இது பூக்களின் காலம் . . . ஆறாம் அறிவின் அவதாரம்

வெட்கப்படுகிறது
நாற்காலி
வெட்கம் கெட்ட
சிலரைச் சுமக்க
அரசியல் மிகப் பெரிய சக்திதான்
இளைஞரைப் போலவே

இளைஞரின் அரசியல் மாற்றத்திற்கு
ரசிய புரட்சியே சாட்சி

மொழியின் தொடக்கம்தான்
ஓவியமும் குறியீடும்
மொழியின் முதிர்ச்சிதான் கவிதை

உயிரினத்தின் தோற்றம்தான் அமீபா
உயிரினத்தின் பரிணாமம்தான் மனிதன்

உலகின் முதல் மனிதன்
நெருப்பைக் கண்டு பயந்தான்
பிறகு உராய்வின் உற்பத்தி என்று உணர்ந்தான்

விலங்குகளைக் கண்டு மிரண்டோடியவன்
பிறகு விரட்டி அடிக்கவில்லையா!

புலியை முறத்தால் அடித்து விரட்டிய
வீரமறத்தி வாழ்ந்த பூமியல்லவா!

நீதிக்காக அரசின் அரியணைக்கே தீ வைத்த
கற்புக்கரசி வாழ்ந்த கண்ணிய பூமியிது!

உனக்கு ஏன் தயக்கம்?
இன்னும் ஏன் உறக்கம்?
எதிர்காலம் எப்படிப் பிறக்கும்?

நீ பங்கெடுக்காத ஒவ்வொன்றிலும்
உன் உரிமைகள் இருக்கிறது

நூறு இளைஞரைத் தாருங்கள்
உலகையே மாற்றிக் காட்டுகிறேன் - என்ற
விவேகானந்தருக்குச் சாத்தியமாய் இருந்தது

அன்று மக்கள் தொகை
முப்பது கோடியாம்
அன்று சாத்தியமோ, அசாத்தியமோ
இன்று சாத்தியம்

இந்தியாவின் இளைஞர் எண்ணிக்கையே
இருபது கோடிக்கு மேல்

இளைஞனே
வீறு கொண்டெழு
அரசியலில் அசிங்கம் அகற்று

சிறு விதைகூட மண்ணை
முட்டித்தான் முளைக்கிறது
நீ விண்ணை எட்டி உதை
அஸ்திவாரத்திற்கே அரியாசனம்

(இன்னும் மலரும்)

ஜே. தமிழ்ச்செல்வன்

0 comments:

Post a Comment