உழைப்பின் பலன்

இறையழைத்தல் பணியின் விறுவிறுப்பான நாட்களைப் பல்வேறு எதிர்பார்ப்புகளோடும், நம்பிக்கையோடும் இம்மாதத்தில் எதிர்கொண்டிருக்கிறோம்.  ஏறக்குறைய அனைத்து மறை மாவட்டங்களும், துறவற சபைகளும் இறையழைத்தல் முகாம்களுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்வுகளைச் செய்து கொண்டிருக்கிற காலம் இது.  முகாம்களுக்குப் பின் புதிய மாணாக்கரைக் குருத்துவ, துறவற வாழ்வுக்காகப் பயிற்சிக்கத் தேர்ந் தெடுப்பதில் கவனம் செலுத்துக்கிற நாட்கள் இவை.  எல்லாமே சிறப்பாக நடந்தேற வாழ்த்துக்களும் ஜெபங்களும்!
சில முகாம்களுக்கு நேரடியாக சென்று வந்தேன்;  பலரிடம் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு விசாரித்தேன்.  உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது என்ற உணர்வும், இன்னும் சற்று அதிக நபர்கள் முகாம்களில் கலந்திருந்தால் நலமாக இருந்திருக்குமே என்ற எண்ணமும் வெளிப்படுகின்றன.  முகாம்களுக்கு இத்தனை நபர்கள் வந்திருந்தாலும் +2, 10‡ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்த பின் இறுதி எண்ணிக்கை எவ்வளவாக இருக்குமோ என்ற ஏக்கமும் நமக்கு இருக்கிறது.  எப்படியாயினும் அழைத்தவர் தாம் குறித்து வைக்கிறவர்களைக் கூட்டிச் சேர்ப்பார் என்ற நம்பிக்கை உண்டு.  எண்ணிக்கை பெரிதா?  சிறிதா?  என்பதைவிட வந்து சேர்வோரின் தன்மைகளும் அர்ப்பணமுமே கவனத்தில் அதிகம் கொள்ள வேண்டி யுள்ளது.  “ஏதோ சேர்வோம் ‡ படிப்போம் ‡ முடிந்தால் இருப்போம்.  இல்லையயன்றால் வந்துவிடுவோம்” என்ற எண்ணத்தில் உள்ளோர் பெரிதாய் இருக்காமல்,  “உறுதியோடு செல்கிறேன் ‡ சவால்களைச் சந்தித்து சிறப்பாகச்  செயல்படுவேன் ‡ கடவுள் எனக்குள் செயலாற்றட்டும்” என்னும் உள் உணர்வுகளோடு வருவோரையே பெரிதாய் ஏற்போம்.
இறையழைத்தலை ஊக்குவித்த வர்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிப்போம்.  குருக்கள், துறவிகள், பொதுநிலையினர், பெற்றோர் என்று எல்லாத் தரப்பினருமே இறையழைத்தலுக்காக உழைக்கிறார்கள். சில இடங்களில் பொதுநிலையினரும் மாணாக்கரை முகாம்களுக்கு ஊக்குவித்திருக் கிறார்கள் என்பது மகிழ்ச்சி தருகிறது.  நம் பணியில் குருக்கள், துறவிகள் மட்டும் கலந்து விடவில்லை.  மாறாக பொது நிலையினரும் இப்போது சிறப்பிடம்  வகிக்கிறார்கள் என்பது பெருமைக்குரியதே.
­ தமது அழைத்தல் குறித்துக் குழம்பிப்போன நிலையில் தனது வாழ்வு பற்றிய தெளிவைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு மாணவர் என்னைச் சந்தித்தார். தமது அழைத்தலைப் பற்றிப் பெற்றோரிடம் பேசும்போது சில சமயங்களில் “சரி” என்றும் வேறு சில நேரங்களில் “வேண்டாம்” என்றும் கூறும் பெற்றோரின் பதில்களால் குழம்பிப்போய் இருப்பார்.  அதோடு இறைபணி ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறவர் கூறிய வார்த்தை மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது: “நானே இங்கு கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.  நீயும் வந்து துன்பப் படப் போகிறாயா?” என்றவரின் வார்த்தைகள் மேலும் குழப்பத்தை உருவாக்கியதாகப் பேசினார்.
