மூன்று உண்மைகள் வாயிலாக அழைப்பு
- திண்டுக்கல் மாவட்டம்: ஒரு கத்தோலிக்க வீட்டைச் சந்தித்தேன். வீட்டின் தலைவர் உறுப்பினர் அனைவரையும் அறிமுகப்படுத்தினார். ஒரு பையனை மட்டும் தயக்கத்துடன் அறிமுகப்படுத்தினார். காரணம், படிக்காதவன், ஊர்சுற்றி, அடங்காதவன். “இவனை உங்களை மாதிரி சாமியாருக்குப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.
- வேலூர் மாவட்டம் : அருமையான கிறிஸ்தவ குடும்பம். உள்ளே சென்றேன். பையன் +2 எழுதியிருந்தான். அவன், “நான் சாமியாருக்குச் சேர்ந்து நிறைய படிக்க வேண்டும். என் வீட்டில் படிக்க வைக்க முடியாத சூழ்நிலை. குருமடத்தில் சேர்ந்தால் எல்லா வசதிகளும் கிடைத்துவிடும்” என்றான்.
- செஞ்சி மாவட்டம் : அதிக பக்தியுள்ள குடும்பம். தாய் புலம்பலுடன் கூறியது : “என் வீட்டில் அன்றாட கஞ்சிக்கு வழி இல்லை. என் பிள்ளையாவது சிஸ்டர் ஆகி படித்து எங்களுக்கு அவ்வப் போது உதவினால் போதும்.”
எல்லா இளைஞர், இளம்பெண்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. நோக்கம் சற்று வித்தியாசமாக இருக்கிறது.
விவிலியத்தில் அழைத்தல்பழைய ஏற்பாட்டில் கடவுள் பல இறைவாக்கினரைப் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார். அவர்கள் படித்தவர்களா, பட்டம் பெற்றவர்களா என்று பாராமல் ஆபிரகாம், மோசே, எசாயா, எரேமியா, ஆமோஸ் எனப் பாமரர்களைத்தான் அழைத்தார். புதிய ஏற்பாட்டில் இயேசு தேர்ந்தெடுத்த யாருமே பெரிய பட்டமோ பதவியோ பெற்றவர் களல்லர்.
இறையரசின் கருவிகளாக அழைப்புஇந்த அழைப்பு நம் முயற்சி யினாலோ, பெற்றோரின் முயற்சி யினாலோ, நம் நற்செயல்களினாலோ வருவது அல்ல. மாறாக கடவுளிட மிருந்து வரும் அழைப்பாகும். இது மாபெரும் கொடையாகும். நம்மையும் மக்களையும் அருள்வாழ்வுக்கு இட்டுச் செல்லுகின்ற அழைப்பு. “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்” (எரே 1:5) என்றும், “நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்” என்றும் அழைப்பின் தன்மை வெளிப்படுத்தப்படுகிறது. ஆம், தகுதி இல்லாத நம்மை அழைத்து தகுதியைக் கொடுத்து பலம் இல்லாதவர்களுக்குப் பலத்தைக் கொடுத்து அவரது மதிப்பீடுகளின்படி வாழ நம்மை உருமாற்றுகிறார்.
குடும்ப சந்திப்புகுடும்பம் ஒரு கோவில், ஒரு பல்கலைக் கழகம் என்பார்கள். ஒரு கல் வீடாகாது, ஒரு மரம் தோப்பாகாது, ஒரு கை தட்டினால் ஓசை எழும்பாது. அதுபோல் திருச்சபைக்கு அடித்தளமாகவும் ஆணிவேராகவும் விளங்குவது குடும்பங்கள். அதனால்தான் குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை என்றழைக்கப்படுகிறது. செபிக்காத குடும்பம் செத்த குடும்பம் என்பர். ஏனெனில் குடும்பத்தில் தான் நல்ல பண்புகள் அனைத்தும் கற்றுத் தரப்படுகின்றன. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதுபோல நாம் நம் குடும்பங்களில் பெற்ற நற்பண்புகளை கடைசி வரை கடைப்பிடிக்கின்றோம்.
