ஒழுங்கு முறையில் ஓரளவு தரப்பட்டிருக்கும் வாய்ப்புகளையாவது பயன்படுத்தி மக்களுடைய வாழ்வுகளோடு தொடர்புபடுத்தி செபங்களையும் வழிபாடுகளையும் கொண்டாட முயலாது வெறும் வாடிக்கை நிகழ்ச்சிகளாக அவற்றை அருள்பணியாளர்கள் பலர் நடத்துவதும் மக்கள் இறை அனுபவம் பெறுவதற்கு ஒரு முக்கிய தடையே. இதுவும் மக்களின் தேவை களுக்கு ஏற்ப அவர்களுக்குத் திருப்பணிகள் ஆற்ற பல அருள்பணியாளர்கள் தவறுவதும், அவர்களது நெறி தவறிய வாழ்வும் தாங்கள் கத்தோலிக்க சபையை விட்டு பெந்தக்கோஸ்தே சபைகளுக்குச் செல்ல முக்கிய காரணங்கள் எனப் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
திருச்சபையில் ஏற்பட்டுள்ளஇன்னொரு முக்கிய பிரச்சினையை இது சுட்டிக்காட்டுகிறது. அது அருள்பணியாளர் வாழ்விலும் பணியிலும் ஏற்பட்டுள்ளசீர்குலைவுதான். அவர்களுள் பலர் இன்றைய கலாச்சாரத்திற்கு ஆளாகி யுள்ளனர். இதனால் வழிபாட்டுச் சடங்குகளைநிறைவேற்றுவதோடு தங்கள் திருப்பணிகள் முடிந்துவிட்டன எனும் மனநிலையுடன் ஏனோதானோ என அவற்றை நிறைவேற்றி முடித்துவிடுவது இன்று அருள்பணியாளர்கள் பலருடைய பாணி. அவர்கள் மக்களுடைய வாழ்வுப் பிரச்சினைகளில் அதிக அக்கறையோ ஈடுபாடோ காட்டுவதில்லை; சுகபோகங்களையும் வசதிகளையும் பெருக்கிக் கொள்வதும் தங்கள் குடும்பத்தினரை முன்னேற்றுவதுமே அவர்களுள் பலருடைய முதன்மையான அக்கறையாக உள்ளது. அவர்கள் நடுவே உள்ளசாதிச்சண்டைகளும் குழு பிளவுகளும் சிலரது குடிப்பழக்கமும் பாலியல் நெறிகேடுகளும் இன்றைய திருச்சபை அவசரமாகச் சரிசெய்ய வேண்டிய முக்கிய பிரச்சினைகள்.
அருள்பணியாளர்கள் பலரது வாழ்விலும் பணியிலும் ஏற்பட்டுள்ளசீர்குலைவு ஒருபுறம் இருக்க, பொதுநிலையினர் பலர் திருச்சபையின் பல்வேறு பணிகளில் பங்கேற்க முனைந்திருப்பது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க காலத்திற்குப் பின்பு திருச்சபையில் ஏற்பட்டுள்ளசிறப்பான ஒரு வளர்ச்சி. முன்பு அருள்பணியாளர்களேசெய்த பழைய பல பணிகளையும் காலத்தின் அவசியங்களாக வளர்ந்திருக்கும் புதிய பல பணிகளையும் மிகுந்த ஈடுபாட்டுடன் மட்டுமல்ல, நல்ல திறமையுடனும் தமிழகத் திருச்சபையில் பல பொதுநிலையினர் இன்று ஆற்றுகின்றனர். பங்குப் பேரவை உறுப்பினர்கள், பணிக்குழுக்களின் தலைவர்கள் எனப் பல நிர்வாகப் பொறுப்புகளிலும் அவர்கள் சிறப்புறச் செயல்படுகின்றனர். இருப்பினும் பல இடங்களில் அவர்களுக் கிடையே காணப்படும் அதிகாரப் போட்டிகள், சாதிய அல்லது கட்சிப் பிளவுகள், ஆணாதிக்க மனநிலை என்பன அவர்களது ஈடுபாடுகள் முழுமையாகப் பயன்விளைவிக்க முக்கிய தடைகளாக இருக்கின்றன. பல இடங்களில் அவர்களுடைய திறமைகளையும் தியாக உள்ளத்தையும் மதித்து அவற்றிற்கேற்ப பணிப்பொறுப்புகளைஅவர்களுடன் பகிர்ந்து கொண்டு கூட்டுத்தலைமைப் பாணியில் செயல்படத் தவறும் அருள்பணியாளர்கள் பலரது எதேச்சதிகாரப் போக்கும் தமிழகத் திருச்சபையின் சிறப்பான வளர்ச்சிக்கு முக்கிய ஒரு தடையே. சற்று விரிவாக பார்க்கும்போது திருச்சபைச் சட்டம் பொதுநிலையினர் செய்ய அனுமதிக்கும் பல பணிப்பொறுப்புகள், உரிமைகள் தமிழகத் திருச்சபையில் அவர்களுக்கு இன்றும் மறுக்கப்படும் நிலையே பல இடங்களில் இன்று காணப்படுகிறது. அருள் பணியாளர்களின் எண்ணிக்கை மிகுதி காரணமாக பொதுநிலையினர் ஏற்கக்கூடிய, ஏற்கவேண்டிய பல தலைமைப் பொறுப்புகளையும் பணிகளையும் அருள்பணியாளர்களேஇன்றும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, அதிக வருவாயும் அதிகாரமும் உள்ளபணிப் பொறுப்புகள் பொதுநிலையினருக்குத் தரப்படுவது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.
பொதுவாகப் பார்க்கும்போது தமிழகத் திருச்சபைபோதிய புறநோக்கு இன்றி தன் அகப்பிரச்சினைகளிலேயே அதிகம் மூழ்கிக்கிடப்பதாகத் தோன்றுகிறது. இது இறை ஆட்சியின் கருவியாகச் செயல்பட திருச்சபை பெற்றிருக்கும் அழைப்புக்கு முரணானது. குடிமைச் சமூகத்தில் அதிகம் ஈடுபட்டு, சமூகம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு சார்ந்த தீமைகளைஎதிர்க்கவும் நலமான மாற்றுச் செயல்பாடுகளைஆதரிக்கவும் பொதுமக்களைஅணிதிரட்டுதல், பிற சபைகள், சமயங்கள், இயக்கங்களோடு நல்லுறவையும் நலமான காரியங்களுக்கான ஒத்துழைப்பையும் வளர்த்தல் என்பனவற்றில் தமிழகத் திருச்சபையின் ஈடுபாடு இன்னும் அதிகமாக நிச்சயம் தேவைப் படுகிறது. அதுபோல் இன்றைய சமூகத்தை மிகப் பரவலாகவும் ஆழமாகவும் பாதிப்பவை சமூகத் தொடர்பு ஊடகங்கள். இத்துறையில் தமிழகத் திருச்சபையின் ஈடுபாடும் செயல்பாடுகளும் கடலில் கரைத்த புளிபோல் மிகக் குறைவாகவே உள்ளன. நற்செய்தி அறிவிப்புப் பணியின் இன்றைய முக்கிய தளம் சமூகத் தொடர்பு ஊடகங்களேஎன்பதைத் திருச்சபை உணர்ந்து செயல் படுவது இன்றியமையாதது.
