கல்வி வணிகர்களை ஜெயிப்பது எப்படி?


(திருச்சபை கல்வி நிறுவனங்களுக்கான சில ஆலோசனைகள்)

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை சமூகத்திற்கு ஆற்றும் தொண்டாக இருந்த கல்வி மெதுவாக வணிகமாகி இன்று மிகச் சிறந்த லாபம் ஈட்டும் தொழிலாக மாறி நிற்கிறது.

இன்று கல்வி வணிகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து கணிசமாய் பணம் பண்ண ஆரம்பித்துள்ளனர் பணம் படைத்தவர்கள்.இலாபம் ஒன்றே இவ்வணிகக் கூட்டத்தின் பிரதான நோக்கமாக இருப்பதனால் அதனை முழுமையாய் அடைவதற்குரிய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
பிரமிப்பூட்டும் கட்டிட வசதிகள், பேருந்து வசதிகள், கணினி, இன்டர்நெட் போன்ற அதி நவீன தகவல் நுட்ப வசதிகள் போன்ற பகட்டான வசதிகளை ஏற்படுத்தி சமூகத்தைப் பரவசப்படுத்துகின்றனர்.

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பின் தேர்ச்சி விகிதம், மதிப்பெண் இவைகளே சிறந்த கல்விக் கூடத்தின் அளவுகோள்களாக இன்றைய பெற்றோரும் சமூகமும் கருதுவதால் தம் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள், சிறப்புப் பயிற்சிகள், சிறப்புச் செயல்பாடுகள் எனப் பல்வேறு விதமான செயல்களில் ஒரு இயந்திரம் போல் படி, எழுது, படி, எழுது என மாணவர்களைத் திரும்பத் திரும்ப ஈடுபடுத்தி அந்தத் தேர்ச்சி விகிதத்தையும் எட்டிப் பிடித்துவிடுகின்றனர்.  அவைகளை அப்படியே பத்திரிக்கை, டி.வி.களில் விளம்பரமாக்கி, தொடர்ந்து தங்கள் வணிகத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர்.  இவர்களின் அதிக கொள்ளையடிக்கும் போக்கினால்தான் பள்ளிக் கட்டணம் நிர்ணயிப்பதில் அரசு தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்வியைச் சேவையாக, தொண்டாகக் கருதி ஆரம்பிக்கப்பட்ட பல கல்வி நிறுவனங்கள் இந்தக் கல்வி வணிகக் கூடங்களின் அபார வளர்ச்சியோடு போட்டி போட முடியாமல், தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.  குறிப்பாக திருச்சபையின் கல்வி நிறுவனங்களும், திருச்சபைக்கு முகவரி கொடுக்கும் அதன் கல்விப் பணியும் கவலைக்குரிய நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பரிதாபமாய் உள்ளன.

இந்நிலையில் நாம் மேற்கொள்ள வேண்டிய அவசர சிகிச்சை என்னென்ன என ஆராய்தல் அவசியமாகிறது.  அந்த வகையில் நாம் என்ன செய்யலாம்?  எப்படி  இவர்களை மேற்கொள்ளலாம்? என சில ஆலோசனைகளை முன் வைக்க விரும்புகிறேன்.

இலக்கில் தெளிவு :
நாம் ஏற்கெனவே சுட்டியதுபோல் இலாபம் ஒன்றே கல்வி வணிகர்களின் இலக்காக இருப்பதை நாமும் நமது இலக்காக ஏற்க முடியாது.  எனவே நமது கல்விப் பணிக்கென ஒரு தெளிவான இலக்கை நாம் முதலில் நிர்ணயம் செய்திடல் வேண்டும்.

உண்மை, உழைப்பு, உயர்வு போன்ற விருதுவாக்குகளை தேர்ந்தெடுத்து அவற்றைப் பள்ளியின் சுவரிலும், கால அட்டவணையிலும் பதிவு செய்துவிடும் நமது பள்ளிகளில் பல  இன்னும்  தமது இலக்கை நிர்ணயம் செய்யாமலேயே இருக்கின்றனர் என்பதை நாம் கவனமுடன் கவனிக்க வேண்டும்.

கல்வியின் இலக்கான, “முழு ஆளுமை பெற்ற மனிதனை உருவாக்குவது” என்பதையே நமது பள்ளிகளின் இலக்காக நாமும் கொள்ளலாம்.  தெளிந்த பார்வையுடன் நிமிர்ந்த நடையுடன் அவ்விலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

மதிப்பெண், தேர்ச்சி விகிதம் இவைகளை எப்படியாவது பெறச்செய்து தங்களது இலாபத்தைப் பெருக்குவதில் நோக்கமாக இருக்கும் கல்வி நிலைகளுக்கு  மாற்றாக நமது கல்வி நிறுவனங்கள் நமது மாணவர்களை முழுமையான ஆளுமையுடைய மனிதர்களாக ஆக்குவதையே நோக்கமாகக் கொண்டு, மாணவர்கள் வெறும் மதிப்பெண், தேர்ச்சி விகிதங்களில் மட்டுமல்லாது, அறிவு (Knowledge),  திறமை (Talents), மனநிலை (Mindset) ஆகிய மூன்றிலும் மா(ஏ)ற்றம் பெற்றவர்களாக வெளியே வருவதில் கவனம் செலுத்திட வேண்டும்.

