மறைக்கல்வி ஏன் அவசியம் ?


தமிழக ஆயர் பேரவை இவ்வருடத்தை மறைக்கல்வி ஆண்டாக கொண்டாட அழைப்பு விடுத்துள்ளது.  மறைக்கல்வி ஆண்டின் விருதுவாக்காக பேரவை நம்முன் வைப்பது “எல்லாருக்கும் மறைக்கல்வி”. ஆக குழந்தைகள், இளையோர், பெரியோர், முதியோர், குடும்பங்கள், அன்பியம், பக்தசபைகள் மற்ற இயக்கங்கள் உள்ள அனைவருக்கும் தகுந்த மறைக்கல்வி பாசறைகளை உருவாக்குவது பங்குத் தளங்களின் தலையான பணியாகும்.

மறைக்கல்வி ஏன் அவசியம்?

முதன் முதலாக செபிப்பது எப்படி என்பதைத் தெரிந்துக்கொள்கிறோம்.  விவிலியத்தைப் பற்றி அதிகம் தெரிந்துக்கொள்ள முடியும்.  திருச்சபை கற்பனைகளை நாம் இந்த வகுப்பில் அறிந்துக்கொள்ள முடியும்.  நல்ல விசுவாச வாழ்க்கை வாழ இந்த மறைக்கல்வி அவசியம்.  இறைவன், இறைவனைப் பற்றிய அறிவு அனைத்தும் குறைந்துவரும் இக்காலக்கட்டத்திலே இப்படிப்பட்ட பயிற்சி தேவை. தல திருச்சபை வரை இந்த மறைக்கல்வி வகுப்புகள் மிக மிக அவசியம். தேவ அழைத்தல் உருவாக, வளர மறைக்கல்வி அடிப்படையான ஒன்று.

மறைக்கல்வியின் நிலைமை - அன்று

சில வருடங்களுக்கு முன் வரையிலும் தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய எல்லாப் பங்குகளிலுமே ஞாயிறு திருப்பலி முடிந்தவுடன் மறைக்கல்வி வகுப்புகள் சிறப்பான முறையில் நடைபெற்றன.  பங்குக்குரு, உதவி பங்குக்குரு, அருட்சகோதரிகள், பெற்றோர்கள் அனைவரும் மறைக்கல்வியில் ஆர்வம் காட்டி சிறப்பாக செயல்பட ஆவண செய்தார்கள்.  மேலும் பங்கு அளவிலும், மறை மாநில அளவிலும் மறைக்கல்வித் தேர்வுகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. குடும்பங்களிலும், நண்பர்கள் வட்டாரத்திலும் மறைக்கல்வியைப் பெரிதும் பாராட்டி ஆர்வம் காட்டப்பட்டு வந்தது.  சிறியோர், இளையோர் செபங்கள் சொல்வதிலும்,கோயில் விசயங்களில் அதிகம் ஆர்வம் காட்டினார்கள்.  இவை எல்லாவற்றின் காரணமாக தேவ அழைத்தலும் வளர்ந்து இருந்தது.

மறைக்கல்வியின் நிலைமை - இன்று

தமிழக திருச்சபையில் சில பங்குகளில் மறைக்கல்வி வகுப்புகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றன. சில பங்குகளில் வகுப்புகள் நடைபெறுவதே (பல காரணங்கள்) இல்லை.  நடைபெறும் சில வகுப்புகளும் பெயரளவில் மட்டும் உள்ளன.  இதிலே சிலர் ஆர்வத்துடன் பங்கெடுக்கிறார்கள்.  ஒரு சிலரோ, ஏதோ கடமைக்காக வந்து போகிறார்கள்.  பொதுவாக சொல்லப்போனால், மறைக்கல்வியின் நிலைமை இன்று மிகவும் பின்தங்கி இருக்கிறது ஒரு கவலையைக் கொடுக்கக்கூடிய விசயம்.

பங்குத்தளங்களின் கடமைகள் :
  1. பங்குத்தந்தையும், அருட்சகோதரிகளும் மறைக்கல்வியில் ஆர்வம் உள்ளவர்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் மறைக்கல்வி வகுப்பு நடைபெற ஏற்பாடு செய்தல்.
  2. வகுப்புகள் நடைபெறும்போது பங்குத்தந்தை பார்வையிடுதல் அவசியம்.
  3. பங்குத்தந்தை/அருட்சகோதரிகள் குடும்பங்களைச் சந்திக்கும்போது மாணவ/மாணவிகளை மறைக்கல்விக்கு வர உற்சாகப்படுத்துதல்.
  4. மறைக்கல்வி போதிப்பவர் முதன் முதலில் இதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.  இவர்களுக்குத் தகுந்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
  5. மறைக்கல்வி போதிப்பவர் தகுந்த தயாரிப்புடன் வகுப்பிற்குச் செல்ல வேண்டும்.
  6. மறைக்கல்வி போதிப்பவர் தனக்கு நேரம் கிடைக்கும்போது வீடுகளைச் சந்திப்பது நல்லது.  வகுப்பிற்கு வராத பிள்ளைகளின் வீடுகளையும் சந்திப்பது மிகவும் நல்லது.
  7. பங்கு அளவில் மறைக்கல்வி பயிலும் அனைவருக்கும் ஒரு விழா நடத்துவது நன்று.

பெற்றோர்களின் கடமைகள்
  1. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் ஞாயிறு திருப்பலிக்கு வந்து, பிறகு அவர்களை மறைக்கல்வி வகுப்பிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  2. “கூடி செபிக்கும் குடும்பம், கூடி வாழும்” என்பது; போல, இரவு குடும்ப செபத்தில் பிள்ளைகளை விவிலியம் வாசிக்க, செபிக்கத் தூண்டுதல்.
  3. மறைக்கல்வி வகுப்பில் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடங்களைக் கேட்டு, அவர்களை உற்சாகப்படுத்துதல்.

ஆலோசனை

மறைக்கல்வி போதிக்க ஆசிரியர்களைவிட பெற்றோர்களுக்கு (ஆர்வம் உள்ளவர்கள்) அழைப்பு விடுப்பது நல்லது.  இதன் மூலம் இவர்களும் விசுவாத்தில் வாழ உறுதுணையாக இருக்கும்.  மேலை நாடுகளில் இவ்வாறு பெற்றோர்கள் மறைக்கல்வி வகுப்புகள் நடத்துகின்றார்கள்.

ஆயர்களின் பரிந்துரை :

மறைக்கல்வி வாழ்நாளெல்லாம் தொடர்ந்து நடைபெற்று, நமது நம்பிக்கை வாழ்வில் வளர்ச்சியையும், முதிர்ச்சியையும் அளிக்க வேண்டும்.  இது இளை யோருக்கோ, சிறார்களுக்கோ மட்டுமே உரியது என்ற எண்ணம் தவறானது.  அதாவது, மறைக்கல்வி என்பது பிறப்பு முதல் இறப்பு வரை தொடர வேண்டிய முயற்சியும் பயிற்சியுமாகும்.  

என் முடிவுரை

எந்தப் பங்குத்தளங்களில் மறைக்கல்வி வகுப்புகள் சிறந்த முறையில் செயல்படுகின்றதோ அந்த பங்கில் நிச்சயமாக அன்பியங்கள் நன்கு செயல்படும்;  அதிகமான அளவில் தேவை அழைத்தல் உருவாகும்.  மறைக்கல்வி ஒரு பங்கின் உயிர்த்துடிப்பு.