­ இறையழைத்தல் வாரம் / ஞாயிறு கொண்டாட்டம், முகாம்கள் என்று பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து மாணாக்கரை ஊக்குவிக்கும் பணியாளர்களில் இன்னும் சிலர் தமது அழைப்பின் மேன்மையை உணர வேண்டியுள்ளது.  குருத்துவ மற்றும் துறவற வாழ்வை இனிமையான ஒன்றாகப் பார்க்காமல் சுமையாகக் கருதுவோர் தமது அழைத்தல் வாழ்வைச் சுவையான ஒன்றாகக் கருதி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.  அப்பொழுது மட்டுமே எல்லோரும் இறை யழைத்தலை ஊக்குவிக்க முடியும்.  ஒரு சிலர் மூலமாகவே முட்டுக் கட்டைகள் இடப்பட்டால் இதற்காக உழைக்கும் பலரின் உழைப்பு வீணாகும்.
­“என்னதான் இறையழைத்தல் பற்றி அறிவிப்பு கொடுத்தாலும், பேசினாலும், விளம்பரங்கள் தந்தாலும் இக்கால மாணாக்கர் துறவறத்துக்கு வர முன்வர வில்லையே” என்ற ஏக்கங்கள் பலடமிருந்து வெளிப்படுகின்றன.  சில நாட்களுக்கு முன்பு ஒரு துறவற இல்லத்தில் அழைப்பு பற்றிப் பேசினேன் பின்பு கலந்துரையாடல் வேளையில் ஒரு சகோதரி, “தமிழக இறையழைத்தல் பணிக்குழு தமது கூட்டங்களில் முகாம்கள் நடத்துவதற்கான பல்வேறு செயல்பாடுகள், வழிமுறைகள் சொல்லித் தருவதை விடவும், ஒவ்வொருவரும் எப்படி சாட்சிய வாழ்வு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்” எனக் கூறினார்.  மகிழ்ச்சியான செய்தி.  ஏற்கனவே இக்கருத்து பல முறைகளில், பல கூட்டங்களில் வலியுறுத்தப் பட்டுள்ளது.  ஆனால் இக்கருத்து கூறப் பட்டாலும் அது ஒவ்வொருவரின் மனச்சாட்சியோடு, தற்கை யளிப்போடு, தனிப்பட்ட சிந்தனைத் தெளிவோடு இணைந்துள்ளது.   மனநிலை மாற்றம் தேவை எனச் சொல்லலாம்;  கருத்துக்கள் பகிரப்படலாம்.  ஆனால் இறுதியான செயல்பாடு ஒவ்வொருவரின் தனிப்பட்ட உறுதிப்பாட்டைச் சார்ந்தது.  ஒவ்வொரு இறைப்பணியாளரும் நிறைமனநிலை பெற வேண்டும் என்றே விரும்புகிறோம்.  இச்சாட்சிய வாழ்வே பலரைக் கவர்ந்து, நல்லவர்களை உருவாக்கும்.  சொற்களைவிட செயல்கள் இறையழைத்தலை உருவாக்கும்.  இக்கடமை எல்லாப் பணியாளருக்கும் உரியது.
எனவே அனைவரின் நல் முயற்சியோடும், சிந்தனையோடும் வாழ்வோடும் இறையழைத்தல் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.  இறை குரலுக்குச் செவிமடுக்கும் உள்ளங்கள் பெருக ஜெபிக்கிறேன்.  அவர்களை இனம் கண்டு பணிக்கு அழைக்கும் இறையழைத்தல் ஊக்குநர்களின் உழைப்பு மேன்மைப்பட 
பாராட்டுகிறேன்.
சே. சகாய ஜாண்

