The Commission of Tamil Nadu Latin Bishops Council for Vocation dedicates itself to promote vocation to Priesthood and Consecrated Life, for the building up of the Church and the Salvation of the World.
Mission Statement
The Primary Duty of the Commission is to sow the seed of vocation in the hearts of the Families, Youth and Children.
Methodology
1.Commission inspires, guides and coordinates the activities of vocation promotion in the Region.
2.Forming the Vocation Promoters in their mission of finding good spirited people who incline to say ‘Yes’ to the Call of God,the Commission makes the links between Dioceses and Religious Congregations.
3.Through seminars and ongoing training programmes, Commission concentrates on the formation of Youth and Children.
புனித ஜான் மரிய வியான்னியார் இறந்த 150-ஆவது ஆண்டு இது. இதனை அருள்பணியாளர்களுக்கான ஆண்டு எனத் திருத்தந்தை அறிவித்துள்ளார். இதன் நோக்கம் வியான்னியாரின் அருள் வாழ்வையும் அரிய பணிகளையும் சீரிய எடுத்துக்காட்டாகக் கொண்டு இன்றைய அருள்பணியாளர்கள் சிறப்புறச் செயல்பட வேண்டும் என்பதே. இருப்பினும் அருள் பணியாளர்களின் உயர்மாதிரி என அவரைப் பற்றிப் பேசும்போது அவர் கல்வித் திறன் அற்றவர், இறையியல் பாடத் தேர்வுகளில் தொடர்ந்து தோல்வியே கண்டவர், ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுவதில் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் செலவிட்டவர் எனும் செய்திகளேமீண்டும் மீண்டும் அழுத்தி யுரைக்கப்படுகின்றன. ஆனால் வியான்னியார் வாழ்விலும் பணியிலும் அதிகம் கண்டு கொள்ளப்படாத இன்னொரு பரிமாணம் உண்டு. அது பழமையிலே மூழ்கிக்கிடந்த 19-ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய திருச்சபையில் அவர் பழகிப்போன பல மரபுப் பணிகளைக் காலத்தின் தேவைக்கு ஏற்ப புதிய பாணிகளிலே செயல்பட முனைந்தவர் என்பதுவே.
பாமர மக்களேஅதிகமாக வாழ்ந்த ஆர்சு எனும் ஊரிலே அவர் பணி செய்தவர். அங்குள்ளமக்களைப் போல் அவரும் எளிமையாக வாழ்ந்தவர். அன்றைய பெரும்பாலான ஏனைய அருள்பணியாளர்களைப் போல அவர் மக்களிடமிருந்து தம்மை அந்நியப்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக அவர்களுடன் கூட்டுத்தோழமை ஏற்படுத்திக் கொண்டு அவர்களின் சகோதரப் பணியாளராகச் செயல்பட்டார். பாமர மக்களுடன் தோழமை கொண்டிருந்தாலும், அன்றைய ஐரோப்பாவில் நிகழ்ந்து கொண்டிருந்த சமூக-பொருளாதார- அரசியல்-பண்பாட்டு மாற்றங்களைக் கண்டுகொள்ளாது, ஆர்சு எனும் சிற்றூரின் குறுகிய வட்டத்திற்குள் தம் அக்கறைகளைமுடக்கிக்கொண்டவர் அல்ல வியான்னியார். மாறாக, பிரஞ்சுப் புரட்சி, மக்களாட்சியின் மலர்ச்சி, பகுத்தறிவுச் சிந்தனையின் வளர்ச்சி என்பவை மரபுக் கிறிஸ்துவ விழுமியங்களுக்கு எழுப்பிய சவாலையும், அதனால் மக்கள் மனங்களில் ஏற்பட்டிருந்த இறைநம்பிக்கை, ஆன்மீகம், அறவாழ்வு என்பவை சார்ந்த குழப்பங்களையும் அவர் நன்கு உணர்ந்திருந்தார். இதனால்தான் தெளிவு தேடி, ஆயிரக்கணக்கில் அவரிடம் வந்த அறிஞர்கள், அறிவியலார்கள், அரசியல் தலைவர்கள், கலை உலக சாதனையாளர்கள் என்பவர்களுடைய மனக்குழப்பங்களையும், வாழ்வுப் பிரச்சினைகள், தேடல்கள் என்பவற்றையும் நன்கு புரிந்து அவர்களைஅவர் நன்னெறிப் படுத்த முடிந்தது. இவ்வகையில் ஒப்புரவு அருளடையாளக் கொண்டாட்டத்தில் அவர் கொண்டு வந்தது புதுமையான ஒரு மாற்றம். அதாவது, அதுவரை பெரிதும் வெறும் பாவ அறிக்கை, பாவ மன்னிப்பு என்பவற்றிலேயே முடிந்துவிட்ட அதனை ஆன்மீக ஆற்றுப்படுத்தலுக்கு ஏற்ற தளமாக மாற்றிய சிறப்பு வியான்னியாருக்குத் தனிப்பட்ட முறையில் உரியது.