அருள்சகோதரி கிறிஸ்டி ME
பாப்பநல்லூர்
செங்கை

இயேசு – ஒரு சிறந்த மறைக்கல்வியாளர்



“ஒரு மனிதனை மனிதனாக்குவது கல்வியே.
மனிதனை மட்டுமல்ல, நாட்டையும்
வளமைக்கு இட்டுச் செல்வதும் கல்வியே” 
என்று கல்வியின் மகத்துவத்தைப் பற்றி அழகாக எடுத்துரைக்கிறார் டாக்டர் ராதாகிஷ்ணன்.  கல்வி நாட்டின் தூண்களில் ஒன்றாய் இருப்பதுபோல, மறைக்கல்வி திருச்சபையின் தூண்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது.
மறைக்கல்வியின் முக்கியத்துவம் :
கல்வி குழந்தையினுடைய அறிவை வளர்க்கிறது.  மறைக்கல்வி குழந்தையினுடைய ஞானத்தை வளர்க்கிறது.  ஒழுங்கை மேன்மைப்படுத்துகிறது.  இத்தகைய மறைக்கல்வியின மாண்பினைப் பிள்ளைகளும் பெற்றோரும் உணர வேண்டும்.  மறைக்கல்விக்கு முக்கியத்துவம் தருகின்றபோது நாம் நமக்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
இயேசுவின் முன்னுதாரணம்:
மறைக்கல்வி ஆசிரியர்களுக்கு இயேசுவைத் தவிர வேறு யாரும் ஒரு சிறந்த முன்னுதாரணம் இருக்க முடியாது.  இயேசு எப்படி முன்னுதாரணமாய், சிறந்த மறைக்கல்வியாளராய் இருக்கிறார் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
குழந்தைகளை ஏற்றுக்கொள்ளல் :
சிறு பிள்ளைகளுக்கு என்ன தெரியும்?  என்று அலட்சியத்தோடு சீடர்கள் அதட்டியபோது, இயேசு“சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்” (லூக் 18:16) என்று அழைப்பு விடுத்து அவர்களை ஆசீர்வதிக்கிறார்.  சிறு பிள்ளைகளும் முக்கியமானவர்கள் என்பதைச் சீடர்களுக்கு உணர்த்தும் வகையில் அவர்களுக்குக் கதைகள் கூறி தமது நேரத்தைச் செலவிடுகிறார்.
குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டுப் பொம்மைகள், ஸ்வீட்ஸ் (இனிப்பு) வாங்கிக் கொடுத்தால் மட்டும் போதும், அதுதான் குழந்தைகளை ஏற்றுக் கொள்வது, அன்பு செய்வது என்று எண்ணுகிறார்கள் பெற்றோர்கள்.  குழந்தைகளுக்குத் தேவையான ஞானத்தையும் வழங்கக்கூடிய மறைக்கல்வியும் அவசியமானது என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.  ஞாயிற்றுக்கிழமை பிள்ளைகள் ஸ்பெ­ல் கிளாஸ் போகணும், அன்று மட்டும்தான் விடுமுறை அன்றும் மறைக்கல்விக்கு அனுப்புவதா? என்று பெற்றோர்கள் தடையாக இல்லாமல் மறைக்கல்விக்குப் போவதால் என்ன நன்மை என்பதைக் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
குழந்தைகளுக்கு மறைக்கல்வி என்பது கடவுளுடைய ஆசீர்வாதத்தைத் தனக்குக் கொணர்கிறது என்பதை உணர்ந்து அவர்களைக் கடவுளின் பிரதிநிதிகளாக ஏற்று-அவர்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும்.
எளிமையாக வகுப்பு எடுத்தல் :
இயேசு புரியாத வகையில் ஒரு போதும் பேசியதில்லை.  மக்களுக்கு எளிமையாகப் புரிகின்ற வகையில் உப்பு, கடுகு, புளிப்புமாவு, விதை, வலை என்று உவமைகள் வழியாகப் பேசினார்.
“தனக்குத் தெரிந்ததையயல்லாம் சொல்பவன் பெரியவனல்ல.  எளிமையாக புரிகின்ற வகையில் பேசுபவனே சிறந்த பேச்சாளன், எழுதுபவனே சிறந்த எழுத்தாளன்”  என்பார் ஜான் மில்டன்.
மறைக்கல்வி ஆசிரியர்கள் புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நகைச்சுவை, கதைகள் மூலமாக குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும்.  நல்ல தயாரிப்போடு வருகின்றபோது எளிமையாகச் சொல்லித்தர முடியும்.  தயாரிக்காதபோதுதான் கடினமான வார்த்தைகள் நாவில் வந்து விழும்.
போதிப்பதை வாழ்வாகுத்தல் :
“போதிப்பவர் பலர்
வாழ்பவரோ சிலர்
அந்த சிலரே போற்றுதற்குரியவர்”
என்று கூறுவார் பெர்னாட்ஷா.  
இயேசு எளிமையாக வாழ்ந்தார், உண்மையை உரக்கச் சொன்னார்.  அதனால் மக்கள் கூட்டம் அலையலையாய் அவரைத் தேடி வந்தது.  போதிப்பது ஒன்று, செய்வது ஒன்றாக இருந்தால் குழந்தைகள் ஆசிரியர்களால் ஈர்க்கப்பட மாட்டார்கள்.  அடுத்த முறை மறைக்கல்விக்கு வர மாட்டார்கள்.
விவிலியமே ஆதாரம் :
மற்ற உலகச் செய்திகளைக் குழந்தைகளுக்கு வழங்குவதற்கு எத்தனையோ தளங்கள் இருக்கின்றன.  தொலைக்காட்சி, செய்தித்தாள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  இயேசு பழைப ஏற்பாட்டை மேற்கோள் காட்டி மக்களிடத்தில் பேசினார்.  அதனால் விவிலியக் கதைகள், பாடல்கள் ஆகிய வற்றைக் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.  ஞாயிறு வாசகங்களை விளக்கிக் கூறலாம்.  விவிலிய கதா பாத்திரங்களை விளையாட்டுகள் மூலம் எடுத்துரைக்கலாம்.
இவ்வாறு பல்வேறு வகைகளில் இயேசு சிறந்த மறைக்கல்வியாளராக நமக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.  ஆகவே நாமும் இயேசுவைப் பின்பற்றி, மறைக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து மறைக்கல்வி ஆண்டில் இன்னும் அதிகமாக இறைவார்த்தைகளைப் படித்து அதன்படி வாழ்வோம்.  பலரையும் உருவாக்குவோம்.

J. புஷ்பா 
ஆசிரியை, சிவகங்கை

மறைக்கல்வி – ஏன்? எதற்கு? எப்படி?


எந்தவொரு செயலுக்கும் ஒரு காரண காரியம் உண்டு.  பொருள் உண்டு.  அப்படி பொருள் உணர்ந்து செய்யும்போது தான் அதற்கான பலனும் முழுமை பெற வாய்ப்புண்டு.
அந்த வகையில் மறைக்கல்வி ஏன்? எதற்கு கற்றுத்தரப்படுகிறது? என ஆராய்ந்து பொருள் உணர்ந்தால் அதற்கான பலனை நாம் நூறு சதவீதம் பெற முடியும்.  
மறைக்கல்வி ஏன்?
நமது குழந்தைகள் கிறித்துவின் மனநிலையைப் பெற்றிடச் செய்வதே மறைக்கல்வி சொல்லித்தரப்படுவதன் முழுமையான நோக்கம் என ஒற்றை வரியில் நாம் இதற்கு விடை அளிக்கலாம்.  எனினும், கிறித்துவின் மனநிலை என்றால் என்ன?  மனிதனின் மன நிலைக்கும் கிறித்துவின் மனநிலைக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?  என்பன போன்ற வினாக்களுக்கும் நாம் விடை கண்டால்தான் மறைக்கல்வி ஏன்? என்பதற்கு இன்னும் அதிகமான ஆழமான பொருளை நாம் உணரலாம்.
மனிதரின் மனநிலையும் (மனிதமும்) கிறித்துவின் மனநிலையும் (கிறித்தவமும்) மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒன்றாய் இருப்பதுபோல் தோன்றி னாலும் அவற்றுக்குள் சிறிது வேறுபாடு உண்டு.  மனிதனின் மனநிலையைவிட ஒரு படி உயர்ந்தே இருப்பதுதான் கிறித்துவ மனநிலை. 
இப்படியாக மனித மனநிலையைவிட எப்போதும் ஒரு படி உயர்ந்து ஒரு சிறு வித்தியாசத்துடன் சிறந்து விளங்குவது தான் கிறித்துவின் மனநிலை.
மனிதனின் மனநிலையை அடைய உதவி செய்வது கல்வியின் நோக்கம்.  கிறித்துவின் மனநிலையை அடையச் செய்வது மறைக்கல்வியின் நோக்கம்.
எனவேதான் திருச்சபை போன்ற அமைப்புகள் மனிதரின் மனநிலையைக் குழந்தைகளுக்குள் வளர்க்க கல்வியைக் கையிலெடுத்தது.  அத்துடன் கிறித்துவின் மனநிலையைத் தம் குழந்தைகள் பெற மறைக்கல்வியைச் சொல்லிக் கொடுக்கிறது.
கற்றுத்தராத கல்வி : மேற்சொன்ன இரண்டும் சொல்லித்தரப்பட்டும் சொல்லித் தரப்படாத இன்னொரு மனநிலை இன்று பரவி படர்ந்து கிடப்பதையும் நாம் மறக்க முடியாது.  பேராசை, பிறர் பொருள் மேல் ஆசை, வஞ்சகம், சூது, பொறாமை, பொய்மை, போதை என்கிற சாத்தானின் மனநிலை யாரும் சொல்லித்தராமலேயே எங்கும் நிரவி கிடக்கிறது.
சுருங்கச் சொல்லின் 
1. எனக்குரியது எனக்கு;  உனக்குரியது உனக்கு - மனித மனநிலை,  
2. எனக்குரியதும் உனக்கே - கிறித்துவின் மனநிலை,  
3. உனக்குரியதும் எனக்கே - சாத்தானின் மனநிலை -
என்கிற இந்த மூன்று மனநிலைகளில் முதல் இரண்டும் சொல்லித்தரப்பட்டும் சொல்லியே தரப்படாத மூன்றாவது மனநிலையான சாத்தானின் மனநிலையே இன்று நீக்கமற எங்கும் நிறைந்து கிடக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் மனிதனின் மனநிலையை வளர்க்க முயற்சிக்கும் கல்வியும், அங்குள்ள ஆசிரியரும், கிறித்துவின் மனநிலையை வளர்க்க வந்த கிறித்தவ மதமும், அதன் போதகர்களும், தோற்றுபோய் விட்டார்களோ என்று நினைக்கும் அளவிற்கு இன்று சாத்தானின் மனநிலை மலிந்து கிடக்கின்றது.  இது எதனால்?  என ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம்.  
காரணங்கள் இரண்டு : மறைக்கல்வியோ, மனிதக் கல்வியோ அதன் உள்ளடக்கங்கள் முதலில் அதற்கான நோக்கத்தை நோக்கி அமைக்கப்படாம லிருப்பதே முதல் காரணம்.  இவைகளே இன்னும் தம் நோக்கத்தில் தெளிவு பெறாமல்-ஆழப்படாமல் இருப்பதே இதற்கான முதன்மை காரணம்.  ஆழ உழுவதே சிறந்தது என அறிந்திருந்தும் நாம் கல்வி என்கிற பெயரில் அகலமாய் உழவே அல்லாடிக் கொண்டிருக்கிறோம்.  
மேலும் இந்த இரண்டு கல்வியுமே கற்பது எதற்கு என்றால் கற்றுக் கொடுப்பதற்கு என்கிற அர்த்தத்திலேயே அரங்கேறி வருகிறது.  இதுவே இவைகள் தோற்றதற்கான இரண்டாவது பெரிய காரணம்.
மறைக்கல்வியோ, மனிதக் கல்வியோ கற்பது எதற்கு என்றால் அதனைப் பிறருக்குக் கற்பிப்பதற்கு அல்ல;  மாறாக கடைப்பிடிப்பதற்கு என்கிற புரிதல் ஏற்பட வேண்டும்.
கற்பதைக் கற்றுக்கொடுப்பது எளிது ஆனால் கடைப்பிடிப்பது கடினம்.  எனவேதான் எல்லோரும் கற்றுக் கொடுக்கவே முயற்சிக்கிறார்கள்.  பல வேளைகளில் கிறித்துவின் மனநிலையை வளர்க்க மறைக்கல்வியைச் சொல்லிக் கொடுப்பவர்கள்கூட கடைப்பிடிப்பது சாத்தானின் மனநிலையைத்தான்.  “படிப்பது-படிப்பிப்பது பகவத் கீதையை, இடிப்பதோ பொருமாள் கோயிலை” என்கிற ரீதியில் செயல்பாடுகள் இருப்பதால்தான் அதை காண்போர் அவ்வழியையே பின்பற்றுகின்றனர்.  இதனால் சாத்தானின் மனநிலையால் உலகம் எளிதாகவே நிரம்பி தழும்பி நிற்கிறது. வாய்வழியாய் சொல்லித்தரப்படாத நிலையில் செயல்வழி கற்றல் மூலமாக சாத்தானின் மனநிலை சட்டெனத் தொற்றிக் கொள்கிறது.  சொல்லித்தரப்படும் மறைக்கல்வியோ, மனிதம் வளர்க்கும் கல்வியோ தோற்றுப் போய்விடுகிறது. இங்கு ஆசிரியர்களுக்கும் போதகர்களுக்கும் பஞ்சமில்லை.  ஆனால் கற்றுக் கொண்டதை அப்படியே தம் வாழ்வில் கடைப்பிடித்து அதன் வழி பிறர்கற்றுக்கொள்ளச் செய்யும் ஆசான்களாலும், சீடர்களாலும்தான் இதை வளர்க்க முடியும்.
மேலும் மறைக்கல்வி என்பது திருச்சபை என்றால் என்ன?  ஞானஸ் நானம் என்றால் என்ன?  என்பது போன்ற பல தகவல்களைச் சொல்லித்தரும் கல்வியாகவும்  பின்பு தேர்வு என்கிற பெயரில் மனனம் செய்த தகவல்களைத் திரும்பி சொல்ல வைக்க முயற்சிப்பதாகவும் கூடிய சாதாரண நிலையில் இருக்கக் கூடாது.  மறைக்கல்வி மூலம் கிறித்தவ மனநிலையைப் பெறச் செய்வதே நமது நோக்கமாக இருக்கிற காரணத்தால் கற்பவருக்குத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைக்கப்பட வேண்டும்.  ஒரு மனிதனின் மனநிலையில் தாக்கம் ஏற்பட வேண்டுமாயின் குறிப்பிட்ட சூழ்நிலையில் அவனை நிறுத்தி அவனது வினா அல்லது விடை என்ன என அடிக்கடி சிந்திக்கத் தூண்டிட வேண்டும்.  அதன்படி செயலாற்ற வழிகாட்டிட வேண்டும்.
சரியாய் சிந்தித்து முறையாய் செயல் படுபவரே முதன்மைக்குரியவராய் முன்னிலைப் படுத்தி பாராட்டிட வேண்டும்.
பகைவரையும் அன்பு செய்வதே கிறித்துவின் மன நிலை என்று மறைக்கல்வியில் அறிந்து கொண்ட ஒருவன் அதன்படி தன் பகைவனிடம் அன்பு செலுத்திட முயற்சிப் பானாகில் அவனே மறைக்கல்வியில் முதன்மை பெறத் தகுதியுடையவன்.  சுருங்கச் சொல்லின் மறைக்கல்வியின் மதிப்பெண்ணைத் தேர்வுத்தாளில் முடக்கிவிடக் கூடாது.  மாறாக கற்பவரின் வாழ்க்கைத் தளத்தில் மதிப்பீடு செய்திட வேண்டும்.  
இவ்வாறாக மறைக்கல்வியின் நோக்கம் சரியாய் உணரப்படவும், உணர்த்தப்படவும் அதனை எடுத்துச் செல்ல “கடைப்பிடிப்போம்; அதன் வழி கற்பிப்போம்” என்கிற யுக்தியைப் பயன் படுத்திடவும், மறைக்கல்வியின் மதிப்பீடு வாழ்க்கைத் தளத்தில் அறியப்படவும் இந்த மறைக்கல்வி ஆண்டில் அனுகூலம் ஆக்குவோம்.  அதற்கு உரிய வினையை ஆற்ற ஆண்டவனை பிரார்த்திப்போம்.