தமிழகத் திருச்சபை மிகப் பெரும் அளவில் ஈடுபட்டுள்ளஒரு துறை கல்வி. இதில்கூட கல்வி வியாபாரிகளுக்கு இணையாகக் கல்வியைக் காசு ஆக்கும் பணியைத்தான் பல இடங்களில் திருச்சபை இன்று அதிகமாகச் செய்துகொண்டிருக்கிறதோ எனும் கேள்வி எழுகிறது. 'இறையாட்சி'இலட்சியத்தோடும் விழுமியங்களோடும் சமூக மாற்று சக்தியாக நமது கல்விப் பணியை மாற்ற நாம் முயலவில்லை என்றால் நமது கல்விப்பணி சுடர் அணைந்த விளக்கே.
இறுதியாக:
கோயில்களையும் பேராலயங்களையும் கட்டியயழுப்புவதையும் அவற்றில் ஆடம்பர ஆராதனை வழிபாடுகளும், பரவச பக்தி முயற்சிகளும் செபங்களும் நடத்துவதையுமே தங்களுடைய முதன்மையும் முக்கியமுமான பணி என எண்ணிச் செயல்படுவதோடு நிறுத்திக்கொள்ளும் ஆபத்து திருச்சபைக்கும் அதன் அருள்பணியாளர்களுக்கும் எப்போதுமே உண்டு. அத்தகைய கோயில் மையக் கூட்டமாகத் தமிழகத் திருச்சபையும் வெறும் வழிபாட்டுச் செயல்பாடாக அதன் பணிகளும் மாறிக்கொண்டிருக்கின்றனவோ என எண்ண இடமும் இருக்கிறது. ஆனால் திருச்சபையின் பணி எல்லாரையும் நிறைவாக வாழச்செய்யும் இயேசுவின் இறையாட்சிப் பணியே அன்றி வேறெதுவும் அல்ல. எனவே சமயச் செயல்பாடுகளுடன் நின்றுவிடாது மக்களைப் பாதிக்கும் சமூகம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு சார்ந்த பிரச்சினை எதுவெனினும் அதில் இயேசுவைப்போல் திருச்சபையும் ஈடுபடுவது இன்றியமையாதது. அத்தகைய ஈடுபாடு வழியாக மக்களுக்கு வளர்ச்சியும் இறைவனுக்குப் புகழ்ச்சியும் சேர்க்கும் நம்பிக்கையாளர்கள் சமூகமே இயேசுவின் உண்மையான திருச்சபை.
வாழ்க்கையின் முதலும் முடிவும்கடவுளைச் சார்ந்தவைஅந்த வழியில் சிந்தையைச் செலுத்தவதே
வழிபாடு என்கிறார் - மு.வ.
சிலர் உருவ வழிபாட்டை நம்புகிறார்கள்சிலர் கடவுளுக்கு உருவமில்லைஎன்கிறார்கள் எந்த தெளிவுமில்லாமல்
சமயங்களின் பெயரால், சடங்குகளின்
பெயரால் ரெண்டும் கெட்டானாக
போராடுவோர்கடவுள் நெறிக்கு அப்பாற்பட்டவர்கள்
கடவுளின் கருணையைப் பொருட்செலவுசெய்து பெறலாம் என்று நினைப்பதுமூடநம்பிக்கை. நாம் ஒன்று கொடுத்தால்அவர் ஒன்று தருவார் என்பது அறியாமை
மனதிற்கு அமைதியும், ஆற்றலும் கிடைப்பதற்கு அன்பைப் போற்றி வாழும்நெறியே கடவுள் நெறி என்பதை மறந்தான்
பின், சடங்குகளைவற்புறுத்தினான். ஆக களப்போராளியைப் பிடித்ததுஅவனைப் பின்பற்றுபவர்களைபிடிக்காமல்போனது, அப்போதுதான் நாத்திகம்பெருகியது,
ஹிட்லரைப் போன்ற வன்முறைவாதிகள்மக்களைக் கொன்று குவித்தார்கள். கொத்துக்கொத்தாக மனிதன் கொல்லப்பட்டான். மக்கள் அடிமைப்படுத்தப் பட்டார்கள். அப்போது கடவுளைவெறுக்க ஆரம்பித்தான்.
அறிவும் தேடலும் சேர்ந்து அடைகாத்துஅடைகாத்து நாளடைவில் நாத்திககுழந்தையைப் பெற்றெடுத்தது.அப்போது காரல்மாக்ஸ்சையும்,பெரியாரையும் பின்பற்ற ஆரம்பித்தான்.
புனித அருளானந்தர் (1647-1693) ஓரியூர் மண்ணில் வேதசாட்சியாய் மரித்தார். 300 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் அவரின் செங்குருதியை உள்வாங்கிய அப்பூமி புனிதரின் தியாகத்தை மறக்கவில்லை. வெண்மணலாய்க் காட்சி அளித்த அப்பூமி, இன்று சிவந்த மண்ணாய்க் காட்சி அளிக்கிறது. இயேசுவின் சாட்சியாய் வீர மரணம் அடைந்த அருளானந்தரின் தியாகத்தை இன்றும் அச்சிவந்த மண் பறைசாற்றுகிறது.
1673-இல் மரவ மண்ணில் இறைபணியாற்ற வந்தார் புனித அருளானந்தர். அரண்மனையின் சுக வாசத்தில் வாழ்ந்தவர் அடியார்க்கும் அடியாராய்த் தன்னையே தாழ்த்தி இயேசுவின் அன்புப் பணி செய்தார்.
உலக மகிமையில் திளைத்த அவரின் இளமைக் காலங்கள் மரவ மண்ணில் இயேசுவின் அன்புச் சீடராய் ஏழ்மையில் வாழ மனம் மகிழ்ந்தார். பஞ்சு மெத்தையில் நடந்த கால்கள் சூரிய வெப்பத்தில் சூடேறிய மரவ நாட்டின் புழுதி மண்ணில் பயணித்தன. மக்களின் எளிய உணவும் உடையும் வாழ்வும் அவருக்குச் சொந்தமாயின.