மக்கள் பிரச்சினைகளைமுன்னிறுத்தி மரபுப் பணிகளையும் மாற்றுப் பாணியில் செய்த வியான்னியார் இன்றைய திருச்சபைக்கும் அருள்பணியாளர்களுக்கும் விடுக்கும் சவால் ஒன்று உண்டு. அது இன்றைய காலத்தின் அறிகுறிகளுக்கும் மக்கள் பிரச்சினை களுக்கும் ஏற்ப தம் பணிகளைஅமைத்துக் கொள்வதற்கான அறைகூவலே. ஆம், பழமையின் பாதுகாப்புக்குள் பழகிவிட்ட பாணிகளின் எளிதான, தெளிவான வரையறைக்குள் தன் பணிகளைமுடக்கிக் கொள்ளக்கூடிய ஆபத்து எப்போதுமே திருச்சபைக்கு உண்டு. ஆனால், காலத்தின் அறிகுறிகளைக் கண்டு செயல்படத் தவறும் திருச்சபை விரைவில் காலாவதி ஆகிவிடலாம். மக்களின் வாழ்வுப் பிரச்சினைகள் பற்றிய அக்கறை இல்லாத அருள்பணியாளர்களின் பணிகள் மீது மக்களும் அதிக ஆர்வம் காட்டப் போவதில்லை.
இக்கண்ணோக்கில் நாம் தொடர்ந்து இன்றைய தமிழகத் திருச்சபை சந்திக்கும் முக்கிய பிரச்சினைகள் யாவை எனக் காண முயல்வோம். அப்பிரச்சினைகளைச் சமூகம் சார்ந்தவை, சபை சார்ந்தவை எனப் பிரித்து நோக்கலாம். எனினும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாத இரு வகையான பிரச்சினைகள் அல்ல. மாறாக, சமூகம்சார் பிரச்சினைகளேபெரிதும் சபைசார் பிரச்சினைகளுக்கும் காரணிகளாக அமைகின்றன. கிறிஸ்தவர்கள் இங்கு மிகச் சிறுபான்மையினர் எனும் வகையில் சபைசார் பிரச்சினைகளின் தாக்கம் புற சமூகத்தில் மிகப் பெரிது என நாம் கூற இயலாது. எனினும் உலகின் ஒளியாக, நிலத்தின் உப்பாக, மாவில் புதைக்கப்பட்ட புளிக்காரமாக சமூகத்தை இறை ஆட்சியாக வளர்த்தெடுப்பதே திருச்சபையின் பணி. எனவே சமூக ஈடுபாடு இன்றி திருச்சபை இல்லை.
சமூகம்சார் பிரச்சினைகள்:
இன்றைய நமது சமூகத்தில் நாம் சந்திக்கும் முதல் முக்கிய பிரச்சினை ஏழ்மை என்பதே. நமது நாட்டு மக்கள் தொகையில் ஏறக்குறைய 30%டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. வறுமை என்பது வயிறார உண்ண உணவு கிடைக்காத நிலை. பட்டினிக்கு ஆளாகி, நலிந்து மெலிந்து, நோய்வாய்ப்பட்டு, உயிர்பிழைக்க மருந்து வாங்கக்கூட வசதி இன்றி படிப்படியாக மக்கள் செத்துக்கொண்டிருக்கும் நிலையே வறுமை.
