இது பூக்களின் காலம் . . . மெளனத்தை உடையுங்கள்

உலகினில் அநியாயம் நடக்கும்
ஒவ்வொரு சமயமும்
அடக்க முடியாத
ஆத்திரத்தினால்
உங்களால் குமுறிக்
கொந்தளிக்க முடிந்தால்
நாம் தோழர்களே - சேகுவேரா

நட்சத்திரங்களைப் போல்
அத்தனை மனிதனும்

சூரியனாய்ப் பிறப்பதில்லை.
சிலரின் பிறப்பின்போது
அதிகாரமும் அநியாயமும்
தலைவிரித்து ஆடுகிறது.
சிலரின் பிறப்பின்போது
அதிர்ச்சியும் அதிசயமும்
நிகழ்கிறது.
அபூர்வமாய்த்தான் பிறக்கிறார்கள்
ஆக்கபூர்வமாய் சிந்திப்பவர்கள்
தன் கண்ணுக்கு முன்னாடி
நடக்கும் பட்டாம் பூச்சியின்
மரணத்தைக்கூட ஏற்க முடியாதவர்கள்
அப்படி பிறந்தவர்கள்தான்
இவர்களும் 
ஆரவாரமில்லாமல் பிறந்து
ஏகாதிபத்தியத்தை எதிர்த்து
நம் மனக்கடலில் ஆர்ப்பரிப்பை
ஏற்படுத்தியவர்
எல்லா இடங்களிலும் தன்னை
ஒரு மனிதனாகவே முன்னிறுத்திக்
கொண்டவர் சேகுவேரா

இளைஞர்களுக்கு விழிப்புணர்வு
கொடுத்ததற்காகக் குற்றம் சாட்டப்பட்டு
விசம் கொடுத்து கொல்ல வேண்டுமென்றதும்
தன் மரணத்தைச் சீடர்களுக்கு
ஆய்வாக மாற்றித் தந்தானே
சாக்ரடீஸ்
இப்படி செய்ய எத்தனை பேருக்கு
வாய்க்கும்?
சிலுவையில் அறைந்து
சித்திரவதைப் படுக்கையிலும்
பாவம் இவர்கள் அறியாமல் செய்கிறார்கள்
இவர்களை மன்னியும் என்று சொல்ல
எத்தனை பேரால் முடிந்தது
மீட்பரைத் தவிர.
ஆதிக்க சக்திகளுக்கும்
அடக்குமுறைக் கண்களுக்கு மட்டுமே
இவர்கள் நெருப்புத் துண்டாய்
இருந்திருக்கிறார்கள்.
சகமனிதரை மனிதராய்
மதித்திருக்கிறார்கள்
ஆகவே
தோழர்களாய் இன்னும்
இருக்கிறார்கள்
இவ்வழி நடந்தால்
நாமும் தோழர்களே
(இன்னும் பூக்கும்) ஜே. தமிழ்ச்செல்வன்

0 comments:

Post a Comment