முனிவர் ஒருவர் ஓர் கிராமத்தின் வழியே செல்கிறார். மாலையாகிவிட்டது. அயர்வும் சோர்வும் சேர கிராமத்தின் விளிம்பில் இருந்த வயல்வெளியிலேயே வரப்பின் மீது தலை சாய்த்தவராகப் படுத்து உறங்கிவிடுகிறார். அந்த வழியே கிராமத்தின் குளம் இருப்பதினால் தண்ணீர் மொள்ள ஐந்தாறு பெண்கள் போய்க்கொண்டிருந்தனர். முனிவர் உறங்குவதைப் பார்த்த அப்பெண்களில் வாயாடி ஒருவர் “இந்த சாமியார் எல்லாவற்றையும் துறந்து விட்டேன் என்று வாழ்கிறார். ஆனால் தலையணை வைத்து தூங்கும் வழக்கத்தை மட்டும் விட்டுடலை பாருங்களேன்” என்று போகிற போக்கில் சொல்லிக்கொண்டு போகிறார். இந்தப் பேச்சைக் கேட்ட சுவாமிகள் தனது நிலையை நொந்து வரப்பிலிருந்து தலையை விலக்கி வயலிலேயே சமமாகப் படுத்துவிடுகிறார். தண்ணீர் மொண்டு திரும்பி வருகையில் குருவில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்டு இன்னொரு வாயடிக்கும் பெண் “எல்லாத்தையும் துறந்துவிட்டேன்னு சொல்லறாங்க; இந்த ஒட்டு கேட்கிற பழக்கம் மட்டும் போகலையே!” என்று சொல்ல அனைவரும் சிரித்துக் கொண்டே போய்விடுகின்றனர். குருவிற்குத் தர்ம சங்கடம் . . . என்ன செய்தாலும் இவர்கள் விமர்சிக்கிறார்களே! என்று.
இப்படித்தான் இந்த உலகம்; குரு பொது வாழ்வை மேற்கொள்கிறார் என்று தெரிந்தும், இறை மனிதன் என்று தெரிந்தும் திருத்தந்தை முதல் பங்குக் குரு வரை மிகவும் விமர்சனக் கண்ணோட்டத்தோடும், வாய்க்கு வந்தபடி தரமில்லாமலும் பேசுவதும் நடைமுறை, மனதிற்கு வருத்தமா யிருந்தாலும், குருக்கள் ஆண்டாக இந்த ஆண்டைக் கொண்டாடும் தருணத்தில், எதிர்காலத்தின் சிற்பிகளாகிய நீங்கள் இந்தக் குருத்துவத்தின் மேன்மை, குருவின் மாண்பினைப் புரிந்துகொள்ள ஒரு சில குறியீடுகள்:
இந்தக் குரு யார்?
* நமக்கு நெருக்கமானவர், தனது குடும்பம், சொந்தம், தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் அனைத்தையும் விட்டுவிட்டு, நம்மோடு இருக்க வேண்டும் என நமது பங்கிலேயே, நமது மத்தியில் நாம் தூரமான கிளைப் பங்குகளில் இருந்தாலும் தூரம் பாராமல் நம்மைச் சந்திக்கும் அன்புரு சகோதரனாய் நாம் வாழும் இடங்களிலேயே நம்மோடு இருப்பவர்.
* நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்க தன்னையே இறைவனுக்கு அர்ப்பணித்தவர். நமக்கு தங்களது இறை அனுபவத்திலிருந்து, இறை நெருக்கத்தின் விளைவாகவும் மறைந்திருக்கும் இறையை வெளிப்படுத்தி அவரிடம் கொண்டு சேர்க்கும் மரக்கலம் இந்தக் குரு.
* இறைவன் விரும்புவதைத் தங்களது வழிபாடுகளாலும் தினசரி செபங் களினாலும் பல வருடப் படிப்பு, களப்பயிற்சி, சிறப்புத் தியானங்கள், கருத்தரங்குகள் இவற்றினாலும் இறை ஏவுதல் பெற்று சாமான்யர் களாகிய நமக்கு இறை விருப்பத்தைப் புரியவைத்து அதனைச் செயல் படுத்தும் விதத்தையும் சொல்லி பக்குவப்படுத்தும் ஆசான் இவர்.
* நமது நிலையையும், நமது வாழ்வியல் சவால்களையும் தனது ஈடுபாட்டினால் உணர்ந்து நமது குடும்ப சந்திப்பு, கிராம வழிபாடுகள், தனிப்பட்ட உரையாடல், கலந்தா லோசிப்பு, உறவாடல் மூலமாக நமது வாழ்வில் தனது ஞானம், புத்திக் கூர்மையின் மூலம் நமது வாழ்வுக்கு விசையும் திசையும் காட்டும் கலங்கரை விளக்கம் இவர்.
* எந்த சபையிலும், எந்த மதத்திலும் இல்லாத மணத்துறவின் மூலம் நம் அனைவருக்ஞம் தந்தையாக, பணியின் மூலம் உடனுறை மேய்ப்பனாக, வழிகாட்டுதல் மூலம் ஆசானாய், எதிர்காலத்தைச் சொல்லும் தீர்க்கதரிசியாய், மதிப்பீட்டு வாழ்வின் மூலம் வாழ்வியல் பாடமாய் இருக்கிற இவரை நாம் ‘தந்தை’ என்று அழைக்கிறோம். ஏனெனில் இந்த அர்த்தம் பொதிந்த வார்த்தையை வேறு யாரும் பெறுவது கிடையாது. வேறுபாடு பெற்றுக் கொள்வதில் அர்த்தமும் கிடையாது. இவருக்கு நிகர் இவரே.
இப்படி கண்களுக்குத் தெரியும் இறை மனிதத் தலைவனை அதிகமதிகமாக நாம் பாராட்டுவோம். முடிந்தால் நாமும் இப்படிப்பட்ட நிலைக்கு நம்மையும் ஆட்படுத்துவோம். ஏனெனில் குருக்கள் ஆண்டில் இதுவும் ஓர் பரிசுதானே!
0 comments:
Post a Comment