சங்க காலத்துப் பாணர் முதல் இன்றைய ஊர்ப்புறப் பாமரத் தொழிலாளி வரை வறுமை என்பது காலாகாலமாக இங்குப் பலரைப் பாதிப்பது. இருப்பினும் அறிவியல், தொழில்நுட்பம் காரணமாக இன்று வளமை பெருகியுள்ளது; வறுமையை முற்றாக ஒழிப்பதற்கு உரிய வழிமுறை களும் இன்று உள்ளன. இருப்பினும்கூட வறுமை இன்னும் தொடருகின்றது என்பதே மிகப் பெரிய கொடுமை. அதிலும் குறிப்பாக, உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், சந்தைமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்பவற்றால் உலகில் சில நாடுகள் ஏனைய நாடுகளையும், ஒவ்வொரு நாட்டிலும் சில முதலாளிகள் ஏனைய மக்களையும் சுரண்டி தாங்கள் கொழுக்கும் நிலையே உள்ளது. இதனால் ஊர்ப்புற மக்களின் தொழில்கள் நலியவிடப்படுகின்றன; அவர்களுடைய வாழ்வு ஆதாரங்கள் மீது அவர்களுக்கு உள்ளஉரிமை படிப்படியாகப் பறிக்கப்படுகிறது; விலைவாசி மிக உயர்ந்த அடிப்படைத் தேவைகளுக்கான பொருள்களைக் கூட பல மக்கள் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஊர்ப்புறங்களிலும் அங்கிருந்து மக்கள் பிழைப்புத் தேடி வந்து குடியேறும் நகர்ப்புறச் சேரிகளிலும் வேலையில்லாத் திண்டாட்டம், பட்டினி, கல்வியறிவின்மை, சுகாதார மருத்துவ வசதி என்பவை இன்மை, சிறார் தொழில் என்பன பரவிக் கொண்டிருக்கின்றன. அவற்றுடன் இணைந்து போதைப் பழக்கமும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
ஊர்ப்புறத் தாய்மொழி அரசுக் கல்விக்கூடங்களில் கல்வியின் தரம் மிகவும் தாழ்ந்திருக்கிறது. இதனால் ஓரளவு வசதியானவர்கள்கூட அதிகப் பணச்செலவில் தங்கள் பிள்ளைகளைத் தனியார் நடத்திக் கொள்ளைஇலாபம் சேர்க்கும் உயர்தர ஆங்கில மொழிவழிக் கல்விக்கூடங்களுக்கே அனுப்புகின்றனர். அத்தகைய கல்விக்கூடங்களுக்குச் செல்ல வசதியில்லாத பிள்ளைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பது அரிதாகிறது. இதனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி வறுமையின் பிடியிலிருந்து வெளியேற இருக்கும் ஒரே கதவும் அவர்களுக்கு அடைக்கப்படுகிறது. மேலும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் நாட்டிலேயே ஆங்கில மொழிவழிக் கல்வி கற்றவர்களுக்கே பல்வேறு துறைகளில் முன்னிடம் தரப்படுவதாலும், அவர்கள் நாகரீகம் உள்ளவர்கள், ஏனையோர் நாகரீகம் இல்லாதவர்கள் எனும் எண்ணம் பரப்பப்படுவதாலும் இங்கு ஆங்கிலக் கல்வி கற்றவர்கள் மதிப்பு அதிகம் உடையவர்கள், ஏனையோர் மதிப்புக் குறைந்தவர்கள் எனும் சமூகப் பிளவும் ஏற்படுத்தப்படுகிறது.
ஊர்ப்புறங்களிலும் நகர்ப்புறச் சேரிகளிலும் வறுமைக்கு ஆளாகி, தரமான கல்வி வாய்ப்புகள் இன்றி வாடுவோருள் மிகப் பெரும்பான்மையானவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்டவர்களாகிய தலித்களே. இவர்கள் இந்தியா சுதந்திரம் பெற்று ஆண்டுகள் அறுபதுக்கும் அதிகம் ஆகிய பின்பும் இங்குள்ளஉயர்சாதியினரால் பல வகைகளில் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். தலைமுறை தலைமுறையாக ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டு, சம உரிமைகள் மறுக்கப்பட்டு, உயர்சாதியினரால் உழைப்பு சுரண்டப்பட்டு, தீட்டு எனக் கருதப்பட்ட தொழில்களைச் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டு பல வேளைகளில் விலங்குகளிலும் இழிவாக இவர்கள் நடத்தப் படுகின்றவர்கள். இன்று அரசு தரும் சில சலுகைகள், கிறிஸ்தவம் தருகின்ற சில கல்வி வாய்ப்புகள் என்பவற்றைப் பயன்படுத்தி அவர்களுள் சிறுபான்மையினர் பொருளாதாரத்தில் முன்னேறியிருப்பது மெய்மையே. எனினும் அவர்களுள் பெரும்பாலோர் ஏழைகளாகவே உள்ளனர்; தாழ்வாகவே நடத்தப்படவும் செய்கின்றனர். சாதிய கொடுமைகள் பற்றிப் பரவிவரும் விழிப்புணர்வும், அவற்றிற்கு எதிராக அணிதிரளும் முயற்சிகளும் போராட்டங்களும் இன்றைய காலத்தின் அறிகுறிகள். இத்தகைய முயற்சிகளின் வழியாக சிறந்த சில வெற்றிகளைஅவர்கள் பெற்றிருப்பினும் சமூக சமநிலை என்பது அவர்களுக்கு இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது. உயர்ந்த சாதியினரின் உரிமை மறுப்புகளும், தாழ்த்தப்பட்ட சாதியினருள் முன்னேறிவிட்டவர்கள் ஏனையோரின் தாழ்நிலை பற்றிக் கொண்டிருக்கும் அக்கறையின்மையும் அவர்கள் நடுவே உள்ளபிளவுகளும் அவர்கள் சமத்துவம் பெற முக்கிய தடைகளாக இருப்பவை.
