சில முகாம்களுக்கு நேரடியாக சென்று வந்தேன்; பலரிடம் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு விசாரித்தேன். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது என்ற உணர்வும், இன்னும் சற்று அதிக நபர்கள் முகாம்களில் கலந்திருந்தால் நலமாக இருந்திருக்குமே என்ற எண்ணமும் வெளிப்படுகின்றன. முகாம்களுக்கு இத்தனை நபர்கள் வந்திருந்தாலும் +2, 10‡ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்த பின் இறுதி எண்ணிக்கை எவ்வளவாக இருக்குமோ என்ற ஏக்கமும் நமக்கு இருக்கிறது. எப்படியாயினும் அழைத்தவர் தாம் குறித்து வைக்கிறவர்களைக் கூட்டிச் சேர்ப்பார் என்ற நம்பிக்கை உண்டு. எண்ணிக்கை பெரிதா? சிறிதா? என்பதைவிட வந்து சேர்வோரின் தன்மைகளும் அர்ப்பணமுமே கவனத்தில் அதிகம் கொள்ள வேண்டி யுள்ளது. “ஏதோ சேர்வோம் ‡ படிப்போம் ‡ முடிந்தால் இருப்போம். இல்லையயன்றால் வந்துவிடுவோம்” என்ற எண்ணத்தில் உள்ளோர் பெரிதாய் இருக்காமல், “உறுதியோடு செல்கிறேன் ‡ சவால்களைச் சந்தித்து சிறப்பாகச் செயல்படுவேன் ‡ கடவுள் எனக்குள் செயலாற்றட்டும்” என்னும் உள் உணர்வுகளோடு வருவோரையே பெரிதாய் ஏற்போம்.
இறையழைத்தலை ஊக்குவித்த வர்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிப்போம். குருக்கள், துறவிகள், பொதுநிலையினர், பெற்றோர் என்று எல்லாத் தரப்பினருமே இறையழைத்தலுக்காக உழைக்கிறார்கள். சில இடங்களில் பொதுநிலையினரும் மாணாக்கரை முகாம்களுக்கு ஊக்குவித்திருக் கிறார்கள் என்பது மகிழ்ச்சி தருகிறது. நம் பணியில் குருக்கள், துறவிகள் மட்டும் கலந்து விடவில்லை. மாறாக பொது நிலையினரும் இப்போது சிறப்பிடம் வகிக்கிறார்கள் என்பது பெருமைக்குரியதே.
தமது அழைத்தல் குறித்துக் குழம்பிப்போன நிலையில் தனது வாழ்வு பற்றிய தெளிவைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு மாணவர் என்னைச் சந்தித்தார். தமது அழைத்தலைப் பற்றிப் பெற்றோரிடம் பேசும்போது சில சமயங்களில் “சரி” என்றும் வேறு சில நேரங்களில் “வேண்டாம்” என்றும் கூறும் பெற்றோரின் பதில்களால் குழம்பிப்போய் இருப்பார். அதோடு இறைபணி ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறவர் கூறிய வார்த்தை மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது: “நானே இங்கு கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். நீயும் வந்து துன்பப் படப் போகிறாயா?” என்றவரின் வார்த்தைகள் மேலும் குழப்பத்தை உருவாக்கியதாகப் பேசினார்.
இறையழைத்தல் வாரம் / ஞாயிறு கொண்டாட்டம், முகாம்கள் என்று பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து மாணாக்கரை ஊக்குவிக்கும் பணியாளர்களில் இன்னும் சிலர் தமது அழைப்பின் மேன்மையை உணர வேண்டியுள்ளது. குருத்துவ மற்றும் துறவற வாழ்வை இனிமையான ஒன்றாகப் பார்க்காமல் சுமையாகக் கருதுவோர் தமது அழைத்தல் வாழ்வைச் சுவையான ஒன்றாகக் கருதி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது மட்டுமே எல்லோரும் இறை யழைத்தலை ஊக்குவிக்க முடியும். ஒரு சிலர் மூலமாகவே முட்டுக் கட்டைகள் இடப்பட்டால் இதற்காக உழைக்கும் பலரின் உழைப்பு வீணாகும்.
“என்னதான் இறையழைத்தல் பற்றி அறிவிப்பு கொடுத்தாலும், பேசினாலும், விளம்பரங்கள் தந்தாலும் இக்கால மாணாக்கர் துறவறத்துக்கு வர முன்வர வில்லையே” என்ற ஏக்கங்கள் பலடமிருந்து வெளிப்படுகின்றன. சில நாட்களுக்கு முன்பு ஒரு துறவற இல்லத்தில் அழைப்பு பற்றிப் பேசினேன் பின்பு கலந்துரையாடல் வேளையில் ஒரு சகோதரி, “தமிழக இறையழைத்தல் பணிக்குழு தமது கூட்டங்களில் முகாம்கள் நடத்துவதற்கான பல்வேறு செயல்பாடுகள், வழிமுறைகள் சொல்லித் தருவதை விடவும், ஒவ்வொருவரும் எப்படி சாட்சிய வாழ்வு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்” எனக் கூறினார். மகிழ்ச்சியான செய்தி. ஏற்கனவே இக்கருத்து பல முறைகளில், பல கூட்டங்களில் வலியுறுத்தப் பட்டுள்ளது. ஆனால் இக்கருத்து கூறப் பட்டாலும் அது ஒவ்வொருவரின் மனச்சாட்சியோடு, தற்கை யளிப்போடு, தனிப்பட்ட சிந்தனைத் தெளிவோடு இணைந்துள்ளது. மனநிலை மாற்றம் தேவை எனச் சொல்லலாம்; கருத்துக்கள் பகிரப்படலாம். ஆனால் இறுதியான செயல்பாடு ஒவ்வொருவரின் தனிப்பட்ட உறுதிப்பாட்டைச் சார்ந்தது. ஒவ்வொரு இறைப்பணியாளரும் நிறைமனநிலை பெற வேண்டும் என்றே விரும்புகிறோம். இச்சாட்சிய வாழ்வே பலரைக் கவர்ந்து, நல்லவர்களை உருவாக்கும். சொற்களைவிட செயல்கள் இறையழைத்தலை உருவாக்கும். இக்கடமை எல்லாப் பணியாளருக்கும் உரியது.
எனவே அனைவரின் நல் முயற்சியோடும், சிந்தனையோடும் வாழ்வோடும் இறையழைத்தல் பணி சிறக்க வாழ்த்துகிறேன். இறை குரலுக்குச் செவிமடுக்கும் உள்ளங்கள் பெருக ஜெபிக்கிறேன். அவர்களை இனம் கண்டு பணிக்கு அழைக்கும் இறையழைத்தல் ஊக்குநர்களின் உழைப்பு மேன்மைப்பட
பாராட்டுகிறேன்.
சே. சகாய ஜாண்
0 comments:
Post a Comment