ஒரு நல்ல குருவானவர் யார்?

குருக்கள் ஆண்டை முன்னிட்டு சில “முன்மாதிரி குருக்களை” (Models) கண்டெடுத்து அவர்களை பேட்டி கண்டு அவர்தம் பணிகளைப் பதிவு செய்து வந்த நாம் இம்மாதம் முதல்,  ஒரு நல்ல குருவானவர் யார்?  அவர் எப்படி இருக்க வேண்டும்? என மக்கள் எதிர்பார்க் கிறார்கள் என்பதனைப் பதிவு செய்திட முடிவு செய்தோம்.  அதனடிப்படையில் பொறுப்புள்ள பொதுநிலையினராகச் சிறந்த கத்தோலிக்க கிறித்தவர்களாக வாழ முயற்சி செய்து கொண்டிருக்கும் சிலரைச் சந்தித்து இக்கேள்விகளை முன்வைத்தோம்.  அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டதன் அடிப்படையில் இக்கட்டுரையை வடிவ மைக்கின்றோம்.
நல்ல குருவனவர் யார்? என்று கேட்டமாத்திரத்தில் “எல்லா மக்களிடத்திலும் அன்பு செலுத்துபவரே நல்ல குருவானவர்” என்றார் ஒரு பெரியவர்.  தன் தேவைகளைக் குறைத்து ஆசைகளை மறுத்து வாழ்பவரே நல்ல குருவானவர் என்றார் மற்றொருவர்.  ஆக பாமர மக்களின் எதிர்பார்ப்புகள் என்னவென்பது நமக்குப் புரிந்தது.
ஆனால் “திருச்சபை” என்கிற அமைப்பு ஒரு குருவானவரின் பணிகளாக முன் வைப்பது, போதிக்கும் பணி, அர்ச்சிக்கும் பணி, ஆளும் பணி என்கிற முப்பெரும் பணிகளையே.
ஒரு குருவிடமிருந்து சாதாரண மக்களின் எதிர்ப்பார்ப்புக்கும், “திருச்சபை” என்கிற அமைப்பு எதிர்பார்க்கும் பணிகளுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருப்ப தாகவே நமக்குப் பட்டது.
மக்களின் எதிர்பார்ப்புகள் தவறா?  அல்லது திருச்சபையின் எதிர்பார்ப்புகள் தவறா?  எது உண்மை என அறிந்திட மனம் துடித்தது.
எல்லா மக்களிடத்திலும் அன்பு செலுத்து பவராக இருக்க வேண்டும் என்பது அந்த ஆண்டவன் இயேசு இந்த உலகத்திற்கு விதைத்துச் சென்றது.  தேவைகளைக் குறைத்து, ஆசைகளை மறுத்து என்கிற எதிர்பார்ப்பும் அதே ஆண்டவன் இயேசுவின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டது.  “தன்னை மறுத்து . . . பின்செல்லாதவன் என் சீடனாக இருக்க முடியாது” என்கிற அவரின் அறைகூவலை அச்சாரமாகக் கொண்டது.  எனவே சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகள் தவறாக இருக்க முடியாது.  தவறு என்று சொன்னால் அது அந்த இறைமகன் இயேசுவையே, அவரின் அன்புத் தத்துவத்தையே தவறு என்று சொல்வது போல் ஆகிவிடும் எனத் தோன்றியது.
அப்படியயன்றால் ஒரு குருவானவரிடம்  “திருச்சபை” என்கிற அமைப்பு எதிர்பார்க்கும் பணிகளில்தான் இன்னும் சரியான புரிதல்கள், தெளிவுகள் தேவைப் படுகின்றன என்பதாகவே எமக்குப் பட்டது.
ஒரு குருவானவரிடம் திருச்சபை அமைப்பு எதிர்பார்க்கும் முதல் பணி போதிக்கும் பணி என்கிற நற்செய்தி அறிவிப்புப் பணியே.  இந்தப் பணியில் குறைவொன்றும் இல்லை.  ஆனால் எப்படி போதிப்பது என்று வகுத்துச் சொல்லப்படாததே இதன் குறை.  மறையுரை வழியாகவோ, மல்டி மீடியாக்கள் வழியாகவோ அல்லது கல்விக் கூடங்கள் வழியாகவோ போதிக்கிற பணியாகவே திருச்சபை இப்பணியைக் கருதுவதால்தான் இத்தனை ஆண்டுக ளாகியும் இயேசுவை ஏற்றுக் கொண்டவர் களின் எண்ணிக்கை இந்தியாவில் இருந்த இடத்தைவிட்டு ஒரு இஞ்ச்கூட நகராமலேயே இருக்கிறது.  “போதிப்பவர்களோ மிகுதி.  அதன் பலனோ குறைவு” என்று சொல்லு மளவிற்கு இருக்கிறது.