இன்றைய நமது சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும் இன்னொரு சாரார் பெண்கள். நமது சமூகம் ஆணாதிக்கப் பாணியில் கட்டமைக்கப்பட்டிருப்பதால் பெண்கள் அதில் எல்லா வகையிலும் இரண்டாம் நிலையினரே. மேலும் கருவிலேயே சிதைக்கப்படுவது தொடங்கி விதவை நிலையில் ஒதுக்கப்பட்டுக் கைவிடப் படுவது வரை அவர்களுள் பெரும்பாலோர் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் எத்தனையோ பாகுபாடுகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர்; சம உரிமைகளும் வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு, தங்கள் ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களில் முழு வளர்ச்சி அடைய முடியாதவர்களாகவும் அதனால் சமூக நலனுக்குத் தங்களது முழுமையான பங்களிப்பைச் செய்ய முடியாதவர்களாகவும் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுள் பலர் இன்று விழிப்புணர்வு பெற்றுள்ளனர் என்பது உண்மையே. அதனால் அவர்கள் தங்களுடைய சம உரிமைகளுக்காகவும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைஎதிர்த்தும் பல இடங்களில் குழுக்களாக இணைந்து போராடத் தொடங்கியுள்ளனர். அத்தகைய முற்போக்குப் பெண்கள்கூட பல வேளைகளில் வரதட்சிணை, புகுந்த வீட்டில் உரிமையின்மை, கணவனது வன்முறை, வேலை செய்யும் இடங்களில் பாலியல் சீண்டல்கள் எனப் பல கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
வறுமையும் அறியாமையும் ஆதிக்கங்களும் இல்லாத சம நீதி நிலவும் சமூகம் செய்ய இன்று மிகப் பெரும் தடையாக இருப்பது இங்குள்ளஊழல் மயமான அரசியல் என்றால் அது மிகையாகாது. நமது நாட்டு அரசியல், கொள்ளையர்களின் சொர்க்கம் என்பதில் கேள்விக்கே இடமில்லை. பாமர மக்களுக்குப் பணம் கொடுத்து அவர்களது வாக்குகளால் இங்கு அரசியல் பதவிகளைப் பெறுபவர்களுள் பலர் சமூக விரோதிகளாயும் கொலைகாரர்களாயும்கூட இருக்கின்றனர் என்பது நாடறிந்த உண்மை. அத்தகையோர் நடத்துவது பெரிதும் கோடி கோடியாக பொதுமக்கள் பணத்தை அரசிடமிருந்தோ மக்களிடமிருந்தோ பல்வேறு வகைகளில் திருடும் மோசடி அரசியலே.
இத்தகைய அரசியல்வாதிகள் பெரும்பான்மையாகத் தங்களுக்கு வாக்களித்த பாமர மக்களது நலனில் அதிக அக்கறை காட்டுவதில்லை; அவர்களது உண்மையான மேம்பாட்டிற்காக உருப்படியான திட்டங்களைஉருவாக்கிச் செயல்படுத்துவது மில்லை. மாறாக, இந்த அரசியல்வாதிகள் தங்களுக்குக் கோடிகோடியாகக் கையூட்டுத் தரும் பெரும் முதலாளிகள் அல்லது பணக்காரர்கள் நலனுக்காகவே செயல் படுகின்றனர். இத்தகைய பண ஆதிக்கத்துடன் இணைந்து நமது அரசியலைச் சீர்குலைப்பவை தலைமை வழிபாடு, சாதியச் சார்பு, குடும்ப வாரிசு ஆதிக்கம் என்பன.
மக்களாட்சியோடு பின்னிப்பிணைந்து கிடக்கும் ஊழல்தான் நம் நாட்டுச் சுற்றுச் சூழல் சீரழிவிற்கும் முக்கிய காரணமாகத் திகழ்கிறது. பெரும் முதலாளிகளும் தொழில் அதிபர்களும் அரசியல் தலைவர்களுக்குத் தரும் கையூட்டு அவர்களுக்குக் கண்பூட்டு, கைப்பூட்டு, வாய்ப்பூட்டாகவும் மாறிவிடுகிறது. இதனால் அவர்கள் முதலாளிகளும் தொழிலதிபர்களும் துணிந்து செய்யும் மணல் கொள்ளை, காடுகளைஅழிக்கும் மரக் கொள்ளை, பொது நிலங்களைஅபகரிக்கும் நிலக் கொள்ளைஎன்பவற்றைக் கண்டு கொள்வதில்லை. மேலும் தொழிற்சாலைகள் கக்கும் கழிவுகளால் நம் நீர், நிலம், காற்று எனும் வாழ்வு ஆதாரங்கள் மாசுபடுத்தப் படுவதையும், அதனால் மக்களது உடல் நலத்திற்குக் கேடுகள் பல ஏற்படுவதையும் தடுக்க அரசியல்வாதிகள் திட்டவட்டமான முயற்சிகள் எதுவும் எடுப்பதில்லை.
