மறைமாவட்ட வழிக்காட்டும் குழு - இன்றைய குருத்துவம்


குருகுலத்தாரிடம் மக்கள் எதிர்பார்ப்பதற்கும் குருக்களின் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க குருக்கள் ஆண்டில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எவை? என்கிற கேள்விக்கான விடையைத் தேடியபொழுது குருக்கள் முதலில் தாங்கள் இருக்கும் நிலையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு அதற்காக வருந்துவதே மாற்றத்திற்கான முதல் படியாக அமைய முடியும் எனச் சென்ற இதழில் சுட்டியிருந்தோம்.  இது தனிப்பட்ட அளவில் ஒவ்வொரு குருவானவரிடமும் ஒரு சுய தேடலாகவோ, தியானங்கள் வழியாகவோ நடைபெற வேண்டும்.  நடைபெறுவதற்கான வாய்ப்பு களை அதிக அளவில் இவ்வாண்டில் மறைமாவட்ட நிர்வாகமோ அல்லது குருக்கள் பேரவையோ ஏற்படுத்தித்தர வேண்டும்.  அதுவே குருக்கள் ஆண்டில் அர்த்தமுள்ள பணியாக அமையும்.
அடுத்ததாக, ஒரு குருவின் தனிப் பட்ட வாழ்விலோ அல்லது பணிப் பொறுப்பிலோ பிரச்சனைகள் உருவாகும் பொழுது அப்பிரச்சனை பத்திரிக்கை களிலோ அல்லது ஊடகங்களிலோ வந்து சந்தி சிரிக்கும்வரை  அதைப்பற்றிச் சிறிதும் அக்கறை செலுத்தாமல் ஒவ்வொருவரும் நமக்கென்ன? எனக் கண்டு கொள்ளாமல் இருக்கும் இன்றைய நிலையை மாற்றிட வேண்டும். மாறாக அப்பிரச்சனையை ஆரம்பத்திலேயே அரசல்புரசலாக அறியவரும் காலத்திலேயே அது குறித்து விபரம் திரட்டி விசாரணை செய்து வழிகாட்டிட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.   இதனால் பிரச்சனைக் குள்ளாகும் குருக்கள் மற்றும் மக்கள் மன வேதனையுற்று  விரக்தியின் விளிம்பிற்கே செல்லும் வினோதங்கள் விடைபெறும்.  திருச்சபையை விட்டே வெளியேறும் மக்களும் பணிவாழ்விலிருந்து விடைபெறும் குருக்களும் இதனால் இல்லாமல் போவர்.
எனவே குருக்களின் பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்யவும், வழி காட்டவும் மறைமாவட்ட வழிகாட்டும் குழு  மறை மாவட்டந்தோறும் அமைக்கப்பட வேண்டும்.
குருக்களின் பணி வாழ்வில் பிரச்சனைகள், சச்சரவுகள், சங்கடங்கள் ஏற்படும்பொழுதெல்லாம் இக்குழு தலத்திற்குச் சென்று ஆய்வு செய்து உண்மை நிலையைக் கண்டறிந்து தம் ஆய்வறிக்கையை ஆயரிடம் சமர்ப்பித்து ஆயருக்கு உதவிடவும், ஆலோசனை நல்கிடவும் வேண்டும்.  அதற்கு அனைவரும் உட்பட்டு நடந்திடவும் வேண்டும்.
மேலும் குருக்கள் தம் பணிகளை முறையாகச் செய்திடவும் இக்குழு வழிகாட்டிட வேண்டும்.  உதாரணமாக ஒரு குரு தம் பங்கில் பங்குப் பேரவை, பங்கு நிதிக்குழு போன்ற மக்களின் அமைப்புகளை பெயர ளவிலோ அல்லது அதற்குரிய வகையிலோ அமைத்துக் கொள்ளாது உண்மையான, நேரிய சிந்தனையில் அமைத்து தம் பங்குப் பணியினைத் தல மக்களுக்கும் பகிர்ந்து கொடுத்து சீரிய வழியில் செயல்படுகிறாரா? என்பதைக் கண்டறிவது, அப்படியில்லாத பொழுது அதற்குரிய கால அவகாசம் கொடுத்து செயல்படுத்திட தூண்டுவது போன்ற ஆக்கப்பூர்வ மக்கள் நல செயல்பாடுகளில் இக்குழு வழிகாட்டிட வேண்டும்.