கருணை நிறைந்த தலைமை - சகோதரி அன்டோனியா வாழ்க்கை

மெக்சிகோவில் உள்ள லா மெசா சிறையில் பயங்கரக் கலவரம்.  அறநூறு பேர் மட்டும் இருக்கக் கூடிய ஒரு இடத்தில் 2,500 பேர் அடைக்கப்பட்டிருந் தார்கள்.  அவர்கள் உடைந்த பாட்டில்களை ஆத்திரத்துடன் காவல்துறையினர் மீது வீசிக் கொண்டிருந்தார்கள்.  போலீசார் திருப்பி அவர்களை இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந் தார்கள்.  அப்போது திகைக்க வைக்கும் ஒரு காட்சி . . .
ஐந்தடி இரண்டங்குல உயரமே இருந்த குள்ளமான ஒரு 63 வயதுப் பெண்மணி, அமைதியை வேண்டுவது போல் தன் கைகளை விரித்துக் கொண்டு கூட்டத்திற்குள் புகுந்தார்.  துப்பாக்கிக் குண்டுகள மழையாகப் பொழிவதைப் பொருட் படுத்தாமல் ஒவ்வொருவரையும் பார்த்து சண்டையை நிறுத்தச் சொல்லிக் கேட்டார்.  என்ன ஆச்சர்யம்!  எல்லோரும் சண்டையை நிறுத்தினார்கள்.
சகோதரி அன்டோனியாவைத் தவிர உலகில் வேறு யாரும் இதைச் செய்திருக்க முடியாது.  அவர் சொன்னதை மட்டும் அவர்கள் ஏன் கேட்டார்கள்?  ஏனென்றால் பல ஆண்டுகளாக அவர் அந்த சிறைக் கைதிகளுக்குத் தன் சுய விருப்பத்தின் பேரில் சேவை செய்து வந்தார்.  தன் வாழ்நாள் முழுவதையும் கொலைக் காரர்கள், திருடர்கள், போதை மருந்து வியாபாரிகள் போன்ற கைதிகளின் நலனுக்காகத் தியாகம் புரிந்திருந்தார்.  அவர்களைத் தன் மகன்கள் போல நடத்தி வந்தார்.  24 மணி நேரமும் அவர்களது தேவை அறிந்து உதவினார்.  ஆண்டிபயாடிக் போன்ற மருந்துகள், மூக்குக் கண்ணாடிகள் போன்ற வற்றை வாங்கித் தந்தார்.  நல்லடக்கம் செய்யப்பட இருந்த உடல்களை குளிப்பாட்டி விட்டார்.  தற்கொலை எண்ணத்தில் இருந்த வர்களை அறிவுரைகள் மூலம் தடுத்து நிறுத்தினார். அந்தத் தன்னலமற்ற அன்பும் கருணையும் கைதிகளிடம் அவருக்கு மரியாதைத் தேடித் தந்திருந்தது.  தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு அவர் என்ன செய்யச் சொல்கிறாரோ அதைச் செய்யுமளவுக்கு மரியாதையை ஏற்படுத்தி இருந்தார்.  இது மனித குலத்திற்கு எத்தனை மகத்தான செய்தி!  சிறைக்கைதிகளுக்கு நடுவே நட்ட கருணை நிறைந்த ஒரு தலைவர் இருக்கிறார்.  ஆனால் உலகில் உள்ள, குரலெழுப்பத் திராணியற்ற பல லட்சக்கணக் கான மக்குளுக்குக் கருணை நிறைந்த தலைவர்கள் வேண்டும்.

இன்றைய குருத்துவம், குருக்கள் வாழ்க! உயர்க!