இன்று நமது சமுதாயம் எதிர்கொள்ளும் இன்னொரு முக்கிய சவால் பண்பாட்டுச் சீர்குலைவு ஆகும். காலங்காலமாக நமது மக்கள் சமூகத்தைக் கட்டிக்காத்த நமது மரபுத் தமிழ்ப் பண்பாடு இன்று மிக வேகமாகவே வீழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் மையமாக இருந்த மனிதநேய விழுமியங்கள் இன்று அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வெளிநாட்டு, உள்நாட்டு முதலாளியத்தால் இங்குத் திட்டமிட்டுப் பரப்பப்படும் அந்நிய, ஆதிக்க நுகர்வு வெறிக் கலாச்சாரம் புதுப்புது இன்பங்களையும் சுகங்களையும் வசதிகளையும் அனுபவிப்பதையும் அதற்குத் தேவையான பணம் சேர்ப்பதையுமே முதன்மைப்படுத்துகின்றது. இதனால் வக்கிர உணர்வும், குறுக்கு வழிகளில் பணம் சேர்க்க முயலும் குற்றச் செயல்களுமே பெருகி வருகின்றன.
இதில் சமூகத் தொடர்பு ஊடகங்களின் பங்களிப்பு பெரிது. நலன்கள் பல விளைவிக்கும் இந்த ஊடகங்கள் அதே வேளையில் நமது பண்பாட்டுச் சீரழிவுக்கும் முக்கிய காரணங்கள் ஆகின்றன. அந்நிய அமெரிக்க கலாச்சாரத்தையும் ஆதிக்கப் பார்ப்பனிய கலாச்சாரத்தையும் அவை பட்டிதொட்டிகளில் உள்ளபாமர மக்களின் மனங்களில்கூட ஆழப் பதிய வைக்கின்றன. இதனால் ஏற்படும் மனிதநேய விழுமியங்களின் வீழ்ச்சி காரணமாக போட்டிகளும் பொறாமைகளும் அதிகரிக்கின்றன; ஒற்றுமையோடு மக்கள் வாழ்ந்த ஊர்களிலும் குடும்பங்களிலும் இன்று உறவுகள் சீர்குலையத் தொடங்கியுள்ளன. மனமுறிவுகளும் மணமுறிவுகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகுவோர் இளைய தலை முறையினரே. பாலியல் நெறிகேடுகள், போதைப் பழக்கம் என்பவற்றில் அவர்களுள் பலர் ஈடுபடுவதால் அவர்களது வருங்கால வாழ்வே கேள்விக்கு உள்ளாகியுள்ளது.
மனித நேய உணர்வுகள் மழுங்கடிக்கப்படும் போது இயல்பாகவே உண்மையான இறை உணர்வும் மறைந்துவிடுகிறது. சமயச் செயல்பாடுகள் போலியானவையாயும் வெற்றுச் சடங்குகளாகவும் மாறிவிடுகின்றன. இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தின் ஒரு விளைவு நம் சமய வாழ்வு பெரிதும் சடங்குமயமாகிவிட்டதும் ஆடம்பர கொண்டாட்டமயமாகிவிட்டதும்தாம். தங்கள் ஊர்களில் உள்ளகோயில் வழிபாடுகளிலும் தங்களது அன்றாட ஆன்மீகச் செயல்பாடுகளிலும் மக்களது பங்கேற்பும் ஈடுபாடும் குறைந்து கொண்டு வருகின்றன. அவற்றில் பங்கேற்போரின் வாழ்வுகளில்கூட அவை அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாத வெற்றுச் சடங்குகளாகவே தொடர்கின்றன. உள்ளூர் கோயில் திருநாள்களிலும் ஆடம்பரங்கள், கேளிக்கைகள் மிகுந்து, அவை ஆன்மீக தாக்கங்கள் அதிகம் ஏற்படுத்தாத வெறும் சமூகக் கொண்டாட்டங்களாகவே மாறிக் கொண்டிருக்கின்றன.