திரு. எரோணிமுஸ்
‘ஊற்றுக்கண்’ ஆசிரியர்
திருச்சி

மறைக்(கப்பட்ட)கல்வி


நமது தமிழக ஆயர் பேரவை இந்த ஆண்டை (2011-2012) மறைக்கல்வி ஆண்டாகக் கொண்டாட அழைப்பு விடுத்திருக்கிறது.  ஒவ்வொரு ஆண்டும் ஏதாவதொரு கருத்தினை அடிப்படையாகக் கொண்டு, திருச்சபை சிறப்பு சிந்தனை தருகிறது.  இளையோர் ஆண்டு, குருக்கள் ஆண்டு, பொதுநிலையினர் ஆண்டு, இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் 40ஆம் ஆண்டு என்றவாறு இந்த ஆண்டு மறைக்கல்வி ஆண்டு.  காலங்கடந்த சிந்தனை ஆனால் நல்ல சிந்தனை.
மறைக்கல்வி இப்போது மறைக்கப்படும் கல்வியாக, மறைந்த கல்வியாகக் காணப்படுகிறது.  நமது பங்குகளில், நம் பள்ளிகளில், நம் பிள்ளைகளுக்கென்று மறைக்கல்வி வகுப்புகள் நடைபெறும்.  ஆனால் வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மறைக்கல்வி வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடும்.  இந்தக் குறையைப் போக்க, நம் பங்குகளில் மறைக்கல்வி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  தமிழகத்தில் உள்ள அநேக பங்குகளில் பல பங்குகளில் மறைக்கல்வி கற்பித்தல் நடைபெறுவது ஆச்சர்யம்.  ஆனால் அக்கல்வியின் உண்மையான நிலை மற்றும் பணிகளை நோக்கும்போது அக்கல்விதான் ஒரு சராசரி மனிதனின் உலகுசார் அறிவுக்கும், வாழ்க்கைக்கும், ஆன்மீக வாழ்வுக்கும் அடித்தட்டாக அமையும்.  அந்தக் காலத்தில் மணப்பாடு வந்திறங்கிய சவேரியாரும், மறவநாட்டு அருளானந்தரும், கொச்சைத்தமிழில் மறைக்கல்வி போதித்து உபதேசியார்களைப் பயிற்றுவித்து, அந்த உள்ளூர் வாசிகளே மறைபரப்புப்பணியைச் செய்திருக்கிறார்கள்.  அந்த உபதேசியார்கள் வசீகரம் இல்லா திருப்பலி தொடங்கி, அடக்கச் சடங்குவரை, உள்ளூர் மக்களோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்து வாழ்ந்து காண்பித்தவர்கள்.
ஆனால் தற்போது, பங்குப்பணியாளர்கள் தங்கள் பங்கில் மறைக்கல்வி நடத்தப்படுவது போல ஒரு பிரமையையும், பெருமையையும் பெற்றிட மறைக்கல்வி வகுப்புகள் நடத்துகிறார்கள்.  பலரின் ஒத்துழைப்பும் போதாமல் உள்ளது. 
V.B.S. எனும் கோடைகால வேதாகமப் பள்ளியும் 10 நாட்கள்தான்.  அதுவும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே.  எனவே இன்னும் நிறைய ஆர்வமும் முன்னெடுப்பும் குருக்கள், துறவிகள், பெற்றோர் மற்றும் பிள்ளைகள் மத்தியில் தேவைப்படுகின்றன.
மறைக்கல்வியின் பயன்கள் பல.  கத்தோலிக்கக் கிறிஸ்தவனுக்குப் பிறப்பு முதல் இறப்பு வரை திருவருட்சாதனங்கள் உண்டு.  பிஞ்சு உள்ளங்களில் கதைகள் வாயிலாக பாடல்கள், விளையாட்டுக்கள் வாயிலாக இயேசுவின் மதிப்பீடுகளைச் சொல்லித்தருவது எத்துணை இனிமையானது.  பல புனிதர்களைப் புனிதர்களாக்கியது அவர்களின் அன்னையின் அரவணைப்பில், அவர்கள் கேட்ட புனிதர்களின் வாழ்க்கை முறைகள்தான்.  பல அருட்பணியாளர்கள், அவர்கள் சிறு பிள்ளைகளாக இருந்த காலத்தில் சந்தித்த குருமார்கள், அவர்களின் எளிமையான பக்தி நிறைந்த, வேறுபாடற்ற மனநிலை மூலம் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.  தற்போதைய குருக்களின் வாழ்க்கை முறைகளை முன்னிறுத்தி குருக்களாகும் எண்ணிக்கை குறைவே.
மறைக்கல்வி என்பது தேர்வுக் கண்ணோட்டத்தில் நடத்தும் வகுப்புகள் அல்ல.  அவைகள் வாழ்வியல் கண்ணோட்டத்தில் நடத்தப்படும் பாசறைகள்.  அன்பு, தர்மம், பிறருக்கு உதவி, எளிமை, எதார்த்தம், பகிர்வு போன்ற நன்மதிப்பீடுகளைத் தரவல்ல மறைக்கல்வியை இளம் தலைமறையினருக்கு நாம் தராவிட்டால், நாம் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்கவேண்டியவர்களாவோம்.  இது குருக்களின் கடமை என்று நினைத்தால் அது மடமை.  நம் அனைவருக்கும் இந்தக் கடமையாற்ற உரிமையும் தகுதியும் உள்ளன.
பேராசிரியர் அ. குழந்தைராஜ்
காரைக்குடி