டியர் குட்டீஸ்!
முனிவர் ஒருவர் ஓர் கிராமத்தின் வழியே செல்கிறார்.  மாலையாகிவிட்டது.  அயர்வும் சோர்வும் சேர கிராமத்தின் விளிம்பில் இருந்த வயல்வெளியிலேயே வரப்பின் மீது தலை சாய்த்தவராகப் படுத்து உறங்கிவிடுகிறார்.  அந்த வழியே கிராமத்தின் குளம் இருப்பதினால் தண்ணீர் மொள்ள ஐந்தாறு பெண்கள் போய்க்கொண்டிருந்தனர்.  முனிவர் உறங்குவதைப் பார்த்த அப்பெண்களில் வாயாடி ஒருவர் “இந்த சாமியார் எல்லாவற்றையும் துறந்து விட்டேன் என்று வாழ்கிறார்.  ஆனால் தலையணை வைத்து தூங்கும் வழக்கத்தை மட்டும் விட்டுடலை பாருங்களேன்” என்று போகிற போக்கில் சொல்லிக்கொண்டு போகிறார்.  இந்தப் பேச்சைக் கேட்ட சுவாமிகள் தனது நிலையை நொந்து வரப்பிலிருந்து தலையை விலக்கி வயலிலேயே சமமாகப் படுத்துவிடுகிறார்.  தண்ணீர் மொண்டு திரும்பி வருகையில் குருவில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்டு இன்னொரு வாயடிக்கும் பெண் “எல்லாத்தையும் துறந்துவிட்டேன்னு சொல்லறாங்க; இந்த ஒட்டு கேட்கிற பழக்கம் மட்டும் போகலையே!” என்று சொல்ல அனைவரும் சிரித்துக் கொண்டே போய்விடுகின்றனர்.  குருவிற்குத் தர்ம சங்கடம் . . .  என்ன செய்தாலும் இவர்கள் விமர்சிக்கிறார்களே! என்று.
இப்படித்தான் இந்த உலகம்; குரு பொது வாழ்வை மேற்கொள்கிறார் என்று தெரிந்தும், இறை மனிதன் என்று தெரிந்தும் திருத்தந்தை முதல் பங்குக் குரு வரை மிகவும் விமர்சனக் கண்ணோட்டத்தோடும், வாய்க்கு வந்தபடி தரமில்லாமலும் பேசுவதும் நடைமுறை, மனதிற்கு வருத்தமா யிருந்தாலும், குருக்கள் ஆண்டாக இந்த ஆண்டைக் கொண்டாடும் தருணத்தில், எதிர்காலத்தின் சிற்பிகளாகிய நீங்கள் இந்தக் குருத்துவத்தின் மேன்மை, குருவின் மாண்பினைப் புரிந்துகொள்ள ஒரு சில குறியீடுகள்:
இந்தக் குரு யார்?
* நமக்கு நெருக்கமானவர், தனது குடும்பம், சொந்தம், தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் அனைத்தையும் விட்டுவிட்டு, நம்மோடு இருக்க வேண்டும் என நமது பங்கிலேயே, நமது மத்தியில் நாம் தூரமான கிளைப் பங்குகளில் இருந்தாலும் தூரம் பாராமல் நம்மைச் சந்திக்கும் அன்புரு சகோதரனாய் நாம் வாழும் இடங்களிலேயே நம்மோடு இருப்பவர்.
* நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்க தன்னையே இறைவனுக்கு அர்ப்பணித்தவர்.  நமக்கு தங்களது இறை அனுபவத்திலிருந்து, இறை நெருக்கத்தின் விளைவாகவும் மறைந்திருக்கும் இறையை வெளிப்படுத்தி அவரிடம் கொண்டு சேர்க்கும் மரக்கலம் இந்தக் குரு.
* இறைவன் விரும்புவதைத் தங்களது வழிபாடுகளாலும் தினசரி செபங் களினாலும் பல வருடப் படிப்பு, களப்பயிற்சி, சிறப்புத் தியானங்கள், கருத்தரங்குகள் இவற்றினாலும் இறை ஏவுதல் பெற்று சாமான்யர் களாகிய நமக்கு இறை விருப்பத்தைப் புரியவைத்து அதனைச் செயல் படுத்தும் விதத்தையும் சொல்லி பக்குவப்படுத்தும் ஆசான் இவர்.
* நமது நிலையையும், நமது வாழ்வியல் சவால்களையும் தனது ஈடுபாட்டினால் உணர்ந்து நமது குடும்ப சந்திப்பு, கிராம வழிபாடுகள், தனிப்பட்ட உரையாடல், கலந்தா லோசிப்பு, உறவாடல் மூலமாக நமது வாழ்வில் தனது ஞானம், புத்திக் கூர்மையின் மூலம் நமது வாழ்வுக்கு விசையும் திசையும் காட்டும் கலங்கரை விளக்கம் இவர்.
* எந்த சபையிலும், எந்த மதத்திலும் இல்லாத மணத்துறவின் மூலம் நம் அனைவருக்ஞம் தந்தையாக, பணியின் மூலம் உடனுறை மேய்ப்பனாக, வழிகாட்டுதல் மூலம் ஆசானாய், எதிர்காலத்தைச் சொல்லும் தீர்க்கதரிசியாய், மதிப்பீட்டு வாழ்வின் மூலம் வாழ்வியல் பாடமாய் இருக்கிற இவரை நாம் ‘தந்தை’ என்று அழைக்கிறோம்.  ஏனெனில் இந்த அர்த்தம் பொதிந்த வார்த்தையை வேறு யாரும் பெறுவது கிடையாது.  வேறுபாடு பெற்றுக் கொள்வதில் அர்த்தமும் கிடையாது.  இவருக்கு நிகர் இவரே.
இப்படி கண்களுக்குத் தெரியும் இறை மனிதத் தலைவனை அதிகமதிகமாக நாம் பாராட்டுவோம்.  முடிந்தால் நாமும் இப்படிப்பட்ட நிலைக்கு நம்மையும் ஆட்படுத்துவோம்.  ஏனெனில் குருக்கள் ஆண்டில் இதுவும் ஓர் பரிசுதானே!

உலகின் பாவமில்லா முதல் துறவிகள்

கன்னி மரியாள் கணவனை அறியாளோ?
ஆவியின் கனி இயேசுவுக்குப்பின்
சூசை மரி கூடி வாழ்ந்தார்கள்
சோதரர் நால்வர் சோதரி ஒருவர்
வேதம் சொல்கிறது
சோதரி சோதரர் எல்லாம்
உடன் இரத்தப் பிறப்பா என்ன?
கன்னி கெடா கற்பு மரி
தூதரால் உணர்த்தப்பட்ட நீதி சூசை
ஆவியால் நிரப்பப் பட்டதால்
உலகின் பாவமில்லா
முதல் துறவிகள் அன்றோ?
நித்திய குரு இயேசு வழி
வழுவா வரம் கொண்ட மணத்துறவு
இறை இயேசுவின் திருக்குடும்பத்திற்கு
ஒப்புமை உண்டோ உலகில்?
சொல் மனமே சொல்!
ச. செல்வராஜ், விழுப்புரம்