இருப்பினும் இன்றைய முதலாளிய போட்டி உலகில் மக்களுக்குத் தங்களது வேலையின்மை, நோய்கள், உறவுப் பிரச்சினைகள் என்பன போன்ற தங்களுடைய பிரச்சனைகளுக்குத் தாங்களாகவே தீர்வு காண இயலாதவர்களாக மக்கள் தவிக்கின்றனர். இந்நிலையில் விண்ணக உதவி உறுதியாகக் கிடைக்கும் என விளம்பரம் செய்யப்படும் திருத்தலங்களுக்கும் நவநாள் பக்திமுயற்சிகளுக்கும் அவர்கள் பெரும் திரளாக வந்து பக்தி ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். வேறு சிலரோ தங்களைப் பக்திப் பரவசத்தில் மூழ்கடிக்க வைக்கும் அருங்கொடை அல்லது பெந்தக்கோஸ்தே செபக்கூட்டங்களுக்கு செல்கின்றனர். இத்தகைய கூட்டங்கள் தரும் பரவச அனுபவங்கள் பெரிதும் தங்களுடைய வாழ்வுப் பிரச்சினைகளையும் உறவுச் சிக்கல்களையும் தற்காலிகமாக மறந்து ஒருவகைப் பக்தி மயக்கத்திலும் ஆன்மீகப் போதை நிலையிலும் அவர்களைமெய்மறந்து இருக்க வைக்கின்றன. தங்களது வாழ்வுகளையும் உறவுகளையும் தாம் வாழும் சமூகத்தையும் இறைவார்த்தை தரும் அருள்ஒளியோடும் தூய ஆவி தரும் ஆற்றலோடும் மாற்றியமைக்க அவை அவர்களைஅதிகம் தூண்டுவதில்லை.
இத்தகைய வெறும் உணர்ச்சிமயமான இறைஅனுபவத்தையும் தேடுவோர் பலர் இன்று உளர். இரு சாராருமே கத்தோலிக்க சபையைப்பற்றிக் கூறும் ஒரு குறைபாடு உண்டு. அது கத்தோலிக்க சபையில் அவர்களுக்கு ஆழமான இறைஅனுபவம் அதிகம் கிடைக்கவில்லை என்பதுதான். இந்தக் குறைகூறலில் ஓரளவாவது உண்மை உள்ளது என்பதை நாம் மறுக்க இயலாது. உணர்ச்சிகளைஅதிகம் வெளிப்படுத்தாத மிகவும் அருவமான மன்றாட்டுக்கள், அடிமன ஆழங்களையும் சிந்தனைகளையும் தொடாத மிகவும் அறிவார்ந்தவையாயும் அந்நியப் பண்பாட்டைச் சார்ந்தவையுமான அடையாளங்கள், சூழ்நிலைக்கு ஏற்ப அதிகம் மாற்ற இயலாதவாறு துல்லியமாக முன்தீர்மானிக்கப்பட்டு தரப்பட்டுள்ளசடங்குமுறைகள், கூடிவரும் சமூகத்தின் இன்பதுன்பங்களையும் அனுபவங்கள் தேவைகளையும் மையப்படுத்தாது மிகவும் பொதுமைப்படுத்தப்பட்டுள்ளமன்றாட்டுகள், மறைஉரைகள், அன்றாட வாழ்வில் சகோதர உறவுகளாக, செயல்பாடுகளாக மலராத கோயில் வழிபாடுகள் என்பன கத்தோலிக்க சபையினர் உண்மையான இறைஅனுபவம் பெறத் தடையாக இருப்பவை.
