புhதை தேடும் பயணம்


இரண்டு வாரங்களுக்கு முன்பு நண்பர் ஒருவரைச் சந்தித்தேன. மிகக் குறுகிய காலத்தில் தொழிலதிபராக உயர்ந்தவர் அவர். “உங்கள் வளர்ச்சியின் இரகசியமென்ன?” என்று கேட்டதற்கு, “என் வாழ்க்கைக்குப் பாதை காட்டுபவர் கணினி உலகில் முத்திரை பதித்த பில்கேட்ஸ்; அவர்தான் என் தலைவர்; அவர் கடும் உழைப்பினால் உயர்ந்த உன்னத மனிதர்; என் இளமையிலிருந்தே அவரை முன்மாதிரியாக வைத்துச் செயல்படு கிறேன்; அவருடைய நேர்மை, மனந்தளரா உழைப்பு, நேரத்தைத் திட்டமிட்டுச் செயல்படுதல், பிறரை மதிக்கும் மனித நேயம் இவை யாவும் அவரிடம் என்னைக் கவர்ந்த மதிப்பீடுகள்” என்று நண்பர் பகிர்ந்து கொண்டார்.

இளமைக் காலத் தேடல்களில் ஒன்று தலைமைக்கான தேடல். “என்னை வழிநடத்த யாராவது இருந்தால் நன்றாக இருக்குமே” என்று எண்ணும் பருவம் அது. நடிகர்கள், அரசியல்வாதிகள், அறிவியல் மேதைகள், சமூக ஆர்வலர்கள், தேசியவாதிகள், தன்னார்வத் தொண்டர்கள்... இப்படிப் பலரால் ஈர்க்கப்படும் காலம் இளமைக் காலம். இவர்களில் “என் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு தலைவராக நான் யாரைத் தெரிவு செய்வது?” என்பதே அந்தத் தேடல்.

எல்லாருமே தலைவர்களாக இருக்க நினைக்க இக்காலத்தில், தன்னலம் மறந்து, பிறர்நலம் நாடும் நல்ல தலைவர்களைத் தெரிவு செய்வது சற்று கடினம்தான். குறிப்பாக, ஊடகங்களினால் தலைவர்களாக முன்னிறுத்தப்படுகின்ற ஒருசில போலிகளைக் குறித்து நாம் மிகவே கவனமாக இருக்க வேண்டும். எனவே பொது வாழ்வில் பிடிப்பு, இலக்கு நோக்கிய கவனக் குவிப்பு, கடின உழைப்பு, பிறருக்கு நல்வழி காட்டும் முனைப்பு, நம் இரத்த நாளங்களையும் சுண்டி இழுக்கும் உரை வீச்சு, தளர்ச்சியின்றி நம் வளர்ச்சிக்குப் பாதை காட்டும் விரிந்த பார்வை... இவை யாவும் நல்ல தலைவருக்கான ஒருசில அடை யாளங்கள். இத்தனை தகுதி களையும் சேர்ந்த ஒரு தலைவரை நம் வாழ்வின் முன்மாதிரி யாகத் தேர்ந்து கொள்ளும் போதுதான் நம் சாதனைகள் சாத்தியமாகும்.

நல்ல தலைவர்கள் நம் வாழ்வின் உந்து சக்தியாக அமைகிறார்கள்; இருளைக் கிழித்து, உழைப்பின் வெளிச்சத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்கள். சாதனை வேட்கையை ஏற்படுத்தி, வெற்றிக் கோட்பாடுகளையும் செயல்முறை களையும் வகுத்து, சாதிக்கும் ஆற்றலைத் தட்டி எழுப்புகிறார்கள். சுருங்கக் கூறின், நம் வாழ்வின் உச்சிக்குச் செல்ல ஏணிப் படிகளாக இருப்பவர்கள் இவர்கள்.

இளமைக்கால கனவுகளும் கற்பனைகளும் உருப்பெற நல்ல தலைவர்கள், வழிகாட்டிகள் நமக்குப் பலமாக அமைகிறார்கள். நல்ல தலைமையால் நாம் வழிநடத்தப்படும் போது நாமே வழிகாட்டிகளாகவும் மாற முடியும். பணி. 

அந்தோணி மதலைமுத்து
நல்லாயன் குருமடம், கோவை

0 comments:

Post a Comment