அர்ப்பணிப்பு - ஏன் இந்த அவலங்கள்?

குருத்துவத்தின் வரலாற்று வடிங்களை வகைப்படுத்தும் நேரத்தில், இன்று தொடர்பு ஊடகங்களால் பெரிது படுத்தப்படும் குருக்களின் பாலியல் தொடர்பான குற்றங்களை நாம் ஒதுக்கி வைத்துவிட முடியாது.  குருத்துவ அழைத்தலை இந்தத் தவறுகள் பெரிதும் பாதிக்கின்றன.  ஒட்டுமொத்தமாக அத்தனை குருக்கள் மீதும் அவதூறு பழிகள் சுமத்தப் படுகின்றன.  கத்தோலிக்கத் திருச்சபையையும் அதன் புனிதமான நிலைகளையும் மிகக் கீழ்த்தரமாக சில ‘மீடியா’க்கள் விமர்சிக்கின்றன.
இவையெல்லாம் நடக்கவில்லை என்று மறுக்கவோ அல்லது மறைக்கவோ திருச்சபை விரும்பவில்லை.  இத்தகைய தவறுகளால் எத்தனையோ உள்ளங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.  அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எத்தனையோ கத்தோலிக்கக் கிறித்தவர்கள் கோபமும் குற்ற உணர்வும் கொண்டு வருந்து கின்றனர்.  அவர்களையெல்லாம் கரிசனையோடு நோக்குகிறது திருச்சபை.
இவற்றிற்கு என்ன காரணம்?  எங்கே தவறு நடந்தது?  குற்றவாளிகளை எப்படி தண்டிக்கலாம்?  இத்தகைய பதர்களை அடியோடு எப்படி வேரறுப்பது?  என்ற சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் திருச்சபைத் தலைவர்கள்  மிக வருத்தத் தோடும் சகிப்புத்தன்மையோடும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
என்ன காரணங்கள்?
இந்தத் தவறுகளை நாம் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட சமூக மாற்றத்தின்  அடிப்படையால்தான் நோக்க வேண்டும்.  கி.பி.1960 அல்லது 70 ஆண்டுகளில் சுதந்திரம், மனித உணர்வுகளை மதித்தல் என்ற பெயரில் பல இயற்கைக்கு மாறான வாழ்க்கை முறைகள் சமுதாயத்தில் வந்தன.  ஓரினத் திருமணங்களும், விவாகரத்துக்களும், கருக்கலைப்பு உத்திகளும் அரசாங்கங் களால் அங்கீகரிக்கப்படும் நிலைக்குச் சென்றன.   இவை திருச்சபை உறுப்பினர் களையும் வெகுவாகப் பாதித்தன.
கத்தோலிக்கத் திருச்சபையால் இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின் ஏற்பட்ட சுதந்திர அலைகள், தனிநபர் உணர்வுகளையும் உரிமைகளையும் மதித்தல் போன்ற நல்ல பண்புகள் சிலரால் தவறாகப் பயன்படுத்தப்பட்டன.  தவறுகள் நடந்தபோது அவற்றைச் சுட்டிக்காட்டி, திருத்தும் தைரியம் சில திருச்சபைத் தலைவர்களுக்கு இல்லாது போனது.  தனி  நபரின் வாழ்க்கையில் தலையிட உரிமையில்லை என்ற பொதுவான விதியின் அடிப்படையில் தவறுகள் மறைக்கப்பட்டன.
1990களில் பெரிய தவறுகள் நடந்து விட்டதாக உணர்ந்து குருத்துவப் பயிற்சியில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று  திருச்சபை ஆதங்கப்பட்டது.  குரு மாணவர்களைத் தேர்ந்தெடுத்தல், பயிற்சி தருதல், பணிக்கு அனுப்புதல் போன்றவை குறித்த ஆய்வுகள் திருச்சபையில் உள்ள அத்தனை குருமடங்களிலும் நடத்தப் பட்டு அரிய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.
அழைத்தலில் பாதிப்பு இல்லை
இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குருத்துவம் குறித்த புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது.  ஏராளமான இளைஞர்கள் குருத்துவக் கல்லூரிகளுக்கு வருகின்றனர்.  நான் பணியாற்றும் மறை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒன்பது பேர் குருத்துவத் திருநிலைப்பாடு பெற்றனர்.