மேலும் வழிபாட்டு ஒழுங்கு முறையில் ஓரளவு தரப்பட்டிருக்கும் வாய்ப்புகளையாவது பயன்படுத்தி மக்களுடைய வாழ்வுகளோடு தொடர்புபடுத்தி செபங்களையும் வழிபாடுகளையும் கொண்டாட முயலாது வெறும் வாடிக்கை நிகழ்ச்சிகளாக அவற்றை அருள்பணியாளர்கள் பலர் நடத்துவதும் மக்கள் இறை அனுபவம் பெறுவதற்கு ஒரு முக்கிய தடையே. இதுவும் மக்களின் தேவை களுக்கு ஏற்ப அவர்களுக்குத் திருப்பணிகள் ஆற்ற பல அருள்பணியாளர்கள் தவறுவதும், அவர்களது நெறி தவறிய வாழ்வும் தாங்கள் கத்தோலிக்க சபையை விட்டு பெந்தக்கோஸ்தே சபைகளுக்குச் செல்ல முக்கிய காரணங்கள் எனப் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
திருச்சபையில் ஏற்பட்டுள்ளஇன்னொரு முக்கிய பிரச்சினையை இது சுட்டிக்காட்டுகிறது. அது அருள்பணியாளர் வாழ்விலும் பணியிலும் ஏற்பட்டுள்ளசீர்குலைவுதான். அவர்களுள் பலர் இன்றைய கலாச்சாரத்திற்கு ஆளாகி யுள்ளனர். இதனால் வழிபாட்டுச் சடங்குகளைநிறைவேற்றுவதோடு தங்கள் திருப்பணிகள் முடிந்துவிட்டன எனும் மனநிலையுடன் ஏனோதானோ என அவற்றை நிறைவேற்றி முடித்துவிடுவது இன்று அருள்பணியாளர்கள் பலருடைய பாணி. அவர்கள் மக்களுடைய வாழ்வுப் பிரச்சினைகளில் அதிக அக்கறையோ ஈடுபாடோ காட்டுவதில்லை; சுகபோகங்களையும் வசதிகளையும் பெருக்கிக் கொள்வதும் தங்கள் குடும்பத்தினரை முன்னேற்றுவதுமே அவர்களுள் பலருடைய முதன்மையான அக்கறையாக உள்ளது. அவர்கள் நடுவே உள்ளசாதிச்சண்டைகளும் குழு பிளவுகளும் சிலரது குடிப்பழக்கமும் பாலியல் நெறிகேடுகளும் இன்றைய திருச்சபை அவசரமாகச் சரிசெய்ய வேண்டிய முக்கிய பிரச்சினைகள்.
அருள்பணியாளர்கள் பலரது வாழ்விலும் பணியிலும் ஏற்பட்டுள்ளசீர்குலைவு ஒருபுறம் இருக்க, பொதுநிலையினர் பலர் திருச்சபையின் பல்வேறு பணிகளில் பங்கேற்க முனைந்திருப்பது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க காலத்திற்குப் பின்பு திருச்சபையில் ஏற்பட்டுள்ளசிறப்பான ஒரு வளர்ச்சி. முன்பு அருள்பணியாளர்களேசெய்த பழைய பல பணிகளையும் காலத்தின் அவசியங்களாக வளர்ந்திருக்கும் புதிய பல பணிகளையும் மிகுந்த ஈடுபாட்டுடன் மட்டுமல்ல, நல்ல திறமையுடனும் தமிழகத் திருச்சபையில் பல பொதுநிலையினர் இன்று ஆற்றுகின்றனர். பங்குப் பேரவை உறுப்பினர்கள், பணிக்குழுக்களின் தலைவர்கள் எனப் பல நிர்வாகப் பொறுப்புகளிலும் அவர்கள் சிறப்புறச் செயல்படுகின்றனர். இருப்பினும் பல இடங்களில் அவர்களுக் கிடையே காணப்படும் அதிகாரப் போட்டிகள், சாதிய அல்லது கட்சிப் பிளவுகள், ஆணாதிக்க மனநிலை என்பன அவர்களது ஈடுபாடுகள் முழுமையாகப் பயன்விளைவிக்க முக்கிய தடைகளாக இருக்கின்றன. பல இடங்களில் அவர்களுடைய திறமைகளையும் தியாக உள்ளத்தையும் மதித்து அவற்றிற்கேற்ப பணிப்பொறுப்புகளைஅவர்களுடன் பகிர்ந்து கொண்டு கூட்டுத்தலைமைப் பாணியில் செயல்படத் தவறும் அருள்பணியாளர்கள் பலரது எதேச்சதிகாரப் போக்கும் தமிழகத் திருச்சபையின் சிறப்பான வளர்ச்சிக்கு முக்கிய ஒரு தடையே. சற்று விரிவாக பார்க்கும்போது திருச்சபைச் சட்டம் பொதுநிலையினர் செய்ய அனுமதிக்கும் பல பணிப்பொறுப்புகள், உரிமைகள் தமிழகத் திருச்சபையில் அவர்களுக்கு இன்றும் மறுக்கப்படும் நிலையே பல இடங்களில் இன்று காணப்படுகிறது. அருள் பணியாளர்களின் எண்ணிக்கை மிகுதி காரணமாக பொதுநிலையினர் ஏற்கக்கூடிய, ஏற்கவேண்டிய பல தலைமைப் பொறுப்புகளையும் பணிகளையும் அருள்பணியாளர்களேஇன்றும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, அதிக வருவாயும் அதிகாரமும் உள்ளபணிப் பொறுப்புகள் பொதுநிலையினருக்குத் தரப்படுவது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.
