சுதந்திர காற்று வீசுகிறதா?


“என்ன வாழ்க்கையிது?
ஒன்றும் புரியாமல்
ஒரே மாதிரியாக
என்றாவது
ஒரு நாள்
ஏதாவது புரியும்” 
இப்படிப்பட்ட வாழ்க்கைதான் நம்முடைய வாழ்க்கை. ஏன், நாம் வாழும் முறை என்றே சொல்ல வார்த்தைகள் படையயடுக்கின்றன. அதைச் சரியான தொரு பாதையில், பயணிக்க வைப்பது தான் ‘சுதந்திரம்’.

சுதந்திரம் என்பது வெறுமனே நமக்கு மட்டுமே பயன்தரக்கூடிய கைப் பொருளாக இருக்கக்கூடாது. மாறாக, நமக்கும் நம்மைச் சுற்றி வாழும் அனைவருக்குமே பயனை விளைவிக்கக் கூடிய கைப்பொருளாக அமைய வேண்டும். அப்போதுதான் நாம் முழுமையான பலனை அடைய முடியும். அவ்வாறாக முயற்சித்துப் பயனைத் துய்க்கும்போதுதான் நாம் மேற்கொண்டிருக்கும் இச்சுதந்திரப் பயணம், பல மலைகள் ஏறி, ஆறுகள் கடந்து, சிகரங்கள் தாண்டி, வீர நடைபோடும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

நீங்கள் உங்கள் பயணத்தைத் தேர்ந்தெடுங்கள்; அதற்கு நீங்களே வழிகாட்டியாய் இருங்கள். அத்தகைய வழிகாட்டி மட்டுமே நல்லதொரு பாதையைக் காட்ட முடியும். பயணத்தை எளிதாய்த் துவக்கி, விரைவாய் முடிக்க முடியும். ஆகவே, நீங்கள் பயணிக்கக் கூடிய இப்பயணம் அர்த்தமுள்ளதா, நியாயமானதா, உண்மையானதா, மற்றவருக்கு ஏற்ற ஒன்றா என்ற கேள்விகளை உங்கள் மனத்தில் பதித்து, என் சுதந்திரப் பயணத்தைத் தொடர்கிறேன்; முடிந்தால் என்னைப் பின்தொடருங்கள்...

உன் சுதந்திரம் எது?
கடந்த மாதம் விடுமுறை நாளில் ஒரு நாள் நான் என் நண்பர்களுடன் பூண்டி மாதா பசிலிக்காவிற்குச் சென்றிருந்தேன். அங்கே பூசை பார்த்துவிட்டு, அங்குள்ள பூங்காவில் சற்று நேரம் விளையாடிவிட்டு, மீண்டும் நாங்கள் அனைவரும் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தோம். அப்போது நண்பர்கள் அனைவரும் கல்லணைக்குப் போகலாம் என்று சொன்னவுடன் நாங்கள் வரும் வழியில் கல்லணைக்குச் சென்றோம். அங்கு இறங்கியவுடன், நான் ஒரு காதல் ஜோடியைக் கண்டேன்.  அவர்கள் இருந்த நிலை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது வரும்போது என் நண்பர் ஒருவர், “ஏன் பிரதர், இவங்க இப்படி இருக்காங்க? இவங்களுக்கு அசிங்கமா இல்லையா? இவங்க ஏன் இப்படி செய்றாங்க?” என்று கேட்டார். ஆம், அந்த நண்பரின் மனத்தில் எழுந்த கேள்விகள் உங்கள் மனத்திலும் எழ வாய்ப்புகள் உண்டு. எல்லா வற்றையும் மீறி அவர்களிடம், “ஏன் இப்படி நடக்கிறீர்கள்?” என்று கேட்டால், “இது என்னுடைய சுதந்திரம்; உங்களுக்கு என்ன பாதிப்பு?” என்று நம்மை வாயடைக்கச் செய்வார்கள்.

சுதந்திரம் என்னவோ எல்லாருக்கும் ஒன்றுதான். ஆனால், அது மற்றவரையும் நம்மையும் பாதிக்காமல் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பயணத்தைத் தான் நாம் தொடங்க, தொடர வேண்டும் என்பதுதான் நம்முடைய குறிக்கோள் மற்றும் இலட்சியம். அத்தகைய இலட்சியத்தை அடைய முயற்சிப்போம்.
சுதந்திரத் தீ எரிகிறதா?
“நீ இருந்தபோது
முழுமை
இரவு ஒளியானது
இப்போது வெறுமை
பகலும் இருளானது” 
அல்லல்பட்டு, அனுதினமும் பாடுபட்டு, அடி உதைபட்டு, எனக்கு உயிர் தேவையில்லை, என் நாடே தேவை என்று உயிர் துறந்தவர்களால் அன்று முழுமை பெற்றோம். அப்போது இரவுகூட ஒளியானது. இப்போதைய நிலையைச் சற்று யோசித்துப் பாருங்கள். உங்கள் இதயமே சற்று இயங்காமல் நின்று, மீண்டும் இயங்க முற்படும். இதுதான் இன்றைய உண்மை நிலை.

கடந்த வாரம் ஓர் ஆங்கில வார இதழில் ஒரு கொடூரமான நிகழ்வினை வாசித்தேன். அந்நிகழ்வை இப்போது உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப் படுகிறேன். இதைப் படித்துவிட்டு நீங்களே முடிவு எடுங்கள், சுதந்திரத் தீ எரிகிறதா? அல்லது அணைந்துவிட்டதா? என்பதை.

