அம்மா


மாடி அறையில் படித்துக் கொண்டிருந்த நான் கீழே எழுந்த சத்தத்தைக் கேட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தேன். என் வீட்டு வாட்ச்மேன் யாரையோ அடித்து விரட்டிக் கொண்டிருந்தான். நன்றாக உற்றுப் பார்த்தேன். அங்கே பரட்டைத் தலையும் அழுக்கு உடம்பும் அழுக்கேறிய கிழிந்து நைந்துபோன துணியோடு உடலெங்கும் இரத்தம் வடிந்து காய்ந்துபோன காயங் களுடன் ஒரு பெண் மிரட்சியான பார்வையுடன் பயங்கரமாய் அலறிக் கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தாள். அவள் கத்திய அந்த சத்தம் ஏதோ ஒரு வினோத மிருகம் கத்தும் சத்தத்தைப் போன்று கர்ண கொடூரமாக இருந்தது.

அக்கம்பக்கத்துப் பங்களாவில் இருந்த வாட்ச்மேன்கள் எல்லாம் கையில் தடியுடன் வந்து என் வீட்டில் நுழைய முயற்சிக்கும் அந்தப் பெண்ணை அடித்து விரட்டினர். அவர்கள் அடிக்கும் அடிகளைப் பொருட்படுத்தாமல் அவள் முரண்டுப் பிடித்தவளாய் அந்த இடத்தை விட்டுப் போகாமல் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தாள். மேலும் அடிக்க வருபவர் களைக் கையில் அகப்படும் மண் கற்களால் திருப்பித் தாக்கினாள். பார்க்கவே பரிதாப மாகவும் பயங்கரமாகவும் இருந்தது.

அருகே சென்ற நான் அவளை அடிக்க வேண்டாம் என்று அவர்களைத் தடுத்து விட்டு அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்தேன். பாவம்! மனநிலை தவறி பைத்தியமாக உடம்பெல்லாம் இரத்தம் ஒழுகும் காயத்துடன் துர்நாற்றத்துடன் பயம் கலந்த பார்வையோடு உடல் கூனிக்குறுகி பார்க்கவே அருவருக்கத்தக்க நிலையில் இருந்தாள். அருகே இருந்த வர்களைக் குடிக்கத் தண்ணீர் கொடுக்கச் சொன்னேன். அந்தப் பெண் இருந்த கோலத்தைப் பார்த்து அவள் அருகே செல்ல யாரும் முன்வராமல் எல்லோரும் பயத்துடன் பின்வாங்கினர். நானே அவள் அருகே சென்று குடிக்கத் தண்ணீர் கொடுத்தேன். தண்ணீர் செம்பை வாங்கிய அவள், வாங்கிய வேகத்தில் திருப்பி என் மீது அடித்தாள். சாமர்த்தியமாக ஒதுங்கிக் கொண்டேன். ""அய்யா, அதுகிட்டே போகாதீங்க. அதுக்கு வெறி புடிச்சிருக்குது'' என்று எச்சரித்தனர். இந்தப் பெண்ணை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த என் வீட்டு வேலைக்காரி, ""அய்யா, இந்தப் பைத்தியம் எங்க வூட்டுப் பக்கமாத்தான் இருக்குது. கொஞ்ச நாளா பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்துச்சி. அப்புறம் சுமாரா ஆயிடிச்சினு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. ஒரு நாள் திடீர்னு வீட்ட விட்டு எங்கேயோ போயிடுச்சி. தேடிப் பார்த்து எங்கேயும் கெடைக்காததால தேடரதையே விட்டுட்டாங்க. இப்ப இன்னடான்னா பாவம் இங்க வந்து கீது. இருங்க அவங்க வீட்ல இருந்து யாரையாவது கூட்டினு வரேன்'' என்று ஓட்டமும் நடையுமாகச் சென்றாள். சிறிது நேரம் கழித்து சுமார் முப்பது வயதுள்ள ஒரு ஆளைக் கூட்டிக் கொண்டு வந்தாள். ""அய்யா, இவர்தான் அந்த அம்மாளுடைய பையன்.''

அருகே சென்ற அவன், ""அம்மா, நான்தாம்மா ரவி வந்திருக்கேன். எழுந்து என்கூட வாம்மா'' என்று அவள் கையைப் பிடித்துத் தூக்கியவுடன், அவனைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்த அந்தப் பெண் முரண்டு பிடிக்காமல் எழுந்து அவன்கூட அமைதியாகச் சென்றாள். பார்க்க அருவருப்புடன் உடம்பெல்லாம் இரத்தமும் சீழும் ஒழுகி துர்நாற்றத்துடன் தொடவே கூசும் அந்தப் பெண்ணை அவன் தொட்டுத் தூக்கி தன்னோடு அணைத்து அழைத்துச் சென்றான். இவ்வளவு நேரமாக யாருக்கும் அடங்காமல் வெறி பிடித்த நிலையோடு கட்டுக்கடங்காத காட்டாறாக, கொடும் புயலாக, சூறாவளியாகச் சுழன்று சுழன்று எல்லோரையும் எதிர்த்துத் தாக்கிக் கொண்டிருந்த அந்தப் பெண், தன் மகனைக் கண்டவுடன் எவ்வித எதிர்ப்பும் இன்றி அவனோடு செல்வது என்பது தாய்ப்பாசத்தைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? ஆம், பைத்திய நிலையில்கூட ஒரு பெண்ணுக்குத் தாய்ப்பாசம் பொங்கி வழிகிறது. தாய்மையே உன் பாச உணர்வுக்கு இந்த உலகத்தில் மட்டும் இல்லை, ஈரேழு ஜென்மத்திற்கும் ஈடு இணை எதுவும் இல்லை என்று என் மனதிற்குள் சொல்லிக்கொண்டு, ஈரம் நிறைந்த விழிகளைத் துடைத்துக்கொண்டு, என்னைத் தன் கருவறையில் தாங்கி, மேனி நொந்து, ஈன்றெடுத்து, மணியாகக் காத்து, நான் உயர தான் தேய்ந்து, என்னைக் கோபுரத்தில் ஏற்றி அழகு பார்த்த என் அன்னை எனக்குச் சுமையாக இருக்கின்றாள் என்று எண்ணி முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்ட என் இழிசெயலுக்காய் வெட்கப்பட்டு, நாணி என்னையே நொந்துகொண்டு என் அன்னையை அழைத்து வர இதோ என் கால்கள் முதியோர் இல்லத்திற்கு விரைந்து செல்கின்றன.

தங்க. ஆரோக்கியநாதன், ஆவடி

0 comments:

Post a Comment