பொதுவாகப் பார்க்கும்போது தமிழகத் திருச்சபைபோதிய புறநோக்கு இன்றி தன் அகப்பிரச்சினைகளிலேயே அதிகம் மூழ்கிக்கிடப்பதாகத் தோன்றுகிறது. இது இறை ஆட்சியின் கருவியாகச் செயல்பட திருச்சபை பெற்றிருக்கும் அழைப்புக்கு முரணானது. குடிமைச் சமூகத்தில் அதிகம் ஈடுபட்டு, சமூகம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு சார்ந்த தீமைகளைஎதிர்க்கவும் நலமான மாற்றுச் செயல்பாடுகளைஆதரிக்கவும் பொதுமக்களைஅணிதிரட்டுதல், பிற சபைகள், சமயங்கள், இயக்கங்களோடு நல்லுறவையும் நலமான காரியங்களுக்கான ஒத்துழைப்பையும் வளர்த்தல் என்பனவற்றில் தமிழகத் திருச்சபையின் ஈடுபாடு இன்னும் அதிகமாக நிச்சயம் தேவைப் படுகிறது. அதுபோல் இன்றைய சமூகத்தை மிகப் பரவலாகவும் ஆழமாகவும் பாதிப்பவை சமூகத் தொடர்பு ஊடகங்கள். இத்துறையில் தமிழகத் திருச்சபையின் ஈடுபாடும் செயல்பாடுகளும் கடலில் கரைத்த புளிபோல் மிகக் குறைவாகவே உள்ளன. நற்செய்தி அறிவிப்புப் பணியின் இன்றைய முக்கிய தளம் சமூகத் தொடர்பு ஊடகங்களேஎன்பதைத் திருச்சபை உணர்ந்து செயல் படுவது இன்றியமையாதது.
தமிழகத் திருச்சபை மிகப் பெரும் அளவில் ஈடுபட்டுள்ளஒரு துறை கல்வி. இதில்கூட கல்வி வியாபாரிகளுக்கு இணையாகக் கல்வியைக் காசு ஆக்கும் பணியைத்தான் பல இடங்களில் திருச்சபை இன்று அதிகமாகச் செய்துகொண்டிருக்கிறதோ எனும் கேள்வி எழுகிறது. 'இறையாட்சி'இலட்சியத்தோடும் விழுமியங்களோடும் சமூக மாற்று சக்தியாக நமது கல்விப் பணியை மாற்ற நாம் முயலவில்லை என்றால் நமது கல்விப்பணி சுடர் அணைந்த விளக்கே.
இறுதியாக:
கோயில்களையும் பேராலயங்களையும் கட்டியயழுப்புவதையும் அவற்றில் ஆடம்பர ஆராதனை வழிபாடுகளும், பரவச பக்தி முயற்சிகளும் செபங்களும் நடத்துவதையுமே தங்களுடைய முதன்மையும் முக்கியமுமான பணி என எண்ணிச் செயல்படுவதோடு நிறுத்திக்கொள்ளும் ஆபத்து திருச்சபைக்கும் அதன் அருள்பணியாளர்களுக்கும் எப்போதுமே உண்டு. அத்தகைய கோயில் மையக் கூட்டமாகத் தமிழகத் திருச்சபையும் வெறும் வழிபாட்டுச் செயல்பாடாக அதன் பணிகளும் மாறிக்கொண்டிருக்கின்றனவோ என எண்ண இடமும் இருக்கிறது. ஆனால் திருச்சபையின் பணி எல்லாரையும் நிறைவாக வாழச்செய்யும் இயேசுவின் இறையாட்சிப் பணியே அன்றி வேறெதுவும் அல்ல. எனவே சமயச் செயல்பாடுகளுடன் நின்றுவிடாது மக்களைப் பாதிக்கும் சமூகம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு சார்ந்த பிரச்சினை எதுவெனினும் அதில் இயேசுவைப்போல் திருச்சபையும் ஈடுபடுவது இன்றியமையாதது. அத்தகைய ஈடுபாடு வழியாக மக்களுக்கு வளர்ச்சியும் இறைவனுக்குப் புகழ்ச்சியும் சேர்க்கும் நம்பிக்கையாளர்கள் சமூகமே இயேசுவின் உண்மையான திருச்சபை.
இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.
மத்தேயு 4. 20
இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
1 comments:
Dear Rev. Father,
A great work done to the Christian/Human community through this blog.
The Blog's template was very good, and the blog looks with a professional touch.
And the contents are... even very good with our Catholic Tamil professionalism & style.
A spiritual perfumed aroma comes throughly while reading.
I still wonder how do you type these enormous texts in Tamil, because I know it requires a very hard work and effort to type in Tamil.
I appreciate & Thank you whole heartedly for your whole efforts & work for this Blog site.
May God bless you with all of his Goodness.
With Tons of of Love
Anthony Muthu Susaikannu
Post a Comment