புனித நார்பெர்ட் - ஆயர் (கி.பி. 1080 - 1134)

புனித நார்பெர்ட் அரச குலத்தில் தோன்றியவர். அரிதான புத்தித் திறமையுடையவர். ஆழ்ந்த தெய்வ பக்தியின் காரணமாகக் குருத்துவத்தை விரும்பினார். ஆனால் அரண்மனையில் பிரபுக்கள் போன்ற உயர்ந்த குலத்தாரோடு சேர்ந்து உலக இன்பங்களை நாடியதால் அநேக குற்றங்களுக்குள்ளாகிப் பிறருக்குத் துர்மாதிரிகையானார். ஒரு சமயம் இவர் விநோதப் பிரியத்தினால் குதிரையின் மீது ஏறி வேறு ஊருக்குச் செல்லுகையில் திடீரெனப் புயல் காற்று அடித்து இடி மின்னல் உண்டானது. இவருக்கு முன் இடி விழவே குதிரை மிரண்டு அவரைக் கீழே தள்ளியது. அதன்பின் புனித பவுலைப் போல் மனந்திரும்பினார். கடும்தவம் புரிந்து தினமும் ஒரு முறை மட்டும் சாப்பிட்டு பெரும் புனிதராய் வாழ்ந்தார். தேவ ஏவுதலால் ஒரு புது சந்நியாச சபையை நிறுவினார்.
 
இவர் மாக்டபர்க் நகரின் பேராயராக நியமனம் பெற்றார். அங்கே தோன்றியிருந்த பல ஊழல்களை நீக்கி ஜெர்மன் நாட்டு அரசனான லோத்தேர் என்பவருக்கு ஆலோசகராகப் பணியாற்றினார். பொஹீமியா நாட்டினர் இவரைத் தங்கள் நாட்டின் பாதுகாவலாகத் தெரிந்து கொண்டுள்ளனர். இவர் ஏற்படுத்திய துறவற சபை ‘நார்பெர்டைன்’ என்று அழைக்கப்படுகிறது. இவர்களின் தனிப்பெரும் பக்தி திவ்விய நற்கருணை நாதருக்கு உரியது. இப்பக்தியை இத்துறவற சபையை நிறுவிய புனிதரே கற்றுத் தந்துள்ளார்.

0 comments:

Post a Comment