ஒளி பிறந்தது

கிறிஸ்துமஸ் காலம் என்பது ஒவ்வொரு கிறிஸ்துவன் வாழ்வில், நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கும் காலம்.  ஒவ்வொரு வருடமும் புதிது பதிதாய் எதையாவது செய்து இயேசுபிரானின் வருகையை உறவுகளுடன், நண்பர்களுடன் கொண்டாடும் காலம்.  இந்த இனிய அனுபவம் ஒவ்வொரு வாழ்த்தையும் முகவரியிடும்போது “ஆஹா! நம் உறவு, நம் நட்பு, அந்த வசந்த காலங்கள்!” நினைத்தாலே மனதில் ஊற்றெடுக்கும் உன்னத உணர்வுகள்.  அவர்களை நாம் இன்னும் மறக்க வில்லை என்ற மன நிம்மதியினால் நமக்கும், நாம் இன்னும் நினைவில் நிற்கிறோம் என்கிற சந்தோ­த்தைப் பெறுபவர்களுக்கும் தரும் இனிய காலம்.
  வருடத்தின் கடைசி நாட்களைக் களிப்புடனும், புது வருடத்தில் புதிய நாட்களைப் பூரிப்புடனும் தொடங்கும் காலம்.  வீட்டைத் தூய்மைப்படுத்தும் போது அதனுடன் உள்ளமும் தூய்மை பெறும்.  இயேசு பாலன் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் பிறக்க வேண்டுமே என்கிற ஆதங்கம். கேரல்ஸ் கீதம் என்னும் முன்னறிவிப்புப் பாடல்கள் உடலையும் உயிரையும் சிலிர்க்கச் செய்யும்.  வீட்டை அலங்கரிக்கும்போது உலக அதிபதி நம் இல்லத்தில் பிறக்கப் போகிற பிரமிப்பு.  நட்சத்திரங்களை வீட்டு வாயிலில் கட்டும் போது “இதோ இந்த இல்லத்தில் மீட்பர் பிறந்துள்ளார்” என்கிற அங்கீகாரம்.  கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கும்போது “மரமே இவ்வளவு அழகென்றால் மனித மனம் எவ்வளவு அழகாக இருக்க வேண்டும்” என்கிற உணர்வு.  சின்னக் குடிலை அலங்கரிக்கும் போது “அவருக்கு நிழல் தருகிறோம்” என்கிற எண்ணமும், அதில் பாலன் இயேசுவைக் கிடத்தியதும், அவரின் எளிமைக் கோலம் கண்டு நம் மனதில் ஏற்படும் சிலிர்ப்பும் தாழ்மையும் சொல்லில் அடங்காத உணர்வுகளாகும்.
புத்தாடை அணிந்து, ஆலயம் சென்று வந்து, அறிந்தோர் தெரிந்தோருடன் அன்பைப் பகிர்ந்து, அறியாதவர்களையும் வாழ்த்தி . . .  அப்பப்பா!  இவ்வருடத்தின் சோதனைகள், சோர்வுகள், வியாதிகள், தோல்விகள், பிரிவுகள், பாவப் போராட்டங்கள் எல்லாம் கொஞ்சம் மறைந்துப் போக, புது வருடத்தை முறையாய் வரவேற்பதில், சகல ஆசீரும், சமாதானமும் குறைவின்றிக் கிடைத்திட ஜெபத்தோடு காத்திருக்கும் சுகமே சுகம்.
எல்லாம் வருடா வருடம் செய்து வந்தாலும் விக்கி மனதில் ஒருவித வெறுமை இருந்து வந்தது.  குற்ற உணர்வு ஒன்று அடிமனதில் குத்திக் கொண்டே இருந்தது.  வருடம் முழுவதும் மறந்தாலும் இந்த கிறிஸ்துமஸ் காலம் அவனில், அவனுடைய தவறைச் சுட்டிக்காட்டவே செய்தது.  எவ்வளவு பெரிய தவறை, நம்பிக்கைத் துரோகத்தைச் செய்து விட்டு நம்மால் எப்படி இவ்வளவு நிம்மதியாக இருக்க முடிகிறது!  தவறு செய்வது மானிட இயல்புதான்.  அந்தத் தவறுக்கும் மன்னிப்பு பெறுவதும், பிராயசித்தம் செய்வதும்கூட மானிட இயல்புதானே.  தவறு செய்யும் தைரியம் இருக்கும்போது அதற்கு மன்னிப்பு கேட்கும் தைரியமும் இருக்க வேண்டுமே,
யோசித்து யோசித்து தெளிவடைந்த விக்கி கடைக்குச் சென்று ஒரு அழகான கிறிஸ்துமஸ் வாழ்த்தட்டையை வாங்கி வந்தான்.  வாழ்த்துக்களோடு கூட ஒரு கடிதமும் எழுதினான்.  “பிரியமுள்ள தோழிக்கு, நண்பன் விக்கியின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.  உறவும் பிரிவும் வாழ்வில் சகஜம்.  உறவையும் தந்து, பிரிவையும் தந்த என்னால் உன்னிடம் மன்னிப்பு கேட்கவோ, பிராயசித்தம் செய்யவோ மனம் இல்லாமல் போய்விட்டது.  அது என் கோழைத்தனம்.  என்னால் நீ பட்ட மன உளைச்சலின் அளவு சொல்லில் அடங்காதது.  சொல்லில் அடங்காதது என்று  எனக்குத் தெரியும்.  இத்தனை வருட பாவத்திற்குப் பரிகாரமாய் இந்த வாழ்த்து அமையும் என நம்புகிறேன்.”
“என்னை மன்னிப்பாயாக.  இறை இயேசுவின் அருளும் ஆசீரும் உன்னை வழிநடத்தவும், உன் மனதிற்கு ஆறுதலும் அளிப்பதாக.  இனிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”.  ஏதோ ஒரு தைரியத்தில் எழுதி பிரியாவின் முகவரிக்கு அனுப்பினான்  விக்கி.  மனதில் இருந்த ஒரு பெரிய சுமை இறங்கியதைப் போலிருந்தது.  மன்னிப்பு கேட்டுவிட்ட மகிழ்ச்சியில் மன்னிப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையிலே கிறிஸ்துமஸின் உண்மை யான மகிழ்ச்சி மனதில் தோன்ற, “ஒளி பிறந்த”  தெளிவு மனதில் ஏற்பட்டது.
சாந்தி ராபர்ட்ஸ்

