தமது பிறந்த நாள் கூட அறிந்திராத மக்கள், ஒருவேளை அது தெரிந்திருந் தாலும் அந்நாளை விழாவாக இதுவரை கொண்டாடியிருக்காத மக்கள் அல்லது இன்றைய கலாச்சாரத்திலும் பிறப்பு விழாவைக் கொண்டாடி வருகிற நடுத்தர, பணக்கார மக்கள் என்று எல்லோருமே இணைந்து கொண்டாடி வருகிற கிறிஸ்தவ பாரம்பரிய விழாவே இயேசுவின் பிறந்த நாள். தாம் பிறந்ததில் கூட மகிழ்ச்சியடையாத மக்கள் இயேசுவின் விழாவில் மகிழ்கிறார்களே! தனது பிறந்த நாளைக்கு என்று புதிய ஆடை கட்டிக்கொள்ளாதவர்கள் இயேசுவின் பிறப்பு விழாவிற் கென்று கடன்பட்டாவது புத்தாடை வாங்கிக் கொள்கிறார்களே! இது ஒரு மதத்தின் பாரம்பரிய விழா என்பதாலா? அல்லது வாழ்த்துக்களும் பரிசுகளும் பகிரப்படுகின்றன என்பதாலா? இக்காரணங்கள் எல்லாம் இயேசுவின் பிறப்பு விழாக் கொண்டாட்டத்தின் பின்புலமாக இருப்பினும், முன்னிறுத்தப்படும் காரணம் கடவுள் மேல் உள்ள நம்பிக்கையே. கடவுள் அருள் பெற்றுள்ள நாம் தொடர்ந்து ஆசீரைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவலே. “கடவுள் மனிதனானார்” என்ற விசுவாசத்தைக் கொண்டாடும் மக்கள் அவரால் வரவிருக்கும் நன்மைத்தனத்தை எதிர்வரும் காலத்திலும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையோடு கொண்டாடப்படும் விழா.
“பிறப்பு” என்பதற்கு மட்டுமே உள்ள விழா அல்ல இது. ஆனால் இயேசுவின் “வாழ்விற்கே” தரப்படும் சிறப்பு விழா. இயேசு, பலருள் ஒருவராய் வாழ்ந்து சென்றிருந்தால் இவ்விழா வந்திருக்காது. ஆனால் அவர் பிறரை வாழ வைத்தார் என்பதால் இவ்விழா. பிறந்தவர் நீண்ட காலம் வாழ்ந்து 50, 60, 80 என்று ஜூபிலிகளைக் கொண்டாட நினைத்திருந்தால் இவ்விழா இருந்திருக்காது. பிறந்தவர் பிறருக்காய் இறந்ததால் 2000 ஆண்டு ஜூபிலி கொண்டாட்டம் வந்துள்ளது. “நான் வாழ்கிறேன்” என்பதல்ல. “நான் பிறரை வாழவைக்கிறேன்” என்பதுவே பிறப்பின் மேன்மை. எளியோர், கட்டப்பட்டோர், விழி இழந்தோர், உரிமை இழந்தோர், மன்னிப்பு‡அன்பு என்ற அருள் இழந்தோர் (லூக் 41:8)மீண்டும் அனைத்தையும் பெற்று மகிழவே பிறந்தார். “இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்” (லூக் 19:10).
நமது பிறப்பு பொருளுள்ள தாக வேண்டும். நான் நன்றாக இருக்கிறேன் என்பது என் பிறப்பின் முழுமையாகாது. என்னால் பிறர் நன்றாக உள்ளனர் என்பதே எனது பிறப்பின் பொருள். இத்தனை ஆண்டுகளாக ஆண்டவர் என்னைக் காப்பாற்றி மீண்டும் புதிய ஆண்டைக் காண இப்பிறப்பு விழாவைக் காணச் செய்தார் என்று பல்வேறு ஜூபிலி விழாக்களைக் கொண்டாடுவது நமது பிறப்பின் முழுமையாகாது. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மனிதர்களை வாழவைக்கிறேன் என்பதே பிறப்பின் மேன்மை.
உனக்காய் எனக்காய் வாழ்ந்தவரைப் பின்பற்றி இல்லாதோர் நலம் பெற, இழந்தோர் மீண்டும் பெற நம்மை அர்ப்பணித்தால் மட்டுமே கிறிஸ்துமஸ் பெருவிழா வாழ்வின் விழாவாகும்.
பிறந்தது வாழ்வதற்கு அல்ல, வாழவைப்பதற்கே!
பணி. சகாய ஜான், செயலர்
0 comments:
Post a Comment