ஆன்மீகம்

புனித தொன்போஸ்கோ (1815-1888) குருத்துவ மாணவராய்ச் செல்லும் சமயத்தில் அவரின் தாயார் மார்கரேட் தன் மகன் தொன்போஸ்கோவை மண்டியிட வைத்து ஆசீர்வதித்து அனுப்பினார்கள்.
புனித தொன்போஸ்கோ மண்டியிட்டு தன் தாயின் ஆசீர் பெறும் வேளையில் அவர்கள் இவ்வாறு தன் மகனுக்கு அறிவுரை கூறினார்கள்.   “தொன்போஸ்கோ, நீ ஆண்டவர் இயேசுவின் இறைப் பணியைச் செய்யப் போகிறாய்.  இந்த இறைப்பணியின் புனிதத் தன்மைக்கு உன்னால் களங்கம் வராமல் பரிசுத்தமாய் நடந்து கொள்.  நீ அணிய இருக்கும் திருவுடை புனிதமாய் இருக்க உன் தூய்மையைக் காத்துக் கொள்.
உன் நெறி தவறிய வாழ்வினால் இக்குருத்துவத்திற்கும் களங்கம் ஏற்படுத்து வாயயனில் அதற்கு முன்பே வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடு.  வந்து விவசாயம் செய்.  நீ கெட்ட குருவானவர் எனப் பெயர் எடுப்பதை விட நல்ல விவசாயி என்று பெயர் பெறுவது நல்லது.  மாதாவின்மீது பக்தி கொண்டிரு.  மாதாவின் பக்தியை உலகில் பரவச் செய் ” என்றார்கள்.
புனித தொன்போஸ்கோ தன் தாயின் சொற்படியே நடந்தார்.  புனித குருவாய் வாழ்ந்து காண்பித்தார்.  தன் தாயைத் தனக்குப் பணி செய்கிறவராய் வைத்துக் கொண்டார்.  தன் தாயின் வாழ்வும், அவரின் பிறர் நேசமும், இறைப்பற்றும், தூய்மை வாழ்வும் இவரைப் புனிதமாய் வாழ நெறிப்படுத்தின.  கைவிடப்பட்டு, ஆதரவற்ற சிறுவர்களை அழைத்து அன்பு இல்லம் அமைத்து வாழ்வின் ஒளியாய்த் திகழ்ந்தார்:  சலேசிய சபையை உருவாக்கினார்.  அவரின் ஆன்மீக சிறுவனும், மாணவருமாய் இருந்த புனித தோமினிக் சாவியோ, திருச்சபையில் இன்னொரு புனிதராய் விளங்க புனித தொன்போஸ்கோவின் புனிதமே காரணமாய் இருந்தது.
ஆண்டவர் இயேசுவையும் கவர்ந்து மிக உயர்வாய்க் கருதப்படுபவர் ஒருவர் இருக்கிறாரென்றால் அவர் திருமுழுக்கு யோவானே.  அவரைக் குறித்து ஆண்டவர் இயேசு இவ்வாறு குறிப்பிடுகிறார்.  “இறைவாக்கினருக்கும் மேலானவர். பெண்களிடம் பிறந்தவர்களுள் யோவானுக்கு மேலானவர் யாருமில்லை”  (லூக் 7:24-25).
ஆண்டவர் இயேசுவே மிகவும் மதித்து போற்றப்படக்கூடியவராக இருந்தவர் புனித திருமுழுக்கு யோவானே.  இயேசுவின் உள்ளத்தையும் கவர்ந்த அவரின் நற்பண்புகள் என்ன?
இயேசுவின் வருகைக்கு மக்களை ஆயத்தம் செய்ய இறைவனால் முன்னோடியாக அனுப்பப்பட்டவர்தான் புனித யோவான்.  “இதோ! என் தூதரை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்.  அவர் உமக்கு முன் உமது வழியை ஆயத்தம் செய்வார்”  (மத் 11:10; லூக் 7:27; ஏசா 40:3-4) என்ற இறைவாக்கின்படியே தாயின் வயிற்றிலிருந்தபோதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு இயேசுவின் பிரசன்னத்தில் மகிழ்கிறவராகவே காணப்படுகிறார் (லூக் 1:41, 47).