நாம் மக்களைச் சந்திக்கும்போது, அவர்களோடு கூடி செபித்து, அவர்களுக்கும் நமக்குமிடையேயுள்ள நல்லதொரு நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பாக உள்ளது. மேலும் நம் உடனிருப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. கப்பலுக்கு நங்கூரம் போல, யானைக்குத் தும்பிக்கை போல, வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் நம்பிக்கை, விசுவாசம் இவைகளை நாம் விதைக் கின்றபோது அழைத்தல் என்னும் கனியை 30 மடங்கு, 60 மடங்கு, 100 மடங்காகப் பெறுவோம் (மத் 13:8). மேலும் அவர்களோடு நெருங்கிப் பழகுகின்றபோது நம்மிடம் திறந்த மனதோடு தம் இன்ப துன்பங்களை அவர்கள் பகிர்ந்துகொள்வார்கள். அவர்களது குடும்பச் சூழ்நிலையை நாம் நன்கு தெரிந்து, அதன்படி அவர்களை மாற்றுவதற்கு நமக்கு எளிமையாக இருக்கும். நாம் வீடு சந்திப்பில் வேறுபாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இயேசு சக்கேயு வீட்டிற்குச் சென்று “இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று” என்று சொன்னவுடனே சக்கேயு மனம் மாறினார். இயேசுவின் வருகையும் பிரசன்னமும் சக்கேயுவை முழுமையாக மாற்றின. அதுபோல வீடுகளுக்குக் குருக்களும், கன்னியர்களும் வரும் போது அதை மக்கள் ஆசீர்வாதமாகக் கருதுவார்கள். அதைவிட மேலாக இறைவனே தங்கள் வீட்டிற்கு வந்தது போல உணர்வார்கள்.
இன்றைய இளைஞரின் நிலை‘கண் போன போக்கிலே கால் போகலாமா...’ என்று வரும் திரைப்பாடல் வரிகள் சற்று சிந்திக்க தூண்டுகின்றன. இளைஞர்கள் தம் கடமைகளை மறந்து அவர்கள் தம் மனம் போன போக்கில் செல்கிறார்கள். இவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல் இருந்தால் இவர்களின் சிகரம் தொடும் திறமைகள் வெளிப்படும். இதுவே நமது பணி. இவர்கள் எழுந்து நடக்க நாம் உதவ வேண்டும். ‘என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன்’ (ஏசா 43:4) என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
‘வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை’ என்று வாழ அவர்கள் வழிகாட்டப்பட வேண்டும். இந்தப் பிறப்பிலே வரலாறு படைக்க ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அன்று இயேசுவிடம் அறிஞன் ஒருவன் வந்து ‘நான் நிலைவாழ்வு பெற என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டதற்கு, “உனக்கு ஒன்று குறைவாக இருக்கிறது. உனக்குள்ளதை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு என்னைப் பின்செல்” என்று இயேசு கூறினார். அதே மெல்லிய குரல் இளைஞர்கள் நெஞ்சில் தினமும் ஒலிக்க வேண்டும். “அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு” (மத் 19:37). இறையரசுப் பணியைக் கட்டியயழுப்ப இன்றைய இளைஞர்கள் அதிகமாக வர தினமும் செபிப்போம். அவர்களில் அழைத்தல் என்னும் விதையை விதைத்து வெற்றி என்னும் கனியைப் பறிப்போம்.
குருக்கள், கன்னியர்களின் வாழ்வுமுறை‘மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்’ என்பது போல், நாம் மக்களைச் சந்திக்கச் செல்லும்போது மக்கள் நம்மை அன்போடும் பாசத்தோடும் இன்முகத்தோடும் வரவேற்க வேண்டும். அந்தளவுக்கு நம்முடைய வாழ்வு முறை மாற வேண்டும்.
காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லன்
மீட்கூறும் மன்னன் நிலம் (குறள்)
என்னும் குறளுக்கு ஏற்ப நாம் பார்ப்பதற்கு எளிமையாகவும், சினம்கொள்ளத் தாமதிப்பவராகவும், தெளிந்த மனம் உடையவராகவும், பரந்த சிந்தனை உடையவராகவும், நீரற்ற ஓடைகளில் அருவி ஓடச்செய்பவராகவும், எந்தச் சூழ்நிலையிலும் மக்களுக்காகத் தம்மையே தியாகம் செய்யத் துணிந் தவராகவும், நடுநிலையோடு நின்று செயல்படக் கூடியவராகவும் நாம் இருக்க வேண்டும். இதைவிட மேலாக, நம் சிந்தனை, சொல், செயல் அனைத்தும் இயேசுவைப் பிரதிபலிப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.
முடிவுரை‘தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்’ என்பதை நாம் உணர்ந்து வாழ முயற்சி எடுப்போம். இறைப் பராமரிப்பில் தொடர்ந்து நம்பிக்கை வைத்து, நமது பணியை முனைந்து தொடர முயற்சிக்கும் போது, இறைவன் தானே நம் சார்பில் செயலாற்றுவதை நாம் காண முடியும். “நீங்கள் போய் என் சீடராக்குங்கள்...” (மத் 28:19-20).