மறைக்கல்வி ஆண்டின் சிறப்பு செய்தி


“நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்தனை அழகாய் இருக்கின்றன” (உரோ 10:15).
“சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும் ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது” (திபா 34:10).  ஆனால் கிறிஸ்தவர்களாகி நாம் அனைவருமே குறைகள் ஏதுமின்றி நிறைவாக வாழ்கிறோமா?  என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுப் பார்த்தால் பதில் வெறுமையாக இருக்கிறது ஏன் இந்த வெறுமை?  சிறுவயதில் நாம் பெற்றுக் கொள்ளாத மறை உண்மைகள், இறைவனைப் பற்றி அறியாத தன்மை.  வாழ்வு கடவுள் அன்பினால் கட்டப் பட்டதா? அல்லது இவ்வுலகின் செல்வங்களுக்காக, இவ்வுலக ஆசீர் வாதங்களுக்காக மட்டுமே கடவுளை நாடுவதில் அமைந்துள்ளதா?
நம்மில் பெரும்பான்மையானோர் இறைவார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து அவற்றின்படி நடக்காமல், இறைவார்த்தைகளை நம் வாழ்க்கையில் பயன்படுத்தாமல் நம்முடைய இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரத்திற்கு மட்டுமே நாம் இறைவனைத் தேடினால் நம்மில் ஏது நிம்மதி?  கத்தோலிக்கத் திருச்சபையின் விசுவாசம், இறைவார்த்தை, ஆன்மீகம் ஆகியன பற்றி முதலில் பெற்றோர் அறிந்து இருந்தால்தான் நம் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர முடியும்.  இதுதான் மறைக்கல்வியில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
வானத்தின் மழை பூமியில் பலன்தர வேண்டும் என்றால் மண் பக்குவப்பட்டு இருக்க வேண்டும்.  அப்போதுதான் மழை நீர் மண்ணில் பட்டவுடன் தேவையான பலனை அது அளிக்கும்.  அவ்வாறே இறை வார்த்தைகள் நம்மில் பலன்தர நம் மனதை நாம் பக்குவப்படுத்தி இருக்க வேண்டும்.  இதைத்தான் ஞாயிறு மறைக்கல்வியும் முக்கியத்துவப் படுத்துகிறது.  அன்புக் குழந்தைகளே 1986ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஷைனி ஆபிரகாம் பங்கேற்று மிகப் பெரிய சாதனைப் படைத்தார்.  போட்டியில் முதல் நபராக வந்து சேர்ந்தார்.  ஆனால் அந்தோ பரிதாபம் நடுவர்கள் ஷைனி ஆபிரகாமுக்கு முதல் பரிசு கொடுக்காமல் அவருக்கு அடுத்தபடியாக வந்தவருக்குப் பரிசைக் கொடுத்தனர்.  மாறாக ஷைனி ஆபிரகாமைத் தகுதி நீக்கம் செய்தனர்.  காரணம் என்ன?  அவர் வேகமாகத்தான் ஓடினார்.  எல்லாரையும் விட முதலாக இலக்கை வந்து சேர்ந்ததும் உண்மைதான்.  ஆனால் அவர் தனக்குக் குறிக்கப்பட்ட பாதையில் ஓடாமல் தவறான பாதையில் ஓடினார்.  
இதைப்போன்றுதான் கிறிஸ்தவர்கள் விரைவாக ஓடுகிறார்கள்.  எல்லாரையும் விட சிறந்த பணியைச் செய்கிறார்கள்.  ஆனால் சில தவறான பாதைகளால் பரிசு பெறத் தகுதியற்றவர்களாகிவிடுகிறோம்.  அழைக்கப்பட்ட வர்கள் என்ன நோக்கத்திற்காக அழைக்கப்பட்டார்களோ அதைத் தவிர மற்ற அனைத்துப் பணிகளையும் செய்கிறார்கள்,  சிந்திப்போம்.  
சுவாமி அபிஷேக்தானந்தா (கத்தோலிக்க குரு) ஒரு இந்து சந்நியாசியைச் சந்தித்தபோது அந்த சந்நியாசி உங்கள் கிறிஸ்தவ மிசனரிகள் கல்வி, மருத்துவம், சமூக நீதி போன்ற பணிகளை மக்களுக்குக் கொடுத்திருப்பது மிக்க மகிழ்ச்சிதான்.  ஆயினும் தேவையானது ஒன்றே.  மக்கள் கடவுளைக் காண பசியோடு இருக்கிறார்கள்.  இயேசு தவிர எல்லாவற்றையும் கொடுக்கிறீர்கள்.  அவர்களுக்குத் தேவை இயேசு கிறிஸ்துவே.  இதை எப்போது கொடுக்கப் போகிறீர்கள்? என்று கேட்டாராம்.  நாம் இயேசுவைத் தவிர எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறோம் என்பது உண்மையே.   சிந்திப்போம்.
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.  இறைவார்த்தையை அறியாதவர் இறைமகன் இயேசுவையே அறியாதவராவார் என்று புனித எரோணிமுஸ் கூறியிருக்கிறார்.  உண்மையிலேயே இறைவார்த்தை நமக்குள் நம்மோடு இருக்கும் என்றால் ஒளியின் மக்களாகிய நாம் இறை வார்த்தையை நம் பிள்ளைகளுக்கு அறிவிக்கவும், பகிரக்கூடியவர்களாகவும் வாழ்வோம்.  “நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள் . . .  எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை . . .   மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்” (மத் 5:14-16).  எனவே மறைக்கல்விக்கு நம் பிள்ளைகளை ஊக்கப்படுத்தி கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக வாழ்வோம்.  நாம் பெற்ற கிறிஸ்து வாழ்வைப் பிறருக்கு கொடுப்போம். 

சகோ. பிலோ FSJ
கருமண்டபம், திருச்சி

திறக்கட்டும் கற்பனைக் கதவுகள்-2


நம் எண்ணத் திரைகளில் வண்ணப் படங்களாக உருவெடுத்து காவியம் படைக்க அமையும் அடித்தளமே கற்பனைகள்.  கற்பனைகளுக்கு எல்லைக் கோடு கிழித்து சிறு வட்டத்துக்குள் சிறைப்பிடித்தவர் யாருமே இல்லை.  எங்கும் எப்போதும் எல்லோருக்கும் கற்பனைகள் பொதுவானவையே!
‘கற்பனைகள் என்பது தனி உலகம்’ என்று பேசுவோரும் உண்டு.  நிஜ உலகைக் கடந்து கற்பனை வானில் சிறகு விரித்து வலம் வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி உண்டு.  வாழ்க்கையில் உயர்ந்து வெற்றிக் கனி பறிக்க நாம் தீட்டும் திட்டங்கள் எல்லாம் முதலில் நமது கற்பனையில் தான் படிவமாக அமைகின்றன.
“நான் சிறுவனாக இருக்கும்போது ஒரு மருத்துவரைப் போல நோயாளிகளுக்கு ஊசிப் போடுவேன்.  நான் தனியாக இருக்கும்போது அடிக்கடி அதைக் கற்பனை செய்து பார்ப்பேன்.  நாளடைவில் நான் ஒரு மருத்துவர் என்ற நினைவு என் ஆழ்மனதில் ஆழமாக பதிந்து விட்டது.  எப்படியும் நான் ஒரு மருத்துவர் நிலைக்கு உயர்ந்திட வேண்டும் என்று கடினப்பட்டு படித்தேன்.  இன்று அது நிஜமாகிவிட்டது” என்று எனது நண்பர் ஒருவர் என்னோடு பகிர்ந்து கொண்டார்.
ஒரு சில தினங்களுக்கு முன்பாக எனது நண்பர் குருவின் இல்லத்தைச் சந்தித்தேன்.  நண்பரின் தாயார் மட்டும் வீட்டில் இருந்தார்.  அப்போது வீட்டின் அலங்கார கண்ணாடி பேழைக் குள்ளிருந்து ஒரு அழகுப் பொருளை எடுத்து என்னிடம் காட்டினார்.  அது குருவானவர் திருப்பலியின்போது அணியும் திருவழிபாட்டு மேலுடை.  மிகமிகச் சிறியதாக, அழகாக வெட்டப்பட்டு ஊசி நூலினால் அழகுற தைக்கப்பட்டிருந்தது.  வியப்போடு பார்த்த என்னிடம் “எனது மகன் நான்காம் வகுப்புப் படிக்கும்போது, அவனே தைத்தது” என்றார்.  நண்பரின் தாயார் சிறு வயதிலே ஏற்பட்ட இந்தக் கற்பனை விருப்பமாக மாறி இன்றைக்குச் சிறந்த அருள்பணியாராக நண்பர் பணிசெய்து கொண்டிருக்கிறார்.
நமது உருவாக்கத்திற்கு கற்பனைகள் எப்படி அடித்தளமாக அமைகிறது என்பதற்கு மேற்கண்ட நிகழ்வுகள் சிறந்த உதாரணங்கள்.  வாழ்க்கையில் மெல்ல மெல்ல உயர்ந்து வரலாற்றின் பக்கங்களில் இடம் பிடித்த எண்ணற்ற அறிவியல் மேதைகள் நாட்டுத் தவைர்கள் எல்லோரும் “மனிதனால் கற்பனை செய்யக்கூடிய எதையும் மனிதனால் உருவாக்க முடியும்” என்பதற்குச் சான்றுகள்.
நேர்மறைச் சிந்தனைகளுடன் நமது கற்பனைச் சிறகுகளை விரித்திடுவோம்.  முழுவேகத்தில் நமது மனவெளிவிட்டு வான்வெளியில் தினம்தினம் வலம் வருவோம்.  உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெற்றியடைந்தே தீரவேண்டும் என்ற தீர்க்கமான முடிவில் மூர்க்கமாக விளையாடி இந்திய அணியை வழி நடத்திய டோனியைப் போல கற்பனைக்கு உயிர்கொடுத்து உருகொடுக்க உழைத்திடுவோம்!  

இது பூக்களின் காலம் . . .


பசித்தது ...
அவனே உணவானான்
காசி ஆனந்தன்
கள்வன் இல்லை
என்ற
கூற்றை உடைக்க
சிலம்பை உடைத்தாள்
ஒருத்தி!
பத்தினி என்பதைப்
பறைசாற்ற
தீ மிதித்தாள்
இன்னொருத்தி!
இந்திக்குக் கரிபூசி
செம்மொழி காக்க
தீக்குளித்தான்
சின்னச்சாமி!
இனம் மீட்க
தன்னையே எரித்துக் கொண்டான்
முத்துக்குமார்!
இவைகளுக்கான
நீதியைத்
தியாகம்தான் தந்தது.

கங்கையைக் காக்க
உண்ணாவிரதமிருந்து
இறந்து போனான்
இளம் துறவி நிகமானந்தா!
நாட்டிற்காக
அவன் அழுதான்
அழுததில் வற்றிப் போனது
கங்கை!
விடுதலைக்காக
நீராகாரம் அருந்தாது
உண்ணாநோன்பிருந்து
வீரச்சாவடைந்தான்
திலீபன்!
அவன்
இறப்பில் வெடித்தது
புரட்சி!
இன்று
உண்ணாவிரதம்
அரசியலானது!
இங்கு
சில மணி நேர
உண்ணாவிரதங்களும்
நடந்ததுண்டு!
இன்று
மழை பெய்யாமலே
வெளுக்கிறது
காவிகளின் சாயம்
உண்ணாவிரத பந்தல்களில்!!

