இறையழைத்தல் ஏன்? எதற்கு?

இறையழைத்தல் என்கிற தலைப்பில் என்ன எழுதுவது எனச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எழுதுவதற்காக அமர்ந்த நாள் பெரிய வியாழன். அன்றுதான் குருத்துவத்தை ஏற்படுத்திய நாள் என்றும் சொன்னார்கள். பொருத்தமாகத்தான் இருந்தது.

ஏன் இறையழைத்தல்?இறை அழைத்தல் எதற்காக என்கிற கேள்விக்குப் பெரிய வியாழனே பதிலாய் அமைந்தது. பெரிய வியாழன் அன்று பாதம் கழுவுதல், நற்கருணையை ஏற்படுத் துதல், குருத்துவத்தை உருவாக்குதல் என்கிற மூன்று முக்கிய சடங் குகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. அவையே இறை அழைத் தலுக்கான இலக்காக எனக்குப்பட்டன.

பாதம் கழுவுதல்அடிமைகள் தங்கள் எஜமானருடைய கால்களைக் கழுவிச் சுத்தப்படுத்துவதை வழக்கமாகக் கொண்ட யூத சமூகத்தில் பிறந்த இறைமகன் இயேசு, தன்னை ஓர் அடிமை போன்று ஆக்கி, தம்மால் படைக்கப்பட்ட மனிதர்களை எஜமானர்களாக உயர்த்தி அவர்தம் பாதங்களைக் கழுவுகின்றார். தான் இறைமகனாக இருந்தாலும், தம் நிலை மறுத்து, தாழ்ந்து அடிமையாகிறார். தம் மக்களின் பாதங்களைக் கழுவித் துடைத்து முத்தமிடுகிறார். தாம் அடிமையாகி தாழ்ந்து போவதன் வழியாகவே தம்மால் படைத்து நேசிக்கப்பட்ட மனிதர்கள் பாவத்திலிருந்து விடுபட்டு உயர முடியும் என முடிவெடுக்கிறார். அவர்களின் பாவங்கள் கழுவப்பட வேண்டுமாயின், தாம் அவர்களின் பாதங்களைக் கழுவி முத்தமிட வேண்டும் என விரும்புகிறார்.

இந்த மனநிலையே இறைவனின் அழைப்பைப் பெற முதலில் தேவைப்படுகிறது. இறை அழைத்தல் முகாமிலேயே ஒருவரைத் தேவ அழைத்தல் பெற்றவராய்த் தேர்ந்தெடுக்க முயற்சிக்கும் முதல் நிலை யிலேயே அவருக்கு இத்தகைய தாழ்நிலை மனது - தன்னையே இழக்கும் மனநிலை இருக்கிறதா என்பதைத்தான் கண்டறிய வேண்டும்.

அவர் +2 முடித் தவரா, அறிவாளியா, உடல் பலசாலியா, திறமையானவரா போன்ற பிற தகுதிகளைத் தேடிக் கொண்டிருப் பதைக் காட்டிலும், ‘தன்னையே மறுப்பது’ என்கிற  மனநிலை பெற்றவர்களைத் தேடுவதே இறை அழைத்தலுக்கு அடிப்படைத் தகுதியாகவும் நீதியாகவும் உள்ளது.

சில சூழ்நிலைகளை இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ (கற்பனையாகவோ) கொடுத்து, “இந்தச் சூழலில் நீ இருந்தால் என்ன செய்வாய்” எனச் சிந்திக்கச் செய்து அவரது சிந்தனை வெளிப்படுவதைப் பொறுத்து அவர் எப்படிப்பட்ட மனநிலை உடையவராய் இருக்கிறார் என்பதை எளிதில் கண்டறியலாம். அதன் மூலம் இறையழைத்தலுக்கு அடிப்படையான தன்னை இழத்தல் - ம(ஒ)றுத்தல் - தாழ்த்துதல் என்கிற மனநிலை உடைய வர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த அடிப்படைத் தகுதியைக் கண்டுகொள்ளாமல், வேறு எதையயதையோ தகுதிகளாகக் கருதிச் செயல்பட்டுத் தேர்வு செய்வதால்தான் இன்று பல குப்பைகள் குருத்துவத்திற்குள்ளும் துறவு வாழ்விலும் குவிந்து விட்டன. ‘தேவ அழைத்தல்’ என்கிற சொல்லாடலே அர்த்தமற்றுப் போய் விடுமோ என்கிற அளவுக்கு ஆகிவிட்டது.