அழகான பெண், 16 வயது, வீட்டின் வறுமையால் வேலை தேடிச் சொந்த ஊரான நேபாளத்தில் ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கினாள். கடைசியாக ஒருவனிடம் அவள் வேலை வாங்கித் தாருங்கள் என்று சொன்னவுடன், அவன் அந்தப் பெண்ணை நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்து சிவப்பு விளக்குப் பகுதியில் விற்றுவிட்டான். வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ஏமாற்றி விட்டான். அதன்பின் அவளது வாழ்க்கை தலைகீழாய்ப் போனது. தினமும் 20 பேருக்காவது விருந்தாக்கப்பட்டாள். அவளது வாழ்க்கை இருட்டானது. அது மட்டுமல்லாமல், அவளை வசியப்படுத்தி ஒரு சிறுநீரகத்தைத் திருடி 1 இலட்சத்து 9 ஆயிரத்துக்கு விற்றுவிட்டார்கள். அந்த விற்றக் கும்பலிலுள்ள ஒருத்தனுக்கே திருமணம் செய்து வைத்து, பணத்தையும் கொடுத்தார்கள். புதிய வாழ்க்கை மீண்டும் படையயடுக்க ஆரம்பித்தது. விபசார விடுதியின் கதவைத் தட்டியது. பிரபல பெண் கவிஞர் ஆண்டாள் பிரியதர்´னி தன்னுடைய கவிதையில் கீழ்க் கண்டவாறு ஒரு விபசாரப் பெண்ணின் நிலையைக் குறிப்பிடுகிறார் : 
“குறுகிய காலப் பத்தினி
நான்
தினசரி
அஞ்சு பேருக்காவது” 

இது கதையாக மட்டும்தான் நம் மனத்தில் தோன்றும். இந்நிகழ்வினைச் சற்று யோசித்தீர்களானால், நான் இப்பத்தியைத் துவங்கும் முன் எழுதிய கவிதைக்கு அர்த்தம் புரியும். அந்தப் பெண் வெறும் வறுமையினால் மட்டும் வாழ வில்லை. தன் உடல் வெறுமை யினாலும் வாழ்ந்தாள் என்பதுதான் உண்மை. ஆகவே, மனமுள்ள மகேசன்களே... மனமுள்ள மங்கையரே... 
இப்பேர்ப்பட்ட கொடுமையான நிகழ்வினைக் கேட்கும்போது நாம் சுதந்திரம் பெற்று விட்டோமா? என்று சிறு நெருடல் ஏற்படுவது நியாயம்தான். சுதந்திரத் தீயை ஏற்றக்கூடிய நல்ல உள்ளங்களாக மாற முற்படுவோம். இல்லையேல், காந்தி சமாதியில் மட்டும் தான் சுதந்திரத் தீ எரியும்; மற்றெங்கும் அணைந்துவிடும். 

இப்போதாவது புரிகிறதா உங்களுக்கு...? இப்போது வெறுமை மட்டுமே உள்ளது. ஆகையால் நண்பகல்கூட இருளாய் இருக்கிறது. 

சுதந்திரப் பயணத்தைத் தொடருங்கள்
“அரும்பு
பூ
பிஞ்சு
காய்
பழமாகியும்
கனிந்தும்
காம்பிடம் தவிக்கும் பழத்தைக் 
காற்று
தடவினாலும் போதும்
விழுந்து விடும்
அந்த வேலை காற்று செய்யவில்லை
அந்த வேளை பழத்திற்கு வரவில்லை” 
நம்முடைய நிலையும் இதுதான். நாமும் சுதந்திரமாய் இருப்பதில்லை. பிறரையும் சுதந்திரமாய்  வாழ விடுவதில்லை. நம்முடைய சுதந்திரம் பிறருக்குப் பாதிப்பை விளைவிக்கிறது என்றால் அங்கே சுதந்திரம் பறிபோனது என்றுதான் அர்த்தம். பின்வரும் ஒவ்வொரு கவிதையும் ஒரு தனிப்பட்ட மனிதனின் சுதந்திரம், நீங்களே யோசித்து முடிவெடுங்கள். அவர்களுக்குச் சுதந்திரம் உள்ளதா என்று. அதன்பின் உங்கள் சுதந்திரப் பயணத்தைத் தொடருங்கள்.

“பிடிக்கவில்லை
விடுமுறை நாட்களில்
வீடு” 
இது ஒரு மாணவனின் சுதந்திரம். இவன் பயணம் எதை நோக்கி...?
“சமையலறை தேடிச்
செல்கின்றன
என் கால்கள்
தாளிட்ட கதவுகளால்...” 
இது ஒரு பெண்ணின் சுதந்திரம். இவரின் பயணம் எதை நோக்கி...?
“எதற்காகவோ காத்திருந்து
மெளனத்தில்
கரைகிறது என் வாழ்க்கை!” 
இது மூதாட்டி ஒருவரின் சுதந்திரம். இவன் பயணம் எதை நோக்கி...?
இவர்களுக்கு இன்று வரை சுதந்திரப் பூ மணம் பரப்பவில்லை. பிறரின் சுதந்திரத்தை நாம் பறிக்காமல் இருக்கும்போது நம்முடைய சுதந்திரப் பயணம் எந்தவித தடையுமின்றி சுகமாக அமையும். ஆகவே, வாருங்கள் மனமுள்ள மனிதர்களாய் நம் சுதந்திரப் பயணத்தைத் தொடர்வோம்.

சுதந்திரக் காற்றைச் சுவாசித்து உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்களுடன்,  

சகோ. மாணிக்கம்
திருச்சி மறைமாவட்டம்

0 comments:

Post a Comment