1688-இல் அவர் தன் நாடு லிஸ்பன் செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மூன்று ஆண்டுகள் அவர் அரண்மனை வாழ்வில் இருந்தாலும் எளிய உணவான கஞ்சியை அவரே சமைத்து அருந்தினார். நல்லுணவு சாப்பிட வற்புறுத்தியவர்களிடம், “என் அன்பு மக்களின் உணவு இதுதான். அவர்களின் ஏழ்மை நிலை என்னுள் புகுந்து விட்டது. அவர்களைவிட உயர்ந்த உணவையும் வாழ்வையும் ஏற்றுக் கொள்வது அவர்களின் தந்தையான என்னால் முடியவில்லை'' என்றார்.
கடைசியில் நல்ல குருவாய், தன் உயிரையே அளிக்கும் ஆயராய், இயேசுவின் சாட்சியாய் மிக மகிழ்வுடன் வேத சாட்சியாய்க் குருதி சிந்தி மரிக்கிறார்.
ஒரு குருவின் வாழ்வு, மக்கள் மத்தியில் பணியாற்றும் இறைப் பணியாளரின் வாழ்வு பங்கு மக்களின் வாழ்வின் நிலையில் கலந்த ஒரு வாழ்வாய் இருக்க வேண்டும்.
புனித பவுல் தன் இறைமக்களான உரோமையர்களுக்கு இவ்வாறு எழுதுகிறார் : “இரத்த உறவினரான என் சகோதரர்களுக்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்திற்கு உள்ளாகவும் தயங்கேன்'' (உரோ 9:3) என்கிறார்.
ஆண்டவர் இயேசுவின் இறைப் பணியின் நாட்களும் மக்களின் வாழ்வு நிலையோடு இணைந்த ஒரு வாழ்வாக இருந்தது. ஆண்டவர் இயேசுவின் போதனை மூன்று நாட்களையும் கடந்த ஒரு போதனையாக இருந்தது. “அவர்கள் ஆயனில்லா ஆடுகள் போல் இருந்ததால் அவர் நெடுநேரம் போதிக்கலானார்.'' “இவர்களைப் பட்டினியாக அனுப்பிவிட எனக்கு விருப்பமில்லை. பட்டினியாக அனுப்பினால் அவர்கள் சோர்ந்து விழக்கூடும். இவர்களில் சிலர் மிகத் தொலைவிலிருந்து வருகிறார்கள்'' எனக் கூறி ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஆசீர்வதித்து, அவைகள் பலுகும்படிச் செய்து அனைவரின் பசியைத் தீர்க்கிறார் (மாற்கு 6:8; மத் 14:15; லூக் 9; யோவா 6 அதிகாரங்கள்) என்பதைக் காண முடியும். இறைமக்க¼ளாடு இருத்தல் ஆண்டவர் இயேசுவை மகிழ்வித்தது. அவர்களின் இதய உணர்வில் கலந்தார்.
ஒரு குருவானவர் பங்கு மக்கள் மீது கொண்டிருக்கும் நேசமும் அன்பும் அர்ப்பணிப்பும் எளிய வாழ்வுமே அவரது மகிழ்வான வாழ்வுக்குக் காரணமாயிருக்கின்றன. சுயநலமும் பொருளாசையும் ஆடம்பர மோகமும் ஒரு குருவின் வாழ்வை நாசத்தின் வேதனைக்குத்தான் இட்டுச் செல்லும். இவ்வுலகிலேயே நரகத்தை அனுபவிக்கச் செய்துவிடும்.
குருக்களின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னி, பிரான்ஸ் நாட்டின் "ஆர்ஸ்' பங்கில் 41 ஆண்டுகள் பணி செய்தார். எவ்விதப் பிரச்சனையோ, முறுமுறுப்போ, "ஒத்துவரவில்லை' என்ற உணர்வோ அவருக்கு எழவில்லை. அவரின் பங்கு மக்களுக்கும் எழவில்லை. அர்ப்பண உணர்வும், பங்கு மக்கள் மீது கொண்ட நேசமும், அவர்களின் ஆன்ம ஈடேற்றப் பணியில் அயரா உழைப்புமே அவரின் வாழ்வை இயேசுவில் மகிழும்படியாய்ச் செய்தன.
இன்று ஒரு குருவின் வாழ்வில் இருக்கும் சுயநலமும், வெளிநாட்டு மோகமும், பணப் பெருக்கத்தில் விருப்பமும், ஆடம்பர வாழ்வில் தீராத ஆசையும் இருப்பதாலேயே மக்கள் மீது இருக்க வேண்டிய அர்ப்பணிப்பு வாழ்வில் வெறுமை ஏற்படுகிறது. மக்களுக்கு இறைப் பணியாளர் மீது அவநம்பிக்கை ஏற்பட்டு, குழப்பச் சூழ்நிலை உருவாகி விடுகிறது.
ஒரு குருவின் மகிழ்வு ஆடம்பர வாழ்விலும் பணப் பெருக்கத்திலும் இருப்பதில்லை. அர்ப்பணிப்பும், எளிய வாழ்வும், தூய்மையான மன சாட்சியும், மக்கள் நல்வாழ்வுக்காய் வாழும் உணர்வும்தான் ஒரு குருவின் வாழ்வில் மகிழ்வை ஏற்படுத்துகின்றன.
குருக்களுக்கான பயிற்சியகங்கள் இன்றும் நிர்வாகிகளைஉருவாக்குவதை விட்டுவிட்டு, அர்ப்பணத்தில் மகிழும் இறைப்பணியாளர்களைஉருவாக்குவதே இன்றைய தேவையாகும்.
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் ஊரெங்கும் பேச்சு உலகெங்கும் பேச்சு அவனவன் பங்குக்கு அவனவன் காரணியாகி ஊழல் விதைகளை நாளும் விதைக்கிறான் - தான் வாழ்ந்துவிட வேண்டுமென்று! ஊழல் ஒழியுமோ? ஊழலாய் நாமிருக்க வாழும் இறைவனில் முழு நம்பிக்கை இல்லாமல் எந்த மாற்றமும் மண்ணில் வருவதற்கில்லை! "உண்மை நேர்மை உழைப்பு'' மேல்மட்டத்திலிருந்து வெளிப்பட "கல்லாமை இல்லாமை இயலாமை'' கீழ் மட்டத்திலிருந்து மேம்படும்! அப்போதுதான் மனுக்குலம் சரியாய் வாழ்ந்ததாக வரலாறு பேசும் அந்நாளே 'இறை ஆட்சி' மலரும் நாள் மண்ணில்! வானம் வந்திடும் நாள்!
