காலத்தின் அருமை

காலத்தின் அருமை யாருக்குத் தெரியும்?  கல்லூரியில் காம்பவுண்ட் சுவர்களிலே காலையிலிருந்து மாலை வரை ‘கலர்’ பார்க்கக் காத்துக் கிடக்கும் வாலிபர்களுக்குத் தெரியுமா?  இல்லை ஊர் ஓர ஓடைத் திட்டுகளிலே அமர்ந்து வெட்டிப் பேச்சு பேசும் மாணவர்களுக்குத் தெரியுமா?  கால் முட்டிக்குமேல் கைலியைத் தூக்கிக் கட்டி தகப்பன் கஷ்டப்பட்டு சம்பாதித்த ஒவ்வொரு காலணாவையும் 5, 10 ரூ என்று காப்பிக் கடையிலே கண்டபடி செலவழித்துக் கால்கடுக்க காத்து நிற்கும் இளைய தலைமுறைக்குத் தெரியுமா?  இல்லை, தொலைந்து போன வாழ்க்கையைத் தொலைக்காட்சி பெட்டியிலே தேடி, தொலைக் காட்சித் தொடர்களுக்குத் துதி பாடி அதற்காக மட்டுமே வாழ்க்கையைப் பலியாக்கும் வேலைக்குச் செல்லா இல்லத்தரசிகளுக்குத் தெரியுமா?  காலத்தின் அருமை இவர்களுக்குத் தெரியாது.  நேரம் விரயமாவதால், வாழ்க்கை வீரியமாகாது என்பதை இவர்கள் அறியவில்லை.

அன்பு மாணவச் செல்வங்களே, இந்தப் புதிய கல்வி ஆண்டை ஆண்டவர் நமக்கு ஆசீர்வதித்துக்கொடுத்திருக்கிறார்.  இந்தப் புதிய கல்வி ஆண்டு உங்களுக்கு ஆசீர்வாதமான ஆண்டாக அமைய நான் ஜெபிக்கிறேன்.  காலத்தின் அருமை உங்கள் கையில்தான் உள்ளது.    விரல்களால் எண்ணிவிடக் கூடிய  குறுகிய நாட்கள் உள்ளன.  ஒவ்வொரு கட்டத்திலும் தேர்வுகளைச் சந்திக்க இருக்கும் மாணவ நண்பர்கள் நேரத்தின் அருமையை உணர்ந்து அதைப் பட்டியலிட்டுப் பயன் படுத்துவது அவசியம்.  எந்தப் பாடங்களை எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்ற முன்கணிப்பும், திட்டமும் இருக்க வேண்டும்.  கடினமான பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குதலும், படித்தபின் அவற்றை எழுதிப் பார்த்தலும் சாலச் சிறந்தவை.  ஆனால் குழுவாக அமர்ந்து நண்பர்களோடு படிக்கிறோம் (றூrலிற்ஸ்ரீ றீமிற்dதீ) என்ற பெயரில் வெட்டிப் பேச்சு பேசி நேரத்தை வீணடிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.  கண்டிப்பாக கண்காணிக்கக் கூடிய ஒரு ஆசிரியரோ அல்லது பெற்றோரோ இல்லாதபோது குழுவாகப் படிக்கும் முயற்சியைக் கைவிடுதலும் தவிர்த்தலும் நலம் பயக்கும்.

வருடா வருடம்  பொதுத் தேர்வுகளின் போது மாணவர்கள் சந்திக்கும் சவால் கிரிக்கெட் போன்ற தொலைக்காட்சி ஒளிபரப்பு.  ஒரு முறை பார்த்து விட்டுப் போய் படிக்கலாம் என்ற எண்ணத்தோடு தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்கின்ற மாணவர்கள்  நேரத்தை வீணடிப்பது மட்டுமல்ல தாம் விரும்பிய வீரர்கள் நன்றாக விளையாடவில்லை என்றால் வருகின்ற மனச் சோர்வு, ஆத்திரம் இவற்றால் தேர்வு மீதுள்ள கவனம் எங்கோ திசைமாறிச் செல்லுகிறது.  தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வலுவான எண்ணம் வலுவிழந்து போகிறது.  40 மதிப்பெண் எடுத்தால் போதும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.  இதை அறிந்த பெற்றோர் இணைந்து “இவை வேண்டாம்” என்ற ஒரு தியாக முயற்சியில் ஈடுபட்டால் கோடி நன்மை கிடைக்கும்.

பன்னிரெண்டாம், பத்தாம் வகுப்பு மாணவர்கள் கவலையில்லாத காலத்தைக் கரைக்கும் மாணாக்கர் சந்திக்க இருக்கும் விளைவுகளை இப்போதே எண்ணிப் பார்ப்பது நலம்.  நீங்கள் வீணடிக்கும் ஒவ்வொரு மணித் துளியும் உங்கள் வெற்றி வாய்ப்பை விலக்கிவிடும் சக்தி படைத்தது என்பதை உணர்ந்தீர்களா?  சாதனைச் சிகரங்களிலிருந்து சற்றுத் தொலைவிலேயே உங்களை நிறுத்திவிடும் சக்தியுடையது என்பதை அறிந்திருக் கிறீர்களா?  நீங்கள் விரயமாக்கும் ஒவ்வொரு மணித் துளியும் உங்களை முதல் ரேங்கிலிருந்து முப்பதாவது ரேங்கிற்கும், நூற்றுக்கு நூறு மதிப்பெண்களிலிருந்து நாற்பது மதிப்பெண்களுக்கும் இழுத்துச் செல்லக்கூடியது என்பதை எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?  இல்லை என்றால் இப்போதே எண்ணிப் பாருங்கள், உணர்ந்து கொள்ளுங்கள்.

காலத்தை வீணாக்குவதால் இழந்து போகின்ற ஒரே ஒரு மதிப்பெண்ணினால் சிலரின் தலைவிதியே மாறிப்போன வரலாற்று நிகழ்வுகளை நான் பார்த்திருக்கிறேன்.  ஒரே ஒரு மதிப்பெண் குறைவினால் வெற்றியை நழுவவிட்டவர், தான் சாதிக்க வேண்டும் என்ற மருத்துவ படிப்பையும் தவறவிட்டவர்களையும் பார்த்துப் பரிதாபப்பட்டிருக்கிறோம்.  கையிலிருக்கும் காலம் பொன்னானது என்பதை நீங்கள் இப்போதே உணர்ந்து செயல்பட்டால் விபரீதங்களைத் தவிர்க்கலாம், வேண்டி விரும்பிய வெற்றியைக் குவிக்கலாம்.
பொன்னான நேரம் உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளை எட்டிப் பிடிக்கும் ஏணிப்படிகள்.  எனவே நேரத்தை நேர்த்தியாய்ச் செலவிட்டு நீண்ட நாள் கனவுகளை நனவாக்க வாழ்த்துகிறேன்.             

0 comments:

Post a Comment