வாயால் அறிக்கையிட்டு போதிப்பதைக் காட்டிலும் வாழ்க்கையால் அறிக்கையிட்டு போதிப்பதுதானே அதிக பலனைக் கொடுக்க முடியும். இதனை உணராமல் வெறுமனே வாயால் போதிப்பதால் என்ன நடக்கிறது.    எனவே வாயால் அல்ல தம் வாழ்க்கையால் நற்செய்தியைப் பறைசாற்றும் சாட்சியாளர் களைப் போதகர்களாக உருவாக்க திருச்சபை கவனம் செலுத்திட வேண்டும்.  ஏனெனில் கடவுள் அன்பானவர், அவர் தம் மகனை உலகிற்கு அனுப்பி உயிரையே கொடுக்கு மளவிற்கு நம்மை அன்பு செய்தார் எனப் போதிக்கும் அல்லது கற்பிக்கும் ஒருவர் அப்படி கற்பிக்கும் போது அதை கவனிக்காமல் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்து “சொல்வதைக் கவனிக்காமல் அங்கே என்ன பேச்சு!  முட்டாள்” என கோபப் படுவாரேயானால் . . . அவர் போதித்த செய்தி எப்படி புரிந்து கொள்ளப்படுமென்றால் . . . கடவுள் அன்பானவர்.  ஆனால் அவ்வப்போது முட்டாள், முண்டம் என திட்டக்கூடிய அளவிற்கு கோபமும் படக்கூடியவர் என்றே புரிந்து கொள்ளப்படும் அன்றோ.
எனவே வாயால் அல்ல தம் செயலால், நடத்தையால், வாழ்க்கையால் போதிக்கும் பணியை ஆற்றும் அளவிற்கு பயிற்சி பெற்றவர்களையே குருக்களாக்க வேண்டும்.  மறையுரை ஆற்றுவதற்குத் தரும் பயிற்சியைவிட வாழ்க்கையால் போதிக்கும் வழிமுறைகள் பயிற்றுவிக்கப் படவேண்டும்.
குருக்களின் பாதுகாவலரான புனித மரிய வியான்னி பெரிய மறைவல்லுனரோ, போதிக்கும் திறமையுடையவரோ, அறிவாளியோ அல்ல . .  மாறாக மிக எளிமையான, பணிவு மிகுந்த ஒரு இறை விசுவாசி . . . அவ்வளவே.  ஆக போதிக்கும் பணிக்கு மிகப் பெரிய வல்லுனத்துவம்  தேவையில்லை என்பதை திருச்சபையே ஏற்றுக் கொண்டும் உள்ளது.
குருக்களிடம் திருச்சபை எதிர்பார்க்கும் அடுத்தபணி அர்ச்சிக்கும்பணி.  இதற்கு அடிப்படைத் தேவை கடவுள் நம்பிக்கையும் ஆழ்ந்த விசுவாசமுமே.  இவைகளை அதிகப்படுத்தும் அளவிலும், செப உணர்வில் அழுத்தம் பெறுமளவிலும் பயிற்சி பெற்றவர்களையே குருக்களாக்கிட வேண்டும்.  இறையியல் படிப்பு என்பதன் பெயரில் இந்த இறை நம்பிக்கை ஆழப்பட உதவ வேண்டுமேயயாழிய இருக்கிற நம்பிக்கையையும் இழக்கச் செய்யும் வகையில் விளக்கங்களும், வியாக்கி யானங்களும் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்.  அப்பொழுதுதான் கோயில் பூனை சாமிக்கு அஞ்சாது என்கிற  இன்றைய போக்கு மாறும்.  புனித மரிய வியான்னியின் ஆழ்ந்த விசுவாச வாழ்வே இப்பணிக்கும் சான்றாக நமக்கு முன் உள்ளது.