மாடி அறையில் படித்துக் கொண்டிருந்த நான் கீழே எழுந்த சத்தத்தைக் கேட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தேன். என் வீட்டு வாட்ச்மேன் யாரையோ அடித்து விரட்டிக் கொண்டிருந்தான். நன்றாக உற்றுப் பார்த்தேன். அங்கே பரட்டைத் தலையும் அழுக்கு உடம்பும் அழுக்கேறிய கிழிந்து நைந்துபோன துணியோடு உடலெங்கும் இரத்தம் வடிந்து காய்ந்துபோன காயங் களுடன் ஒரு பெண் மிரட்சியான பார்வையுடன் பயங்கரமாய் அலறிக் கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தாள். அவள் கத்திய அந்த சத்தம் ஏதோ ஒரு வினோத மிருகம் கத்தும் சத்தத்தைப் போன்று கர்ண கொடூரமாக இருந்தது.
அக்கம்பக்கத்துப் பங்களாவில் இருந்த வாட்ச்மேன்கள் எல்லாம் கையில் தடியுடன் வந்து என் வீட்டில் நுழைய முயற்சிக்கும் அந்தப் பெண்ணை அடித்து விரட்டினர். அவர்கள் அடிக்கும் அடிகளைப் பொருட்படுத்தாமல் அவள் முரண்டுப் பிடித்தவளாய் அந்த இடத்தை விட்டுப் போகாமல் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தாள். மேலும் அடிக்க வருபவர் களைக் கையில் அகப்படும் மண் கற்களால் திருப்பித் தாக்கினாள். பார்க்கவே பரிதாப மாகவும் பயங்கரமாகவும் இருந்தது.
அருகே சென்ற நான் அவளை அடிக்க வேண்டாம் என்று அவர்களைத் தடுத்து விட்டு அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்தேன். பாவம்! மனநிலை தவறி பைத்தியமாக உடம்பெல்லாம் இரத்தம் ஒழுகும் காயத்துடன் துர்நாற்றத்துடன் பயம் கலந்த பார்வையோடு உடல் கூனிக்குறுகி பார்க்கவே அருவருக்கத்தக்க நிலையில் இருந்தாள். அருகே இருந்த வர்களைக் குடிக்கத் தண்ணீர் கொடுக்கச் சொன்னேன். அந்தப் பெண் இருந்த கோலத்தைப் பார்த்து அவள் அருகே செல்ல யாரும் முன்வராமல் எல்லோரும் பயத்துடன் பின்வாங்கினர். நானே அவள் அருகே சென்று குடிக்கத் தண்ணீர் கொடுத்தேன். தண்ணீர் செம்பை வாங்கிய அவள், வாங்கிய வேகத்தில் திருப்பி என் மீது அடித்தாள். சாமர்த்தியமாக ஒதுங்கிக் கொண்டேன். ""அய்யா, அதுகிட்டே போகாதீங்க. அதுக்கு வெறி புடிச்சிருக்குது'' என்று எச்சரித்தனர். இந்தப் பெண்ணை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த என் வீட்டு வேலைக்காரி, ""அய்யா, இந்தப் பைத்தியம் எங்க வூட்டுப் பக்கமாத்தான் இருக்குது. கொஞ்ச நாளா பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்துச்சி. அப்புறம் சுமாரா ஆயிடிச்சினு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. ஒரு நாள் திடீர்னு வீட்ட விட்டு எங்கேயோ போயிடுச்சி. தேடிப் பார்த்து எங்கேயும் கெடைக்காததால தேடரதையே விட்டுட்டாங்க. இப்ப இன்னடான்னா பாவம் இங்க வந்து கீது. இருங்க அவங்க வீட்ல இருந்து யாரையாவது கூட்டினு வரேன்'' என்று ஓட்டமும் நடையுமாகச் சென்றாள். சிறிது நேரம் கழித்து சுமார் முப்பது வயதுள்ள ஒரு ஆளைக் கூட்டிக் கொண்டு வந்தாள். ""அய்யா, இவர்தான் அந்த அம்மாளுடைய பையன்.''
அருகே சென்ற அவன், ""அம்மா, நான்தாம்மா ரவி வந்திருக்கேன். எழுந்து என்கூட வாம்மா'' என்று அவள் கையைப் பிடித்துத் தூக்கியவுடன், அவனைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்த அந்தப் பெண் முரண்டு பிடிக்காமல் எழுந்து அவன்கூட அமைதியாகச் சென்றாள். பார்க்க அருவருப்புடன் உடம்பெல்லாம் இரத்தமும் சீழும் ஒழுகி துர்நாற்றத்துடன் தொடவே கூசும் அந்தப் பெண்ணை அவன் தொட்டுத் தூக்கி தன்னோடு அணைத்து அழைத்துச் சென்றான். இவ்வளவு நேரமாக யாருக்கும் அடங்காமல் வெறி பிடித்த நிலையோடு கட்டுக்கடங்காத காட்டாறாக, கொடும் புயலாக, சூறாவளியாகச் சுழன்று சுழன்று எல்லோரையும் எதிர்த்துத் தாக்கிக் கொண்டிருந்த அந்தப் பெண், தன் மகனைக் கண்டவுடன் எவ்வித எதிர்ப்பும் இன்றி அவனோடு செல்வது என்பது தாய்ப்பாசத்தைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? ஆம், பைத்திய நிலையில்கூட ஒரு பெண்ணுக்குத் தாய்ப்பாசம் பொங்கி வழிகிறது. தாய்மையே உன் பாச உணர்வுக்கு இந்த உலகத்தில் மட்டும் இல்லை, ஈரேழு ஜென்மத்திற்கும் ஈடு இணை எதுவும் இல்லை என்று என் மனதிற்குள் சொல்லிக்கொண்டு, ஈரம் நிறைந்த விழிகளைத் துடைத்துக்கொண்டு, என்னைத் தன் கருவறையில் தாங்கி, மேனி நொந்து, ஈன்றெடுத்து, மணியாகக் காத்து, நான் உயர தான் தேய்ந்து, என்னைக் கோபுரத்தில் ஏற்றி அழகு பார்த்த என் அன்னை எனக்குச் சுமையாக இருக்கின்றாள் என்று எண்ணி முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்ட என் இழிசெயலுக்காய் வெட்கப்பட்டு, நாணி என்னையே நொந்துகொண்டு என் அன்னையை அழைத்து வர இதோ என் கால்கள் முதியோர் இல்லத்திற்கு விரைந்து செல்கின்றன.