“வார்த்தை” மனுஉருவானவர்


கிறிஸ்துவின் பிறப்பு எங்ஙனம் நிகழும்?
கன்னி தூயஆவியால் கருத்தரிப்பது எப்படி?
தன் மூளை பலத்தால் எதையும்
பகுத்தாயும் மனிதன்
தூய ஆவியை நம்புவானா?
அவனிடம் உள்ள இரு வேறு
ஆவிகளைத்தான் இனம் காணுவானா?
மரபணு மூலம் மாற்றம் விளையும்
அதீத சிந்தனை
சிக்மண்ட் ஃபிராயடைத்தான் போற்றும்!
படைப்பு பரிணாமம் வெவ்வேறு
கூறுகள் என்றால்
மனிதம் அம்மூலக்கூறுகளின்
ஒருமித்த சங்கமம்
ஜென்மப் பாவம் இல்லா மாசற்ற மரியாள்
கண்ணுக்குப் புலப்படாத தூய ஆவியால்
கர்த்தரைப் பெற்றெடுத்தார் என்பது
சாதாரண மனித மூளைக்கு
எட்டாததுதான்
எதை எதையோ அறிவால் தேடும்
அறிவு ஜீவிகளே!
கடவுளின் ஞானத்தைத் தேடுங்கள்!
அவர்தம் ‘இறைவார்த்தை’யைப்
பற்றிப் பாருங்கள்!
அப்போது புரியும்
மனுஉருவானது நிஜம் என்று!
தூயவர் என்று!

ச. செல்வராஜ், விழுப்புரம்

Christmas Message from the Chairman

Dear Fathers / Brothers / Sisters,
Peace of the Babe of Bethlehem!
Loving greetings from Bishop Jude Paulraj. Jesus is born to bring us closer to God’s unconditional love. He came to give us all joy. peace and contentment which the world cannot give. We. priests and religious are called to be transmitters of those kingdom values.
We need to be kingdom people who have God on their side and not the world and worldly attitudes. Let us examine ourselves if we are such people of the Beatitudes! The Beabe of Bethlehem was himself a weak, vulnerable, totally dependent and ever losing person. That is why he attracts and will ever attract many to His kingdom.
Shall we then totally accept the challenges thrown by our Master Jesus who called us to be His disciples? Then we can be channels of peace and joy and also live our priestly and religious values to extend His kingdom.
Wish you Merry Christmas and joyous New Year!!
Yours in Jesus,
+Bishop Jude Paulraj A.
Bishop of Palayamkottai

கிறிஸ்துமஸ் - கிறிஸ்தவத்தில் பெரும் விழா.


