குருக்களின் பாதுகாவலர் புனித ஜான் மரிய வியான்னியின் 150‡ஆவது ஆண்டைக் குருக்களின் ஆண்டாக அறிவித்தது மாபெரும் மகிழ்ச்சி.
அன்னை மரியாளின் மீதும், அருள்நாதர் இயேசுவின் மீதும் உள்ள அளவற்ற நம்பிக்கையாலும் பக்தியாலும் தான் புனித ஜான் மரிய வியான்னியை இறைவன் இந்தப் புனிதர் நிலைக்கு உயர்த்தியுள்ளார்.
இந்தப் புனிதரைப் போன்ற குருக்களையும், ஆன்மாக்களை மீட்டெடுக்கும் குருக்களையும் நம் தாய் திருச்சபையானது கண்டறிவது நலமாக இருக்கும்.
இயேசுவின் அன்புச் சீடர்கள் 12 நபராக இருந்தாலும், உலகெங்கும் சென்று போதித்தார்கள். இயேசுவைப் பற்றி அறியாத தேசமில்லை. இயேசு என்று சொன்னாலே இவர்கள் கிறிஸ்துவை வழிபடுபவர்கள் (கிறிஸ்தவர்கள்) என்று சுலபமாகப் பாமரர்கள்கூட அறிந்துகொள்வார்கள்.
எப்படி இயேசுவை வழிபடுபவர்கள் என்று புரிந்துகொள்ள முடிந்தது? சீடர்கள் அனைவரும் இயேசுவின் மதிப்பீடுகளான அன்பு, நீதி, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அனைத்தையும் முற்றிலும் அறிந்தவர்கள்; இயேசுவோடு இருந்தவர்கள்; அவர் சொன்ன மதிப்பீடுகளின்படி நிஜ வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர்கள்.
அன்று பன்னிரெண்டு பேர் இருந்தார்கள். இறைபணி நிறை பணியாகச் செழித்தோங்கியது. இன்று இறைபணி வெறும் பணியாகிவிட்டதோ என்ற கேள்வி நம்மிடையே தோன்றுகிறது.
இறையழைத்தல் குறைய பல காரணங்கள் இருந்தாலும் இயேசுவின் மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொள்ளும் போதும், வாழ்ந்து காட்டும் போதும், கடவுள் செய்துவரும் அனைத்து ஆச்சரியமான செயல்கள் வெளிப்படும்போதும் மட்டுமே இறைதேடலும் ஆர்வமும் இளையோரிடம் வளரும் என்பதில் ஐயம் இல்லை.
குருக்கள் இயேசுவின் சொத்துக்கள். அது எளிதில் கிடைக்கும் வாழ்க்கை யில்லை. அழைக்கப்பட்டோர் பலர், தேர்நதெடுக்கப்பட்டோர் சிலர். எனவே தேடுங்கள் இயேசுவைக் கண்டடைவீர்கள். அவர் களுக்கே கிடைக்கிறது குருத்துவ வாழ்வு.
ஒரு நல்ல கிறிஸ்துவ குடும்பத்தை இறைவன் உலகிற்குத் தந்ததால்தான் இன்று புனித ஜான் மரிய வியான்னியின் பெயரை உச்சரிக்கின்றோம்; குருக்களின் ஆண்டாகவும் கொண்டாடுகிறோம். இந்தப் புனிதரின் குடும்பத்தைப் போன்று பெற்றோர்களை நமக்கு இறைவன் தந்ததால்தான் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரிகள், அருட் சகோதரர்கள் இன்று நம்மோடு இருக்கின்றார்கள்.
வரும் காலங்களில் ஆன்மாக்களை மீட்டெடுக்கும் பிள்ளைகளை இறைவன் ஒவ்வொரு கிறிஸ்தவரின் வழியாக தேர்ந்தெடுக்க அழைப்பு விடுக்கிறார். இறைவனுக்கு எல்லா வகையிலும் கொடுத்துப் பாருங்கள். நிறைந்த மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும்படியாகச் செய்வார். இயேசுவின் மதிப்பீடுகளைக் காப்போம்; குருத்துவ வாழ்வுக்கு ஒளியேற்றுவோம்.
வாழ்க குருகுலம்! வளர்க குருத்துவம்!
0 comments:
Post a Comment