ஜே. தமிழ்ச்செல்வன்

வாழ்வை வசந்தமாக்க


மறைக்கல்வி அறிவுக்கான பாடமன்று, வாழ்க்கைக்கான பாடம்!
ஜெரோம் (சிறுவன்) : டேய், அருண்!  பூசை முடிந்ததும் அந்த வேதியர்கண்ணுல படாம சீக்கிரம் வந்துடு.  இல்லைன்னா மறைக்கல்வி எடுத்து நம்மள சாகடிச்சிடுவாரு!
தாய் : பிரின்சி!  நீ இப்ப கடைக்குப் போனாத்தான் உங்க Sisterகிட்ட மறைக்கல்வி Classக்கு லீவு கேட்பேன். 
தோமினிக் (இளைஞன்) :  ஏற்கனவே படிப்பு, டியூசன், கம்பியூட்டர் Classன்னு வாரம் முழுவதும் குழந்தைகள் கஷ்டப்படறாங்க . . .  இப்ப மறைக்கல்வி தேவையா?
மேற்குறிப்பிட்ட உரையாடலைக் கேட்டவர்களில் நீங்களும் ஒருவராய் இருக்கலாம்.  ‘மறைக்கல்வி’யை ஒரு அறிவுப் பாடமாகப் பார்ப்பதை விட இறை அனுபவமுள்ள ஆன்மீகப் பாடமாக பார்க்க வேண்டும்.  ஏனென்றால், டி.வி. ரிமோட் திருப்பும் கைகளுக்குத் திருவிவிலியம் திருப்ப வலிக்கிறது.  ஊர் சுற்றும் கால்களுக்குக் கோயில் வாசலை மிதிக்கக் கூசுகிறது.  திரைப்படத்தைக் தேடித் தேடி பார்க்கப் போகும் கண்களுக்கு நல்லவற்றைப் பார்க்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.  காரணம், மறைக்கல்வி என்ற இறையறிவு உங்களில் உருவாக்கப் படவில்லை என்பதே!  குடும்பமே மறைக்கல்வியின் முதல்பள்ளிக்கூடம் என்பதைப் பெற்றோர்கள் மறப்பதால்தான் பிள்ளைகள் இன்று திசைமாறி மாற்றுப் பாதையில் இறகுகளை விரிவுப்படுத்தி பறக்கிறார்கள்.  சீரழிகிறார்கள்.  என்னோடு பயணியுங்கள், மறைக்கல்வியின் அவசியத்தைச் சற்று அலசிப் பார்ப்போம்.
பொருள் அறிந்து கற்போம் :
மறைக்கல்வியைப் பொருள்பட கற்க வேண்டும்.  முற்றிலும் உண்மை தான்.  ஆனால் இந்தத் தலைப்புக்கு அர்த்தம் அதுவல்ல.  மறைக்கல்வியின் பொருள் என்ன? என்பதை முதலில் அறிந்து கொண்டு, பிறகு மறைக்கல்வியைக் கற்க வேண்டும்.  ஞானஉபதேசம் என்று அழைக்கப்பட்டு, அக்காலத்தில் கற்றுத் தரப்படும் பாடம் இன்று மறைக்கல்வி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.  Catechism என்னும் இச்சொல் Catechesis என்ற கிரேக்கச் சொல்லில்  இருந்து பிறந்தது.  இதற்கு ஒலி எழுப்புதல், எதிரொலித்தல், முழக்கம் செய்தல் என்பது பொருளாகும்.  கிறிஸ்து என்ன செய்தாரோ அதையே மறைக்கல்வி ஆசிரியரும் செய்கின்றார்.  ஆகவே மறைக்கல்வியைக் கற்போம்;  அதுவே நம் வாழ்வை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் பாதை.   
மறைக்கல்வியில் திருச்சபை :
“திருச்சபை” அது என்ன என நம்மில் பலரும் கேட்கும் கேள்வி.  திருச்சபையைப் பற்றியும் அதன் பாரம்பரியம் பற்றியும் நாம் அறியும் சிறப்பான இடம் மறைக்கல்வி.  அன்று தொட்டு இன்றுவரை திருச்சபையில் மறைக்கல்வி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.  எனவே மறைக்கல்வியைக் கற்று மறைப் பொருளை அறிந்திடுவோம்.
 மறைக்கல்வியில் விவிலியம் :
இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு இவற்றையயல்லாம் ஒன்றிணைத்து ஒரு பகுதியாக திருவிவிலியத்தில் வாசிக்கும் போதும், அதனைப் பிறருக்கு எடுத்துரைக்கும் போதும் அது இறை அறிவிப்பாகக் கருதப்படும்.  புனித பேதுரு இறை போதனை அளித்திருக்கிறார் என்பதை நமது மறைநூல் சுட்டிக் காட்டுகிறது (திப 2:14-40).  அதுமட்டுமல்லாமல் முதல் மறைச்சாட்சியான புனித ஸ்தேவான் யூதர்களுக்கு இறை போதனையைப் பறைச்சாற்றி இருக்கிறார் (திப 7:1-53).  மேலும் அந்தியோக்கியாவில் பவுல் போதித்தும் உள்ளார் (திப 13:16-33).  இப்போதனைகள் மீண்டும் மீண்டுமாக புதிய விளக்கங்களோடு சிந்திக்கப்பட்டு வாழ்வோடு இணையும் கல்வியாக மாற்றப்படும்போது இறைவார்த்தையின் ஒளியில் மறைக்கல்வி சிறப்புமிக்க வாழ்வுப் பாதையாக மாறுகிறது.  ஆகவே விவிலியத்தை மையப் படுத்துவோம்;  இறைவார்த்தையைக் கற்று மறைக்கல்வியில் மறுபிறப்பெடுப்போம்.  
வாழ்வை வசந்தமாக்க :
திருச்சபையின் சொல் அறிந்து, விவிலித்தின் வழிநின்று கற்பதைவிட நம் வாழ்க்கையை வசந்த காலமாக மாற்றுவதென்பது நாம் செய்யக்கூடிய செயலில்தான் உள்ளது.  மறைக்கல்வி எதற்கு என்று ஓட்டு வீட்டில் உறங்குபவரும். எதுக்குடா இதெல்லாம் என்று சொல்லி ஏ.சி. அறையில் மகிழ்வோரும் புரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளம்.
நாம் கொண்டுள்ள விசுவாசம் உறுதிப்பட விவிலிய அறிவும், செபத்தின் உட்பொருளை உணருதலும் தேவை.  அதுமட்டுமல்லாமல் கடவுளைக் கண்டறிய வேண்டிய வழிகளும் நமக்கு அவசிய மானது ஒன்று.  இதெல்லாம் சிறுவர், சிறுமியருக்குத்தானே என்று மட்டும் நினைத்தோமென்றால் நாம் நிறை வளர்ச்சி காண முடியாது.  குழந்தைக்குத் தேவை, இளையோருக்குத் தேவை, முதிர் வயதினருக்குத் தேவை.
வாழ்வை வசந்தமாக்கிட வழிகள் பல உண்டு.  ஆனால், ஆண்டவரின் அருள் பெற்று, உண்மையான புரிதல் கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் பயணிக்க உதவும் பச்சை நிற விளக்குத்தான் மறைக்கல்வி.
வருங்காலம் வசந்தமாகிட மறைக்கல்வியைப் படிப்போம்!  மற்றவருக்கு மறைக்கல்வியைப் பயிற்றுவிப்போம்! 

சகோ. மாணிக்கம்
திருச்சி மறைமாவட்டம்  

புனித சுவக்கீன், புனித அன்னம்மாள்


சுவக்கீன் என்றால் “ஆண்டவரது தயாரிப்பு” என்பது பொருள்.  அன்னா என்றால் “இறைவனது அருள்” என்று பொருள்.  அன்னம்மாள் பெத்லகேமில் பிறந்தார்.  நாசரேத்தில் வாழ்ந்த சுவக்கீன் என்பவரை மணந்தார்.  இருவரும் தாவீது அரசருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.  இவர்களுக்கு நெடுங்காலமாக குழந்தை இல்லை.  பிறகு மரியாள் பிறந்தார்.  மரியாளுக்கு மூன்று வயது ஆனதும் தேவாலயத்திற்குச் செல்லும்படி அவரைக் கடவுள் அழைத்தார்.  சுவக்கீனும் அன்னம்மாளும் தியாக குணம் படைத்தவர்கள்.  நெடுங்காலமாய் தவம் இருந்து கடவுளை மன்றாடிப் பெற்றெடுத்த அழகிய குழந்தையைக் கடவுளுக்கு இவர்கள் அர்ப்பணம் செய்தார்கள்.
திருச்சபையில் பெருங்காலத்திற்கு முன்பிருந்தே புனித அன்னம்மளை விசுவாசிகள் வணங்கி வந்திருக்கிறார்கள். இவரின் பெயரில் கோவில்கள் கட்டப் பட்டன.  கிழக்கத்திய திருச்சபையின் பிதாப்பிதாக்கள் இவரது பரிசுத்த தனத்தைப் பற்றியும் இவர் பெற்ற வரங்களைப் பற்றியும் அழகாகக் கூறியிருக்கிறார்கள்.  நான்காம் நூற்றாண்டில் புனித சுவக்கீன் பெயரில் எருசலேமில் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது.

சிந்தனை : இவர்களைப் போல கடவுளுக்காக, நாம் நேசிக்கும் இடம், பொருள், ஆட்களைத் தியாகம் செய்வதற்கான தைரியத்தைக் கேட்டு மன்றாடுவோம்.
செபம் : ஆண்டவரே, தியாக மனப்பான்மையை எங்கள் அனைவருக்கும் தாரும். 

