காலத்தின் அருமை

காலத்தின் அருமை யாருக்குத் தெரியும்?  கல்லூரியில் காம்பவுண்ட் சுவர்களிலே காலையிலிருந்து மாலை வரை ‘கலர்’ பார்க்கக் காத்துக் கிடக்கும் வாலிபர்களுக்குத் தெரியுமா?  இல்லை ஊர் ஓர ஓடைத் திட்டுகளிலே அமர்ந்து வெட்டிப் பேச்சு பேசும் மாணவர்களுக்குத் தெரியுமா?  கால் முட்டிக்குமேல் கைலியைத் தூக்கிக் கட்டி தகப்பன் கஷ்டப்பட்டு சம்பாதித்த ஒவ்வொரு காலணாவையும் 5, 10 ரூ என்று காப்பிக் கடையிலே கண்டபடி செலவழித்துக் கால்கடுக்க காத்து நிற்கும் இளைய தலைமுறைக்குத் தெரியுமா?  இல்லை, தொலைந்து போன வாழ்க்கையைத் தொலைக்காட்சி பெட்டியிலே தேடி, தொலைக் காட்சித் தொடர்களுக்குத் துதி பாடி அதற்காக மட்டுமே வாழ்க்கையைப் பலியாக்கும் வேலைக்குச் செல்லா இல்லத்தரசிகளுக்குத் தெரியுமா?  காலத்தின் அருமை இவர்களுக்குத் தெரியாது.  நேரம் விரயமாவதால், வாழ்க்கை வீரியமாகாது என்பதை இவர்கள் அறியவில்லை.

அன்பு மாணவச் செல்வங்களே, இந்தப் புதிய கல்வி ஆண்டை ஆண்டவர் நமக்கு ஆசீர்வதித்துக்கொடுத்திருக்கிறார்.  இந்தப் புதிய கல்வி ஆண்டு உங்களுக்கு ஆசீர்வாதமான ஆண்டாக அமைய நான் ஜெபிக்கிறேன்.  காலத்தின் அருமை உங்கள் கையில்தான் உள்ளது.    விரல்களால் எண்ணிவிடக் கூடிய  குறுகிய நாட்கள் உள்ளன.  ஒவ்வொரு கட்டத்திலும் தேர்வுகளைச் சந்திக்க இருக்கும் மாணவ நண்பர்கள் நேரத்தின் அருமையை உணர்ந்து அதைப் பட்டியலிட்டுப் பயன் படுத்துவது அவசியம்.  எந்தப் பாடங்களை எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்ற முன்கணிப்பும், திட்டமும் இருக்க வேண்டும்.  கடினமான பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குதலும், படித்தபின் அவற்றை எழுதிப் பார்த்தலும் சாலச் சிறந்தவை.  ஆனால் குழுவாக அமர்ந்து நண்பர்களோடு படிக்கிறோம் (றூrலிற்ஸ்ரீ றீமிற்dதீ) என்ற பெயரில் வெட்டிப் பேச்சு பேசி நேரத்தை வீணடிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.  கண்டிப்பாக கண்காணிக்கக் கூடிய ஒரு ஆசிரியரோ அல்லது பெற்றோரோ இல்லாதபோது குழுவாகப் படிக்கும் முயற்சியைக் கைவிடுதலும் தவிர்த்தலும் நலம் பயக்கும்.

வருடா வருடம்  பொதுத் தேர்வுகளின் போது மாணவர்கள் சந்திக்கும் சவால் கிரிக்கெட் போன்ற தொலைக்காட்சி ஒளிபரப்பு.  ஒரு முறை பார்த்து விட்டுப் போய் படிக்கலாம் என்ற எண்ணத்தோடு தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்கின்ற மாணவர்கள்  நேரத்தை வீணடிப்பது மட்டுமல்ல தாம் விரும்பிய வீரர்கள் நன்றாக விளையாடவில்லை என்றால் வருகின்ற மனச் சோர்வு, ஆத்திரம் இவற்றால் தேர்வு மீதுள்ள கவனம் எங்கோ திசைமாறிச் செல்லுகிறது.  தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வலுவான எண்ணம் வலுவிழந்து போகிறது.  40 மதிப்பெண் எடுத்தால் போதும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.  இதை அறிந்த பெற்றோர் இணைந்து “இவை வேண்டாம்” என்ற ஒரு தியாக முயற்சியில் ஈடுபட்டால் கோடி நன்மை கிடைக்கும்.