சுருங்கக் கூறின் ஒரு குருவான வரால் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு பணியும், செயல்பாடும் மக்களுக்காக, மக்களின் நலத்தை மையப்படுத்தியே இருக்கும்படி பார்த்துக் கொள்வதில் இக்குழு முணைப்பாகச் செயல்பட வேண்டும்.  தனி மனிதனின் விருப்பு வெறுப்புகளைவிட மக்கள் நலம் ஒன்றே பெரிதாகக் கருதப்பட வேண்டும்.
இக்குழு வழக்கம் போல் குருக்களின் பிரதிநிதிகளை மட்டுமே கொண்ட குழுவாக அமையாமல், திருச்சபையின் வளர்ச்சியில் அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்ட ஆன்மீக தேடல் உள்ள, படித்த அல்லது விபரமறிந்த திருச்சபையின் அடிக்கல்லாக நின்று அதனைத் தாங்கிடும் பொது நிலையினர் பிரதிநிதிகளையும், துறவிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் அக்குழுவில் திருச்சபையின் அதிக விழுக்காடு எண்ணிக்கை கொண்ட பொது நிலையினர் பிரதிநிதிகள் ஆறு நபர்களும் மறைமாவட்ட குருக்கள் மற்றும் துறவிகளின் பிரதிநிதிகள் தலா மூன்று நபர்களையும் கொண்ட 12 நபர்கள் இடம்பெற்று 5 வருடக் காலத்திற்கு ஒரு முறை இக்குழு உறுப்பினர்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
இக்குழுவின் ஆலோசனையை ஏற்று திருச்சபையின் மறைமாவட்ட நிர்வாகம் முடிந்தவரை செயல்படவேண்டும்.  இக்குழுவின் ஆலோசனையை ஏற்க முடியாத சூழல் ஏற்படும்பொழுது மறை மாவட்ட ஆயர் தமது “வீட்டோ” அதிகாரத்தால் அதனை நிறுத்தி வைக்கலாம்.  ஆனால் தாம் எத்தகைய சூழலில், எதன் அடிப்படையில் இத்தகைய முடிவை எடுக்க நேரிட்டது என்பதைத் தன் மறைமாவட்ட மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் அவசியமாகத் தேவைப்படுகிறது.
சமூகப் பிராணியான மனிதன் தன் வாழ்க்கை ஓட்டத்தில் தடம் புரண்ட தருணங்களிலும், தடுமாறிய நேரங்களிலும் சமூகத்தைப் பாதிப்பிலிருந்து காப்பாற்ற விரும்பி சில நியமனங்களையும் விதிகளையும் வகுத்து வாழ்ந்து வருவதே வரலாறாக இருக்கிறது.  அதுவே தனி மனிதர்களின் தான்தோன்றித்தன நடவடிக்கைகளுக்குத் தடையை ஏற்படுத்தி சமூகத்தினை நாகரீக வழியில் நடத்தி வருகிறது.
அந்த வகையில் ஒரு சமூகத்தின் ஆன்மீக வழிகாட்டிகளான குருக்கள் அவர்தம் வாழ்வில் தடுமாற்றத்தையும், தடம்புரளுதலையும் தாராளமாய்க் காண்கின்ற நேரத்தில் தாமாகவே முன் வந்து தம்மை நெறிப்படுத்த இத்தகைய நியமனங்களையும் விதிகளையும் உருவாக்குவது, குழுக்களை அமைத்து அதற்குத் தம்மை உட்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதே தர்மம்.  இதுவே தகுதியும் நீதியுமாகும்.  மீடப்புக்குரிய செயலுமாகும்.  அதற்கு இந்தக் குருக்கள் ஆண்டு உதவி புரியட்டும்.
எஸ். எரோணிமுஸ்,

0 comments:

Post a Comment