"துன்பத்தில் துணை'' மதங்களைக் கடந்த மனித நேயம்

இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் சிறுநீரகம் தானம் செய்தனர். ஆனால் இந்துப் பெண் முஸ்லிம் பெண்ணின் கணவருக்கும் முஸ்லிம் பெண் இந்துப் பெண்ணின் கணவருக்கும் தானம் செய்ததுதான் புதுமை.

இது நடந்தது ஒரிசாவில் உள்ள பாலசோர் நகரில். இது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருப்பதோடு இரு குடும்பங் களிலும் வசந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரிசாவில் பாலசோர் அருகே உள்ள சோரோவைச் சேர்ந்தவர் ஹரேகிருஷ்ண பாஞ்சா (48). இவர் வழக்கறிஞர். இவரது சிறுநீரகம் பழுதடைந்ததால் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது மனைவி கல்பனா, கணவருக்குச் சிறுநீரகம் தானம் செய்ய முன்வந்தார். ஆனால் கல்பனாவின் இரத்தப் பிரிவோ "பி', பாஞ்சாவின் இரத்தப் பிரிவோ "ஏ'. மனைவியின் சிறுநீரகத்தைக் கணவருக்குப் பொருத்த முடியாமல் போயிற்று.

இந்நிலையில் கட்டாக்கைச் சேர்ந்த வியாபாரி முகமது சையத்துக்கும் (50) சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவருக்குச் சிறுநீரகம் தானம் செய்ய மனைவி சைரா விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவரது இரத்தப் பிரிவோ "ஏ', கணவர் சையத் இரத்தப் பிரிவோ "பி'.

இவ்வாறு வெவ்வேறு இரத்தப் பிரிவு காரணமாக கணவருக்குச் சிறுநீரகம் தானம் செய்ய முடியாமல் இரு பெண்கள் அவதிப்படுவதை அறிந்த டாக்டர் தீபக் சங்கர் ராய், இவர்களுக்குள் முடிச்சுப் போட முடிவு செய்தார். இந்தத் தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகத்தைத் தானம் செய்யக் கூடாது என்று யோசித்தார். அதன்படி ஒரே இரத்தப் பிரிவாக இருந்ததால் இந்துப் பெண் கல்பனாவின் சிறுநீரகம் முஸ்லிமான முகமது சையத்துக்கும், முகமது சையத்தின் மனைவி சைராவின் சிறுநீரகத்தை இந்துப் பெண் கல்பனாவின் கணவர் பாஞ்சாவுக்கும் பொருத்த முடிவு செய்து அதற்காக இரு தம்பதிகளிடமும் அவர் ஆலோசித்தார்.

நல்ல யோசனையாக இருந்ததால் இரு தரப்பிலும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, பாஞ்சாவின் மனைவி கல்பனா முகமது சையத்துக்கும், சையத் மனைவி சைரா பாஞ்சாவுக்கும் சிறுநீரகம் தானம் செய்தனர். பாலசோரில் உள்ள மருத்துவமனையில் இந்தச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இதில் பூரண குணமடைந்து முகமது சையத் வீடு திரும்பினார். பாஞ்சா இன்னும் சில நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது.

மதத்தின் பேரில் ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக்கொள்ளும் காட்டு மிராண்டித்தனம் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், மதங்களைக் கடந்து இங்கே மனித நேயம் வென்றுள்ளது.
(தினமணி நாளிதழில் 2008 பிப்ரவரி 13 அன்று வந்த செய்தி இது. செய்தி பழையதுதான்.செய்தி சொல்லும் செய்தி இன்றும் என்றும் புதியதே.) (நன்றி - தினமணி)

0 comments:

Post a Comment