பன்னிரெண்டாம், பத்தாம் வகுப்பு மாணவர்கள் கவலையில்லாத காலத்தைக் கரைக்கும் மாணாக்கர் சந்திக்க இருக்கும் விளைவுகளை இப்போதே எண்ணிப் பார்ப்பது நலம்.  நீங்கள் வீணடிக்கும் ஒவ்வொரு மணித் துளியும் உங்கள் வெற்றி வாய்ப்பை விலக்கிவிடும் சக்தி படைத்தது என்பதை உணர்ந்தீர்களா?  சாதனைச் சிகரங்களிலிருந்து சற்றுத் தொலைவிலேயே உங்களை நிறுத்திவிடும் சக்தியுடையது என்பதை அறிந்திருக் கிறீர்களா?  நீங்கள் விரயமாக்கும் ஒவ்வொரு மணித் துளியும் உங்களை முதல் ரேங்கிலிருந்து முப்பதாவது ரேங்கிற்கும், நூற்றுக்கு நூறு மதிப்பெண்களிலிருந்து நாற்பது மதிப்பெண்களுக்கும் இழுத்துச் செல்லக்கூடியது என்பதை எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?  இல்லை என்றால் இப்போதே எண்ணிப் பாருங்கள், உணர்ந்து கொள்ளுங்கள்.

காலத்தை வீணாக்குவதால் இழந்து போகின்ற ஒரே ஒரு மதிப்பெண்ணினால் சிலரின் தலைவிதியே மாறிப்போன வரலாற்று நிகழ்வுகளை நான் பார்த்திருக்கிறேன்.  ஒரே ஒரு மதிப்பெண் குறைவினால் வெற்றியை நழுவவிட்டவர், தான் சாதிக்க வேண்டும் என்ற மருத்துவ படிப்பையும் தவறவிட்டவர்களையும் பார்த்துப் பரிதாபப்பட்டிருக்கிறோம்.  கையிலிருக்கும் காலம் பொன்னானது என்பதை நீங்கள் இப்போதே உணர்ந்து செயல்பட்டால் விபரீதங்களைத் தவிர்க்கலாம், வேண்டி விரும்பிய வெற்றியைக் குவிக்கலாம்.
பொன்னான நேரம் உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளை எட்டிப் பிடிக்கும் ஏணிப்படிகள்.  எனவே நேரத்தை நேர்த்தியாய்ச் செலவிட்டு நீண்ட நாள் கனவுகளை நனவாக்க வாழ்த்துகிறேன்.             

சில சிந்தனைத் துளிகள்


கரம் பிடித்து, முகம் பார்த்து, தோள் தொட்டுப் பேசுவது நம் உறவுக்கும் உரிமைக்கும் பரிவுக்கும் பாசத்திற்கும் அடையாளங்கள்.

தம்பி!  தங்கைகளே! புதிய கல்வியாண்டின் தொடக்கத்தில் இருக்கும் உங்களைப் பாசத்தோடு அழைத்து, தோழமையுணர்வோடு கரம்பிடித்து, சூரியனைப் போல் பிரகாசிக்கும் உங்களது முகம் பார்த்து, பரிவோடு தோள்களை வருடி, சில சிந்தனைத் துளிகளை உங்களது இதயத் தோட்டத்தில் விதைக்கவே இந்த வரிகளை எழுதுகிறேன்.