முழு ஆளுமை பெற்ற மனிதர்களை உருவாக்குவதே எம் பள்ளியின் நோக்கம் என்பதைத் தெளிவாக நம் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் ஒவ்வொருவரும் அறிந்திடும் வண்ணம் பதிவு செய்திடல் வேண்டும்.  சுவரில் எழுதி வைப்பதோடு நின்றுவிடாமல் இதனை வலியுறுத்தியே நமது ஒவ்வொரு அசைவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.  பெற்றோர், ஆசிரியர் கூட்டங்கள் போன்ற நேரங்களில் இதற்கான புரிதலை ஏற்படுத்திட வேண்டும்.

ஆய்வுக் கூடங்கள் :ஒரு சாக்பீஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் கூட அப்பொருளின் தரத்தை உயர்த்த தொடர்ஆய்வுகளும் அதற்கான ஆய்வுக்கூடமும் இருக்கின்றன.  ஆனால் மனிதர்களை உருவாக்கும் பள்ளிகளில் அப்படிப்பட்ட ஆய்வுகள் இல்லை, ஆய்வுக் கூடங்களும் இல்லை.  “முழு ஆளுமை பெற்ற மனிதனை உருவாக்குவது” என்கிற நமது இலக்கின் உண்மையான பொருள் என்ன?  இந்த இலக்கை எட்டிட என்னென்ன செய்திடல் வேண்டும்?  ஏன் ஒருவனை இப்படி உருவாக்க வேண்டும்?  மனிதனாக உருவாக்குவது எப்படி?  ஆளுமை பெறச் செய்வது எப்படி?  முழுமைக்கு இட்டுச் செல்வது எப்படி?  நமது பாடப்புத்தகங்கள், அதன் உள்ளடக்கங்கள் இந்த இலக்கை எட்டுவதற்குப் போதுமானவைதானா?  மாணவர்கள் தங்கள் அறிவில், திறமையில், மனநிலையில் ஏற்றம் பெற நாம் செய்ய வேண்டியது என்ன?  என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேடும் ஆய்வுக்கூடமாக நமது பள்ளிக்கூடங்கள் மாற்றப்பட வேண்டும்.

இத்தகைய ஆய்வுகள் பள்ளிகள் தோறும் இல்லையயன்றாலும் மறை, மாநில (Province) அளவில் உள்ள நிறுவனங்களுக்குள் ஒன்று என்கிற அளவிலாவது கட்டாயம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.  இன்றைய நாளில் பேசப்படும் (Chain of Schools, Group of Schools)  போன்றவைகளை ஏற்கெனவே நாம் கொண்டிருந்தும் அதனைச் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோம்.  நமது பள்ளிகள் தனித் தனியாக தொடர் பற்றுச் சிதறிக் கிடப்பதை நிறுத்தி, நமது சபைகள் அளவில் அல்லது Province அளவில் அவைகளை ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியாக ஆய்வுகளில் நம் பள்ளிகளை ஒன்றாக ஈடுபடுத்தலாம்.

வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ நமது தலைமை ஆசிரியர்களை மட்டும் ஓரிடத்தில் கூட்டுவதால் மட்டும் ஒருங்கிணைப்பைக் கொணர முடியாது.  மாறாக நமது பள்ளி ஆசிரியர்கள் அளவில், மாணவர்கள் அளவில் அந்த ஒருங்கிணைப்பு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.  இத்தகைய ஆய்வு முறைகள் நமது பயணத்தைத் தெளிவாக வழிநடத்திச் செல்ல உதவும்.  இப்படி திருச்சபை நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டால் அரசின் கல்விக் கொள்கையில்கூட நாம் அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
 
மாணவர்கள் பெற வேண்டிய அறிவு எது?  திறமைகள் எவை?  அடைய வேண்டிய மனநிலை எது?  என்பதுடன் அவைகளை அடையச் செய்யும் வழிமுறைகள் என்ன?  என்பதைத் தொடர்ந்து ஆய்வு செய்து தேடிப் பெற்றதைத் தமிழகமெங்கும் பல பள்ளிகளுக்குப் பயிற்சியாகக் கொடுத்துவரும் என் அனுபவத்தில் உரக்கச் சொல்லுகிறேன், நமது பள்ளிகள் இத்தகைய ஆய்வில் ஈடுபடுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.  அதுவே தகுதியும் நீதியுமாகும்; 