தமது பிறந்த நாள் கூட அறிந்திராத மக்கள், ஒருவேளை அது தெரிந்திருந் தாலும் அந்நாளை விழாவாக இதுவரை கொண்டாடியிருக்காத மக்கள் அல்லது இன்றைய கலாச்சாரத்திலும் பிறப்பு விழாவைக் கொண்டாடி வருகிற நடுத்தர, பணக்கார மக்கள் என்று எல்லோருமே இணைந்து கொண்டாடி வருகிற கிறிஸ்தவ பாரம்பரிய விழாவே இயேசுவின் பிறந்த நாள்.  தாம் பிறந்ததில் கூட மகிழ்ச்சியடையாத மக்கள் இயேசுவின் விழாவில் மகிழ்கிறார்களே! தனது பிறந்த நாளைக்கு என்று புதிய ஆடை கட்டிக்கொள்ளாதவர்கள் இயேசுவின் பிறப்பு விழாவிற் கென்று கடன்பட்டாவது புத்தாடை வாங்கிக் கொள்கிறார்களே!  இது ஒரு மதத்தின் பாரம்பரிய விழா என்பதாலா? அல்லது வாழ்த்துக்களும் பரிசுகளும் பகிரப்படுகின்றன என்பதாலா?  இக்காரணங்கள் எல்லாம் இயேசுவின் பிறப்பு விழாக் கொண்டாட்டத்தின் பின்புலமாக இருப்பினும், முன்னிறுத்தப்படும் காரணம் கடவுள் மேல் உள்ள நம்பிக்கையே.  கடவுள் அருள் பெற்றுள்ள நாம் தொடர்ந்து ஆசீரைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவலே.  “கடவுள் மனிதனானார்” என்ற விசுவாசத்தைக் கொண்டாடும் மக்கள் அவரால் வரவிருக்கும் நன்மைத்தனத்தை எதிர்வரும் காலத்திலும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையோடு கொண்டாடப்படும் விழா.
“பிறப்பு” என்பதற்கு மட்டுமே உள்ள விழா அல்ல இது.  ஆனால் இயேசுவின் “வாழ்விற்கே” தரப்படும் சிறப்பு விழா.  இயேசு, பலருள் ஒருவராய் வாழ்ந்து சென்றிருந்தால் இவ்விழா வந்திருக்காது.  ஆனால் அவர் பிறரை வாழ வைத்தார் என்பதால் இவ்விழா.   பிறந்தவர் நீண்ட காலம் வாழ்ந்து 50, 60, 80 என்று ஜூபிலிகளைக் கொண்டாட நினைத்திருந்தால் இவ்விழா இருந்திருக்காது.  பிறந்தவர் பிறருக்காய் இறந்ததால் 2000 ஆண்டு ஜூபிலி கொண்டாட்டம் வந்துள்ளது.  “நான் வாழ்கிறேன்” என்பதல்ல.  “நான் பிறரை வாழவைக்கிறேன்” என்பதுவே பிறப்பின் மேன்மை.  எளியோர், கட்டப்பட்டோர், விழி இழந்தோர், உரிமை இழந்தோர், மன்னிப்பு‡அன்பு என்ற அருள் இழந்தோர் (லூக் 41:8)மீண்டும் அனைத்தையும் பெற்று மகிழவே பிறந்தார்.  “இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்” (லூக் 19:10).
நமது பிறப்பு பொருளுள்ள தாக வேண்டும்.  நான் நன்றாக இருக்கிறேன் என்பது என் பிறப்பின் முழுமையாகாது.  என்னால் பிறர் நன்றாக உள்ளனர் என்பதே எனது பிறப்பின் பொருள்.  இத்தனை ஆண்டுகளாக ஆண்டவர் என்னைக் காப்பாற்றி மீண்டும் புதிய ஆண்டைக் காண இப்பிறப்பு விழாவைக் காணச் செய்தார் என்று பல்வேறு ஜூபிலி விழாக்களைக் கொண்டாடுவது நமது பிறப்பின் முழுமையாகாது.  ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மனிதர்களை வாழவைக்கிறேன் என்பதே பிறப்பின் மேன்மை. 
உனக்காய் எனக்காய் வாழ்ந்தவரைப் பின்பற்றி இல்லாதோர் நலம் பெற, இழந்தோர் மீண்டும் பெற நம்மை அர்ப்பணித்தால் மட்டுமே கிறிஸ்துமஸ் பெருவிழா வாழ்வின் விழாவாகும்.
பிறந்தது வாழ்வதற்கு அல்ல, வாழவைப்பதற்கே!
பணி. சகாய ஜான், செயலர்