“கோடை விடுமுறை இவ்வளவு சீக்கிரத்தில் முடிந்து விட்டதே!” என்று நீங்கள் நினைப்பதை என்னால் உணர முடிகிறது.  என்ன செய்வது, வேகமாக ஓடிக் கொண்டே இருக்கும் காலத்தை யார்தான் வேலிபோட்டு நிறுத்த முடியும்?

புத்தகங்களைச் சுமந்து சென்று, புதிய நண்பர்களைச் சொந்தமாக்கி, உற்சாகத்தோடு  தொடங்குகிற கல்வியாண்டில், உயர்ந்த இலட்சியங்கள், சிறந்த குறிக்கோள்கள், மேலான சிந்தனைகள், எந்தச் சூழ்நிலையிலும் நேர்மறையான மனநிலைகள், பயனுள்ள முயற்சிகள், தொடர் பயிற்சிகள் இவற்றை அணிகலன்களாக வைத்துக் கொண்டு முனைப்போடு செயல்பட்டால்  வாழ்க்கை  எனும் தோட்டத்தில் வெற்றிக் கனிகளைப் பறிப்பது அவ்வளவு கடினமல்ல!

“இளைய சமுதாயமே கனவு காணுங்கள்!  இன்று கனவு காண்பவரே நாளைய சாதனையாளர்” என்று முழக்கமிடுகிறாரே நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், எதற்காக?  கனவிலிருந்துதான் உயர்ந்த இலட்சியங்களும், முயற்சிகளும் உருப்பெருகின்றன.  நமது கற்பனைகளால்தான் நாம் வாழ்கிற வாழ்க்கை வளமடைகிறது.  எனவே உங்களது உள்ளக் கதவுகளைத் திறங்கள்.  உங்கள் கற்பனை பறக்கட்டும் வெகு உயரத்தில்!

“நான் எங்கே இருக்கிறேன், எங்கே செல்கிறேன்”  என்ற தொடர் கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.  ஏனென்றால் இக்கேள்விகள் நம்மைச் சரியான பாதையில் அழைத்துச் செல்கின்றன.  பறவைகள்கூட வானில் தங்களது பாதையை அறிந்திருக்கின்றன அல்லவா!
இளைய தலைமுறையின் நம்பிக்கையூட்டும் எழுத்தாளர் நார்மன் வின்சென்ட் பீல், நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கூறும் நான்கு படிநிலைகளை மனதிருத்துவோம

மிகச் சிறந்த ஒன்றிற்காக நம்மை அர்ப்பணம் செய்ய வேண்டும். நமது விருப்பம் மற்றும் குறிக்கோள் இவற்றிற்கான வேறுபாட்டை அறிந்து செயல்படுதல் வேண்டும். இடைப்பட்ட குறிக்கோளை அடைவதின் மூலம் இறுதியான குறிக்கோளை அடைய முயல வேண்டும்.  எல்லாவற்றிற்கும் மேலாக தொடர் முயற்சியும் பயிற்சியும் நமக்குத் தேவை.  இச்சிந்தனைத் துளிகளை மனதிருந்தி இப்புதிய கல்வியாண்டில் வெற்றி நடைபோட அன்போடு வாழ்த்துகிறேன்.

