இறையழைத்தல் பணியகம்

இறைமக்கள் அருள்பணியாளரை மையப்படுத்திய ‘இறையழைத்தல் முகாம் 2011’ இறையழைத்தல் பணியகத்தால் ஏப்ரல் 12 முதல் 16 வரை நடத்தப்பட்டது. புதிய முயற்சியாக மாணவர்கள் முகாமிற்கு வந்த அடுத்த நாள், மாணவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மூன்று பங்குகளுக்கு, ஒவ்வொரு குழுவுக்கும் இரண்டு இறையியல் குருமாணவர்கள் வீதம் ஒருங்கிணைப்பாளராக மாணவர் களோடு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
அணுகுமுறை :
  • மக்களால் போற்றப்பட்டு முன் உதாரணமாகக் கருதப்படும் குருக்களைத் தேர்வு செய்தோம்.
  • முகாமிற்கான புதிய அணுகுமுறை குருக்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டு அவர்களது இசைவு பெறப்பட்டது.
  • ஆயரிடம் இந்த முகாமிற்கான புதிய அணுகுமுறை முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது.
  • இசைவு தந்த குருக்களால் முகாமை நடத்த இருந்த இறையியல் குருமாணவர்களுடன் சேர்ந்து முகாமிற்கான கால அட்டவணையும் நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டன.
 