நம் தாய் திருச்சபை இந்த ஆண்டைக் குருக்களின் ஆண்டாகக் கொண்டாடுகிறது.
குருக்களின் பாதுகாவலர் புனித ஜான் மரிய வியான்னியின் 150‡ஆவது ஆண்டைக் குருக்களின் ஆண்டாக அறிவித்தது மாபெரும் மகிழ்ச்சி.
அன்னை மரியாளின் மீதும், அருள்நாதர் இயேசுவின் மீதும் உள்ள அளவற்ற நம்பிக்கையாலும் பக்தியாலும் தான் புனித ஜான் மரிய வியான்னியை இறைவன் இந்தப் புனிதர் நிலைக்கு உயர்த்தியுள்ளார்.
இந்தப் புனிதரைப் போன்ற குருக்களையும், ஆன்மாக்களை மீட்டெடுக்கும் குருக்களையும் நம் தாய் திருச்சபையானது கண்டறிவது நலமாக இருக்கும்.
இயேசுவின் அன்புச் சீடர்கள் 12 நபராக இருந்தாலும், உலகெங்கும் சென்று போதித்தார்கள். இயேசுவைப் பற்றி அறியாத தேசமில்லை. இயேசு என்று சொன்னாலே இவர்கள் கிறிஸ்துவை வழிபடுபவர்கள் (கிறிஸ்தவர்கள்) என்று சுலபமாகப் பாமரர்கள்கூட அறிந்துகொள்வார்கள்.
எப்படி இயேசுவை வழிபடுபவர்கள் என்று புரிந்துகொள்ள முடிந்தது? சீடர்கள் அனைவரும் இயேசுவின் மதிப்பீடுகளான அன்பு, நீதி, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அனைத்தையும் முற்றிலும் அறிந்தவர்கள்; இயேசுவோடு இருந்தவர்கள்; அவர் சொன்ன மதிப்பீடுகளின்படி நிஜ வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர்கள்.
அன்று பன்னிரெண்டு பேர் இருந்தார்கள். இறைபணி நிறை பணியாகச் செழித்தோங்கியது. இன்று இறைபணி வெறும் பணியாகிவிட்டதோ என்ற கேள்வி நம்மிடையே தோன்றுகிறது.
இறையழைத்தல் குறைய பல காரணங்கள் இருந்தாலும் இயேசுவின் மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொள்ளும் போதும், வாழ்ந்து காட்டும் போதும், கடவுள் செய்துவரும் அனைத்து ஆச்சரியமான செயல்கள் வெளிப்படும்போதும் மட்டுமே இறைதேடலும் ஆர்வமும் இளையோரிடம் வளரும் என்பதில் ஐயம் இல்லை.
குருக்கள் இயேசுவின் சொத்துக்கள். அது எளிதில் கிடைக்கும் வாழ்க்கை யில்லை. அழைக்கப்பட்டோர் பலர், தேர்நதெடுக்கப்பட்டோர் சிலர். எனவே தேடுங்கள் இயேசுவைக் கண்டடைவீர்கள். அவர் களுக்கே கிடைக்கிறது குருத்துவ வாழ்வு.
ஒரு நல்ல கிறிஸ்துவ குடும்பத்தை இறைவன் உலகிற்குத் தந்ததால்தான் இன்று புனித ஜான் மரிய வியான்னியின் பெயரை உச்சரிக்கின்றோம்; குருக்களின் ஆண்டாகவும் கொண்டாடுகிறோம். இந்தப் புனிதரின் குடும்பத்தைப் போன்று பெற்றோர்களை நமக்கு இறைவன் தந்ததால்தான் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரிகள், அருட் சகோதரர்கள் இன்று நம்மோடு இருக்கின்றார்கள்.
வரும் காலங்களில் ஆன்மாக்களை மீட்டெடுக்கும் பிள்ளைகளை இறைவன் ஒவ்வொரு கிறிஸ்தவரின் வழியாக தேர்ந்தெடுக்க அழைப்பு விடுக்கிறார். இறைவனுக்கு எல்லா வகையிலும் கொடுத்துப் பாருங்கள். நிறைந்த மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும்படியாகச் செய்வார். இயேசுவின் மதிப்பீடுகளைக் காப்போம்; குருத்துவ வாழ்வுக்கு ஒளியேற்றுவோம்.
அன்னை மரியை வணங்கு
அவள டியைத் தொழுவாய்
விண்ணார் போற்றும் மரியாள்
வேதம் புகழும் அன்னை
மரணம் நேரம் மரித்தாய்
வந்து நிற்பாள் துணைக்கே
அரக்கர் குலத்தை அழிக்கும்
அன்னை மரியாள் நம்தாய்
சென்மப் பாவம் இல்லா(து)
பிறந்த அன்னை நம்தாய்
அன்னை பெற்ற செல்வம்
அருளால் நிறைந்த கன்னி
பிறையைக் காலடி மிதித்து
மின்னும் தாரகை சூடி
குறையும் இல்லாக் கன்னி
குற்ற மில்லா தாய்தான்
தாழ்ச்சி உயர்வைத் தந்தது
தாயும் உரைத்தாள் அடிமையானாள்
வீழ்ச்சி இல்லா அன்னைதான்
வேதம் புகழும் தாய்தான்
தேவதாயைப் போற்றுவோம்
திவ்விய தாயை ஏற்றுவோம்
பாபம் அற்ற மகராசி
பலரின் நல்ல உபகாரி
இரட்ச ணிய மூலக்கரு
இயேசு தேவன் உறைவிடம்
அரசர் வழுத்தும் விண்ணரசி
அன்னை மரியாள் உன்னதம்
அன்னை மரியாள் நம்துணைவி
அண்டிப் போனார் கெடுவதில்லை
உன்னை என்றும் காப்பாற்றி
உறு துணை தருவளே
இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் சிறுநீரகம் தானம் செய்தனர். ஆனால் இந்துப் பெண் முஸ்லிம் பெண்ணின் கணவருக்கும் முஸ்லிம் பெண் இந்துப் பெண்ணின் கணவருக்கும் தானம் செய்ததுதான் புதுமை.
இது நடந்தது ஒரிசாவில் உள்ள பாலசோர் நகரில். இது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருப்பதோடு இரு குடும்பங் களிலும் வசந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரிசாவில் பாலசோர் அருகே உள்ள சோரோவைச் சேர்ந்தவர் ஹரேகிருஷ்ண பாஞ்சா (48). இவர் வழக்கறிஞர். இவரது சிறுநீரகம் பழுதடைந்ததால் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது மனைவி கல்பனா, கணவருக்குச் சிறுநீரகம் தானம் செய்ய முன்வந்தார். ஆனால் கல்பனாவின் இரத்தப் பிரிவோ "பி', பாஞ்சாவின் இரத்தப் பிரிவோ "ஏ'. மனைவியின் சிறுநீரகத்தைக் கணவருக்குப் பொருத்த முடியாமல் போயிற்று.