பணி. அந்தோணி மதலைமுத்து
நல்லாயன் குருமடம், கோவை

Snow Ball

சாலையில் நடந்து செல்கையில் ஒரு சின்ன நாய்க்குட்டியை இரண்டு பெரிய நாய்கள் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தன.  அதன் ஈனக் குரல் மிகவும் பரிதாபமாக இருந்தது.  மனம் பாதித்த சத்யன் ஓடோடிச் சென்று அந்தப் பெரிய நாயை விரட்டி விட்டு குட்டியைக் கையில் ஏந்திக் கொண்டான்.  அருகிலிருந்த கால்நடை மருத்துவ மனைக்கு அதனை அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்தான்.  டீக்கடையில் ஒரு டம்ளர் பாலும் பிஸ்கட்டுகளும் வாங்கி குட்டிக்கு உண்ணக்கொடுத்தான்.  அருகிலிருந்த ஒரு கடையில் ஒரு அட்டை டப்பா வாங்கி குட்டியை அதில் போட்டு சாலையோரமாக வைத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டான் சத்யன்.  பாதி நாள் வரையில் வேலையில் மனம் செல்லவில்லை.  சே!  அந்தக் குட்டியை நாம் அங்கேயே விட்டு வந்தது தப்போ.  மீண்டும் அந்தப் பெரிய நாய்கள் வந்திருந்தால் அதன் நிலை என்ன?  போக்குவரத்து மிகுந்த சாலையாயிற்றே.  ஏதாவது வண்டியில்  அடிபட்டு விட்டால் என்ன செய்வது?  மனம் அலை பாய்ந்தது.  மதிய உணவுகூட தேவைப்படாத அளவிற்கு மனம் சஞ்சலப்பட்டது.  மதியத்திற்கு மேல் மனம் எப்படியோ வேலையில் நிலைத்தது.  சத்யன் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தான்.
 
மாலை ஆனதும் மனசு மீண்டும் குட்டி நாயைச் சுற்றி வந்தது.  தலைவலிக்கு ஒரு காப்பி அருந்தலாம்  என நினைத்தவன் சட்டென அந்த  எண்ணத்தைக் கைவிட்ட வாறு குட்டி நாய் இருந்த இடம் தேடி வேக வேகமாய் ஓடினான்.  அங்கே பெட்டி மட்டும் இருந்ததே ஒழிய குட்டி இருக்கவில்லை.  மனம் கலங்கியது சத்யனுக்கு.  தப்பு செய்து விட்டோமோ.  ஒரு சின்ன ஜீவனைக் காக்க தவறிவிட்டோமோ என மனசாட்சி குத்தியது.  கலங்கிய மனதைத் தேற்ற முடியாமல், கண்ணில் கசியும் நீரை துடைக்கத் தோன்றாமல் நடந்து கொண்டிருந்தவன் காலில் இரண்டொரு முறை எதுவோ தடுக்கியது போலிருந்தது.  சட்டெனக் குனிந்து பார்த்த சத்யனின் முகம் முழுமையாய் மலர்ந்தது.  காரணம் அந்தக் குட்டி ஜீவன், தன் சின்ன வாலை ஆட்டியவாறு, பிஞ்சுக் கால்களால் அவனுடன் நடந்து வந்துக் கொண்டிருந்தது.  அதை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டான் சத்யன்.  பாசமாய்த் தடவிக்கொடுத்தான்.  அந்த நாய்க்குட்டியும் தான் சொல்ல நினைத்த வி­யங்களை எல்லாம் அவனுடன் தன் வாலாட்டலில் பரிமாறியது.  தன் நன்றியை அவன் முகத்தையும் கரங்களையும் நக்கி நக்கித் தெரிவித்தது.  நாயின் மொழி அதன் வாலில் என்பதை  சத்யன் நன்கு புரிந்து கொண்டான்.