அடுத்தது ஆளும் பணி என்றொரு பணியைக் குருக்களிடம் திருச்சபை எதிர்பார்க்கிறது.  “ஆளுதல்” அல்லது ஆட்சி செய்தல் என்பது அரசர்களுக்குரியது.  மன்னர் காலத்துக்குரியது.  இன்றைய ஜனநாயகத்திற்கு எதிரானது.  உலக வரலாற்றிலேயே மன்னர், ஆட்சி என்பதெல்லாம் மறைந்து மக்கிப் போய் ஜனநாயகத் தன்மை ஏற்பட்டு தலைவன், வழிகாட்டுதல் என்கிற வார்த்தைகள் வழக்கமாக்கப்பட்டு வாழ்க்கையாக்கப் பட்டுக் கொண்டிருக்க . . . திருச்சபையில் இன்றும் ஆளும்பணி, திரு ஆட்சியாளர்கள் போன்ற கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப் படுவது ஆச்சரியத்தையே அளிக்கிறது.  அந்த மோசமான தன்மையை மறைப்ப தற்காக ஆளும் பணி என்றும், திருஆட்சி யாளர்கள் என்றும் சில அடை மொழிகளைச் சேர்த்துக் கொண்டுள்ளது.  ஆளுதல் அல்லது ஆட்சி செய்தல் என்பது பணியாக இருக்கவே முடியாது.
அங்ஙனமே ஆட்சியாளர்கள் முன்பு திரு என்கிற வார்த்தையைச் சேர்த்து விட்டால் அதற்கு தனி மதிப்போ, புனிதமோ வந்துவிடாது.  ஏனெனில் ஆட்சி செய்தல் என்கிற பொருள்படும் ஆளுதல் என்பதும், பணி செய்தல் என்பதும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமானது.
ஆட்சி என்றால் அங்கே அதிகாரம் இருக்கும்.  அதிகாரம் இருந்தால் அங்கே ஆணவம் இருக்கும்.  அதிகாரம், ஆணவம் இருக்குமிடத்தில் அன்பு இருக்காது. அன்பு இல்லையயனில் அங்கே ஆண்டவன் இல்லை . . .  இதை உணர்ந்துதான் இறைமகன் இயேசு இறையாட்சி என்கிற வார்த்தையைக்கூட கையாளாது “நிறை வாழ்வு” என்கிற அற்புதமான சொல்லாடலைப் பயன்படுத்துகிறார்.
ஆட்சி, ஆளுதல் போன்ற சொல்லா டல்களே அன்புக்கு எதிரானது.  இறை அன்பர்களுக்கு எதிரானது.  மனதில் மப்பையும் மமதையையும் ஏற்படுத்தக் கூடியது.
எனவே ஆளும் பணியைத் திருச்சபை குருக்களிடம் எதிர்பார்க்க முடியாது ‡ கூடாது.
மாறாக வழிநடத்தும் பணியை அல்லது வழிகாட்டும் பணியையே எதிர்பார்க்க முடியும்.  அந்த வழிநடத்தலும் வழிகாட்டலும் தன்னிச்சையாக அல்ல மாறாக தான் சார்ந்திருக்கும் பங்கு சமூகத்தின் ஆலோசனையோடு, உடன் செயல்பாட்டோடு தம் ஆலோசனையையும் செயலையும் இணைத்து ஜனநாயக தன்மையோடு வழிகாட்டிட வேண்டு மென்றே சாதாரண பாமர மக்கள் எதிர்பார்க்கிறார்கள் . . .  அதனையே அவர்கள் மிகச் சாதாரணமாய், “எல்லா மக்களிடத்திலும் அன்பு செலுத்துபவரே நல்ல குருவானவர்” என்கிற அளவில் தம் எதிர்பார்ப்பாக வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த சாதாரண மக்களின் மனநிலையை புரிந்து நடக்கும் குருக்கள் பெருகிட இந்த குருக்கள் ஆண்டு துணை செய்தால் அதுவே குருக்களின் பாதுகாவலரான புனித மரிய வியான்னியின் ஜுபிலி கொண்டாட்டத்தில் அவருக்கும் செலுத்தும் மரியாதை . . .  மற்றவையயல்லாம் வழக்கமான வாடிக்கையான வேடிக்கை செயல்களே.
ஏனெனில்
பாரஞ் சுமக்கும் பாமரர் மத்தியிலே
பரமன் வாழ்கிறார் . . .
பரமன் வாழும் பரிசுத்த இடத்திலே
புனித வியான்னியும் இருக்கின்றார் . . .
எளிமை, விசுவாசம், அன்பு வழியில்
வலிமை பெற்று வியான்னியின் வழித்தோன்றலாகிட முடியும்.
எஸ். எரோணிமுஸ், “ஊற்றுக்கண்” ஆசிரியர், திருச்சி 

0 comments:

Post a Comment