-எட்வர்டு

அர்ப்பணமே ஆசீர்வாதம்


திருச்சபைப் புனிதர்கள் வரிசையில் புனித பசிலியார் (St. Basil) மிகவும் உயர்ந்த புனிதராய்க் கருதப்படுகிறார்.  புனிதர்களும், வேதசாட்சிகளும் பிறந்த குடும்பத்தில் பிறந்தாலும் புனித பசிலியார் இளமையின் நாட்களில் உலகப் பற்று நிறைந்தவராகவே இருந்தார்.  புனித பசிலியார் (329-379) இயல்பிலேயே மிகுந்த அறிவுத் திறனும், செல்வச் செழிப்பும் நிறைந்தவராய் இருந்ததால் ரோம் நகர்கடந்து கிரேக்கம், ஏத்தன்ஸ் நாடுகளுக்கும் சென்று உயர்கல்வி பயின்றார். 
உலகியல் சிந்தனை நிறைந்தவராய் இருந்த இவரை இறைவனுக்குள் வழிநடத்தியவர் அவரின் உடன்பிறந்த சகோதரி மார்க்ரீனா (Marcrina) தான்.  இறைவன் இயேசுவின் இறை வாழ்வில் நுழைந்தபின் மகிழ்வுக்குரிய புதிய வாழ்வைக் கண்டார்.  இறைவார்த்தைகளை வேதாகமத்தில் படிக்கப் படிக்க  உலகத்தின் வெறுமை இவரின் கண்களுக்குத் தெளிவாய் தெரிந்தது.  உலகப் பற்றிலிருந்தும் பொருளாசையிலிருந்தும் விடுபட விடுபட இறைமகிழ்வு இவரின் இதயத்தில் நுழைவதை உணர்ந்தார்.
இறைஇயேசுவுக்குத் தன்னை முழுமையாய் ஒப்புக்கொடுக்க துறவியர் வாழ்வு வாழ்ந்து தன் 35ஆம் வயதில் குருவானவராய் அருள் பொழிவு பெற்றார்.  ஆயரான பிறகும் அநேக அன்பு இல்லங்களைத் தோற்றுவித்து மிகப் பெரிய புனிதராய் மரித்தார்.  “இவ்வுலகில் இருக்கும் பொழுது மட்டுமே நாம் இறைப் பணி செய்ய முடியும், மறு உலகில் அல்ல.  எனவே இவ்வுலக வாழ்வு முழுவதிலும் இறை இயேசுவின் பணியைச் செய்வதே மிகப் பெரிய பாக்கியம் என்பதை உணருவோம்” என்றார்.
வேதாகமத்தில் நாகூம் ஆகமத்தில் இவ்வாறு வாசிக்கிறோம் “இதோ சமாதானத்தை அறிவிக்கும் நற்செய்தியைக் கொண்டு வருகிறவனின் கால்கள் மலை மேல்நடந்து வருகின்றன” (நாகூம் 1:15).   
“சமாதான நற்செய்தியை அறிவிக்க வருகிறவருடைய மலரடிகள் மலைகள் மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன” (எசா 52:4) எனவும் வாசிக்கிறோம்.
லூக் 9:1ஐ வாசிக்கும்பொழுது ஆண்டவர் இயேசு பன்னிரு அப்போஸ் தலர்களை அழைத்து, பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்து அவர்களை “பேய்களை அடக்கவும், நோய்களைக் குணமாக்கவும், இறையரசைப் பற்றிச் செய்தியை அறிவிக்கவும் அவர்களை அனுப்பினார்” எனக் காண்கிறோம்.
லூக் 9:23-26 வரை வாசிக்கும் பொழுது இறைவார்த்தையின் நிமித்தம் இயேசுவைப் பின்பற்றும் ஒரு அப்போஸ் தலன், சீடன் எவ்வாறு இருக்க வேண்டுமென இயேசு குறிப்பிடுகிறார்.
  1. தன்னையே மறுத்து தன் சிலுவையை நாள்தோறும் சுமந்து கொண்டு என்னைப் பின் தொடரட்டும்.
  2. என் பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதை மீண்டும் பெற்றுக் கொள்வான். 
  3. என்னைப் பற்றியும் என் வார்த்தைகளைப் பற்றியும் வெட்கப்படுகிறவன் எவனோ அவனைப் பற்றி மனுமகன் தமக்கும், தந்தைக்கும், பரிசுத்த வானதூதருக்கும் உரிய மாட்சிமையில் வரும்போது வெட்கப்படுவார்” என்கிறார்.

இறை இயேசுவைப் பின்பற்றுபவர் எளிய வாழ்வு, உலக பற்றின்மை, துன்பங்களை ஏற்றுக் கொள்ளும் மன வலிமையைக் குறித்தும் (லூக் 9:57-62) ஆண்டவர் இயேசு குறிப்பிடுகிறார்.
இறை அழைப்பின் மகத்துவம், ஆத்தும இரட்சண்ணியப் பணியின் உயர்வு, விண்ணகப் பேரின்ப வாழ்வு இவைகள் எவ்வளவு உன்னதமான தென்றால் இயேசு குறிப்பிடும் தியாகமும் தூய்மை வாழ்வும் இவ்வுலகப் பேற்றுக்கும் மேலாய் தகுதியுடைதாய் இருக்கிறது என்றுதானே பொருள். 
இன்று கிறிஸ்துவின் மறை உண்மைகளைக் “குட்டிக் கதைகள்” மூலம் இருபத்தைந்து புத்தகங்களுக்கும் மேல் எழுதி வெளியிட்ட குருவைச் சந்தித்தேன்.  இவ்வளவு எழுத்துப் பணி எப்படி உங்களுக்குச் சாத்தியமாகிறது எனக் கேட்டேன். 
அவர் குறிப்பிட்டார் “நான் என் ஜெபத்தில் கருத்தாய் இருக்கிறேன்.  ஆண்டவர்  வெறுக்கும் எப்பழக்கத்தையும் நான் பின்பற்றுவதில்லை.  அவருக்கு உத்தமமாய் இருக்க விரும்புவதால் இறைவனும் என்னைப் புதுப் புது அறிவினால் நிரப்புகிறார் என நினைக்கிறேன்” என்றார்.
புனித பெர்னார்ட் (1091-1153) ஒரு சமயத்தில் தன்னுடன் துறவு வாழ்விலிருந்தவர்களுடன் ஆலயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தார்.  அப்பொழுது விண்ணகத்தின் சாயல் அங்கு பொழியத் தொடங்கியது.  புதியதரிசனக் காட்சி வெளிப் பட்டதை இவ்வாறு குறிப்பிடுகிறார். 
துறவியர் ஜெபித்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லாத் துறவியரின் அருகில் ஒரு சம்மனசானவர் நிற்பதைக் கண்டார்.  அந்த சம்மனசானவர்கள் அனைவரும் அவரவர்களின் காவல் தூதர்களே.
ஒவ்வொரு வானதூதரும் தம் கையில் ஒரு சிறிய எழுது குறிப்பேடு வைத்திருந்தார்கள்;  சில சம்மனசானவர்கள் குறிப்பேட்டில் தங்க எழுத்தி னாலும், சிலர் வெள்ளி எழுத்தினாலும், வேறு சிலர் சாதாரண மையினாலும் குறிப்பெழுதிக் கொண்டிருப்பதைக் கண்டார்.  சில சம்மனசானவர்களோ சாதாரண தண்ணீரால் எழுதிக் கொண்டி ருந்தார்கள்.  கடைசியில் சில வானதூதர்களோ கலங்கிய முகத்துடன் எதுவும் எழுதாமல் நின்று கொண்டிருந்தார்கள்.
தங்கத்திலும், வெள்ளியிலும் எழுதிய சம்மனசானவர்களின் துறவியர் ஒழுக்க வாழ்விலும், இறைப்பணியிலும், ஜெபத்திலும் இறை அன்புடன் செயல்பட்டவர்களே.  சாதாரண மையினால் எழுதப்பட்டவர்கள் இறை அன்பும் ஜெபப் பற்றும், அர்ப்பண உணர்வும் இல்லாதவர்களாயிருந்தார்கள்.  தண்ணீரில் எழுதப் பட்டவர்கள் இறை அன்போ, ஜெபப் பற்றோ இல்லாமல் உடல் ஆசைகளுக்கு அடிமையானவர்களாய் இருப்பதைக் குறிப்பிட்டார் புனித பெர்னார்ட்.
நமக்கெனக் கொடுக்கப்பட்ட இறை வாழ்வைப் புனிதமாய்ப் பயன்படுத்தும் பொழுது இறைவனும் நம்மை மிகுதியான வரங்களால் ஆசீர்வதித்து நிரப்புவார் என்பதே உண்மை - சிந்திப்போம். 1

Fr. ஜெகநாதன்,
அய்யம்பாளையம், திண்டுக்கல்

மறைக்கல்வி ஆண்டுக்கான மன்றாட்டு


வாழ்வும் வழியுமான இறைவா!
உம் மகன் இயேசு கிறிஸ்து வழியாக
நீர் வெளிப்படுத்திய மறையுண்மைகளை
ஆழமாகச் சிந்தித்து எங்களது நம்பிக்கை வாழ்வை
வளப்படுத்த நீர் அழைக்கின்றீர்.
இந்த அழைப்பை நன்கு உணர்ந்து
சிறப்பாகச் செயல்பட இந்த மறைக்கல்வி ஆண்டைத்
தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.
“எல்லாருக்கும் மறைக்கல்வி” என்னும் இலக்கை
அடைய எங்களுக்கு உமது அருளைத் தாரும்.
மறைக்கல்வித் தளங்களாக விளங்கும் எங்கள் குடும்பங்கள்,
அன்பியங்கள், பங்கு, மறைமாவட்டம், நிறுவனங்களை ஆசீர்வதியும்.
மறைக்கல்விப் பணியை அர்ப்பணத்துடன் ஆற்றும்
மறைக்கல்வி ஆசிரியர்களையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளும்
அனைத்து நிலையினரையும் நீர் நிறைவாக ஆசீர்வதிப்பீராக.
காலத்தின் அறிகுறிகளை நாங்கள் நன்கு கண்டறிந்து
உமது வார்த்தையின் ஒளியில் செயல்பட மறைக்கல்வி எமக்கு உதவுவதாக.
திருச்சபையின் போதனைகளை நாங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளவும்
பிறருக்கு எடுத்துரைப்பதோடு அவற்றைக் கடைப்பிடித்து
வாழவும் எமக்கு மன உறுதி தந்தருளும்.
உம் திருமகன் இயேசுவின் உளப்பாங்குடன்
வாழ்வின் எல்லாச் சூழல்களையும் எதிர்கொள்ள
உம் ஆவியாரின் ஞானத்தையும் அருள் ஆற்றலையும்
எங்களுக்கு அருளும்.
இவ்வாறு இந்த மறைக்கல்வி ஆண்டில் தமிழகத் திருச்சபை
மறுமலர்ச்சி காண எங்கள் ஆண்டவரும் சிறந்த மறைக்கல்வியாளருமான
இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்.