வீட்டிற்குச் சென்ற சத்யன் குட்டி நாயை நன்கு குளிப்பாட்டி, மருந்திட்டு, உணவிட்டு,        “Snow Ball” என்று பெயரிட்டு அதனைச் செல்லமாக வளர்க்க ஆரம்பித்தான்.  அன்று முதல் Snow Ball சத்யனின் உற்ற தோழனாய், உறவுப் பாலமாய் ஆகிவிட்டது.  எங்கு ஒரு ஆதரவற்ற மிருகத்தைக் கண்டாலும் அதை ஆதரித்து, அழைத்து வந்து பாதுகாப்பது சத்யனின் வேலையாயிற்று.  வீட்டிலும் வெளியிலும் சத்யனின் உற்ற தோழன், உறவினன் snow Ball என்றாகி விட்டது.
இப்படியயல்லாம்கூட நட்பு பிறக்குமா?  வளருமா? எனப் பார்ப்போர் ஆச்சரியம் அடையுமளவிற்கு அவர்கள் அன்பும் பாசமும் பின்னிப் பிணைந்து இருந்தன.  ஒரு நாள் இருவரும் வெளியே சென்றிருந்த வேளையில் கட்டுப்பாடு இழந்து வந்த ஒரு வாகனம் சத்யனை மோத வருகையில் snow Ball சட்டென அவன் மீது பாய்ந்து, அவனை நிலைக் குலையச் செய்து வேறு திசையில் விழ வைத்தது.  ஆனால் அதற்கு ஆழமாக அடிபட்டு விட்டது.  துடித்தான் சத்யன்.  துவண்டான்.  ஆட்டோ பிடித்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றான்.  அவனோடு ஓடியாடிய snow Ball-ன் இரண்டு கால்கள் சேதப்பட்டதால் அகற்றப்பட்டன.  ஆனாலும் அதன்மேல் கொண்ட அன்பு சிறிதும் குறையவில்லை சத்யனுக்கு.

சின்ன வயதில் தன்னைக் காப்பாற்றி, உயிர்கொடுத்து, பாதுகாப்புக்கொடுத்து வளர்த்த சத்யனுக்கு அவன் தனக்குத் தந்த நட்பிற்குப் பதில் நன்றியைத் தெரிவித்து விட்டது Snow Ball.  நட்பிற்கு நீ என்றால் நன்றிக்கு நான் என நிரூபித்து விட்டது.  சத்யனுக்கு Snow Ball -ன் மேல் பிரியம் இன்னும் அதிகமாயிற்று.  தொண்டு நிறுவனங்கள் + யயிற்e ளீrலிவிவி உதவியுடன் snow Ball-ற்கு செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன.  சத்யனுடனான snow Ball-ன் வாழ்க்கைப் பயணம் தொடரலாயிற்று.  தனக்கு அன்பு காட்டிய மனிதனுக்குப் பதில் அன்பு காட்டிவிட்ட தெம்பில் செயற்கைக் கால்களுடன், சத்யனுடன் தினம் தெருக்களில் நடை செல்கிறது.  தன்னுயிரைக் காத்த Snow Ball-இடம் கொண்ட நன்றிக் கடனுக்காக ஊனமுற்ற மிருகங்களைப் பாதுகாத்து, பணி செய்யும் அமைப்பை நடத்த ஆரம்பித்தான் சத்யன்.  snow Ball விலங்குகள் காப்பகம் என்னும் பெயரில் அக்காப்பகம் சிறந்த தொண்டு நிறுவனமாக நடக்கிறது.  யாருக்கு நன்றியுணர்வு அதிகம்?  மனிதனுக்கா, மிருகத்திற்கா?  இருவருக்குமா? 

சாந்தி ராபர்ட்ஸ், உதகை

ஆசிரியர் பக்கம்

15 நாட்கள் மேலும் நீட்டிக்கப்பட்ட கோடைவிடுமுறை முடிவடையும் நேரம்.  மீண்டும் புதிய கல்வியாண்டைத் (2011-2012) தொடங்கும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!  கற்பிப்போர், கற்போர் அனைவருமே வளமும் நலமும் பெற்று வாழ ஜெபிப்போம்.
2011 ஜுன்  முதல் 2012 ஜுன் வரை நம் திருச்சபை மறைக்கல்வி ஆண்டைக் கொண்டாடுகிறது.  நமது பங்குகளில், பள்ளிகளில் நமக்குள்ள சிறப்புத் திட்டமாக இம்மறைக்கல்வி வகுப்புகள் தரப்படுவதால் இறையறிவும் ஞானமும் வளர வழி பிறக்கிறது.  அனைத்துப் பள்ளிப் பாடங்களோடு மறைக்கல்வி/நன்னெறிப் பாடங்கள் கற்பிக்கப்பட்டாலும் அவற்றிற்கான முக்கியத்துவம் இன்னும் உணரப்படாமலேயே மறைந்தும் விடுகின்றது.  மறைக்கல்வியின் மேன்மையையும் அது நம் நிறுவனங்கள், பங்குகள் அளவில் செயல்படுத்தப்பட வேண்டிய தேவையையும் உணர்த்தும் இவ்வாண்டில் மறைக்கல்விச் செயல்பாடுகள் சிறக்க வாழ்த்துவோம்.  இணைந்து செயல்படுவோம்.
  
ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பாதைகளைத் தேடும் நோக்கில் இக்கல்வி ஆண்டு முழு மனித வளர்ச்சி தருவதாக அமைய வேண்டும்.  மனிதனுக்குள் அறிவு (knowledge) மட்டுமல்ல அதைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறும் ஞானமும் (Wisdom) அதன் விளைவான ஆன்மீகம், பொருளுள்ள கலாச்சாரம், ஒழுக்க வாழ்வு இவை இன்றைய சமூக மனிதருக்குத் தேவைப்படுபவை.  கல்வியில், கண்டுபிடிப்பில் முன்னேறும் இச்மூகத்தில் நிறைவான வாழ்வும், மகிழ்வான சூழலும், சமாதானச் சுவடுகளும் குறைந்து போகக் காரணமே ஒட்டு மொத்த வளர்ச்சி என்றில் லாமல் படிப்பறிவு மட்டுமே முன்னிலை பெறுவது.
வேகமாக வளரும் (?) இன்றைய மனித முன்னேற்றத்தை நினைக்கும் போது எதிர்காலச் சந்ததிகள் உண்மையான நிறைவைக் காண்பார்களா! என்ற சந்தேகமே வலுக்கிறது.  மனித வளர்ச்சி மற்றும்  வளத்தின் உண்மையை உணருவோம்... அவ்வளர்ச்சி வெறும் அறிவு சம்பந்தப்பட்ட கல்வியில் மட்டுமல்ல அதற்கு மேலான ஒழுக்கக் கல்வி என்று பலதரப்பட்ட உயர் கல்விகள் கற்பிக்கப்படல் கட்டாயமே.  இங்கும் “கல்வி” என்ற வார்த்தையை நான் பயன்படுத்தும் போது “தேர்வு”, “மதிப்பெண்”, “பாடத்திட்டம்” என்பன வற்றை நான் மையப்படுத்தவில்லை.  மாறாக, மேற்கூறிய வார்த்தைகள் - அவற்றின் அர்த்தங்கள் எல்லாமே வாழ்வோடு இணைந்து கொள்ள வேண்டும் என்பதே பொருள்.

பரபரப்பான இச்சமூக வாழ்வில் சில சமயங்களில் பெற்றோர்கள் இக்கருத்தை உணர்ந்து செயல்படாத நிலையில் - ஒருவேளை உணர்ந்தாலும் அதைத் தம்  பிள்ளைகளுக்குச்  சொல்லித்தர நேரம் கூட இல்லாத நிலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியப் பெருமக்களும் நிறுவனங்களும் இப்பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை உள்ளது.  இது காலத்தின் தேவை என்பதை உணர்தல் வேண்டும்.  நல்லவற்றைப் பற்றிக் கேள்விப்படாமலேயே இத்தலைமுறை வளர்ந்தால், நலமான சமூகம் என்பது இல்லாமலேயே போய்விடும் அபாயம் உண்டு.

அறிவு ஜீவிகளை மட்டுமல்ல; ஆன்மீக ஒழுக்க உயர்பண்பாடு , கலாச்சார மனிதரை உருவாக்கும் பணியில் ஈடுபட நம்மை அர்ப்பணிப்போம்.  இக்கல்வியாண்டில் இத்தொடக்கச் சிந்தனை மேன்மையுடையதாய் அமையட்டும் !

சே. சகாய ஜாண்