அன்புச் சகோதரனே, சகோதரியே, இயேசுவின் இணையற்ற நாமத்தில் என் அன்பான வாழ்த்துக்கள். நீங்கள் நலமாக இருக்கவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக விளங்கவும் இறைவனை மன்றாடுகிறேன்.
நம் இந்தியத் திருச்சபை இருபெரும் விழாக்களைக் கொண்டாடி மகிழ்கின்றது. அன்னையின் விண்ணேற்பு மற்றும் நம் நாடு சுதந்திரம் அடைந்த நாள் நினைவாகக் கொண்டாடுகிறது. இவ்விழா, நாம் விழாமல் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு நினைவூட்டலே. சுதந்திர நாடு என்று சொல்லிக் கொண்டே, எதையும் செய்கின்ற போக்கு இருக்கும் வரை நமக்கு ஏது சுதந்திரம்? செய்ய வேண்டியதை மட்டுமே செய்தால், இந்த உலகம் சுதந்திரப் பறவையாய் உலா வரலாம்; விழா கொண்டாடலாம் என்று விண்ணேற்படைந்த அன்னை நமக்குத் தெரிவிக்கின்றார்.
ஆம், “அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார். நிலா அவருடைய காலடியில் இருந்தது. அவர் பன்னிரு விண்மீன்களைத் தலையில் சூடியிருந்தார்” (தி.வெ. 12:1). இந்த அருமையான வார்த்தைகள் திருச்சபையைப் பற்றியே என்றாலும், பல காலமாகப் புரிந்தோ புரியாமலோ அன்னை மரியாவுக்கென்றே பயன்படுத்துகிறார்கள். அத்துணை அற்புதமான பெண்மணி அவர்.
வானம் வளைந்து வந்து வணங்கியது. வணக்கம் கூறி உன்னதனுக்குக் கருவில் குடி கேட்டது. தந்தார், அவர் வந்து பிறந்தார். வளர்ந்து நமக்கு வாழ்வு கொடுக்க உயிர் கொடுத்தார், உயிர்த் தெழுந்தார், விண்ணேறினார். மறுபடியும் வானம் வளைந்து வந்து அன்னை மரியாவை எடுத்துச் சென்றது.
“நான் இருக்குமிடத்தில் என் தொண்டரும் இருப்பார். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்” (யோவா 12:26). பொதுத் தீர்வைக்கு முன்னரே, உலக முடிவுக்கு முன்னரே அன்னை எப்படி விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்? இது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா? என்று கேட்டால், நானும் உங்களைக் கேட்பேன். கானாவூரில் திராட்சை இரசம் தீர்ந்துபோன நிகழ்வில் இயேசுவின் நேரம் இன்னும வரவில்லை என்ற நிலையில், அதை முன்கூட்டியே வரவைத்தாரே அன்னை மரியா! இது ஓவர்தானே! அன்னை மரியா என்றுமே ஓவர்தான். சீடன் குருவை மிஞ்சி... நன்கு பயிற்சி பெற்ற சீடன் குருவைப் போல இருப்பான். இப்படிப்பட்ட நிலையில் அன்னை மரியாவை ஆண்டவர் உயர்த்தி வைத்திருக்க நம்மில் சிலர் பைபிளை மட்டும் தூக்கிக்கொண்டு மரியா வேண்டாம், திருப்பலி வேண்டாம், இந்தத் திருவிழா வேண்டாம் என்று சொல்லுகின்ற போக்கு இயேசுவுக்குப் பிடித்தமானதாகுமா?
தேரில் வைத்து அழகு பார்க்கவும், தெருத்தெருவாய்ப் பவனி சென்று அன்னை மகிமையையும் அதற்குக் காரணமான ஆண்டவர் மகிமையையும் எடுத்துரைக்கும் உங்களில் பலரும் அந்த அன்னையின் விண்ணேற்பன்று திருப்பலிக்குக்கூட செல்லுவதில்லையே! இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இத்தனை ஆசீர்வாதமான அன்னை யைக் குறித்துப் பேசுபவர்கள் பலர் இறை வார்த்தையைத் தினமும் படிப்பவர்கள்கூட இல்லை. இது என்ன விதமான பக்தி, நம்பிக்கையோ எனக்குத் தெரியவில்லை. நீங்களும் நானும்கூட விண்ணேற்பு அடையும் பொருட்டு இறைவாக்கிற்குச் செவிமடுப்போம். அறிவிப்பதோடு நில்லாமல் ஆர்ப்பரிப்புடன் வாழ்ந்து காட்டுவோம். அப்போது, “உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர், நீங்கள் இப்பொழுது இருப்பதைவிட ஆயிரம் மடங்கு உங்களைப் பெருகச் செய்வாராக. வாக்களித்தது போல உங்களுக்கு வாரி வழங்குவாராக” (இச 11).
மக்கள் கடவுளை விட்டுத் தடம் புரண்டபோது இறைவாக்கினர் மற்றும் தலைவர்கள் மூலம் மக்கள் மனம் மாறி இறைவனிடம் வரச் செய்தார் எனப் பழைய ஏற்பாட்டில் காண்கின்றோம். ஆனால் இயேசு கிறிஸ்து சிலுவையடியில் மனுக் குலத்தைத் தன் தாயிடம் ஒப்படைத்தபின் அன்னையின் தாயுள்ளம் அவ்வப்போது பல இடங்களில் காட்சி கொடுத்து (வேளாங் கண்ணி, லூர்து நகர், மெக்சிகோ), “மனம் மாறுங்கள். செபம் செய்யுங்கள், செபமாலை சொல்லுங்கள்” என்று அறைகூவல் விடுகிறார் அன்னை மரி. நாமும் மரியாளைப் போல் “அவர் உங்களுக்குச் சொல்வ தெல்லாம் செய்யுங்கள்” (யோவா 2:5). நாம் நம் அன்னையின் சொற்படி நடப்போமா? அவர் வழியில் செல்வோமா?
0 comments:
Post a Comment