இந்நிலையில் கட்டாக்கைச் சேர்ந்த வியாபாரி முகமது சையத்துக்கும் (50) சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவருக்குச் சிறுநீரகம் தானம் செய்ய மனைவி சைரா விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவரது இரத்தப் பிரிவோ "ஏ', கணவர் சையத் இரத்தப் பிரிவோ "பி'.
இவ்வாறு வெவ்வேறு இரத்தப் பிரிவு காரணமாக கணவருக்குச் சிறுநீரகம் தானம் செய்ய முடியாமல் இரு பெண்கள் அவதிப்படுவதை அறிந்த டாக்டர் தீபக் சங்கர் ராய், இவர்களுக்குள் முடிச்சுப் போட முடிவு செய்தார். இந்தத் தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகத்தைத் தானம் செய்யக் கூடாது என்று யோசித்தார். அதன்படி ஒரே இரத்தப் பிரிவாக இருந்ததால் இந்துப் பெண் கல்பனாவின் சிறுநீரகம் முஸ்லிமான முகமது சையத்துக்கும், முகமது சையத்தின் மனைவி சைராவின் சிறுநீரகத்தை இந்துப் பெண் கல்பனாவின் கணவர் பாஞ்சாவுக்கும் பொருத்த முடிவு செய்து அதற்காக இரு தம்பதிகளிடமும் அவர் ஆலோசித்தார்.
நல்ல யோசனையாக இருந்ததால் இரு தரப்பிலும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, பாஞ்சாவின் மனைவி கல்பனா முகமது சையத்துக்கும், சையத் மனைவி சைரா பாஞ்சாவுக்கும் சிறுநீரகம் தானம் செய்தனர். பாலசோரில் உள்ள மருத்துவமனையில் இந்தச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இதில் பூரண குணமடைந்து முகமது சையத் வீடு திரும்பினார். பாஞ்சா இன்னும் சில நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது.
மதத்தின் பேரில் ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக்கொள்ளும் காட்டு மிராண்டித்தனம் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், மதங்களைக் கடந்து இங்கே மனித நேயம் வென்றுள்ளது.
(தினமணி நாளிதழில் 2008 பிப்ரவரி 13 அன்று வந்த செய்தி இது. செய்தி பழையதுதான்.செய்தி சொல்லும் செய்தி இன்றும் என்றும் புதியதே.) (நன்றி - தினமணி)
சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள்'' புத்தக வெளியீட்டு விழாவும் ஊனமுற்ற அப்பெண்களுக்குச் சாதனையாளர் விருது வழங்கும் விழாவும் ஒருங்கே எளிமையாகவும் கம்பீரமாகவும் நடந்து கொண்டிருந்தது. கல்லூரி மாணவிகள் வந்தோரை வரவேற்க, சாதனையாளர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர் ஒரு சிலர். வெற்றித் திலகமிட்டு, இனிப்பு வழங்கி, சாதனையாளர் அடையாள அட்டை அணிவித்தனர். ஆனால் சாதனையாளர்க¼ளா எந்த உணர்வையும் வெளிக்காட்ட முடியாமல் மெளனமாய் அமர்ந்திருந்தனர்.
இந்தச் சமுதாயத்திற்கான சீர்திருத்தப் பணியில் மூவர், சிறைக் கைதிகளின் வாழ்வியல் ஆய்வு செய்யும் கண் பார்வையற்ற மாணவி, இசையில் பல சாதனைகள் புரிந்து. பல விருதுகளைக் குவித்த பார்வையற்ற முனைவர் ஒருவர், சதுரங்கப் போட்டியில் பல விருதுகளைக் குவித்துள்ள ஒருவர், பதினைந்து வயது வரை ஆரோக்கியமாய் வாழ்ந்து, நினைத்துப் பார்க்க முடியாத தசை நோயால் பாதிக்கப் பட்டு சக்கர நாற்காலியில் அடைக்கலமாகி விட்ட கணினி சாதனையாளர்களான சகோதரிகள் இருவர், ஓவியத் துறையில் பல புதுமைகளைப் புரிந்துவரும் ஓவியர் மற்றும் வளரும் எழுத்தாளராய் ஒருவர்.
இவர்களைப் பேட்டி எடுத்து, இவர்களின் வலிகளையும் வேதனைகளையும் சுயமாக உணர்ந்து, ஒளிர முடியாமல் தூசி படிந்து போயிருந்த இந்த அபூர்வ பிறப்புக்களைத் தூசி தட்டி சமுதாயத்திற்கு அடையாளம் காட்டும்படி செயல்பட்டு, புத்தகமாய் அவர்களை அச்சிட்டு, அவர்களைப் பெற்றவர்களுக்கு ஓர் அங்கீகாரத்தைச் சமுதாயத்தில் பெற்றுத் தர உழைத்த அந்த உடல் சவாலாரான சகோதரர். இப்படி திரும்பிய பக்கமெல்லாம் சாதனையாளர்கள்! என் சோகம் பெரிதா? உன் சோகம் பெரிதா? என இனங்கண்டு கொள்ளமுடியாத நிலையில், பெற்றவர் களுக்கு எப்படியாவது பெருமை சேர்க்க வேண்டும் என்ற வெறியில் அவர்கள்.
பெற்ற நாள் முதல் பிள்ளைகளுக்காகக் கண்ணீரும் செந்நீரும் சிந்தி, தங்களுடைய கனவுகள், சந்தோங்கள் யாவற்றையும் தியாகம் செய்து, சுயமே இல்லாமல் வாழும் பெற்றவர்கள். மரம்கூட தனக்கொரு வாரிசை விட்டுச் செல்கிறது. ஒவ்வொரு உயிரும் இந்த உலகில் ஓர் அடையாளத்தை விட்டுச் செல்கிறது. ஆனால் பெரும்பாலான ஊனமுற்றவர்கள், மெளனச் சாதனை யாளர்களாய் வாழ்ந்த போதிலும் மரித்த பிறகு மறக்கப்படுகிறார்கள். பிள்ளை அடையாளம் இன்றிப் போய்விட்டதில் பெற்றோரின் கனவுகளும் சிதைந்து போகின்றன.