அவர்களிடம் குருக்கள் பற்றிய பாலியல் புகார்கள் பற்றிக் கேட்டபோது, இருபது முப்பது வருடங்களுக்கு முன் ஏற்பட்ட விபரீதம் இது.  இன்று திருச்சபையில் நிலைகள் மாறிவிட்டன.  மிக நல்ல குருக்களைத்தான் எங்கள் வாழ்க்கையில் சந்திக்கிறோம் என்று பதில் கூறுகின்றனர்.
வரலாறு தரும் பாடங்கள்
வரலாற்றில் இது போன்ற தவறுகளும் அவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளும் பல்வேறு கால கட்டங்களில் நிகழ்ந்திருக்கின்றன.  மத்திய காலங்களில் ஒரு சில குருக்களின் முறைகேடான வாழ்க்கை திருச்சபையில் பிளவுகளும் பிணக்குகளும் ஏற்படக் காரணமாக இருந்திருக்கின்றன.  திருச்சபை விழித்தெழுந்து செயலாற்றி தவறுகளைச் சரி செய்தது.  எந்தவொரு சமுதாய அமைப்பிலும் சில தவறுகள் நிகழ்வது நடைமுறையே!  ஆனால் தவறுகளை எந்தவிதத்திலும் நியாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.  தவறுகளைத் தாழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு களைய முயல்வதுதான் இறைவன் காட்டும் வழி.
மனித பலவீனங்களைச் சுட்டிக் காட்டி புதிய வழிகளைக் காட்டுவது விவிலிய இறைவனின் விசித்திரமான செயல்.  திருச்சபை வரலாற்றில் இவைதான் நிகழ்ந்திருக்கின்றன.  தவறுகளுக்காகக் கூனிக்குறுகி நிற்கும் திருச்சபை, இத்தகைய தவறுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக தீவிரமான செயல்பாடுகளில் இறங்கியுள்ளது.
மணத் துறவு தேவையா?
இந்தத் தவறுகளைக் கண்டு குமுறும் சிலர், குருக்களுக்கு மணத்துறவு தேவை தானா?  என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.
மணத்துறவு இறைவன் தருகின்ற சிறந்த கொடை.  ஒரு சிலர் தவறு செய்வதன் காரணமாக மணத்துறவைக் குருக்களிட மிருந்து  எடுத்துவிட வேண்டும் என்று சொல்வது சரியான வாதமல்ல.  கடந்த இரண்டாயிரம் ஆண்டு காலமாக, இறைவன் மணத்துறவு என்ற கொடையைக் குருக்களுக்கு வழங்கி அவர்கள் வாழ்வுக்கு ஒளியூட்டிக் கொண்டு இருக்கிறார்.
மணத்துறவில் இறையாட்சிப் பணி செய்யும் அற்புதமான இறையாற்றலைக் கத்தோலிக்கத் திருச்சபை கொடையாகப்  பெற்றுள்ளது.  எந்தச் சூழலிலும்  இந்தக் கொடையை இழப்பதற்குத் திருச்சபை தயாராக இல்லை.
மணத்துறவு என்ற இறைக் கொடையைப் பேணி வளர்ப்பதில் திருச்சபை முழுவதும் பங்கேற்க வேண்டும்.  குடும்பத்தில் பெற்றோர் இந்தக் கொடையைப் பெற்ற தங்கள் பிள்ளைகளை வழிநடத்தவேண்டும்.  திருச்சபை சமுதாயத்தில் இந்தக் கொடையைப் பெற்ற மாணவர்களையும் பணியாளர்களையும் பக்குவமாக வளர்ப்பதற்கு ஆவண செய்யவேண்டும்.  ஆயர்களும்,. சபைத் தலைவர்களும் இத்தகைய கொடைகள் பெற்றவரை மதித்து, தவறுகளைச் சுட்டிக்காட்டி, தந்தைக்குரிய அன்போடு வழிநடத்த வேண்டும்.
இத்தகைய ‘மீடியாக்களின் அவதூறுகள்’ திருச்சபை முழுமைக்கும் ஏற்பட்டிருக்கும் சவால்கள்.  அனைவரும் இணைந்து குருத்துவ வாழ்வின் நிலையை உயர்த்த, உருமாற்ற உதவ வேண்டும் என்பதே வரலாறு நமக்கு விடுக்கும் அழைப்பு.
    (தொடரும்)
அருள்பணி. வலன்டின்

0 comments:

Post a Comment