எல்லாருக்கும் மறைக்கல்வி

எல்லாருக்கும் மறைக்கல்வி
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் பேரன்புக்குரிய அருள்பணியாளர்களே, துறவியரே, பொதுநிலையினரே, உங்கள் அனைவருக்கும் தமிழக ஆயர்களாகிய எங்களுடைய நல்வாழ்த்துக்கள்!
தமிழக இறைமக்கள் வாழ்வில் நம் ஆண்டவர் இயேசுவின் அருளும் ஆசீரும் தொடர்ந்து செயல்படுவதைப் பார்த்துப் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.  குறிப்பாகக் குழந்தைகள், இளைஞர்கள், முதிர்நிலையினர் ஆகியோர் நம்பிக்கை வாழ்விலும் நற்செய்தி மதிப்பீடுகளிலும் வளர்ந்திட மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகளை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்.  இந்த வகையில் நம் திருச்சபையில் மறைக்கல்வி சிறப்பான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது.  தமிழகத் திருச்சபை மறைக்கல்விப் பணியில் பல முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்பது நாம் அறிந்ததே.  எனினும் மாறிவரும் சமூக கலாச்சாரச் சூழ்நிலையில் நமது நம்பிக்கை வாழ்வை மேலும் ஆழப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் 2011 சூலை முதல் 2012 சூன் முடிய உள்ள காலம் மறைக்கல்வி ஆண்டாகக் கொண்டாடப்பட வேண்டுமென 2011 பிப்ரவரி 6 - 7 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற தமிழக ஆயர் பேரவைக் கூட்டத்தில் நாங்கள் அறிவித்தோம்.  அதற்கேற்ப மறைக்கல்வி ஆண்டாக “எல்லாருக்கும் மறைக்கல்வி” என்ற விருது வாக்குடன் இந்த ஆண்டு கொண்டாடப்படும்.  மறைக்கல்வி சார்ந்த புரிதலிலும் நடைமுறையிலும் முக்கிய ஒரு மாற்றத்தை இது கொண்டுவரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  
மறைக்கல்வி என்பது நம் சமய உண்மைகளையும் கோட்பாடுகளையும் அறிவுபூர்வமாக நாம் கற்றுக்கொள்ளும் ஒரு படிப்பு மட்டுமல்ல.  நமது வாழ்வின் ஒவ்வொரு அனுபவத்திலும் நிகழ்விலும் சிறப்பாகக் காலத்தின் அறிகுறிகளிலும் கடவுள் நம்மைச் சந்திக்கின்றார்.  அவருடைய அன்பு மக்களுக்குரிய உறவோடும் உரிமையோடும் மாண்போடும் மகிழ்வோடும் நாம் வாழவும் வளரவும் நமக்கு அழைப்பையும் அருளையும் தொடர்ந்து தந்து கொண்டிருக்கின்றார்.  இந்த இறையனுபவத்தை நாம் இனம் கண்டு வாழ்க்கை அனுபவமாக மாற்றி, இறையாட்சியின் மனிதர்களாகவும் குழுமங்களாகவும் நாம் உருவாகி, உலக சமூகத்தையே அன்பிலும் நீதியிலும் செயல்படும் இறையாட்சியாக உருமாற்ற வேண்டும்.  இத்தகைய நம்பிக்கையின் உருவாக்கமே மறைக்கல்வி.  அதாவது இயேசுவின் மனநிலையுடன் நாம் வாழவும் உறவாடவும் சமூகத்தில் செயல்படவும் வேண்டிய நம்பிக்கையின் புரிதலையும் உறுதிப்பாட்டையும் மறைக்கல்வி நமக்குத் தர வேண்டும்.
இந்த கல்வி ஆண்டை மறைக்கல்வி ஆண்டு என நாங்கள் அறிக்கையிட மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
  1. தமிழகத் திருச்சபையில் மறைக்கல்வியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் அருள்பணியாளர் தாமஸ் கவான் டஃபி.  இவர் பாரீசு வெளிநாட்டு மறைபரப்புச் சபையைச் சார்ந்தவர்.  இவர் மறைக்கல்வியில் வல்லுநர்;  திண்டிவனம் வேதியர் பயிற்சிப் பள்ளியை நிறுவியவர்.  தமிழக மறைக்கல்வியில் புதிய பாடத்திட்டத்தையும் புதிய போதனா முறையையும் செயல் படுத்தியவர்.  இவர் நம் தாயகத்தில் காலடி வைத்து இப்பொழுது நூறு ஆண்டுகள் நிறைவடைகின்றன (1911-2011).
  2. இவ்வாண்டு தமிழக மறைக்கல்வி நடுநிலையத்தின் பொன்விழா ஆண்டு ஆகும்.  1961 சனவரி 24-26 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற தமிழக ஆயர் பேரவை, திண்டிவனத்தில் தமிழக மறைக்கல்வி நடுநிலையத்தையும் வேதியர் பயிற்சிப் பள்ளியையும் உருவாக்குவது என்று தீர்மானித்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன.  பாரீசு வெளிநாட்டு மறைபரப்புச் சபையைச் சார்ந்த அருள்பணியாளர் எட்மண்ட் பெக்கர் அவற்றின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.  இவர் சமூகத் தொடர்பு ஊடகங்களைப் பயன்படுத்துவது முதலான புதிய உத்திகளைப் புகுத்தி மறைக்கல்வியைக் கற்றுத்தருவதில் முன்னோடியாக விளங்கினார்.
  3. மேலும் இவ்வாண்டு அனைத்து இந்திய அளவில் மறைக்கல்வியை நெறிப்படுத்தி ஊக்குவித்து வழிநடத்தவும் கத்தோலிக்க ஆயர் பேரவை புதிய தேசிய மறைக்கல்வியின் வழிகாட்டி நூலை (National Catechetical Directory) வெளியிடுகிறது.  இந்த நூல் தமிழகத் திருச்சபையின் மறைக்கல்வி மறுமலர்ச்சிக்கு ஊற்றாகவும் ஆக்கபூர்வமான செயல் பாடுகளுக்குத் தூண்டுகோலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறைக்கல்வி என்பது பிறப்பு முதல் இறப்பு வரை தொடர வேண்டிய ஒரு முயற்சியும் பயிற்சியுமாகும்.  இது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து நடைபெற்று நமது நம்பிக்கை வாழ்வில் வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் அளிக்க வேண்டும்.  எனவே, இது வகுப்பறைக்கோ, சிறார்களுக்கோ மட்டுமே உரியது என்னும் புரிதல் தவறானது.  இது கிறிஸ்தவ வாழ்வின் எல்லா நிலைகளிலும் சூழமைவிலும் தொடர்ந்து நடைபெற வேண்டியது.  ஒவ்வொரு பருவத்தினருக்கும் அவர்தம் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் தேடல்களுக்கும் ஏற்பத் தழுவியமைத்து இது தரப்பட வேண்டும்.  திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் நம்பிக்கையை ஆய்ந்து அறியவும் தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவோடு உள்ள உறவில் வளரவும் நம்பிக்கையின் சாட்சிகளாகத் திகழவும் இறையாட்சி சமூக உருவாக்கப் பணியில் ஈடுபாடும் கடமையும் உரிமையும் கொண்டவர்கள் என்பதை உணர்ந்து வாழவும் அவர்களுக்கு உதவவேண்டும்.
நம் மறைமாவட்டங்களிலும் பங்குகளிலும் சிறப்புற நடைபெற்றுவரும் மறைக்கல்விப் பணிகளைப் பாராட்டுகிறோம்.  குறிப்பாக மறைக்கல்விப் பணி சிறப்பாக நடைபெற அக்கறை காட்டுகிற அருள்பணியாளர்கள், ஆர்வத்துடன் உதவும் துறவிகள், ஆசிரியர்கள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.  எனினும் எல்லாக் குடும்பங்களிலும் அன்பியங்களிலும் நிறுவனங்களிலும் மறைக்கல்வி சிறப்பாக நடைபெறுகிறது என நாம் கூற இயலாது.  எனவே நாம் அனைவரும் அதில் அதிக ஆர்வத்துடனும் அக்கறையுடனும் ஈடுபட அழைக்கிறோம்.  குறிப்பாக அனைத்து இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை புதிய தேசிய மறைக்கல்வி வழிகாட்டி  நூலை வெளியிட இருப்பதால் இவ்வாண்டு முக்கியத்துவம் பெறுகிறது.  இந்த நூல் அனைத்து இந்திய அளவில் மறைக்கல்வியை நெறிப்படுத்தவும் ஊக்குவிக்கவும் பல வழிமுறைகளை நமக்குத் தருகிறது.  அவற்றின் அடிப்படையில் நம் பங்குகள், குடும்பங்கள், அன்பியங்கள், பொதுநிலையினருக்கான அமைப்புகள், இயக்கங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் மறைக்கல்விப் பணியைப் புதிய நற்செய்திப் பணியாக விரைந்து செயல்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.  
மறைக்கல்வி கற்பதும் கற்பிப்பதும் திருமுழுக்குப் பெற்ற எல்லாருடைய கடமையும் உரிமையும் ஆகும்.  ஆயர், அருள்பணியாளர், துறவியர், ஆசிரியர், வேதியர், பெற்றோர் ஆகிய அனைவரையும் இது சார்ந்தது.  எனினும் இப்பணியில் கிறிஸ்தவப் பெற்றோர்களின் பங்கு முதன்மையானதும் மிக முக்கியமானதுமாகும்.  சிறப்பாக குடும்ப செபம், குடும்ப மறைக்கல்வி வாயிலாக அவர்கள் தம் பிள்ளைகளை நம்பிக்கையில் உருவாக்குவதில் முனைப்போடு செயல்பட வேண்டும்.  அடுத்து ஒவ்வொரு பங்கும் மறைக்கல்வியின் அடிப்படைத் தளமாக விளங்குகிறது.  ஞாயிறு மறைக்கல்வி, அருளடையாள மறைக்கல்வி, சிறப்புப் பயிற்சிகள் என்பவை ஒவ்வொரு பங்கிலும் வழங்கப்பட வேண்டும்.  நம் கல்வி நிறுவனங்களும் முக்கிய மறைக்கல்வித் தளங்களாக உள்ளன.  இவற்றில் தரப்படும் மறைக்கல்வி மாணவர்களை அதிகம் ஈர்ப்பதாகவும் ஈடுபடுத்துவதாகவும் அமைய வேண்டும்.  இதற்கு ஊடகங்கள் முதலான புதிய உத்திகளைப் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். 
“எல்லாருக்கும் மறைக்கல்வி” என்னும் விருதுவாக்குடன் தொடங்கப்படும் இந்த மறைக்கல்வி ஆண்டின் பணிகள் அனைத்தும் தமிழகத் திருச்சபையின் மறுமலர்ச்சிக்கு மிகவும் உதவும் என நம்புகிறோம்.  இந்நோக்குடன் இந்த மறைக்கல்வி ஆண்டில் நமது தமிழகத்தின் அனைத்து மறைமாவட்டங்களிலும் பங்குகளிலும் கல்வி நிறுவனங்களிலும் பின்வருவனவற்றைச் செயல்படுத்த வேண்டும் எனப் பெரிதும் விரும்புகின்றோம்.
  1. மறைமாவட்டம், மறைவட்டம், மறை மண்டலம் ஆகியவற்றில் தொலை நோக்குப் பார்வையுடன் மறைக்கல்விப் பணிக்குழுக்களை அமைத்தல்.
  2. பங்குகள்தோறும் மறைக்கல்வி மன்றங்கள் அமைத்து அவற்றைச் சிறப்பாக நடத்தி அனைவரையும் ஈடுபடுத்தி மறைக்கல்விப் பணியை ஒரு மக்கள் இயக்கமாக்குதல்.
  3. நமது பங்குகளிலும் கிளைப் பங்குகளிலும் நடைபெறும் விழாக்களின் போதும் சிறப்பாகப் பங்குப் பாதுகாவலரின் விழாக்களின்போதும் மறைக்கல்வி சார்ந்த தலைப்புகளை மைய சிந்தனையாகக் கொண்டு திட்டமிட்டுக் கொண்டாடி இறைமக்களின் நம்பிக்கை வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துதல்.  
  4. அனைத்துப் பங்குகளிலும் மறைக்கல்வி நூலகங்களை உருவாக்குதல்.
  5. குடும்ப விழாக்கள் முதலான பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை முறைசாரா மறைக்கல்வித் தளங்களாக மாற்றுதல்.
  6. மறைக்கல்வியின் பல்வேறு பிரிவுகளைப் பள்ளி மறைக்கல்வி, ஞாயிறு மறைக்கல்வி, அருள்அடையாள மறைக்கல்வி, மழலையர்-சிறார்-இளைஞர்- முதிர் நிலையினர் மறைக்கல்வி, குடும்ப மறைக்கல்வி ஆகிய அனைத்தும் தத்தம் நிலையில் வளர்ச்சி காண மேற்கொள்ளப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
  7. இந்த மறைகல்வி ஆண்டில் பல்வேறு நூல்கள், குறுந்தகடுகள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றை வாங்கி பயன்படுத்தி இறைமக்களின் நம்பிக்கை வாழ்வில் வளர்ச்சி காணச் செய்தல்.
  8. மறைமாவட்ட அளவில் மறைக்கல்வி மாநாடுகள், பெருந்திரள் பேரணிகள், மறைக்கல்வி ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சிகளுடன் பல்வேறு மையங்களில் கண்காட்சிகள் நடத்தி மறைக்கல்வி பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்குதல்.
  9. தேவைக்கும் சூழலுக்கும் ஏற்பத் தமிழகக் கருத்தாளர் குழுவின் உதவியுடன் பங்கு, மறைவட்ட, மண்டல, மறைமாவட்ட அளவில் பயிலரங்குகளை ஏற்பாடு செய்தல்.
  10. மறைக்கல்வி ஆண்டுக்கான செபம், பாடல், இலச்சினை (Emblem), கொடி ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தி தமிழகம் எங்கும் மறைக்கல்வி எழுச்சியை ஏற்படுத்துதல்.
  11. பள்ளிகளில் மறைக்கல்வி சிறப்பாகவும் செம்மையாகவும் நடைபெறுவதைத் தாளாளர்கள் உறுதி செய்தல்.  ஒவ்வொரு பங்கிலும் ஞாயிறு மறைக்கல்வி சிறப்பாக நடைபெறப் பங்குப் பணியாளர்கள் உரிய முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
அன்பார்ந்த இறைமக்களே, நாம் பெற்றுக்கொண்ட நம்பிக்கை வாழ்வின் மேன்மையை உணர்ந்து இந்த மறைக்கல்வி ஆண்டில் சிறப்பாக அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள உறுதி எடுப்போம்.  இதற்காக மேற்கூறப்பட்ட செயல்பாடுகளைத் தனியாகவும் குழுக்களாகவும் சிறப்பாகச் செய்து மறைக்கல்வி மறுமலர்ச்சி வழியாகத் தமிழக இறை மக்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் காண வாழ்த்துகின்றோம்.  இறை அருளை இறைஞ்சுகின்றோம்.  இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.  