இறைப்பணியைத் தொடங்குவதற்கு முன்பாக தம்மை ஆயத்தம் செய்ய, இறைப்பணிக்குத் தகுதியுடையவராய் மாற்றிக் கொள்ள 30 ஆண்டு காலம் தவமுனிவரைப் போல் வாழ்வு நடத்துகிறார்.
பரிசுத்த ஆவியின் வல்லமையால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டவராய் அவரிடம் வந்தவர்களுக்கு மனம் திரும்பும் இறைவார்த்தையை வல்லமையோடு அறிவிக்கிறார்.  அவரின் இறைவார்த்தையில்  இருந்த கூர்மை கேட்போரின் உள்ளங்களை ஊடுருவிப் பாய்கிறது.  அவரின் வார்த்தையால் உள்ளம் குத்துண்டவர்களாய் மனம் திரும்பி புதிய  வழ்வின் அடையாளமாய்த்  திருமுழுக்குப் பெறுகிறார்கள்.
இயேசுவுக்கே ஞானஸ்நானம் அருளும் பாக்கியத்தைப் பெற்று பரம  தந்தையின் குரலைக் கேட்கவும் பரிசுத்த ஆவி புலப்படும் வடிவெடுத்து அவர் மீது தங்குவதையும் காணும் பேறு பெறுகிறார் (மாற் 3:9-11).
ஆனால் இயேசுவுக்குமுன் தம்மையே தாழ்த்தி ஓர் அடிமையின் நிலைக்கு உட்படுத்திப் பேசுகிறார் “அவருடைய மிதியடி வாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன்” என்கிறார் (லூக் 3:16).  கடைசியில் இயேசுவின் உத்தம ஊழியராய் வேதசாட்சியாகவே மரிக்கிறார் (மத் 14:3-12).
நான் பல வருடங்களுக்கு முன்பு கிராமப்புறப் பங்கில் இறைப்பணி ஆற்றிக் கொண்டிருந்தேன்.  அடுத்த பங்கில் முதிர் வயது அருட்தந்தை ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.  ஜெபப்பற்றும், மனித நேயமும், பிறர் மீது அக்கறையும் கொண்டு இறைஅன்பில் நிறைந்து பணி செய்து கொண்டிருந்தார்.  பல நாட்கள் என்னை அவர் இல்லத்திற்கு அழைத்ததினால் ஒரு நாள் அவரைக் காணச் சென்றேன்.  அவர் பங்கில் நுழைவது அதுதான் முதல் தடவை.
ஊரின் கடைசியில்தான் தேவாலயமும் அவரின் அறையும் இருக்கின்றன.  பஸ்ஸை விட்டு இறங்கி நீண்ட தெருவின் வழியாகக் கடந்துதான் அவரின் இல்லம் செல்லமுடியும்.
அவ்வாறு சென்றபோது அத்தெருவில் உள்ள அனைவருமே என்னை விசாரித்து விசாரித்து அனுப்பினார்கள்.  அனைத்தையும் கடந்து அவரிடம் சென்று இதுபற்றிக் கூறியபோது அவர் கூறினார்  “சுவாமி இது நல்லது.  ஏனெனில் எந்த ஒரு பெண்ணும் நம்மைப் பார்க்க எளிதாக வந்துவிட முடியாதல்லவா?” என்றார்.  அவரின் வார்த்தை அவரின் பரிசுத்த நிலையை உணர்த்தியது.  நம் வாழ்விலும் நாம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான வாழ்வாய் வாழ்ந்து காண்பிப்போம்.  ஆமென்.

0 comments:

Post a Comment