உலக தொழிலாளர்கள் தினம்

இது உழைக்கும் மக்களின் உணர்வுத் திருநாள்.  ஒவ்வொரு நாளும்  16 மணி நேரத்துக்கும் அதிகமாக ஓய்வு ஒழிச்சலின்றி நோய் நொடிக்கு ஆளாகி, கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளான தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, 8 மணி நேர தூக்கம் என்ற கோரிக்கைகளை முன் வைத்துப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.
அமெரிக்காவின் சிகாகோ நகரத் தொழிலாளர்கள் 1886ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி அன்று ஹே மார்க்கெட் சதுக்கத்தில் கூடினார்கள்.  முன்னதாக மே முதல் தேதி அன்று அமெரிக்காவின் மிகப்பெரும் தொழில் மையங்களில் மாபெரும் பொது வேலை நிறுத்தம் தொடங்கியது.  அந்த  வேலை நிறுத்தத்தின் நோக்கம், வேலை நேரம் 8 மணி நேரமாக இருக்க வேண்டும்.  வேலை நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதுதான்.
இந்த வேலை நிறுத்தம் நாடு முழுவதும் பரவியிருந்தது.  வேலை நிறுத்தத்தைத் தோல்வியுறச் செய்ய அமெரிக்க அதிகாரிகள் பலவகையான ஆத்திர மூட்டல்களில் ஈடுபட்டனர்.
மே 4‡ஆம் தேதி ஹே மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.  அதில் ஒரு குண்டு வெடித்தது.
தொழிலாளர்கள் மீதும், தொழிலாளர் தலைவர்கள் மீதும் அடக்குமுறை ஏவிவிடப்பட்டது.  இந்த அடக்குமுறை சிகாகோவில் மட்டுமின்றி அமெரிக்கா முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டது.
நூற்றுக்கணக்கில்  தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.   சிகாகோ கூட்ட நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய 8 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டது.  அவர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஹே மார்க்கெட் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படா விட்டாலும்கூட அவர்களுக்கு அமெரிக்க அரசு மரண தண்டனை விதித்தது.  ஒவ்வொருவருக்கும் 15 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.
தொழிலாளர்களை அச்சுறுத்த வேண்டும் என்பதுதான் இத்தகைய தண்டனை களின் முக்கிய நோக்கமாக இருந்தது.
இந்தத்  தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதிலும் இருந்து தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.  அமெரிக்கா உலகத் தொழிலாளர்களின் உணர்வுக்கு மதிப்புத் தரவில்லை.
இரண்டு பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.  லிங் என்பவர் சிறையிலேயே மரணம் அடைந்தார்.  பார்சன்ஸ், ஸ்பைஸ், எங்கெல், ஃபி­ர் ஆகிய நான்கு பேரும் தூக்கிலிடப்பட்டனர்.  1887 நவம்பர் 11ஆம் தேதி இந்தத் தூக்குத் தண்டனை நிறை வேற்றப்பட்டது.
ஹே மார்க்கெட்டில் அமைதியான தொழிலாளர் கூட்டத்தில் குண்டு வெடிக்கச் செய்து, போலீசார் பொய் வழக்கு ஜோடித்த இந்தச் சம்பவம் ஹே மார்க்கெட் சம்பவம் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
இதில் தண்டிக்கப்பட்டவர்கள் சிகாகோ தியாகிகள் என்ற புகழுக்கு உரியவர்களாயினர்.  இச்சம்பவம் உலகம் முழுவதும் எதிரொலித்தது.
1889ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற இரண்டாவது அகிலத்தின் முதல் மாநாட்டில், குறிப்பிட்ட ஒரே நாளில் உலகம் முழுவதும் தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
1890ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மே முதல் தேதியிலும் உலகத் தொழிலாளி வர்க்கம் மே தின ஆர்ப் பாட்டங்களை, பேரணிகளை, பொதுக் கூட்டங்களை நடத்தத் தொடங்கியது.
இந்த உரிமைப் போராட்டங்கள் இன்றி, தியாகங்கள் இன்றி, இன்றைய தொழிலாளர் உரிமைகளை நினைத்துப் பார்க்கவே முடியாது.  மே தினக் கொண்டாட்டத்தின் மூலம் இழந்த உரிமைகளைப் பாதுகாக்கும் விழிப் புணர்வு மேலோங்கும்.  சாதியாய், மதமாய்ப் பிரிந்து கிடக்கும் தொழிலாளிகள் ஒரு வர்க்கமாய் ஒன்று திரள இக்கொண்டாட்டம் அவசியமாகும்.
- தமிழ்க்கவி

0 comments:

Post a Comment