ஆசிரியர் பக்கம்

15 நாட்கள் மேலும் நீட்டிக்கப்பட்ட கோடைவிடுமுறை முடிவடையும் நேரம்.  மீண்டும் புதிய கல்வியாண்டைத் (2011-2012) தொடங்கும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!  கற்பிப்போர், கற்போர் அனைவருமே வளமும் நலமும் பெற்று வாழ ஜெபிப்போம்.
2011 ஜுன்  முதல் 2012 ஜுன் வரை நம் திருச்சபை மறைக்கல்வி ஆண்டைக் கொண்டாடுகிறது.  நமது பங்குகளில், பள்ளிகளில் நமக்குள்ள சிறப்புத் திட்டமாக இம்மறைக்கல்வி வகுப்புகள் தரப்படுவதால் இறையறிவும் ஞானமும் வளர வழி பிறக்கிறது.  அனைத்துப் பள்ளிப் பாடங்களோடு மறைக்கல்வி/நன்னெறிப் பாடங்கள் கற்பிக்கப்பட்டாலும் அவற்றிற்கான முக்கியத்துவம் இன்னும் உணரப்படாமலேயே மறைந்தும் விடுகின்றது.  மறைக்கல்வியின் மேன்மையையும் அது நம் நிறுவனங்கள், பங்குகள் அளவில் செயல்படுத்தப்பட வேண்டிய தேவையையும் உணர்த்தும் இவ்வாண்டில் மறைக்கல்விச் செயல்பாடுகள் சிறக்க வாழ்த்துவோம்.  இணைந்து செயல்படுவோம்.
  
ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பாதைகளைத் தேடும் நோக்கில் இக்கல்வி ஆண்டு முழு மனித வளர்ச்சி தருவதாக அமைய வேண்டும்.  மனிதனுக்குள் அறிவு (knowledge) மட்டுமல்ல அதைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறும் ஞானமும் (Wisdom) அதன் விளைவான ஆன்மீகம், பொருளுள்ள கலாச்சாரம், ஒழுக்க வாழ்வு இவை இன்றைய சமூக மனிதருக்குத் தேவைப்படுபவை.  கல்வியில், கண்டுபிடிப்பில் முன்னேறும் இச்மூகத்தில் நிறைவான வாழ்வும், மகிழ்வான சூழலும், சமாதானச் சுவடுகளும் குறைந்து போகக் காரணமே ஒட்டு மொத்த வளர்ச்சி என்றில் லாமல் படிப்பறிவு மட்டுமே முன்னிலை பெறுவது.
வேகமாக வளரும் (?) இன்றைய மனித முன்னேற்றத்தை நினைக்கும் போது எதிர்காலச் சந்ததிகள் உண்மையான நிறைவைக் காண்பார்களா! என்ற சந்தேகமே வலுக்கிறது.  மனித வளர்ச்சி மற்றும்  வளத்தின் உண்மையை உணருவோம்... அவ்வளர்ச்சி வெறும் அறிவு சம்பந்தப்பட்ட கல்வியில் மட்டுமல்ல அதற்கு மேலான ஒழுக்கக் கல்வி என்று பலதரப்பட்ட உயர் கல்விகள் கற்பிக்கப்படல் கட்டாயமே.  இங்கும் “கல்வி” என்ற வார்த்தையை நான் பயன்படுத்தும் போது “தேர்வு”, “மதிப்பெண்”, “பாடத்திட்டம்” என்பன வற்றை நான் மையப்படுத்தவில்லை.  மாறாக, மேற்கூறிய வார்த்தைகள் - அவற்றின் அர்த்தங்கள் எல்லாமே வாழ்வோடு இணைந்து கொள்ள வேண்டும் என்பதே பொருள்.

பரபரப்பான இச்சமூக வாழ்வில் சில சமயங்களில் பெற்றோர்கள் இக்கருத்தை உணர்ந்து செயல்படாத நிலையில் - ஒருவேளை உணர்ந்தாலும் அதைத் தம்  பிள்ளைகளுக்குச்  சொல்லித்தர நேரம் கூட இல்லாத நிலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியப் பெருமக்களும் நிறுவனங்களும் இப்பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை உள்ளது.  இது காலத்தின் தேவை என்பதை உணர்தல் வேண்டும்.  நல்லவற்றைப் பற்றிக் கேள்விப்படாமலேயே இத்தலைமுறை வளர்ந்தால், நலமான சமூகம் என்பது இல்லாமலேயே போய்விடும் அபாயம் உண்டு.

அறிவு ஜீவிகளை மட்டுமல்ல; ஆன்மீக ஒழுக்க உயர்பண்பாடு , கலாச்சார மனிதரை உருவாக்கும் பணியில் ஈடுபட நம்மை அர்ப்பணிப்போம்.  இக்கல்வியாண்டில் இத்தொடக்கச் சிந்தனை மேன்மையுடையதாய் அமையட்டும் !

சே. சகாய ஜாண்

0 comments:

Post a Comment