புதிய அணுகுமுறையின் எதிர்பார்ப்பு :
  1. இறையழைத்தலில் ஆர்வம் கொண்டு முகாமிற்கு வந்திருந்த மாணவர்களுக்கு ஒரு நேரடி அனுபவம் பெற்றிட இது உதவியாக அமையும் என்கிற எதிர்பார்ப்பு. இந்த அனுபவம் குருத்துவத்தின் ஒரு முன்னோட்டமாக, ஒரு முன்சுவை அனுபவமாக அமையும் என்கிற நம்பிக்கை.
  2. குருவானவர் யார்? அவருடைய அருள்பணிகள் என்ன? இறைமக்களோடு அவர் உறவுகொள்ளும் போது இருக்க வேண்டிய பண்புகள் என்ன? என்பதைக் கண்கூடாகக் கண்டு அனுபவிக்க.
  3. இறைமக்களின் விசுவாசத்தை ஆய்ந்தறிய, அவர்கள் குருக்களிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள், ஒரு நல்ல குரு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள இந்த அனுபவம்.
  4. பங்கு நிர்வாகம் மற்றும் பக்த சபைகளின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்ள.
  5. உணர்வு சார்ந்த மற்றும் உள்ளத்தைத் தொடும் அனுபவத்தைப் பெற்றிட, மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சாகும் தருவாயில் இருப்போருக்கான இல்லங்களைச் சந்தித்து மனிதநேய பண்புகளையும், ஒரு மனிதனை மனிதனாக வாழ உதவும் உணர்வுகளையும் வெளிக் கொணர உதவும் என்ற நம்பிக்கை.
  6. நான் ஒரு குருவானால் எப்படிப்பட்ட பண்புகளோடு வாழ்ந்தால் நல்ல குருவாக இருப்பேன் என்பதை நேரடியாக மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டால் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு.
 மாணவர்களின் பங்கு       அனுபவப் பகிர்வு :
  • நாங்கள் சந்தித்த குருக்களிடம் பொதுவாகக் காணப்பட்ட குணாதிசயங்கள் : செபிக்கும் குருக்களாக, காலைக் கட்டளை ஜெபத்தை ஜெபிப்பவர்களாகவும், திருப்பலியில் நிறைவு காண்பவர்களாகவும், அன்றைய தினத்தின் செயல்பாடுகளுக்கான சக்தியையும், உள்ஆற்றலையும், ஆன்மீக வளத்தையும் நற்கருணையிலிருந்து பெற்றுக்கொள்பவர்களாகவும் காணப்பட்டனர்.
  • ஒரு குருவானவர் வழிபாடு நேரத்தில் மட்டுமல்லாது பங்கில் இருக்கும் எல்லா நேரமும் அங்கியில் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகவும், மாணவர்களின் உள்ளத்தை ஈர்ப்பதாகவும் அமைந்தது.
  • ஒரு குருவானவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை அந்தப் பங்கு அனுபவத்தி லிருந்தும் பங்குத் தந்தையிட மிருந்தும் கற்றுக் கொண்டார்கள்.
  • பங்கு மக்களின் இல்லங்களை இருவர் இருவராகச் சந்தித்தபோது, நாங்கள் எப்படிப்பட்ட குருவாக இருக்க வேண்டும் என்ற அவர்களிடம் வினவியபோது, ஒருவர் விடாமல் எல்லாரும் சொன்ன கருத்து, “எங்கள் பங்குத் தந்தையைப் போல இருக்க வேண்டும்” என்பதே.
  • வித்தியாசங்களையும் வேறுபாடுகளையும் பாராட்டாதவர்களாக, எல்லாரிடமும் சமமாகப் பழகுபவர்களாகக் காணப்பட்டனர்.
  • ஏழைகளுக்கும் உதவி தேவைப்படுபவர்களுக்கும் தாராள உள்ளத்தோடு வாரி வழங்குபவர்களாகக் காணப்பட்டார்கள்.
  • எந்த நேரம் சென்றாலும் மக்களால் அணுகக்கூடியவர்களாகக் கருதப்பட்டார்கள்.
இல்ல சந்திப்பு       அனுபவம் :
  • உணர்வு சார்ந்த மற்றும் உள்ளத்தைத் தொடும் அனுபவத்தைப் பெற்றிட மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சாகும் தருவாயில் இருப்போருக்கான இல்லங்களைச் சந்தித்ததின் பயனாக வாழ்வு இறைவன் கொடை என்பதையும், அதன் மகத்துவத்தையும் மேன்மையையும், மனித உயிருக்கு நலம் தரக்கூடிய மதிப்பையும் மகத்துவத்தையும் நன்கு அறிந்துகொண்டதாய்க் கூறினர்.
  • தங்களையும் தங்கள் குடும்பம் சார்ந்த செயல்களையும் மட்டுமே முன்வைத்து சிந்தித்திருந்த மாணவர்கள் பிறருடைய குடும்பப் பிரச்சனைகளையும் சவால்களையும் கேட்டறிந்து, தங்களுடைய பார்வைகளையும் சிந்தனைகளையும் விசாலப்படுத்தும் வாய்ப்பாக அமைந்தது.
  • மக்களோடு உரையாடி அவர்களின் குடும்ப சவால்களைக் கேட்டறிந்து அவர்களோடு ஜெபித்ததில் எங்களின் ஜெப ஆர்வம் இரட்டிப்பானது.
  • குருவானவராகும் ஆர்வத்தைக் காட்டும் எங்களுக்கு அவர்கள் காட்டிய வரவேற்பும் மதிப்பும் மரியாதையும் குருத்துவத்தின் மேன்மையை உணரச் செய்தன. எங்களின் ஆர்வத்தை இன்னும் அதிகமாகத் தூண்டியுள்ளன.
  • அருள்சகோதரர்களும் அருள்சகோதரிகளும் கைவிடப்பட்டவர்களுக்கும் நோயுற்றோருக்கும் கொடுத்த பராமரிப்பும் இரக்கமும் எங்களின் அழைப்பு விதை வேரோட்டம் காண உதவின.
 V. ஒருங்கிணைப்பாளர்களின் கருத்துகள் :
  1. குருக்கள் மிகுந்த ஆர்வத்தோடு இந்தப் புதிய அணுகுமுறையை வரவேற்று முன் கூறப்பட்டிருக்கின்ற மாணவர்களின் அனுபவங்களை ஏற்றுக்கொள் கின்றனர்.
  2. சிறு குழுக்களாகப் பங்குகளுக்குப் பிரிந்து சென்றதால், மாணவர்களைச் சிறப்பாக ஒருங்கிணைத்தும், நெறிப்படுத்தி கண்காணிக்கவும் முடிந்ததாக சகோதரர்கள் பகிர்ந்து கொண்டனர்.
  3. பங்கின் பொதுநிலையினர் பலரும் தங்களின் பங்களிப்பையும் பகிர் வையும் திறமைகளையும் வெளிக் கொணர்ந்து இறையழைத்தலை ஊக்குவிப்பது இறைமக்களின் கடமை என்பதை உறுதி செய்தனர்.
  4. வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்த போதிலும் மனநிறை வோடும் மகிழ்வோடும் பணி செய்த குருக்களின் அணுகுமுறை மாணவர்களின் இதயத்தில் அழைத்தல் ஆர்வத்தை இன்னும் மிகுதியாக்கியது.
  5. மூத்த குடிமக்கள் வாழும் இல்லத்தைச் சந்தித்ததில் ‘மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்’ என்ற ஆத்திச்சூடி அவர்களுக்கு நினைவுக்கு வந்தது.
அனுபவமே சிறந்த ஆசான்; அனுபவமே சிறந்த பாடம். எனவே மாணவர்கள் தங்களின் அனுபவத்தின் வாயிலாக இறையழைத்தலை உணரவும், சுதந்திரமாக முடிவெடுக்கவும் உதவி செய்வதற்காகவே இந்தப் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் பயனும் கிட்டியது. இம்முயற்சியைப் பின்பற்று வோம்; இறையழைத்தலை அதிகப்படுத்துவோம்; இறைப்பணியை செம்மையாக்குவோம்.
 
அருள்பணி. ரேமண்ட், 
இறையழைத்தல் இயக்குநர், 
சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம்

0 comments:

Post a Comment