மாசற்ற அன்பே மகிழ்வின் ஊற்று

புனித அருளானந்தர் (1647 - 1693) ஓரியூர் மண்ணில் வேதசாட்சியாய் மரித்தார். 300 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் அவரின் செங்குருதியை உள்வாங்கிய அப்பூமி புனிதரின் தியாகத்தை மறக்கவில்லை. வெண்மணலாய்க் காட்சி அளித்த அப்பூமி, இன்று சிவந்த மண்ணாய்க் காட்சி அளிக்கிறது. இயேசுவின் சாட்சியாய் வீர மரணம் அடைந்த அருளானந்தரின் தியாகத்தை இன்றும் அச்சிவந்த மண் பறைசாற்றுகிறது.
1673-இல் மரவ மண்ணில் இறைபணியாற்ற வந்தார் புனித அருளானந்தர். அரண்மனையின் சுக வாசத்தில் வாழ்ந்தவர் அடியார்க்கும் அடியாராய்த் தன்னையே தாழ்த்தி இயேசுவின் அன்புப் பணி செய்தார்.
உலக மகிமையில் திளைத்த அவரின் இளமைக் காலங்கள் மரவ மண்ணில் இயேசுவின் அன்புச் சீடராய் ஏழ்மையில் வாழ மனம் மகிழ்ந்தார். பஞ்சு மெத்தையில் நடந்த கால்கள் சூரிய வெப்பத்தில் சூடேறிய மரவ நாட்டின் புழுதி மண்ணில் பயணித்தன. மக்களின் எளிய உணவும் உடையும் வாழ்வும் அவருக்குச் சொந்தமாயின.
1688-இல் அவர் தன் நாடு லிஸ்பன் செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மூன்று ஆண்டுகள் அவர் அரண்மனை வாழ்வில் இருந்தாலும் எளிய உணவான கஞ்சியை அவரே சமைத்து அருந்தினார். நல்லுணவு சாப்பிட வற்புறுத்தியவர்களிடம், “என் அன்பு மக்களின் உணவு இதுதான். அவர்களின் ஏழ்மை நிலை என்னுள் புகுந்து விட்டது. அவர்களைவிட உயர்ந்த உணவையும் வாழ்வையும் ஏற்றுக் கொள்வது அவர்களின் தந்தையான என்னால் முடியவில்லை'' என்றார்.
கடைசியில் நல்ல குருவாய், தன் உயிரையே அளிக்கும் ஆயராய், இயேசுவின் சாட்சியாய் மிக மகிழ்வுடன் வேத சாட்சியாய்க் குருதி சிந்தி மரிக்கிறார்.
ஒரு குருவின் வாழ்வு, மக்கள் மத்தியில் பணியாற்றும் இறைப் பணியாளரின் வாழ்வு பங்கு மக்களின் வாழ்வின் நிலையில் கலந்த ஒரு வாழ்வாய் இருக்க வேண்டும்.
புனித பவுல் தன் இறைமக்களான உரோமையர்களுக்கு இவ்வாறு எழுதுகிறார் :  “இரத்த உறவினரான என் சகோதரர்களுக்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்திற்கு உள்ளாகவும் தயங்கேன்'' (உரோ 9:3) என்கிறார்.
ஆண்டவர் இயேசுவின் இறைப் பணியின் நாட்களும் மக்களின் வாழ்வு நிலையோடு இணைந்த ஒரு வாழ்வாக இருந்தது. ஆண்டவர் இயேசுவின் போதனை மூன்று நாட்களையும் கடந்த ஒரு போதனையாக இருந்தது. “அவர்கள் ஆயனில்லா ஆடுகள் போல் இருந்ததால் அவர் நெடுநேரம் போதிக்கலானார்.'' “இவர்களைப் பட்டினியாக அனுப்பிவிட எனக்கு விருப்பமில்லை. பட்டினியாக அனுப்பினால் அவர்கள் சோர்ந்து விழக்கூடும். இவர்களில் சிலர் மிகத் தொலைவிலிருந்து வருகிறார்கள்'' எனக் கூறி ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஆசீர்வதித்து, அவைகள் பலுகும்படிச் செய்து அனைவரின் பசியைத் தீர்க்கிறார் (மாற்கு 6:8; மத் 14:15; லூக் 9; யோவா 6 அதிகாரங்கள்) என்பதைக் காண முடியும். இறைமக்க¼ளாடு இருத்தல் ஆண்டவர் இயேசுவை மகிழ்வித்தது. அவர்களின் இதய உணர்வில் கலந்தார்.
ஒரு குருவானவர் பங்கு மக்கள் மீது கொண்டிருக்கும் நேசமும் அன்பும் அர்ப்பணிப்பும் எளிய வாழ்வுமே அவரது மகிழ்வான வாழ்வுக்குக் காரணமாயிருக்கின்றன. சுயநலமும் பொருளாசையும் ஆடம்பர மோகமும் ஒரு குருவின் வாழ்வை நாசத்தின் வேதனைக்குத்தான் இட்டுச் செல்லும். இவ்வுலகிலேயே நரகத்தை அனுபவிக்கச் செய்துவிடும்.
குருக்களின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னி, பிரான்ஸ் நாட்டின் "ஆர்ஸ்' பங்கில் 41 ஆண்டுகள் பணி செய்தார். எவ்விதப் பிரச்சனையோ, முறுமுறுப்போ, "ஒத்துவரவில்லை' என்ற உணர்வோ அவருக்கு எழவில்லை. அவரின் பங்கு மக்களுக்கும் எழவில்லை. அர்ப்பண உணர்வும், பங்கு மக்கள் மீது கொண்ட நேசமும், அவர்களின் ஆன்ம ஈடேற்றப் பணியில் அயரா உழைப்புமே அவரின் வாழ்வை இயேசுவில் மகிழும்படியாய்ச் செய்தன.
இன்று ஒரு குருவின் வாழ்வில் இருக்கும் சுயநலமும், வெளிநாட்டு மோகமும், பணப் பெருக்கத்தில் விருப்பமும், ஆடம்பர வாழ்வில் தீராத ஆசையும் இருப்பதாலேயே மக்கள் மீது இருக்க வேண்டிய அர்ப்பணிப்பு வாழ்வில் வெறுமை ஏற்படுகிறது. மக்களுக்கு இறைப் பணியாளர் மீது அவநம்பிக்கை ஏற்பட்டு, குழப்பச் சூழ்நிலை உருவாகி விடுகிறது.
ஒரு குருவின் மகிழ்வு ஆடம்பர வாழ்விலும் பணப் பெருக்கத்திலும் இருப்பதில்லை. அர்ப்பணிப்பும், எளிய வாழ்வும், தூய்மையான மன சாட்சியும், மக்கள் நல்வாழ்வுக்காய் வாழும் உணர்வும்தான் ஒரு குருவின் வாழ்வில் மகிழ்வை ஏற்படுத்துகின்றன.
குருக்களுக்கான பயிற்சியகங்கள் இன்றும் நிர்வாகிகளை உருவாக்குவதை விட்டுவிட்டு, அர்ப்பணத்தில் மகிழும் இறைப்பணியாளர்களை உருவாக்குவதே இன்றைய தேவையாகும்.
சிந்திப்போம், செயல்படுவோம்.    
பணி. ச. ஜெகநாதன்,அருப்புக்கோட்டை

0 comments:

Post a Comment