திறமைகள் வளர்ப்பு :
நமது பள்ளிகளில் கையாளப்படும் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் மாணவன் சில திறன்களைப் பெற்றிட வேண்டும்.  பாடத்தினை நடத்தி அதில் தேர்வு வைத்து விடுவதால் மட்டும் மாணவன் அந்தத் திறமையைப் பெற்றுவிட முடியாது.  எனவே நமது பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் பெறுவதைவிட திறமைகளைப் பெற்று வளரச் செய்வது நமது கடமையாக இருத்தல் வேண்டும்.
உதாரணமாக, தமிழைத் தாய் மொழியாக 10 ஆண்டுகள் நம் பள்ளியில் பயிலும் மாணவன் சுய சிந்தனையில், தானாக, கொடுத்த தலைப்பில் பேசிடவும், கதை, கட்டுரை, கவிதை போன்ற மொழியின் பல்வேறு கூறுகளில் எழுதி தனது சிந்தனையை வெளிப்படுத்தவும் ஆற்றலைப் பெற்றிட வேண்டும்.  அங்ஙனமே ஆங்கில மொழியில் நான்கு வாக்கியங்களாவது சுயமாக பேசவும், எழுதிடவும் கூடிய திறமை வேண்டும்.  கணிதப் பாடத்தின் வழியாக Test of Reasoning, Logic Mind போன்ற அறிவுத் திறமை பெற்றிட வேண்டும்.

சுருங்கக் கூறின் பாடப்புத்தகத்தில் கேள்விக்கான பதிலைக் குறித்துக்கொடுத்து, பின்பு முக்கியமான கேள்விகளைக் குறித்துக்கொடுத்து அவற்றை மட்டும் திரும்பத் திரும்ப அர்த்தம் புரியாமல்கூட படிக்க வைத்து அப்படியே எழுதிடச்செய்யும் தன்மையிலிருந்து விடுபட்டு நமது மாணவர்கள் திறமைகளில் வளர நாம் அதிக கவனம் செலுத்திடல் வேண்டும்.  இந்தத் திறமைகள் Curricular மற்றும் Extra-Curricular இரண்டிலும் பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.

எங்கள் பள்ளியில் சேர்ந்தால் உங்கள் பிள்ளை அறிஞன் ஆவான், பொறிஞன் ஆவான், மருத்துவன் ஆவான் என ஆசை காட்டி சமூகத்தைக் கவர்ந்திழுக்க விளம்பரம் செய்து கல்லா கட்டும் நபர்களிடமிருந்து நாம் மாறுபட்டு எம் பள்ளியில் படித்தால் உங்கள் பிள்ளை நல்ல மனிதனாவான்;  இறுதிவரை உங்களுக்குப் பிள்ளையாய் இருப்பான் எனச் சமூகத்திற்கு நாம் காட்டிட வேண்டும்.  இந்த மன நிலையைப் பெற்று திறமை, அறிவுடன் கூடிய பொறிஞனாய், மருத்துவனாய் அவனால் ஆகிவிட முடியும் என்றும் நாம் சமூகத்திற்கு உணர்த்திட வேண்டும்.

கல்வியாளர்கள் வெறும் வல்லவர்களை உருவாக்க முயற்சிக்கின்ற வேளையில் நமது நிறுவனங்கள் நல்லவர்களை முதலில் உருவாக்க முயற்சித்து பின்பு அவர்களை வல்லவர்களாகவும் உருவாக்க முயன்றிட வேண்டும்.  இத்தகைய இரட்டைச் செயல்பாட்டால் நமது செயல் வேகம் மற்ற  நிறுவனங்களைவிட குறைந்துகூட போகலாம்.  ஆனால் இறுதி வெற்றி நம்முடையதே.  ஏனெனில் “முழு ஆளுமை பெற்ற மனிதனை உருவாக்கவே” என்கிற கல்வியின் இலக்கைச் சமூகம் எட்டிப்பிடிக்க நாம்தான் வழிகாட்டி நிற்கின்றோம் என்கிற மன நிறைவையும் நல்ல மனிதர்களையும் நாம்தான் பெற முடியும்.

இதனைச் சரியாய்ப் புரிந்து கொண்டு முறையாய் முயற்சித்துப் பார்ப்போம்.   சமூகத்தைச் சரிப்படுத்தும் கருவியாய் கல்வியைக் கவனமாய்க் கையாளுவோம்!
சகோ. பிலோ F.S.J.
கருமண்டபம், திருச்சி

0 comments:

Post a Comment