நற்கருணையை ஏற்படுத்துதல்பெரிய வியாழனின் இரண்டாவது சடங்கு நற்கருணையை ஏற்படுத்துவது.
நற்கருணையை நல்ல கருணை என்று பிரிக்க முடிகிறது. கருணை என்பதே நன்மையான ஒரு செயல்தான். அதுவே நல்ல கருணையாக மீண்டும் ஒரு நன்மைத்தனத்தைத் தனக்குள் கொண்டிருப்பதைக் காண்கிறோம். இரண்டிலும் சிறு வித்தியாசம் உண்டு.

கருணை என்பது நம்மிடம் உள்ளதில் சிலவற்றைப் பிறர் மேல் இரக்கம் கொண்டு கொடுப்பது அல்லது அளிப்பது என்பதைக் குறிக்கும். ஆனால் நல்ல கருணை (நற்கருணை) என்பது நம்மையே (சிலவற்றை அல்ல மாறாக முழுவதும்) பிறருக்குக் கொடுப்பது. அந்த வகையில் இறைமகன் இயேசு மனிதத்தன்மை பூண்டு தன்னை முழுவதும் மனுக்குலத்திற்காகக் கையளித்தார். பகிர்ந்து கொடுத்தார். எனவேதான் அதன் அடையாளமாக அவர் ஏற்படுத்தியதை நற்கருணை என அழகாய் அழைக்கின்றோம்.

ஆக, தேவ அழைத்தல் பெற்றவர்களின் வேலை என்னவென்றால், தன்னையே முழுவதுமாய்க் கையளிப்பது - தன்னையே பகிர்ந்து கொடுப்பது என்பதுதான் என இந்த நற்கருணைச் சடங்கு நமக்கு உணர்த்துகிறது.

தனக்கென்று வங்கிக் கணக்கு, இடம், வீடு, கார், கம்யூட்டர், லேப்டாப், இன்னும் பிற எனப் பல பொருள்களைச் சேர்த்து வைப்பது தேவ அழைத்தலின் வேலை அல்ல. பொருள்களின் மீது மோகமும் நுகர்வு வெறியும் உடையவர்கள் தேவ அழைத்தலைப் பெற்றவர்களாக ஒருக்காலும் இருக்க முடியாது.  பொருள்களின் மீது வெறியும், பண மோகமும் கொண்ட தனிமனிதர்களைத் தேவ அழைத்தலுக்குரியவர்கள் அல்ல எனும்போது, புதிது புதிதாய் இடங்களை வாங்குவது, கட்டிடங்கள் கல்லூரிகள் கட்டி சொத்து சேர்ப்பது எனக் கங்கணம் கட்டிக்கொண்டு, ஏன் பிறருடன், பிற சபைகளுடன் போட்டி போட்டுக்கொண்டு செயல்படும் துறவற இல்லங்களும், துறவற சபைகளும், மறைமாவட்டங்களும் ‘தேவ அழைத்தல்’ என்கிற பதத்தினைப் பயன்படுத்தவே அருகதை அற்றவர்கள்.

நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளும், சொத்தும் நமக்காக, நமது வசதிக்காக, நமது சபைக்காக / சபையின் வசதிக்காக என்பதைக் காட்டிலும், நல்ல கருணையின் (நற்கருணையின்) அடிப்படையில் பிறருக்காக, பிறர்தம் வாழ்வுக்காக என்பதை மையப்படுத்தி அமைந்தால் மட்டுமே அது தேவ அழைத்தல் பணி. அந்தப் பிறர் என்பவர்கூட சமூகத்தில் கடைநிலை மக்களுக்காக, ஏழைகளுக்காக, கைம்பெண்களுக்காக என்பதாகவே இருக்க வேண்டும்.

இப்பொழுதெல்லாம் சில சொத்தை வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
நாங்கள் உங்களிடமிருந்து வந்தவர்கள்தானே! உங்களை மாதிரி ஆசா பாசம், தேவைகள் எங்களுக்கும் இருக்கும் தானே! எங்களை மட்டும் ஏன் ஏஞ்சல் மாதிரி எதிர்பார்க்கிறீர்கள்? நாங்களும் மனிதர்கள் தானே! - என இந்த வாதங்கள் வைக்கப்படுகின்றன.

தேவ அழைத்தல் பெற்று சிறப்புப் பயிற்சி முடித்து ‘சிறப்பு நிலை’யை அனுபவித்து வருபவர்கள் ‘மீண்டும் உங்களை மாதிரிதானே நாங்களும்’ என்று சொன்னால், அந்தச் சிறப்பு நிலை மீது வெறுப்பு நிலைதான் ஏற்படும். அப்படி யயன்றால் தாங்கள் பெற்றது தேவ அழைத்தலா அல்லது பாவ அழைத்தலா எனக் கேள்விகள் எழும்.

அங்ஙனமே ஓரிடத்தில் நாங்கள் எங்கள் நிறுவனத்தின் வழியாக நல்லா சம்பாதிப்போம்; இன்னொரு கிராமத்தில் ஏழைகளுக்குப் பணி செய்து அதனை சமன் செய்துகொள்வோம் என்கிற புதிய சித்தாந்தம் தற்போது தேவ அழைப்பு பெற்றவர்களிடம் பரவி வருகிறது.

இது முதலாளித்துவ சிந்தனை. இன்றைய கார்ப்பரேட் கம்பெனிகள்கூட எப்படியயப்படியோ இலாபம் சம்பாதித்து அதில் ஒரு பகுதியைக் ‘கிராமங்களைத் தத்தெடுத்தல்’ என்கிற வழியில் செலவு செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவை ஒரு நாளும் தங்களை இறை அழைத்தல் பெற்ற கம்பெனிகள் என்று முழங்குவதில்லை. ஆக, பெரிய வியாழன் நமக்கு வழி காட்டுவது போல, தன்னை இழக்கும் மனநிலையும், தன்னைக் கையளிப்பது - பகிர்ந்தளிப்பது என்கிற செயல்பாடும் மேற்கொண்டவர்களே குருத்துவம் பெறத் தகுதியுடையவர்கள், வார்த்தைப்பாடு பெற்றவர்கள்.  இவற்றைப் புரிந்துணர்ந்து சிறிதளவாவது ஒருவரை அடையாளம் காண முயல்வதே தேவ அழைத்தல் முகாம்களின் வேலை.

அடையாளம் கண்டவர்களை அழைத்து அதில் ஆழப்படுத்தி  வேரூன்றச் செய்வதே பயிற்சி இல்லங்களின் வேலை.  அதில் தொடர்ந்து செல்பவர்களே தேவ அழைத்தல் பெற்றவர்கள்... சிறப்பு நிலைக்கு உரியவர்கள்...

இல்லையயனில் நாம் தேவ அழைத்தல் என்கிற பெயரில் நமது நிறுவனங்களைக் கட்டிக் காக்க, வளர்க்க சில முழுநேரப் பணியாளர்களை மேனேஜர்களாக, நிர்வாகிகளாக மட்டுமே பெற்றிட முடியும். அதற்குத் தேவ அழைத்தல் என்கிற பதம் வேண்டாம்.

0 comments:

Post a Comment