ஆனால் அப்படி இல்லாமல் அவர்களும் பேசப்படும் வகையில், வாழ்ந்ததற்கான அடையாளமாய், சில தலைமுறைகளாவது அவர்களை நினைவுகூரும் வகையில் அவர்கள் அழியாச் செல்வமான புத்தக வடிவில் அச்சடிக்கப்பட்டு அடையாளம் காட்டப்பட்ட சந்தோம் பெற்றவர்களுக்கு. தங்களைப் பெற்று, வளர்த்து, அரும்பாடு பட்டு ஆளாக்கிய பெற்றோர்களுக்கு ஒரு வேளைச் சாப்பாடு போடக்கூட சுயம் இல்லாத நிலையில், தங்கள் இயலாமையைப் பலமாக்கி இந்தப் பிள்ளைகளைப் பெற்ற உயர் மனிதர்கள் இவர்கள் எனத் தங்களால் அடையாளம் காட்டவும், அதன் மூலம் அவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்த முடிந்ததே என மவுனமாய் மகிழ்ச்சி நிறை மனது அந்தச் சாதனையாளர்களுக்கு.
அது மட்டுமல்ல, தங்களை இந்த உலகிற்கு அடையாளம் காட்ட உதவியவர் களையும் வாய்ப்பளித்தவர்களையும் நன்றியுடன் நினைக்கும் தருணமாகவும் அது அமைந்தது. வாய்ப்பளித்து வளர்த்து விட்டவர் நேரில் வந்து அந்த மகிழ்ச்சியில் பங்கு கொண்டதும், மனமார வாழ்த்தியதும், உற்சாகப்படுத்தியதும் இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்தது அந்த வளரும் சாதனை யாளர்களுக்கு. இந்த உடலுக்கு உயிர் தந்த தந்தை ஒருபுறம், எழுத்தாளர் என்னும் மறுபிறவிக்கு உயிர் தந்த தந்தை மறுபுறம். இரண்டு தந்தையர்களின் ஆசீரில் ஒரு மகள். குறைவிலும் நிறைவு மனதில் ததும்பியது. இயலாமை உடலில்... மனதிலும் அல்ல, திறமையிலும் அல்ல.
இப்பொய்மை உலகில் கடவுளர்கள் ஏராளம். கல்லெல்லாம் கடவுள் அல்ல! வாழும் கடவுளே கடவுள்! அக்கடவுள் தேவ நற்கருணையில் வாழ்கிறார் என்றால் அவரை உணர "நல் விசுவாசம்' வேண்டும். ஏனெனில், ஆண்டவர் சொல்கிறார், ""நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு. இதை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்.'' அப்ப இரச வடிவிலே ஆண்டவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாமல் வாழ்கிறார் என்பது ஆண்டவரைச் சுவைத்துப் பார்த்தவர்களுக்குப் புரிந்த ஒன்று.
நற்கருணை மகிமை நன்மையின் மகிமை. அன்றைய காலக்கட்டங்களில் நற்கருணை நாதரில் இருந்த விசுவாசம் இக்காலக்கட்டங்களில் குறைந்து போனதோ? எனச் சிந்திக்கத் தோன்றுகிறது. ""எவனாவது இந்த அப்பத்தைத் தகுதி இன்றி உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால் ஆண்டவருடைய உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறான்'' (1 கொரி 11:27). திருமண வைபவத்திற்குச் செல்பவர்கள் திருமண விருந்தில் உண்பதும், திருப்பலியில் கலந்துகொள்பவர்கள் திருவிருந்தில் பங்கேற்பதும் ஒன்றாகிவிடாது.
"அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள்'' (யோவா 6:27) என்னும் திருவசனத்திலிருந்து மண்ணக - விண்ணக உணவின் வேற்றுமை தெளிவாகும். நற்கருணையை இடது கையில் பெற்று எடுத்து உண்பது ஏற்புடையதா? என்பது புரியவில்லை. சில சமயங்களில் சிற்றாலயங்களிலிருந்து நற்கருணைப் பேழையை எடுத்து வரும்போது எந்தவித பக்தி முயற்சியும் இன்றி சாதாரணமாக வருவது காலத்தின் கோலம் போலும்! நற்கருணை தவறி கீழே விழுந்தால் அதை மீள எடுத்துப் பேழையில் வைக்கின்ற செயல் அக்காலக் குருக்களின் செயலுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இன்று உள்ளது.
திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், அன்னை தெரேசா மற்றும் ஆயர் புல்ட்டன் Uன் போன்றோர் வெளிப்படுத்திய நற்கருணைப் பக்தி போற்றுதற்குரியது. அதனால்தான் அவர்கள் காலத்தை வென்றவர்களாக இன்றும் திகழ்கிறார்கள்.
எந்த நிலையிலும் "தேவ நற்கருணை'யில் "இறைவன்' ஜீவிக்கிறார் என்பதை விசுவசித்து திருவிருந்தில் பங்கேற்றால், ஆராதனை செய்தால் வீடும் நாடும் "அமைதி'யில் நிலைக்கும். நற்கருணை ஆராதனை உலகெங்கும் கொண்டாடப் பட்டாலும் அது சடங்கா இல்லை "சரண்டரா' என்பது அவரவர் உள்ளத்திற்குத் தான் தெரியும். நற்கருணை ஆண்டவர் நம்மில் தங்க "விசுவாசம்' வேண்டி வரம் கேட்போம்.
திருச்சபைப் புனிதர்கள் வரலாற்றில் புனித பிரான்சிஸ் சொலானோ (1549 - 1610) என்ற புனிதரும் உண்டு. மொன்டில்லா என்ற நகரத்தில் பிறந்தவர்.
தந்தை உயர் நீதிமன்றத்தில் வழக் கறிஞராகப் பணி செய்தார். மிகுந்த கடவுள் பக்தியும், நற்குணங்களும் நிறையப் பெற்றவராய் இருந்தார். அவர் மகன் பிரான்சிஸ் அவர்களும் அவரைப் போலவே இறை பக்தியிலும், பிறரன்புச் சேவையிலும் விருப்பம் கொண்டவராய் இருந்தார்.
தன் 20-ஆவது வயதில் குருத்துவ அழைப்பை ஏற்று குருத்துவக் கல்லூரி சென்றார். 27-ஆவது வயதில் குருவாய்த் திருநிலைப்படுத்தப் பட்டார். அச்சமயத்தில் அவரது பகுதியில் காலரா நோய் பரவியது. பலர் மடிந்தார்கள். அச்சமயத்தில் அவர் ஆற்றிய அன்புப் பணி மகத்தானதாய் இருந்தது.
