“சந்தோத்தை தவிர எதையுமே அறியாத பருவம். மனம் முழுக்க உற்சாகம். கண் நிறைய கனவுகள். வண்டியில் அமர்ந்தாலோ சிறகை விரித்து பறக்கும் உணர்வு. நண்பர்கள மத்தியில் பேசப்படுபவனாய், நாட்டின் நல்ல குடிமகனாய், பெற்றோர்க்கு நல்ல பிள்ளையாய். பள்ளிக்கு நல்ல மாணவனாய். அன்பு தம்பிக்கு பாசமுள்ள அண்ணனாய் இப்படி எத்தனை முகங்கள் எனக்கு. ஆனா எல்லா முகங்களும் மறைந்து இதயேந்திரன் என்ற முகம் மட்டுமே நிலைத்து விட்டது. என் பெற்றோர்க்கு மட்டுமல்ல. நாடு முழுவதும் பல கோடிக்கணக்கான மக்களுக்கு செல்லப் பிள்ளையானேன்”.
“ஒரே தம்பி. வெளி உலகிற்கு தெரியாத சீண்டல்கள். சண்டைகள் போட்டா போட்டிகள். ஆனா எதிர்பாராம நான் இப்பவும் துடித்துக் கொண்டிருக்கும் பார்வதி என்னும் சின்னத்தங்கையின் உறவு. எந்தப் பிறவியின் புண்ணிய பலன் இது. மரிக்கும் மனிதனால்கூட பலபேரை வாழ வைக்க முடியும் என்னும் அதிசயம். என் கண்களால் பார்க்கிறேன். உடன் உறுப்புகளால் வாழுகிறேன். இதயத்தால் துடிக்கிறேன். ஒருவனாய் பிறந்து எட்டு பேராய் வாழ்கிறேன்”.
“புதுப்புது உறவுகள். ரத்த பந்தமே இல்லாத சொந்தங்கள் மருத்து உலகின் சவாலாய் வாழ்ந்து வருகிறேன். என் பெற்றோர்க்கு ஈடுசெய்ய முடியா இழப்புதான். ஆனால் என்னால் எத்தனை மனிதர்கள் இன்று உயிருடன். அந்த வகையில் நான் படைத்தவனா? காத்தவனா? புரியவில்லை என்னைத் தொடர்ந்து எத்தனைப் பேர் தங்கள் உறவுகளின் பிரிவை பெரிதாய் எண்ணாமல், மூளைச்சாவு அடைந்த வர்களின் உடலை தானம் செய்து அதன் மூலம் பலபேரை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்குப் பார்த்தாலும் அண்ணன் எனக்கு பாசமுள்ள பள்ளி மாணவ மாணவியரின் அஞ்சலிகள். என் படத்தைப் பார்த்தாலே கண்கலங்கும் நல்ல இதயங்கள்!”.
“நான் வசித்த உடம்பு இன்று இல்லாவிட்டாலும் இதயமுள்ள மனிதர் உள்ளவரை நானும் இவ்வுலகில் வாழ்வேன். எவ்வளவு இனிய பிறவி இந்த மானிடப் பிறவி! பந்த பாசங்களால் இணைந்த வாழ்வு. அனுதினமும் இனிமை தரும் சம்பவங்கள், கனவுகளும் கற்பனைகளும் எங்கோ ஒரு உலகில் நம்மை வாழ வைத்தாலும் யாருமே மரணம் என்பதை எண்ணிப் பார்ப்ப தில்லை. காரணம் இறைவன் தந்த இந்த வாழ்வு மகிழ்ச்சியாய் வாழத்தான். என் பெற்றோரும் சாதாரண உணர்வுகளுக்கு இடமளித்திருந்தால் இன்று நான் உங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்க மாட்டேன்”.
“வாலிப பிள்ளைகளே, சகோதர சகோதரிகளே வாலிபம் என்பது ஆண்டவன் அருளிய ஆசீர்வாதம். அந்த வாலிப வயதில் மிகுந்த ஜாக்கிரதையாக வாழ வேண்டும். உடலால் மிகுந்த நிதானம் மிகுந்தவர்களாகவும் மனதால் நன்மை தீமை ஆய்ந்தறிந்து நடப்பவர் களாகவும் இருக்க வேண்டும். பெற்றோர்க்கு கடமை ஆற்றும் பிள்ளைகளாக வாழ வேண்டும். கல்விக் கடனாக நன்மை செய்ய வேண்டும். நம்மை வாழவைத்த தாய் நாட்டிற்கு, நமது சமுதாயத்திற்கு நாமும் நம்மாலான நன்மையை திருப்பி தரவேண்டும். இறைவன் தந்த உடலையும் உயிரையும் பத்திரமாக அவரிடமே ஒப்படைக்க வேண்டும்”.
“எல்லாவற்றிற்கும் மேலாக (இயற்கையாலன்றி செயற்கை ஊனங்களை தவிர்க்க வேண்டும்.) உடலால் ஊனப்பட்டவர்கள் மனதால் ஊனப்பட்டவர்கள் படும் கஷ்டங்களை நினைத்துப் பார்த்து (இறைவன் அளித்த ஊனமற்ற உடலை உயர் பொக்கிமாக போற்றி பாதுகாக்க வேண்டும்). கிடைத்த நல்ல நல்ல வாய்ப்புக்களை முறையாய் பயன்படுத்தினால் இப்பிறவிப் பலனை அடைவோம். அர்த்தமுள்ள வாழ்வு ஆயிரம் நன்மைகள் செய்யும்”.
“நீங்க எல்லாரும் இவ்வுலகில் சந்தோமா, சமாதானமா வாழனும். உங்களுக்கு கிடைத்த வாழ்வை எவ்விதத்திலும் பயனுள்ளதா வாழனும். அப்பத்தான் என் ஆத்துமாவுக்கும் சந்தோம் இருக்கும். எங்க அம்மா அப்பாவுக்கு கடமை செய்ய முடியாத மகனாய், அவங்களை நிராதரவா விட்டுச் சென்ற சோகம் இருந்தாலும், நீங்க எல்லாம் அவங்களுக்கு பக்க பலமா, உறவா இருப்பதில் ஆறுதல். என் இதயம் உங்கள் அன்பில் என்றும் இளைப்பாறும். உங்களுக்காக இறைவனிடம் என்றும் மன்றாடும்”.
இப்படிக்கு
இதயேந்திரனின் இதயம்
- சாந்தி ராபர்ட்ஸ், உதகை