ஒளி பிறந்தது

கிறிஸ்துமஸ் காலம் என்பது ஒவ்வொரு கிறிஸ்துவன் வாழ்வில், நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கும் காலம்.  ஒவ்வொரு வருடமும் புதிது பதிதாய் எதையாவது செய்து இயேசுபிரானின் வருகையை உறவுகளுடன், நண்பர்களுடன் கொண்டாடும் காலம்.  இந்த இனிய அனுபவம் ஒவ்வொரு வாழ்த்தையும் முகவரியிடும்போது “ஆஹா! நம் உறவு, நம் நட்பு, அந்த வசந்த காலங்கள்!” நினைத்தாலே மனதில் ஊற்றெடுக்கும் உன்னத உணர்வுகள்.  அவர்களை நாம் இன்னும் மறக்க வில்லை என்ற மன நிம்மதியினால் நமக்கும், நாம் இன்னும் நினைவில் நிற்கிறோம் என்கிற சந்தோ­த்தைப் பெறுபவர்களுக்கும் தரும் இனிய காலம்.
  வருடத்தின் கடைசி நாட்களைக் களிப்புடனும், புது வருடத்தில் புதிய நாட்களைப் பூரிப்புடனும் தொடங்கும் காலம்.  வீட்டைத் தூய்மைப்படுத்தும் போது அதனுடன் உள்ளமும் தூய்மை பெறும்.  இயேசு பாலன் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் பிறக்க வேண்டுமே என்கிற ஆதங்கம். கேரல்ஸ் கீதம் என்னும் முன்னறிவிப்புப் பாடல்கள் உடலையும் உயிரையும் சிலிர்க்கச் செய்யும்.  வீட்டை அலங்கரிக்கும்போது உலக அதிபதி நம் இல்லத்தில் பிறக்கப் போகிற பிரமிப்பு.  நட்சத்திரங்களை வீட்டு வாயிலில் கட்டும் போது “இதோ இந்த இல்லத்தில் மீட்பர் பிறந்துள்ளார்” என்கிற அங்கீகாரம்.  கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கும்போது “மரமே இவ்வளவு அழகென்றால் மனித மனம் எவ்வளவு அழகாக இருக்க வேண்டும்” என்கிற உணர்வு.  சின்னக் குடிலை அலங்கரிக்கும் போது “அவருக்கு நிழல் தருகிறோம்” என்கிற எண்ணமும், அதில் பாலன் இயேசுவைக் கிடத்தியதும், அவரின் எளிமைக் கோலம் கண்டு நம் மனதில் ஏற்படும் சிலிர்ப்பும் தாழ்மையும் சொல்லில் அடங்காத உணர்வுகளாகும்.
புத்தாடை அணிந்து, ஆலயம் சென்று வந்து, அறிந்தோர் தெரிந்தோருடன் அன்பைப் பகிர்ந்து, அறியாதவர்களையும் வாழ்த்தி . . .  அப்பப்பா!  இவ்வருடத்தின் சோதனைகள், சோர்வுகள், வியாதிகள், தோல்விகள், பிரிவுகள், பாவப் போராட்டங்கள் எல்லாம் கொஞ்சம் மறைந்துப் போக, புது வருடத்தை முறையாய் வரவேற்பதில், சகல ஆசீரும், சமாதானமும் குறைவின்றிக் கிடைத்திட ஜெபத்தோடு காத்திருக்கும் சுகமே சுகம்.
எல்லாம் வருடா வருடம் செய்து வந்தாலும் விக்கி மனதில் ஒருவித வெறுமை இருந்து வந்தது.  குற்ற உணர்வு ஒன்று அடிமனதில் குத்திக் கொண்டே இருந்தது.  வருடம் முழுவதும் மறந்தாலும் இந்த கிறிஸ்துமஸ் காலம் அவனில், அவனுடைய தவறைச் சுட்டிக்காட்டவே செய்தது.  எவ்வளவு பெரிய தவறை, நம்பிக்கைத் துரோகத்தைச் செய்து விட்டு நம்மால் எப்படி இவ்வளவு நிம்மதியாக இருக்க முடிகிறது!  தவறு செய்வது மானிட இயல்புதான்.  அந்தத் தவறுக்கும் மன்னிப்பு பெறுவதும், பிராயசித்தம் செய்வதும்கூட மானிட இயல்புதானே.  தவறு செய்யும் தைரியம் இருக்கும்போது அதற்கு மன்னிப்பு கேட்கும் தைரியமும் இருக்க வேண்டுமே,
யோசித்து யோசித்து தெளிவடைந்த விக்கி கடைக்குச் சென்று ஒரு அழகான கிறிஸ்துமஸ் வாழ்த்தட்டையை வாங்கி வந்தான்.  வாழ்த்துக்களோடு கூட ஒரு கடிதமும் எழுதினான்.  “பிரியமுள்ள தோழிக்கு, நண்பன் விக்கியின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.  உறவும் பிரிவும் வாழ்வில் சகஜம்.  உறவையும் தந்து, பிரிவையும் தந்த என்னால் உன்னிடம் மன்னிப்பு கேட்கவோ, பிராயசித்தம் செய்யவோ மனம் இல்லாமல் போய்விட்டது.  அது என் கோழைத்தனம்.  என்னால் நீ பட்ட மன உளைச்சலின் அளவு சொல்லில் அடங்காதது.  சொல்லில் அடங்காதது என்று  எனக்குத் தெரியும்.  இத்தனை வருட பாவத்திற்குப் பரிகாரமாய் இந்த வாழ்த்து அமையும் என நம்புகிறேன்.”
“என்னை மன்னிப்பாயாக.  இறை இயேசுவின் அருளும் ஆசீரும் உன்னை வழிநடத்தவும், உன் மனதிற்கு ஆறுதலும் அளிப்பதாக.  இனிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”.  ஏதோ ஒரு தைரியத்தில் எழுதி பிரியாவின் முகவரிக்கு அனுப்பினான்  விக்கி.  மனதில் இருந்த ஒரு பெரிய சுமை இறங்கியதைப் போலிருந்தது.  மன்னிப்பு கேட்டுவிட்ட மகிழ்ச்சியில் மன்னிப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையிலே கிறிஸ்துமஸின் உண்மை யான மகிழ்ச்சி மனதில் தோன்ற, “ஒளி பிறந்த”  தெளிவு மனதில் ஏற்பட்டது.
சாந்தி ராபர்ட்ஸ்

0 comments:

Post a Comment