சில சிந்தனைத் துளிகள்


கரம் பிடித்து, முகம் பார்த்து, தோள் தொட்டுப் பேசுவது நம் உறவுக்கும் உரிமைக்கும் பரிவுக்கும் பாசத்திற்கும் அடையாளங்கள்.

தம்பி!  தங்கைகளே! புதிய கல்வியாண்டின் தொடக்கத்தில் இருக்கும் உங்களைப் பாசத்தோடு அழைத்து, தோழமையுணர்வோடு கரம்பிடித்து, சூரியனைப் போல் பிரகாசிக்கும் உங்களது முகம் பார்த்து, பரிவோடு தோள்களை வருடி, சில சிந்தனைத் துளிகளை உங்களது இதயத் தோட்டத்தில் விதைக்கவே இந்த வரிகளை எழுதுகிறேன்.

“கோடை விடுமுறை இவ்வளவு சீக்கிரத்தில் முடிந்து விட்டதே!” என்று நீங்கள் நினைப்பதை என்னால் உணர முடிகிறது.  என்ன செய்வது, வேகமாக ஓடிக் கொண்டே இருக்கும் காலத்தை யார்தான் வேலிபோட்டு நிறுத்த முடியும்?

புத்தகங்களைச் சுமந்து சென்று, புதிய நண்பர்களைச் சொந்தமாக்கி, உற்சாகத்தோடு  தொடங்குகிற கல்வியாண்டில், உயர்ந்த இலட்சியங்கள், சிறந்த குறிக்கோள்கள், மேலான சிந்தனைகள், எந்தச் சூழ்நிலையிலும் நேர்மறையான மனநிலைகள், பயனுள்ள முயற்சிகள், தொடர் பயிற்சிகள் இவற்றை அணிகலன்களாக வைத்துக் கொண்டு முனைப்போடு செயல்பட்டால்  வாழ்க்கை  எனும் தோட்டத்தில் வெற்றிக் கனிகளைப் பறிப்பது அவ்வளவு கடினமல்ல!

“இளைய சமுதாயமே கனவு காணுங்கள்!  இன்று கனவு காண்பவரே நாளைய சாதனையாளர்” என்று முழக்கமிடுகிறாரே நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், எதற்காக?  கனவிலிருந்துதான் உயர்ந்த இலட்சியங்களும், முயற்சிகளும் உருப்பெருகின்றன.  நமது கற்பனைகளால்தான் நாம் வாழ்கிற வாழ்க்கை வளமடைகிறது.  எனவே உங்களது உள்ளக் கதவுகளைத் திறங்கள்.  உங்கள் கற்பனை பறக்கட்டும் வெகு உயரத்தில்!

“நான் எங்கே இருக்கிறேன், எங்கே செல்கிறேன்”  என்ற தொடர் கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.  ஏனென்றால் இக்கேள்விகள் நம்மைச் சரியான பாதையில் அழைத்துச் செல்கின்றன.  பறவைகள்கூட வானில் தங்களது பாதையை அறிந்திருக்கின்றன அல்லவா!
இளைய தலைமுறையின் நம்பிக்கையூட்டும் எழுத்தாளர் நார்மன் வின்சென்ட் பீல், நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கூறும் நான்கு படிநிலைகளை மனதிருத்துவோம

மிகச் சிறந்த ஒன்றிற்காக நம்மை அர்ப்பணம் செய்ய வேண்டும். நமது விருப்பம் மற்றும் குறிக்கோள் இவற்றிற்கான வேறுபாட்டை அறிந்து செயல்படுதல் வேண்டும். இடைப்பட்ட குறிக்கோளை அடைவதின் மூலம் இறுதியான குறிக்கோளை அடைய முயல வேண்டும்.  எல்லாவற்றிற்கும் மேலாக தொடர் முயற்சியும் பயிற்சியும் நமக்குத் தேவை.  இச்சிந்தனைத் துளிகளை மனதிருந்தி இப்புதிய கல்வியாண்டில் வெற்றி நடைபோட அன்போடு வாழ்த்துகிறேன்.

பணி. அந்தோணி மதலைமுத்து
நல்லாயன் குருமடம், கோவை

0 comments:

Post a Comment