அவரது குணம் அறிந்து தென் அமெரிக்காவிற்கு ஒரு மினரியாக அனுப்பினார்கள். செல்லும் வழியில் கப்பல் சேதமடைந்து இடையில் இறக்கிவிடப்பட்டார்கள். அப்பகுதியில் நடந்து சென்று லீமா, பெரு, அர்ஜென்டைனா பகுதியை அடைந்து, 20 ஆண்டு காலம் நடைப்பயணமாகவே சென்று மக்களின் இதயத்தில் இறையன்பைப் போதித்தார். இறைவார்த்தையின்படி அவர்களின் வாழ்வைச் சீர்ப்படுத்தி புனிதராய் மரித்தார்.
இறைவார்த்தையின் நிமித்தம் சிறையிலடைக்கப்பட்டிருந்த புனித பவுல் தன் உடன் உழைப்பாளர் திமொத்தேயுவுக்கு இவ்வாறு எழுதுகிறார்:
""நான் உன்னை வற்புறுத்திக் கேட்டுக்கொள்வது: "தேவ வார்த்தையை அறிவியும். வாய்ப்பு இருந்தாலும் இல்லாவிடினும் வலியுறுத்திப் பேசும். கண்டித்துப் பேசும். கடிந்துகொள்ளும். அறிவுரை கூறும். மிகுந்த பொறுமையோடே போதித்துக் கொண்டே இரும்'' (2 திமொ 4:2).
ஆண்டவர் இயேசுவின் புனித பூமிக்குத் திருப்பயணம் செய்துவிட்டு வந்த குருவானவர் ஒருவர் தன் அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்: ""முதன் முதல் அப்புனித பூமியைப் பார்த்தபோது, மண்ணில் கால் வைத்தபோது, இந்தப் பூமியையா பரம தந்தை தன் ஒரே மகன் இயேசுவுக்கு இறைப்பணித் தளமாகக் கொடுத்தார்? இப்பூமியில் இறைப்பணி செய்யும் ஒரு பணியாளர்கூட "எனக்கு இந்த மோசமான பகுதியைத் தந்துவிட்டு, தன் மகன் இயேசுவுக்கு நல்ல பூமியைத் தந்து இருக்கிறாரே' எனக் கூறமுடியாது'. தண்ணீர் வளமில்லா வறட்சிப் பகுதி. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம். புழுதி படிந்த மலைப்படிவங்கள். சுண்ணாம்புக் கல் குணம் கொண்ட பகுதிகள். பாலைவனம் போல் காட்சியளிக்கும்.
பூமியின் அமைப்பு. இயற்கையின் செழிப்பைக் காண முடியா நில அமைப்புக்கள்... இப்படி எத்தனையோ!''
ஆனால் ஆண்டவர் இயேசு இந்தப் பூமியைத் தன் இறைப்பணித் தளமாய் இறைத்தந்தை கொடுத்ததை ஏற்றுக்கொண்டார், போதித்தார், காடுமேடெல்லாம் சுற்றி அலைந்தார். இறைவார்த்தையினால் விண்ணக வாழ்வைக் காட்டினார். கடைசியில் அதே பூமியில் குருதி கொட்டி சிலுவையில் உலகின் பாவம் போக்க மரிக்கிறார்.
"அவர் செய்ததெல்லாம் கேள்வியுற்று, யூதேயா, யெருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப் பகுதி, தீர், சீதோன் வட்டாரம் ஆகிய இடங்களிலிருந்தும் திரளான மக்கள் அவரிடம் வந்தனர். இயேசு வியாதிக்காரர்களைச் சுகமாக்கி இறைவார்த்தையை அவர்களுக்கும் போதித்தார்'' (மாற்கு 3:8)
என இயேசுவின் இறைப்பணியைக் குறித்து எழுதுகிறார்.
இறைப்பணியில் மகிழ்வு அவர்களின் சுயநல வாழ்வில் அடங்கி இருப்பதே இல்லை. மாறாக முற்றிலும் அர்ப்பணிக்கும் குணத்தில் தான் அடங்கி இருக்கிறது. ஒரு பூமியோ இடமோ தன்னிலேயே புனிதமாய் இருப்பதில்லை. மாறாக புனிதமானவற்றாலேயே அது புனிதமாக்கப்படுகிறது. புனிதர்கள் வாழும் இடம் புனிதமாக்கப்படுகிறது. இறைவாக்கினர்கள் மற்றும் ஆண்டவர் இயேசுவின் பாதங்கள் பட்ட பூமிதான் இஸ்ரயேல் நாடு. இன்று புனித பூமி என்று உலகினர் அனைவராலுமே கருதப்படுகிறது.
ஓர் இறைப்பணியாளர் கொடுக்கப்பட்ட எந்த இடத்தில் ஆண்டவர் பணி செய்ய அனுப்பி னாலும் மிகுந்த தாழ்ச்சியான உள்ளத் துடன் உத்தமமாய் பணி செய்வோம்.
என் இறைப்பணியின் நாட்களில் சுமார் ஆறு ஆண்டுகள் தேனிப் பங்கில் பணி செய்தேன் அச்சமயத்தில் அப்பங்குக்கு உட்பட்ட சில குடியிருப்புக்கள் கேரளா எல்லைப் பகுதிகளிலும் இருந்தன. மலையுச்சியில் குடியிருக்கும் அவர்களுக்கும் பணி செய்ய பல மைல்கள் மலையின் உயரத்திற்கு நடந்து செல்ல வேண்டும். இல்லையயன்றால் கேரளாவின் உட்பகுதிக்குப் பேருந்தில் சென்று பின் அப்பகுதி மக்களைச் சந்திக்க வேண்டும். அடியேன் மூணாறு சென்று அன்று இரவே எல்லைப்பட்டி சேர்ந்து விடுவேன். அங்குள்ள அருட்தந்தை யர்கள் எங்களை ஏற்று உபசரித்து வழியனுப்புவார்கள்.
தாமஸ் என்ற அருட்தந்தை அப்போது எல்லைப்பட்டியில் இருந்தார். சிறிய அறை. பல பகுதிகளில் சிதறி இருக்கும் குடியிருப்புகள். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். குறைந்த வருமானம். இருப்பினும் எப்பொழுதும் மகிழ்வுடன் இருந்தார். "மக்களுக்குப் பணி செய்வதில் இருக்கும் ஆர்வம் அசௌகர்ய சூழ்நிலைகளையும் மகிழ்வாக்கி விடுகிறது'' என்றார். முழு அர்ப்பணத்தில் மகிழ்வு உண்டு. மக்கள் பணியில் அர்ப்பணிப்போம். ஆமென்.
இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.
மத்தேயு 4. 20
இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.