பேராயர் ஏ.எம். சின்னப்பா
தலைவர்
தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை
ஆயர் அந்தோணி டிவோட்டா
தலைவர்
தமிழக மறைக்கல்விப் பணிக்குழு

புதிய வழித்தடம் நாமே


பல்வேறு இடர்ப்பாடான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இப்புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்டுள்ளது.  ‘முழு மனித உருவாக்கம்’ பற்றிய சிந்தனைகளோடு நிறை கல்வி தருதல் தேவை என்பதை மையப்படுத்தி கடந்த இதழின் சிந்தனைகள் பகிரப்பட்டன. அத்தகைய உயர்கல்விச் சிந்தனையும் செயல்பாடும் நம் பள்ளிகளில் தொடர வேண்டும் என விழைகிறோம். இந்த உயரிய குறிக்கோளில் எல்லாத் தரப்பு மாணாக்கரும் இணைக்கப்படுகின்றனர். ஆனாலும் நம் தமிழகத் திருச்சபையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘மறைக்கல்வி ஆண்டில்’ நமது கத்தோலிக்க (கிறிஸ்தவ) மாணாக்கரை மட்டுமே முன்னிலைப்படுத்தி, அவர்களை இன்னும் விசுவாசத்தில் உயர்வுபடுத்தும் பணிக்காக அழைக்கப்படுகிறோம். நமது நிறுவனங்களிலும் பங்குகளிலும் உள்ள வாய்ப்புகள், வசதிகள் மற்றும் உரிமைகளைப் பயன்படுத்தி கிறித்தவ வாழ்வின் உறுதிப்பாட்டை நம் தலைமுறையினருக்குத் தர விழைகின்றோம்.  இதன் மூலம் நல்ல இறை யழைப்புக்கான பாதையும் வகுக்கப்படும் என ஆசிக்கிறோம்.
பொதுவாகவே, நமது தலைமுறை பற்றிய ஒரு குறைபாடு மேலோங்கி யுள்ளது. விசுவாசம் குறைந்து, ஆலயங்களுக்கு வருவதில்கூட ஆர்வம் காட்டாமல் உள்ளனர். ஜெப வாழ்வும் குறைகிறது என்பதே அக்குறைபாடு. இரண்டு காரணங்களை முன்னிலைப்படுத்த வேண்டும். ஒன்று, ‘கட்டாயப் படுத்துதல் கூடாது’ என்ற  பின்னணியில் இன்று பிள்ளைகளின் விருப்பத்திற்கே முற்றிலும் இணங்கிச் செல்கிற பெற்றோரின் மனநிலை. பொதுவாகவே ஆன்மீகம், மதம், கடவுள் என்பவையயல்லாம் தேவையற்றவையாக அல்லது கடமைக்காக என்று எண்ணுகிற வயதில் பிள்ளைகளுக்குப் பெற்றோரின் இம்மனநிலை வசதியாகவே அமைந்துவிடுகிறது. இது ஆன்மீகத்தைப் பின்னுக்குத் தள்ளுகிற சூழல்
மற்றொன்று, இறைவார்த்தை அடிப்படையில் உருவாக்கப்படும் சிந்தனை : “தாங்கள் கேள்விப்படாத ஒருவர் மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்று பற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறு வார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்?” (உரோ 10:14-15). பெற்றோரும், திருச்சபையை வழிநடத்துபவர்களும் தம் வார்த்தை யாலும் வாழ்க்கையாலும் எடுத்துக்கூறி இளையோரின் ஆன்மீகப் பயணத்தில் துணை நிற்பது தேவைப்படுகிறது என்பதே மேற்சொன்ன இறைவாக்கு உரைக்கும் உண்மை. சிறார், இளையோர் பின்பற்ற வேண்டிய ஆன்மீகம் பற்றி எடுத்துக் கூறுவோர் எண்ணிக்கை குறைந்து போனதோ என்ற எண்ணம் மேலோங்குகிறது.
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், நற்செய்தி அறிவிப்புப் பற்றிக் கூறும்போதெல்லாம், இன்றைய சமூகத்தில் “இரண்டாம் நற்செய்தி அறிவிப்பு” தேவைப்படுகிறது எனக் கூறுவார். திருமுழுக்குப் பெற்றோரும், இயேசுவை அறிவுப்பூர்வமாக அறிந்தோரும், ஆன்மீகத்தில் வளர முடியாமல், விசுவாசத்தில் உறுதிப்பட முடியாமல் இருக்கும்போது மீண்டும் அவர்களுக்கு இறைச்சிந்தனை உருவாக்கும் அறிவிப்பே இரண்டாம் நற்செய்திப் பணி. இப்பணி இன்று மறைக்கல்வி மற்றும் அது சார்ந்த போதனைகள் மூலம் செய்யப்பட வேண்டும். அதற்கான நபர்கள் இன்று அதிகம் தேவைப்படுகிறார்கள். இந்த மறைக்கல்வி அறிவிப்பாளர்களை இனம் கண்டு அவர்களை இந்த மறைக்கல்வி ஆண்டு ஊக்கப்படுத்தும் என விரும்புகிறோம்.
மற்றொரு அங்கலாய்ப்பும் பெற்றோர் பெரியோரிடையே நிலவுவதை உணர முடிகிறது. “நாம் சொல்லி எந்தப் பிள்ளை கேட்கிறது” என்பதே அந்த அங்கலாய்ப்பு. பெற்றோரின் வார்த்தையைவிட வலுவுள்ளதாய், திருச்சபை கையாளுகிற போதனை முறைகளைவிட சிறப்பானதாய் இன்றைய கலாச்சாரத்தின் வார்த்தைகளும் செயல்பாட்டு முறைகளும் இருக்கின்றன. எனவேதான் நமது அறிவிப்பு பலன் தராமல் போகின்றது. இன்றைய மாணாக்கர்கள் மற்றும் இளையோரை வலுவான முறையில் கவர்ந்திழுத்து உண்மையை உணரச் செய்யும் புதிய வழித்தடங்கள் தேவைப்படுகின்றன. இப்புதிய வழித்தடங்கள் இளையோர் பயன்படுத்தும் நவின கலாச்சாரப் பொருட்களில் மட்டுமல்ல, அவற்றோடு அவற்றிற்கும் மேலான சாட்சிய - உண்மையான - உயர்வான - குறிக்கோளுள்ள - கிறிஸ்தவ வாழ்வை வாழ்ந்து காட்டுவதில் அடங்கியுள்ளது. சொற்களைவிட செயல்பாட்டினால் போதிக்கப்படும் உண்மைகள் - ஆன்மீக வழிமுறைகள் இளையோரைப் பக்குவப்படுத்த, ஆன்மீக வளர்ச்சிப்படுத்த உதவும் என்பதை உணர்வோம். பெற்றோரும், சிறப்பு அழைப்புப் பெற்றோரும் செயல்படுபவர்களாய் மாறுவோம். ஆன்மீக வளர்ச்சிப் பாதை வளருகிற தலைமுறைக்குப் பகிரப்படும்.
மறைக்கல்வி ஆண்டு செயல்பாடுகள் பற்றிய ஆயர்களின் சுற்றறிக்கையும் பிற எழுத்தாளர்களின் மறைக்கல்வி பற்றிய சிந்தனைகளும் இவ்விதழில் தரப்பட்டுள்ளன. சிந்தனைக்கு உட்படுத்திக்கொள்வோம்.
- பணி. சகாய ஜான்